எம்பெருமானின் திருக்கல்யாணம் முடிந்த கையோடு அவரவர்கள் உல்லாசமாக தத்தம் இருப்பிடம் திரும்பினார்கள். ஆனால் தேவாதி தேவர்கள் மட்டும் அசுரர்களின் அச்சத்தினால் அஞ்சி நடுங்கி மேருமலையில் பதுங்கி வாழத் தொடங்கினார்கள்.
அமரேந்திரனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்துகொண்டிருந்தது. திங்கள் பல தாண்டியும் இறைவனின் திருவருளால் தெய்வத்திருமகன் அவதரிக்காதது அமரனுக்கு அளவுக்கு மீறிய பயத்தைக் கொடுத்தது.
திக்கு பாலகர்கள், அஷ்ட வசுக்கள், தவமுனிவர்கள் என்று தேவர்கள் ஒவ்வொரு வரும் இதே சங்கடத்தில் மிதந்து கொண்டிருந்தனர். எந்த நேரம் எப்படி வருவானோ சூரன் என்ற பயம் அவர்கள் நிம்மதியைக் குலைத்ததுக் கொண்டிருந்தது. எல்லோரும் திரண் டெழுந்தனர். நான்முகன் திருமுன் சென்று தங்கள் துயரங்களை முன் வைத்தனர்.
”பிரம்ம தேவரே! இப்படி எத்தனை ஆண்டுகள் தான் இந்த சூரனுக்குப் பயந்து கொண்டு வாழப் போகிறோம். திருசடைப் பெருமானுக்குத் திருமணமானால் திருக்குமரன் அவதரிப்பான். நம் துயரங்கள் அடியோடு அழிந்து போகும் என்று எண்ணினோம். அந்த எண்ணம் பெரும் ஏக்கமானது!; துக்கமானது !
ஈசன் நம்மீது இன்னும் கருணை கொள்ளவில்லை போலும் ! அதனால் நாம் ஈசனின் அந்தப்புரத்திற்கு எவரையாவது அனுப்பி நிலைமையை அறிந்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று விண்ணப்பித்தான் தேவேந்திரன்.
தேவேந்திரனின் இந்த ஆலோசனை பிரம்மனுக்கு உசிதமாகத் தெரிந்தது. தூது அனுப்புவது தான் சிறந்த வழி. ஆனால் தூதுக்கு யாரை அனுப்புவது என்பதுதான் பெரும் பிரச்சனையானது.
எல்லோரும் சற்று நேரம் ஆழ்ந்து சிந்தித்தார்கள். அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த அபிப்பிராயங்களைச் சொல்லினர். அவை எதுவுமே ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை
தேவேந்திரன் வாயுதேவனை அனுப்பலாம் என்று அபிப்பிராயப்பட்டான். எல்லோருக்கும் அது உசிதமாகப் பட்டது. மஹாவிஷ்ணுவுடன் கலந்து ஆலோசித்து வாயுதேவனைத் தூது அனுப்பலாம் என்று முடிவை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
தேவேந்திரன் ஞான திருஷ்டியால் வாயு இருக்குமிடம் அறிந்து தங்கள் முன்னால் வந்து நிற்கும் படிச் செய்தான்.
தேவேந்திரன் வாயு தேவனிடம், “வாயு தேவா! உன்னால் ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டும்” என்ற பீடிகையுடன் பேசத் தொடங்கினான் இந்திரன்.
