பிரம்மபுத்திரரான நாரதர், லோக க்ஷேமத்திற்காக மாபெரும் யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார். சிவபெருமானை மகிழ்விக்கப் போகும் எண்ணத்துடன் இந்த யாகத்தை ஆரம்பித்தார். தேவ தச்சனான மயன் மிக பிரம்மாண்டமான மணி மண்டபம், யாகசாலை போன்றவற்றை அமைத்துக் கொடுத்தான்.
ஆயிரக் கணக்கான முனிவர்கள் கூடியிருந்து நடத்தப் போகும் இந்த யாகம் மேருமலையில் மும்மூர்த்திகளின் பேரருளோடு ஆரம்பமானது.
வேள்விப்புகை விண்ணும் மண்ணும் பொங்கி எழுந்தது. லக்ஷக்கணக்கான வேத விற்பன்னர்கள் மந்திர உச்சாடணம் செய்து கொண்டிருந்தார்கள். குடம் குடமாக நெய் ஹோமத்தில் ஆகுதி செய்யப்பட்டது. நாரதர் ஹோம குண்டத்தின் அருகே அமர்ந்து சடங்குகளைச் சீராக நடத்திக் கொண்டிருந்தார்.
அது சமயம் ஹோமகுண்டத்தில் இருந்து அதி பயங்கரமான சப்தம் கேட்டது. அந்த சப்தத்தில் சப்த சாகரங்களும் குமுறியது. ஹோம குண்டத்திலிருந்து கொடூரமான ஆட்டுக்கடா ஒன்று வெளிவந்தது.
வளைந்த கொம்புகளோடும். கனல் தெறிக்கும் கண்களோடும் கொழுத்த சரீரத்தோடும், திமிரோடும் ஹோமகுண்டத்தில் நின்றும் வெளிவந்த ஆட்டுக்கடா போட்ட அலறல் சத்தத்தில் ஆடிப் போன தேவாதி தேவர்கள், முனிவர்கள் ஆட்டுக்கடாவின் தோற்றத்தைக் கண்டு கதி கலங்கினர்.
அதன் உக்ரமான கண்களும் வளைந்து காணப்பட்ட கொம்புகளும் மண்டபத்தை தும்சம் பண்ணியது. மலையையொத்த பிரம்மாண்டமான தூண்கள் சரிந்தன. பயத்தால் ஓடிய அஷ்டதிக்கு கஜங்களைத் துரத்திச் சென்று பிடித்து அதன் தலைகளை மண்ணில் உருளச் செய்தது.
அஞ்சி நடுங்கினர் அருந்தவசியர்! திக்கு முக்காடினர் தேவாதி தேவர்கள். “தப்பித்தோம் பிழைத்தோம்!” என்று தலை தெறிக்க ஓடினர்; தர்மத்தைப் பரிபாலிக்க வந்த வேத விற்பன்னர்கள்!
வேள்வியை ஆரம்பித்த நாரதர் நிலை குலைந்து போனார். எதனால் இந்த துர்பாக்கியம் ஏற்பட்டது என்று புரியாமல் தவித்தார். ஒரு வேளை மந்திரங்களை உச்சாடனம் செய்யும் முறை தவறி ஓதப்பட்டதோ என்று சிந்தித்தார்.
ஆட்டுகடா நாகலோகத்தை நிர்மூலமாக்கியது.
விண்வெளியில் பரவி கிடக்கும் மேகங்களை சண்ட மாருதம் போல் கலைத்துச் சின்னாபின்னமாக்கியது. ரதத்தில் சஞ்சாரம் செய்து வரும் சூரிய சந்திரர்கள் ஆட்டுக்கடாவின் தாக்குதலுக்கு அஞ்சி திசைமாறிச் சென்றனர்.
தேவாதி தேவர்கள், மஹர்லோக அதிபர்கள், சனகர், சனந்தனர் போன்ற யோகீஸ்வரர்கள் ஆட்டுக்கடாவின் தாக்குதலால் யாகத்தை நடத்த முடியாமல் தவித்தனர்.
எங்கும் ரத்த வெள்ளம் – புழுதி மண்டலம் – மக்கள் ஓலம் ஜீவராசிகள் அலறல்!
ஆட்டுக்கடாவை எதிர்த்துப் போரிட்ட வீரர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
எஞ்சியவர்கள், ‘சரணம்’ என்று கத்திக் கொண்ட கயிலைமலைக்கு ஓடினர்.
