புராணிகரான சூதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களை நோக்கி, “மறந்து புறந்தொழாத வைணவ ஆசார, நைமிசாரணிய வாசிகளே!” என்று கூறலானார்.
சர்வக்ஞரான பெருமான், கருடனை நோக்கிக் கூறியது:
“வைனதேயா! விருஷோற்சர்க்கத்தைப் பற்றிய வேறொரு வகையையும் சொல்லுகிறேன்” கேள் .
“முன்பு சொன்ன தினங்களில் ஒரு நாள், ஸ்தல சுத்தி செய்த பிறகு, அக்கினிப் பிரதிஷ்டை செய்து, ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும் அதற்குச் சிறிதான கிடாரிக் கன்று ஒன்றையும் கொண்டு வந்து அவ்விரண்டையும் மஞ்சள் நீராட்டி ஆடையாபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்து விடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து, வெள்ளி, திலம், உதககும்பம், ஆடைகள் ஆகியவற்றைத் தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவார்கள். இதற்குக் ‘காமிய விருஷோற்சர்க்கம்’ என்று பெயர்.”
இன்ப துன்பங்களுக்குக் காரணங்களும் தானத்தால் வரும் பயன்களும்
‘வைனதேயா! மரித்தபிறகும் ஒரு ஜீவன் இன்ப துன்பமடைவதற்கும், மரிப்பதற்கு முன்பும் இன்ப துன்பம் பெறுவதற்கும் அந்த ஜீவன் செய்த நல்வினை, தீவினைகளே காரணமாகும். ஜீவர்கள் பலராக இருக்க ஒரு ஜன்மத்தினால் ஒரு ஜீவனால் செய்யப்பட்ட கர்மம் தன்னைச் செய்தவன் இன்னவன்தான் என்று எப்படி அறிந்து, மறு ஜன்மத்தில் அவனை எப்படிப் போய்ச் சேரும் என்று உனக்கு ஓர் ஐயம் தோன்றக் கூடும். இதில் சந்தேகம் வேண்டாம். ஓரிடத்தில் பசுக்கள் கூட்டமாகவும் மந்தை மந்தையாகவும் இருக்கிறதென்றாலும், அந்தப் பசுக் கூட்டத்தில் பல பசுக்கள் இருந்தாலும், அந்த மந்தையிலுள்ள ஒரு கன்று, தன்னை ஈன்ற பசுவையே அடைவது போலவே, கர்மமும் தன்னைச் செய்தவன் எவனோ அவனைத் தவற விடாமல், அவனையே சென்றடையும்.
வைனதேயா! பூதானம் செய்வதை விட உயர்ந்த உத்தமமான தானம் வேறில்லை. உண்மை பேசுவதை விடப் புண்ணியம் வேறில்லை. பொய் பேசுவதையும், பொய்ப் பத்திரம் எழுதுவதையும் விடப் பாவம் வேறில்லை. பூமி முதற் கடவுளாகிய ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சம்பந்தியாதலாலும், சுரபிகள், சூரியனுடைய திருக்குமாரத்திகளாகையாலும் சுவர்ணம் அக்னியின் மகவாதலாலும் அம்மூன்றையும் தானம் செய்வோர் அம்மூன்று உலகங்களையும் அடைபவர்களாகித் தான் தானம் செய்த பயன்களையடைவார்கள். ஒரு பசுவின் தோலின் அளவு பூதானம் செய்தால், அவன் மஹாபாபத்திலிருந்து நீங்குவான். பூமியைத் தானம் கொடுத்து விட்டு, அதற்குப் பிறகு அவாவினால் அந்தத் தானம் கொடுத்தப் பூமியை அபகரிக்க முயன்றவனும், தானம் கொடுத்த பூமியின் பயனைத் தானம் பெற்றவன் அடையாமல் கொடுத்தவனும், தானம் கொடுத்த நிலத்தின் பேரில் ஒருவன் வழக்கிட்டால் தானம் வழங்கியவனுக்கு உதவி செய்தவனும் பிரளயகாலம், வரையில் நரக வாசம் செய்வார்கள்.