“இத் தருணத்தில் சங்கரனும் சங்கரியும் திருக்கயிலை யில் மோகத்தில் இருக்கிறார்களா? இல்லை தவ மோனத்தில் இருக்கிறார்களா? திருமண இன்பத்தில் குதூகலம் பொங்க உல்லாச புரியில் சல்லாபித்து வாழ்கிறார்களா? இல்லை ஞானமார்கத்தில் மூழ்கி யோகியர்களைப் போல் மோனத் தவத்தில் வாழ்ந்து வருகிறார்களா என்பதனை அறிந்து வர வேண்டும். ‘
தேவேந்திரனின் அன்பு வேண்டுகோள் வாயு தேவனுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
”அமரேந்திரா! மன்மதன் சாம்பலானதை அதற்குள் மறந்துவிட்டடீர்களே! என்னை விட்டு விடுங்கள். நான் அசையவில்லை என்றால் அகிலமே ஆடிப்போகும். எனது சஞ்சாரத்தால் தானே அகில லோகங்களும் சஞ்சரிக்கிறது. அதனால் உங்கள் முடிவை மாற்றுங்கள் வேறு எவரையாவது அனுப்பி ஈசனை பரீக்ஷித்துப் பாருங்கள்”.
வாயுதேவனின் மொழி கேட்டு பிரம்மதேவர் சற்று கடுமையாக, “நீ அர்த்தமில்லாமல் பேசுகிறாய்! மன்மதன் ஈசனின் யோகநிலையை மாற்ற முற்பட்டவன். ஆனால் நீயோ அஷ்டமூர்த்தி வடிவினராகிய சர்வேசுவரனுக்கு, சிஷ்யர்களால் வணங்கி வழிபட்டு வந்த இஷ்ட மூர்த்தியாக விளங்குகிறாய். உன்னால் நடக்கப் போவது ஒரு சுபகாரியம். சூரபன்மனின் அக்கிரமத்துக்கு முடிவு கட்டும் நல்ல காரியம். தட்டாமல் எங்கள் கோரிக்கையை ஏற்பாய்.”
நான்முகன் நவின்றது வாயுதேவன் மனதை சலனப்படுத்தியது. தேவர்கள் வாயுதேவனை விடவில்லை. சிவனிடம் தூதுபோவதால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி வாயுதேவரின் மனதை மாற்றினர்.
ஒருவாறு வாயுதேவனின் மனதில் உறுதி ஏற்பட்டது. வாயுவை தைரியமாக கயிலாய மலைக்கு அனுப்பி வைத்தனர்.
வாயு தேவனும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பிரம்மனை நமஸ்கரித்து அவரது நல்லாசி யுடன் புறப்பட்டார்.
வாயுதேவன் புனித கங்கையில் தூயநீராடினான். தாழம் பூவின் மகரந்தங்களையும், நந்தவனத்து மலர்களின் நறுமணத்தையும் தன்னுள் ஏற்றுக் கொண்டபின் கயிலாயமலைத் தலைவாயிலாம் திருவாயிலை அடைந்தார்.
தலைவாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்த நந்தி தேவரைப் பயபக்தியுடன் நமஸ்கரித்து, அந்தப்புரத்துள் நுழைய முயன்றார்.
வாயு தேவனின் இச் செயலைக் கண்டுவிட்ட நந்தி தேவர், சினம்பொங்க, “வாயுதேவா! என் உத்தரவின்றி அந்தபுரத்துள் நுழைவதற்கு முயன்ற குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது” என்று கனல் தெறிக்கக் கத்தினார்.
நந்தியின் சினத்தால் செயல் இழந்து போன வாயுதேவன், மிகவும் வணக்கத்துடன், “நந்திகேசுவரா! இப்பிழையைப் பொறுப்பீர். எனது இச்செயலுக்குக் காரணம் தேவேந்திரனின் கட்டளை யேயாகும். அவர்கள் தான் என்னை ஈசனை நோட்டம் பார்த்துவரச் சொன்னது. அதனால் தேவரீர் என்னை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று பவ்யமாகக் கேட்டார்.
நந்தி தேவர் கோபத்தில் ஹுங்காரம் செய்தார்.வாயு மயக்கம் வரும் நிலையை அடைந்தார்.
நந்தி தேவர் கடுமையாக, “வாயு தேவா! மறுவார்த்தை பேசாமல் இந்த இடத்தை விட்டு போய் விடு. இல்லையேல் மன்மதனுக்கு ஏற்பட்ட கதிதான். உனக்கும் ” என்றார்.