கயிலைமலை சிகரத்தில் இந்திரனால் அமைக்கப்பட்ட சுந்தபுரியில் கந்தபெருமான், லட்சம் வீரர்கள், நவவீரர்கள், சிவகணத்தவர்கள் முதலியோருடன் திருவிளையாடல் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.
அவ்வளவு தான்! தாயைக் கண்ட கன்று போல் கந்தனைக் கண்டு தேவாதி தேவர்கள், முனிவர்கள் ‘சரவணபவா சரணம்! ஆறுமுகா அபயம்! கார்த்திகேயா! காப்பாற்று! ஷண்முகா! எங்கள் முகம் பாராய்! காத்தருளுவாய் கந்தா!
யாகத்தில் நின்றும் வெளிப்பட்ட ஆட்டுக்கடா அண்ட சராசரங்களையும் கண்டபடி நாசம் செய்து அட்டகாசம் புரிகின்றதனை ஐயன் அறியாததா? ஆட்டை அடக்கி எங்கள் யாகம் சிறக்கப் பேரருள் புரிவீர்!” என்று அவன் தாளைத் தலையால் வணங்கினர்.
செந்தில் குமரனின் திருமுகத்தைத் தரிசித்த புண்ணியத்தால் அனைவரும் பயம் விலகி அமைதி கொண்டனர். ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.
நாரதர் முருகனைத் தோத்திரம் செய்து, ‘முருகா! குகனே வருவாய்! அருள்வாய்!” என்று பிரார்த்தித்தார்.
தேவாதி தேவர்கள் துக்கம் தாளாமல், “மூவர்களின் முதல்வா ஒலம்! முக்கண்ணன் புதல்வா ஒலம்!” என்றெல்லாம் பலவாறு தீனக்குரல் எழுப்பினர்.
சரவணபவனான சங்கரன் மைந்தன் முகம் மலர, “அஞ்சற்க! உங்கள் துயர் துடைப்போம்!” என்றார்.
“ஷண்முகா! தேவரீருடைய நேசக்கரங்களும், திருவடித் தாமரைகளும் தானே எங்களுக்குப் புகலிடம். தேவரீர் திருவடிக் கமலங்களில் கண்ணீரும் கம்பலையுமாக வீழ்ந்து கிடக்கும் எங்களை எழுந்து நிற்க அருள் செய்வீர்!”
கருணையே வடிவான கந்தன் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு மலர, செந்தாமரை முகம் மலர, அனைவரையும் திருக்கண் மலர்ந்து அருள்மழை பொழிந்தார். தமது அருகே மேருமலை போல் நின்று கொண்டிருந்த வீரவாகு தேவரைப் பார்த்தார்.
“வீரவாகுதேவா! அகிலத்தை அழித்து வரும் ஆட்டுகடாவை அடக்கி இழுத்து வருவாய்!” என்று ஆணையிட்டார்.
வீரவாகுதேவர் கடல் போல் ஆர்ப்பரித்து புறப்பட்டார். கூடியிருந்தோர் “வீரவாகுதேவர் வாழ்க!” என்று கோஷித்தனர்.வீரவாகு தேவர் வீறு கொண்டு புறப்பட்டார்.
இந்த சமயத்தில் ஆட்டுக்கடாவானது, மண்ணுலகத் தாரை மண்டியிடச் செய்து, ஏழு உலகத்திலுள்ளோரை உருக்குலையச் செய்து தேவலோகத்தினரைத் துன்புறுத்தி பிரம்மதேவனின் சத்திய லோகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. ஆட்டுக்கடா வீரவாகு தேவரைப் பார்த்ததும் அவர் மீது புயலெனச் சீறிப் பாய்ந்தது.
வீரவாகுதேவர், ஆட்டுகடா அஞ்சி நடுங்கி ஒடுங்கும் வண்ணம் வீரகர்ஜனை புரிந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அதன் மீது பாய்ந்தார். ஆட்டுகடாவின் கூரிய கொம்பினை பற்றினார். வளைத்து முறுக்கினார். அதனை அடக்கி இழுத்து வந்து ஆறுமுகப் பெருமானின் திருமுன் நிறுத்தினார்.
படமெடுக்கும் பாம்பு போல் சீறித் திரிந்த ஆட்டுகடா பசு போல் அடங்கி ஒடுங்கி முருகன் முன்னால் மண்டி இட்டு நின்றது.
ஆட்டுக்கடாவை கண்டு மகிழ்ச்சி கொண்ட மால்முருகன் அதன் மீது ஏறி அமர்ந்து, தமது முஷ்டியால் குத்தி அதன் கொட்டத்தை அடக்கினார்.