“ஒருவன். ஒரு தொழிலைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது அந்தத் தொழிலைக் கெடுத்தவன் ஆயிரம் பசுக்களைக் கொன்ற பாவத்தையடைவான். ஒருவனுக்கு ஒரு ஜீவன் உபாயத்தைச் செய்து கொடுத்தவன் லக்ஷம் கோதானம் செய்த பயனையடைவான். நூறு பசுக்களைத் தானம் செய்வதை விட. ஒரு பசுவைக் கோல் கொண்டு ஓச்சாமலும் களவாடாமலும் இருப்பதே நல்லது. ஒருவன் ஒரு பசுவைக் கொன்று விட்டு, நூறு பசுக்களைத் தானம் செய்தாலுங்கூட, பசுவைக் கொன்ற பாவமே மேலாகும். ஒருவன் நல்ல ஒழுக்க சீலனாய், நான்மறைகளைப் பயின்ற ஓர் உத்தமப் பிராமணனை வழிபட்டு, கிருத கிருத்தியங்களில் அவனுக்குச் சிந்தனைத் துன்பமில்லாமல் செய்பவன் அசுவமேத யாகம் செய்வதை விடப் பயன் அடைவான். அவன் யாகஞ் செய்தால், தேவர்கள் திருப்தியடையாமல் அசுரர்கள் உளம் உவப்பர், யாகத்தால், பிரத்தியட்சனாகிய பூசுரன் உவப்படைகிறான். அரசன். அந்தணருடைய பொருளை அபகரித்துச் சதுரங்கச் சேனைகளைச் சேர்த்து யுத்தம் செய்தால், அந்த சேனை யுத்த பூமியில் ஒருங்கே மடியும் தன்னாலாவது தனது முன்னோர்களாலாவது விப்பிரனுக்குத் தானமாக கொடுத்த பொருளை, எக்காரணத்தாலும் அபகரிக்கலாகாது. அதனை எந்தக் காரணத்தாலாவது அபகரித்தவன், நூற்றுப் பதினாயிரம் ஆண்டுகள் மலத்தில் கிருமியாகப் பிறந்து அதிலேயே உழல்வான்.
பொருள் மீதுள்ள ஆசையால் கபடமாக நட்புக் கொண்டு, அந்தணர்க்குரியதை அபகரித்தவன். நெடுங்காலம் நரகத்தில் உழல்வான். பொடியையோ. கருங்கற் இரும்புப் பொடியையோ, விஷத்தையோ உண்டு. ஒரு வினையால் ஜீரணம் செய்து கொண்டாலும் கொள்ளலாம். பிராமணர் பொருளையுண்டு ஜீரணம் செய்ததற்கு மூவுலகிலும் ஒரு வினையும் இல்லை. தெய்வத்தின் பொருளை அபகரித்தாலும் வேதியரது பொருளை அபகரித்தாலும் அந்த விப்பிரரை அவமதித்தாலும், அவ்வாறு செய்தவனின் குலம் நாசமடையும், சாஸ்திரப் பயிற்சியும் உத்தம ஒழுக்கமுடைய உத்தமப் பிராமணனை பிறர் ஆராதித்து அவற்றைச் சிறிதும் அறியாத நிலையில் அந்தப் பிராமணனை அவமதித்தால் தோஷமில்லை.
சத்பிராமணனுக்குத் தானம் கொடுப்பது யாகத்தியில் தேவர்களுக்கு ஆகுதி கொடுப்பதை ஒக்கும். அசத்தான பிராமணனுக்குக் கொடுப்பது சாம்பலில் ஆகுதி செய்வதை ஒக்கும். சங்கராந்தி புண்ணிய காலத்தில் தான தர்மங்களைச் செய்தால் அவற்றை ஆதித்தன் அளவில்லாமல் விருத்தி செய்வான். இரு பிறப்பாளருக்குரிய ஆறு தொழில்களில் ஓதுவித்தலும் யாகம் செய்வித்தலும் தானம் ஏற்றலும் ஆகிய மூன்று தொழில்களில் தானம் வாங்குதலில் தோஷம் இல்லை. வாங்குவதால் உண்டாகும் பாபம். ஸ்நான வாங்குவதால் ஜபங்களால் நிவர்த்தியாகும். மற்ற இரண்டினால் வருகின்ற பாவம் நிவர்த்தியாவது என்பது அரிது. ஒழுக்கத்திலிருந்து நீங்காமலும் பரான்னம் புசிக்காமலும் உள்ள பிராமணன் கடல் சூழ்ந்த பூமி முழுவதையும் தானமாக வாங்கினாலும் அவன் தோஷத்திற்கு உட்படாமல், தானம் கொடுத்தவனுக்கு விசேஷ பயன்கள் ஏற்படச் செய்வான்.”
கருட புராணம் – 28 இன்ப துன்பங்களுக்குக் காரணங்களும் தானத்தால் வரும் பயன்களும் | Asha Aanmigam