அதற்குமேல் அங்கு ஒருகணம் கூட தாமதிக்க விரும்ப வில்லை வாயுதேவர். தென்றலாக வந்தவர் புயலாகத் திரும்பினார்.
வாயு தேவனின் வருகையைக் கண்டு தேவர்கள் களிப்பு கொஞ்ச-உற்சாகம் ஊஞ்சலாட- உல்லாசம் சல்லாபமாக பொங்கி வர, “சென்ற காரியம் காயா? பழமா? என்ற கேள்விக்கே இடமில்லை; சென்ற காரியம் பழம் தான் தூது சென்றவர் வாயு தேவன் அல்லவா?” என்றெல்லாம் ஏக காலத்தில் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
வாயுதேவன் துக்கம் தொண்டையை அடைக்க எல்லோரிடமும் ‘தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகை யோடு போயிற்று’ என்பது போல் தான் தப்பித்து வந்த செய்தியைச் சொன்னான்.
வாயுதேவன் சொன்ன மொழி கேட்டு பிரம்மன் பிரமையுற்றான். அமரேந்திரன் ஆறாத்துயருற்றான். எல்லோரும் ஒன்று கூடி கயிலைக்குச் செல்வது என்று தீர்மானித்தனர். அனைவரும் சிவநாமத்தை ஜபித்த வண்ணம் கயிலையின் திருவாயிலை வந்தடைந்தனர்.
அங்கே பொற்பிரம்பும், உடைவாளும் கொண்டு நின்றிருந்த நந்தியைக் கண்டு மகிழ்ச்சியோடு அவரது பாதங்களை கற்பகமலர்களால் பூஜித்தனர். வலம் வந்து பணிந்தனர். அவரைத் துதி பாடி பெருமை கொண்டனர்.
“சிவகணங்களுக்குத் தலைவரே! ஈசனின் அன்பிற் கினியவரே! அரிய தவத்தால் ஈசனுக்கு நேசமானவரே! பிரம்ம தேஜஸ் பொருந்தியவரே! மூவுலகும் போற்றும் குருமூர்த்தியே தேவரீர் திருவுள்ளம் கனிந்து எங்களுக்கு சிவ தரிசனம் செய்து வைக்க வேண்டும்”
தேவாதி தேவர்களின் புகழாரம் எனும் பொன்னா ரணத்தால் மகிழ்ந்து போன நந்திகேசுவரர் நொடிப் பொழுதில் சிவனின் அந்தப்புரம் சென்று தேவாதி தேவர்கள் உள்ளே செல்வதற்கான அனுமதியைப் பெற்றுவந்தார்.
நவரத்தின அலங்கார அரண்மனை அணி மண்டபத்து அந்தபுரத்தில் பொன்மயமான சிம்மாசனத்தில் ஈசன் தேஜோமயமாக விளங்கும் ஈசுவரியுடன் எழுந்தருளி யிருக்கும் திவ்ய தரிசனத்தைக் கண்டு தேவாதி தேவர்கள் சிவநாமத்தைத் திக்கெட்டும் முழக்க கோஷித்தனர். ஈசனின் மலர்முகத்தைக் கண்டு மெய் சிலிர்த்தனர்.
“தேவ! தேவ மஹா தேவா! மூவுலகும் துதி பாடும் முக்கண்ணப்பெருமானே! நித்திய சுந்தரனே! பிறை நிலவனே! நிமலனே! நிர்மலமானவனே! தேவாதி தேவர்களின் சகஸ்கரகோடி வந்தனங்கள். சரணம் என்று சேவடிகமலங்களைப் போற்றி பக்தி செய்வோர்க்கு சகல மேன்மைகளையும் அள்ளித் தரும் நீலகண்டப் பெருமானே! தேவரீருடைய பாதமலர்களை மட்டும் சரணம் என்று தவம் கிடக்கும் எங்களை ரட்சிக்க அருள் செய்வீர்! சூரனைக் வென்று தேவர்களை காக்க, குமரனைத் தோற்று விக்கத் தாமதம் ஏனோ மகாப்பிரபோ! நாங்கள் அசுரர்களால் படும் தொல்லைக்கு முடிவே இல்லையா?