ஆட்டுக்கடா மீது எழுந்தருளி ஈரேழு லோகங்களுக்கும் அருட்காட்சி கொடுத்த ஆறுமுகன் அதன் மீது இருந்த வண்ணம் சவாரி செய்தார். சாட்டை அடி கொடுத்து ஆட்டைத் திணறடித்தார்.
மென்மையான குழந்தை முருகன் அந்த கடாவிற்கு மலை போல் கனத்தது. உடல் வியர்த்தது. வாய் நின்றும் நுரை கக்கியது.
ஆறுமுகனின் அருட்பார்வையினாலும் திருமேனி ஸ்பரிசத்தினாலும் ஆட்டுக்கடாவிற்கு ஞானம் பிறந்தது. பரமசிவனின் பாதகமலங்களில் அனவரதமும் முயல்கள் வாழ்வது போல் துர்க்கையின் தளிர்ப்பாதங்களில் மகிஷன் வாழ்வது போல் – முருகன் பாதகமலங்களில் இருக்கும்படியான பேறு பெற்றது ஆட்டுக்கடா!
முருகப் பெருமான் தேவாதி தேவர்களையும், நாரதாதி முனிவர்களையும் திருநோக்கம் செய்து, “பிரம்ம புத்திரரே! அச்சமின்றி சென்று யாகத்தைத் தொடர்வீர்! நீங்கள் தொடங்கப் போகும் யாகம் சிறக்கட்டும். உங்கள் யாகத்தால் ஆட்டுக்டாவை எனக்கு ஒரு வாகனமாககத் தந்தீர்!
எனக்கு வாகனம் அளித்த உங்களுக்கு இந்த ஒரு யாகம் பூர்த்தி பண்ணுவதால் நூறு யாகம் நடத்திய பலன்கிட்டும். எமது அடியார்கள் என்னிடம் கடுகத்தனை பக்தி செலுத்தினாலும் யாம் மலையத்தன பலனைக் கொடுத்து அருள்புரிவோம்!”
நாரதரும், தேவர்களும், முனிவர்களும், வேத விற்பன்னர்களும் புடை சூழ முருகன் அருளோடு யாகத்தைத் தொடர்ந்து நடத்தினர். முருகன் யாகம் சிறக்க மேன்மேலும் அருள்புரிந்தார்.
திருமுருகன் திருவருளால் ஈரேழு லோகங்களும் வியக்கும் வண்ணம் நாரதர் துவங்கிய வேள்வி சிறக்க, தவசியர்,வேத விற்பன்னர், தேவாதி தேவர்கள் முன்போல் யாக சாலையில் கூடினர்.
திருமுருகனின் அருட்பார்வையால் சரிந்த இடங் களும், சேதமடைந்த மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் ஒரு நிலைக்கு வந்தன. ஆட்டுக்கடாவால் மாண்டவர் மீண்டனர். அஷ்டதிக்கு கஜங்கள் முன்போல் நிமிர்ந்து நின்றன. எங்கும் அமைதி நிலவியது.
முறைப்படி யாகம் ஆரம்பமானது! அரைகுறையாக நின்று போன யாகம் பூர்த்தியானது. எங்கும் பூமழை பொழிந்தது. பூ மண்டலம் சுபிக்ஷமடைந்தது. யாகம் பூர்த்தியான சந்தோஷத்துடன் அவரவர்கள் தத்தம் இருப்பிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பிரம்மபுத்திரர் நாரதரை கலகம் செய்வதில் வல்லவர் என்று சொல்லுவர். கலகக்கார நாரதர் என்று பெயரெடுத்தவர். ஆனால் சிறப்பான இந்த யாகத்தை மும் மூர்த்திகளும் வியக்கும் வண்ணம் நடத்தி காட்டி, யாகம் நடத்துவதிலும் வல்லவர் என்று மூவுலகத்தாராலும் புகழ்ந்து போற்றப்படும் படியான பெருமை பெற்றார்.
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பர். அதுபோல் நாரதர் யாகம் நன்மையில் முடிந்தது. முருகனுக்கு ஆட்டுகடாவை வாகனமாக அளித்த பெருமையும் நாரதரைச் சார்ந்தது.
முருகப் பெருமான் ஆட்டுகடா வாஹனர் என்று திருநாமம் பெற்றார்.
கந்த புராணம் – 10 முருகப்பெருமான் ஆட்டுக்கடா வாஹனர் என்று திருநாமம் பெற்றது எப்படி… Asha Aanmigam