வாசுதேவன், விநுதையின் மகனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:
“வைனதேயா! நான்கு வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது வரையில் குழந்தைகள் செய்கின்ற பாவங்கள் அக்குழந்தைகளின் பெற்றோரையே சேரும். தாய் தந்தையரில்லையென்றால் அக்குழந்தைகளை ரட்சிப்பவர்களைச் சாரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். பாபஞ்செய்யும் குழந்தைகளுக்குப் பாபமில்லை. குழந்தைகளை அரசன் தண்டிக்கக்கூடாது. இது நிற்க.
“பிணியால் பீடிக்கப்பட்டு, ஸ்நானம் செய்ய முடியாமல் இருப்பவனுக்கு ஆசௌசம் நேர்ந்தால் ஆசௌசம் இல்லாத ஒருவன், பத்தரவர்த்தி ஸ்நானம் செய்து, ஓராவர்த்தி அவனைத் திண்டி, மீண்டும் அவ்வாறு பத்தரவர்த்தி ஸ்நானம் செய்து பத்தரவர்த்தி தீண்டுவானாயின், அவன் சுத்தனாகிறான். பகவான் இல்லையென்று பிதற்றுவோன் யாவனோ, அவன் மஹாபாபியாவான். அவனுக்கும் துன்மரணம் அடைந்தவனுக்கும் உத்தரக்கிரியை செய்ய வேண்டியதில்லை. அவ்வாறு இறந்தவன் யாகம் செய்தவன் அக்கினியைத் தண்ணீரிலும் ஔபாசனத்தை நாற்சந்தியிலும் எறிய வேண்டும். பிறகு, வருஷம் முடியும் சமயத்தில் தயையுடைய அவன் மகன் சுக்கிலபக்ஷ ஏகாதசியில் ஸ்ரீ திருமாலையும் யமனையும் ஆராதித்து மரித்தவனைக் குறித்து பத்து பிண்டங்களைப் போட்டு, அவற்றை எடுத்துக் கொண்டு, நதி, அல்லது நீர்நிலைக்குச் சென்று, அவற்றைப் புனலில் போட்டு தெற்குமுகமாக நின்று, மரித்தவனுடைய பெயரை மூன்று முறைகள் இரைந்து சொல்லி விட்டு, நீராடி வீட்டுக்குச் சென்று உபவாசம் இருந்து,
மறுநாள் வேதசாஸ்திரம் ஓதிய ஏழு அல்லது ஐந்து பிராமணர்களை வரித்து, மத்தியானத்தில், வடக்கு முகமாக அவர்களை ஆசனத்தில் உட்கார வைத்து, ஆராதித்து, பீதக ஆடைப்பிரானைப் பூஜித்து, அவ்வந்தணர்களுக்குப் போஜனம் செய்வித்து, ஸ்ரீ திருமாலுக்கும், பிரமனுக்கும் உருத்திரனுக்கும் தூதர்களுடன் வந்த யமனுக்கும், மரித்தவனுக்கும் கிரமமாக ஐந்து பிண்டம் வைத்து இறந்தவனுடைய பெயரையும் கோத்திரத்தையும் சொல்லி, ஸ்ரீ திருமால் நாமங்களையுச்சரித்து, மாய்ந்தவன் பிதுரர்களுடன் சேராததால், அவனது ஐந்தாம் பிண்டத்தை எடுத்து அகற்றி, பிறகு நமஸ்கரித்து, தானங்களைக் கொடுத்து, மேலே சொன்ன பிராமணர்களில் மரித்தவனின் ஸ்தானத்தில் இருப்பவனுக்கு அதிக தக்ஷிணை கொடுத்து, பகவான் திருப்தியடைந்து சுபிட்சிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அவ்வந்தணர்களைப் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து, பிறகு தெற்கு முகமாக இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்னமும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று புத்திரனுக்கு மனவிருப்பம் இருந்தால், சுவர்ணத்தில் சர்ப்பஞ் செய்து, சாஸ்திரம் விதித்துள்ளபடி, யாவும் செய்யலாம்” என்றார். திருமால்.
கருட புராணம் – 29 குழந்தைகளின் பாபங்கள் தர்ப்பணங்கள் | Asha Aanmigam