எம்பெருமானே! அடியவர்களாகிய எங்களுக்கு அபயம் அளிக்க ஆலகாலவிடத்தை அள்ளிப் பருகிய ஆண்ட வனே! அண்டச்சராசரங்களையும் அலறி நடுங்கச் செய்யும் சூரபன்மனின் கொடுமைகள் நாள்தோறும் பெருகிக் கொண்டே வருவதைத் தேவரீர் அறியாததல்லவே!
தேவரீர் மலைமகளான பார்வதிதேவியை மணம் புரிந்தது கண்டு நாங்கள் பேருவகைப் பூண்டோம். பெருமானுக்குத் திருக்குமரன் தோன்றினால் சூரன் கொடுமை ஒழியும். தேவர் குலம் ஓங்கும் என்று எண்ணி எத்தனையோ நாட்கள் காத்திருந்தோம். பெருமானின் பேரருள் எங்களுக்கு இதுகாறும் சித்திக்கவில்லை!” என்று விண்ணப்பித்தனர். வேதனையால் வருந்தினர்.
“வானவர்களே! வருந்தற்க! உங்கள் துயரத்தைத் தீர்ப்போம்” என்று திருவாய் மலர்ந்தருளினார் எம்பெருமான்.
அந்த மொழிகள் அமரர்க்கு அமிர்தம் கிடைத்தாற் போலிருந்தது. அனைவரும் மாதொருபங்கனின் மலர்த்தாளினைப் போற்றினர். அனைவர் உள்ளத்திலும் அமைதி பிறந்தது.
பஞ்சாக்ஷர சொரூபனான பரமேசுவரன் அப்பொழுதே தேவர் குலம் காக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு திருமுகமாய்,மலைமகளோடு தவசிலிருந்த திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமானார் ஆறு திருமுகங்களோடு கூடிய ஆறுமுக மூர்த்தியாகக் காட்சி அளித்தார்.
ஸத்யோஜாதம் – வாமதேவம் தத்புருஷம் – ஈசானம் – அகோரம் என்று வெளியே புலப்படும் ஐந்து திருமுகங்கள். ஞானிகளின் அகக் கண்களுக்கு மட்டும் புலப்படும் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகம் என்பது மெய்ஞான உணர்வு. தேவியின் திருமுகம் ஒன்றும் தமது ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஆறுமுகம் என்றும் கூறுவர்.
இறைவனின் இத்தகைய அற்புதமான தோற்றத்தைக் கண்டு அனைவரும், “சம்போ! மகா தேவா! அருமறை ஜோதியே! ஆறுமுக மூர்த்தியே! சரணம்!சரணம்!!” என்று சிவநாமத்தை விண்ணெட்ட முழக்கினர். கற்பக மலர்களால் போற்றினர்.
ஆறுமுகக் கோலம் காட்டியருளிய பெருமானார், ஒவ்வொரு திருமுகத்தின் நெற்றிக் கண்களினின்றும் பேரொளி பிழம்பான அருட்சுடர் ஒவ்வொன்றினைத் தோன்றச் செய்தார்.
அவ்வாறு தோன்றிய அருட்சுடர்கள், கொடிய வெப்பத்துடன் உலகமெங்கும் பரவிப் படர்ந்தன. அக்கொடிய வெப்பத்தைத் தாங்க முடியாத தேவர்கள், தவசியர் அங்குமிங்குமாக மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர்.
வாயுக்கள் அலைந்து ஓய்ந்தன. கொந்தளிக்கும் கடல்கள் வற்றி வரண்டன. வடமுகாக்கினியின் செருக்கு நீங்கிற்று. பூமி பிளவுபட்டது. மலைகள் யாவும் நிலைகுலைந்தன. அட்ட நாகங்களும் நெளிந்து நீங்கின. எட்டு திக்கு கஜங்களும் அச்சத்தால் அலறி ஓடின. உயிர்கள் எல்லாம் நடுங்கின. விண்ணும் மண்ணும் அதிர்ந்தன.
பெருமானின் அருகே அமர்ந்திருந்த பிராட்டியார் அருட்பொறிகளின் வெம்மையைத் தாங்க முடியாது அஞ்சி அந்தப்புரத்துக்கு ஓடினார்.
அசுரர்களை ஒடுக்கி அமரர்களுக்கு அபயம் அளிக்க பெருங்கருணையுடன் பிறந்தன இந்நெருப்புப் பொறிகள்! அப்பொறிகள் எவ்வுயிர்க்கும் எவ்வித தீமையும் விளைவிக்கவில்லை. அனைவருக்கும் அச்சத்தைத் தான் கொடுத்தன.
அதே சமயத்தில் அச்சத்தால் நிலை குலைந்து நின்ற அமரர்கள் நெஞ்சு மகிழ செஞ்சடை வண்ணரின் திருநாமத்தைத் துதித்த வண்ணம் மீண்டும் அவரது திருப்பாதங்களையே தஞ்சம் என்று வந்தடைந்தனர்.
“ஐயனோ இதென்ன சோதனை! அபயம் தேடி வந்த எங்களுக்கு அபாயத்தை அளிக்க வல்ல கொடிய வெப்பத்தை அளித்தால் எப்படி…? வெப்பத்தின் உக்கிரத்தைத் தணிக்கச் செய்யாவிட்டால், நாங்கள் அனைவரும் வெந்து மடிவது திண்ணம். தேவரீர் திருவுள்ளம் கனிந்து உய்வதற்கு வழி செய்து அருள வேண்டும்!” என்று அஞ்சினர்.
“அமரர்களே! அஞ்சற்க!” என்று ஆறுதல் பகர்ந்த ஆறுமுக மூர்த்தி முன்போல் ஒரு திருமுகத்தோடு கூடிய சாந்த சொரூப மூர்த்தியாய்த தோன்றினார்.
அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிப் படர்ந்த அக்கினிப் பொறிகளை அக்கணமே தம்மிடம் வந்து தங்குமாறு திருவுள்ளம் கொண்டார் திருக்கயிலாய பெருமானார்.
மறுகணம் ஆறு அக்கினிப் பொறிகளும் இறைவன் திருமுன் வந்தன. எம்பெருமான் பொறிகளின் மீது மலர்க்கண் விரித்தார். பொறிகளின் வெப்பம் தணிந்தது.
இறைவன் வாயுதேவனையும், அக்கினி தேவனையும் அழைத்தார். இருவரும் சென்னிமீது கரம் உயர்த்தி ஐயனின் ஆணைக்காக பயபக்தியுடன் அவரது திருமுன் வந்து நின்றனர்.
“நீங்கள் இருவரும் இப்பொறிகளைச் சுமந்து சென்று கங்கையாற்றில் சேர்த்து விடுங்கள்” என்று திருவாய் மலர்ந்தார் திருசடைப் பெருமான்!
இறைவனின் ஆணை கேட்டு தேவர்கள் இருவரும் மீண்டும் அஞ்சி நடுங்கினர்.
”ஐயனே! இன்னுமா சோதனை! இந்தத் தீப்பொறி களின் வெம்மையையே எங்களால் தாங்க முடிய வில்லையே! அங்ஙனமிருக்க நாங்கள் எங்ஙனம் இதனைச் சுமந்து செல்ல இயலும்” என்று வினவினார்.
வாயுதேவனுக்கும், அக்னித்தேவனுக்கும் தற்குத் தக்க வல்லமையைத் தந்தருளினார் ஈசன். 96
அரனார் அருளால் அனலைத் தாங்கும் ஆற்றலை பெற்ற இரு தேவர்களும், பக்தி சிரத்தையுடன் அப்பொறிகளைச் சென்னிமீது சுமந்து செல்ல முன் வந்தனர்.
வாயுதேவன், ஐயனின் திருவடிகளை வணங்கி ஆறு பொறிகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அக்கினிதேவனும் பரமனை வணங்கி வாயுதேவனைப் பின் தொடர்ந்து சென்றார். அமரர்கள் ஆனந்தித்தனர்.
எம்பெருமான் அமரர்களைத் திருநோக்கம் செய்தார். “அமரர்களே! இனி எதற்கும் நீங்கள் வருந்த வேண்டாம். வாயுதேவனும், அக்கினி தேவனும் இந்த ஆறுபொறி களையும் கங்கை ஆற்றில் விடுத்ததும், கங்கை இவற்றை சரவணப் பொய்கையில் கொண்டு பொய்ச் சேர்க்கும். சரவணப் பொய்கையில் ஆறுமுகன் தோன்றி அருள் செய்வான்!” என்று திருவாய் மலர்ந்து அமரர்களுக்கு விடை கொடுத்தருளினார்.
நான்முகனும், திருமாலும், தேவர்களும், தவசியர் களும், சிவகணத்தவர்களும், அஷ்டதிக்கு பாலகர்களும், ஈசனின் மகிமையைப் போற்றிப் பணிந்தனர். அனைவரும் பெருமகிழ்ச்சி பொங்க வாயுதேவனைப் பின் தொடர்ந்து சரவணப் பொய்கை புறப்பட்டனர்.
வாயுதேவன் அக்கினிப் பொறிகளைச் சுமந்து சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் அப்பொறிகளை அக்கினி தேவனிடம் கொடுத்தான்.
அக்கினி தேவன் சென்னிமீது அப்பொறிகளைச் சுமந்து புறப்பட்டான்.
இப்படியாக இரு தேவர்களும் ஒருவரை அடுத்து ஒருவர் அச்சிவப் பொறிகளைச் சுமந்து வந்து கங்கையாற்றில் சேர்த்தனர்.
அக்கினிப் பொறிகளின் வெப்பத்தைக் கங்கை நதியால் கூடத் தாங்க முடியவில்லை. கங்காதரன் கடாக்ஷத்தால் கங்கைக்கு அனலும் புனலானது.
கங்கை அக்கினிப் பொறிகளைச் சரவணப் பொய்கை யில் கொண்டு போய்ச் சேர்த்தது.
சரவணப் பொய்கையில் ஆறு அருட் சோதிச் சுடர்களும் செந்தாமரை மலர் மீது ஒளிப்பிழம்பாக வந்து தங்கின. இறைவனின் கருணை வெள்ளத்தின் மகிமை, சரவணப் பொய்கையை வற்றச் செய்யவில்லை.
அக்கினிச் சுடர்கள், உருவமாகவும் அருவமாகவும் ஒன்றாகவும் பலவாகவும் தோன்றித் திகழ்ந்தன.
அனற்பிழம்பாகிய மேனியும், கருணைபொழியும் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் விளங்கிட மறையாலும், வாக்காலும், மனத்தாலும் அளவிட இயலாத வண்ணம் உலகெலாம் உய்ய ஆறுமுகக் கடவுளாகத் திரு அவதாரம் செய்து அருளின அந்த அக்னிச் சுடர்கள்!
விண்ணில் தேவ துந்துபிகள் ஒலித்தன. பூமாரி பொழிந்தன. புவனமெல்லாம் பொங்கிப் பூரித்தன. ஈரேழு பதினான்கு லோகத்திலுமுள்ள உயிர்களெல்லாம் உவகையால் பேரின்பம் பூண்டன.
அமரர்கட்கும், அருந்தவசியர்க்கும், நன்னிமித்தங்கள் பல தோன்றின. தாரகன், சூரபன்மன் போன்ற அசுரர்களுக்குத் தீய நிமித்ததங்கள் பல காணப்பட்டன.
உலகம் உய்ய அவதரித்த ஆறுமுகப் பெருமானார் ஆறு திருமுகங்களை உடையவராய் சரவணப் பொய்கையில் இனிது எழுந்தருளியிருந்தார்.
ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம்,ஞானம், வைராக்கியம் எனும் ஆறு குணங்களும் ஆறு முகங்களாக காணப்பட்டன.
அருள் வடிவான சிவக்குமாரனைக் காண முனிவர் களும், பிரம்மனும், திருமாலும், தேவேந்திரனும் சரவணப் பொய்கையை வந்தடைந்தனர். சிவக்குமார னின் திருவிளையாடல்களைக் கண்டுகளிக்க எல்லை யில்லா இன்பம் கொண்டனர்.
முருகப் பெருமானின் அருள் சுரக்கும் ஆறு திருமுகங்களைக் கண்டு களித்து நின்ற தேவர்கள் கார்த்திகைப் பெண்களை அழைத்து முருகக் குழந்தைக்குப் பாலூட்டப் பணித்தனர்.’
கார்த்திகைப் பெண்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
சரவணப் பொய்கையில் சயனித்திருந்த முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் இசைபாடித் துதித்தனர்.
கார்த்திகைக் கன்னிகையரின் இசையால் இன்பம் பூண்ட அருட்குமாரரும் ஆறு குழந்தைகளாய்த் திருவுருவம் பெற்றுப் பொலிவுற்றனர். ஆறுமுகம் கொண்ட தோற்றத்தை மறைத்தார். ஆறு கமலங்களில் ஆறு குழந்தைகளாக எழுந்தருளியிருக்கும் அற்புத கோலம் கொண்டார்.
புன்னகை முகத்திலே தவழ, அப்பெண்கள் தூய தாமரை மீது சயனத்திலிருந்த ஆறு குழந்தைகளையும் வாரி அணைத்து உச்சி மோந்து பொற்கிண்ணத்தில் பாலூட்டி மகிழ்ந்தனர்.
முருகக் கடவுள் புன்முறுவல் பூத்தவாறு நிலையான பேரருளினால் மிக வருந்தினாற் போல் பால் அருந்தி மகிழ்ந்தார்.
கார்த்திகைப் பெண்கள் தெய்வக் குழந்தைகளைத் தாமரை மஞ்சத்தில் சயனிக்கச் செய்து தாலாட்டுப் பாடி கண்துயிலச் செய்தனர்.
கஞ்ச மலர்ச் சயனத்தில் துயின்ற பரஞ்சுடர்ப் பெருமானார் அனைவரும் வியக்கும் வண்ணம் பற்பல திருவிளையாடல்கள் புரியலானார்.
ஒரு திருமுருகம் கொண்ட குழந்தை துயிலும்
ஒரு கந்தக் குழந்தை துயில் நீங்கி எழுந்து,மழலை மொழி பேசும் –
ஒரு பாலசுப்பிரமணியக் குழந்தை பாலைச் செம்பவள வாய்தனில் வைத்து உண்ணும் –
ஒரு வேலாயுதக் குழந்தை பூத்துக் குலுங்கும் புன்முறுவலோடுத் திகழும்
ஒரு சரவணக் குழந்தை எல்லையில்லா மகிழ்வோடு விளையாடும்
ஒரு அக்கினி கர்ப்பக் குழந்தை அழும்-
இவ்வாறாக ஆறு குழந்தைகளும் அற்புதமாக விளையாடின.
தேவர்கள் குமரக் கடவுளின் திருவிளையாடல்களைக் கண்டு மேன்மேலும் துதிபாடி நின்றனர்.
கார்த்திகைப் பெண்கள், குழந்தைகளைப் பக்தி பரவசம் பொங்க மெய்யன்போடு போற்றிப் பேணி வளர்த்தனர்.