தசரதச் சக்கரவர்த்தியும் அவருடைய மந்திரிப் பிரதானிகளும் அரசாங்க அலுவல்களை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். அப்பொழுது ஏவலாள் ஒருவன் அலுவலகத்தினுள் பிரவேசிக்கிறான் மாளிகை யின் வாயிலருகில் மாமுனிவர் விஸ்வாமித்ரர் வந்து நின்றுகொண்டிருக்கிறார் என்னும் செய்தியை அவன் தெரிவிக்கிறான் இந்த நல்ல செய்தி அரசன் காதில் வீழ்கிறது கவனித்து வந்து கொண்டிருந்த அலுவல் களையெல்லாம் ஒதுக்கிப் போட்டுவிட்டு அரசர் அவசர அவசாமாக எழுந்திருக்கிறார். மாளிகையின் வாயிலுக்கு அவர் தாமே விரைந்து செல்லுகின்றார். ஏனையவர்கள் அடக்க ஒடுக்கத்துடன் அவரைப் பின்பற்றுகின்றனர் விஸ்வாமித்ர மஹரிஷிக்குப் பாத் யம், அர்க்யம் ஆகியவைகளை விதிப்படி வேந்தர் சமர்ப்பிக்கிறார். மஹரிஷியின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறார். சபா மண்டபத்துக்கு மாமுனிவர் மரி யாதையோடு அழைத்துச் செல்லப்படுகிறார் மேலாம் ஆசனம் ஒன்றின்மீது அமர்ந்திருக்கும்படி அவர் வேண் டப்படுகிறார். முனிவரும் அங்ஙனமே அரியாசனத்தின் மீது அமர்கிறார். அவரைப் பின்தொடர்ந்து ஏனைய அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ற ஆசனங்களின்மீது அமர்கின்றனர்.
வேந்தர் விண்ணப்பிக்கிறார்: “போற்றுதற் குரிய பெரியோய், தங்களுடைய வையக வாழ்வு மானுட வர்க்கத்துக்கே நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகிறது. தாம் தமது ஜீவிதத்தை ஒரு சாதாரணமான மண்ணுலக மன்னனாக ஆரம்பித்தீர்கள். ஆனால் இப்பொழுதோ தாம் மானுட ஜென்மத்தின் உச்ச ஸ்தானத்தை அடைந் திருக்கிறீர்கள். பாரமார்த்திகப் பெருவாழ்வைத் தாம் தீவிரமாகக் கடைப்பிடித்தீர்கள். பல தடவைகளில் வையக வேட்கைகளுக்கு உட்பட்டவராகத் தாம் நெறி வழுவிக் கீழ்மையடைந்தீர்கள். ஆனால் தோல்விகளைக் குறித்துத் தாம் தளர்வடையக் கிடையாது. ஒவ்வொரு வீழ்ச்சியும் புதியதொரு முயற்சிக்குத் தூண்டுகோல் ஆயிற்று எடுத்துள்ள ஒரே ஒரு மானுட ஜென்மத்தில் தாம் ராஜாவானீர்கள். பிறகு ராஜரிஷி ஆனீர்கள். அதைத் தொடர்ந்து மஹரிஷி ஆனீர்கள். கடைசி யாகப் பெறுதற்கரிய பேறு ஆகிய பிரம்ம ரிஷியாகத் தாம் இப்பொழுது திகழ்கின்றீர்கள். எவ்வுலகிலாவது யாராலுமே அடைதற்குரிய பேறு இதனினும் மேலா னது ஒன்றுமில்லை. தம்மைத் திரும்பத் திரும்பப் போற்றுகிறோம். அயராத முயற்சியே வடிவெடுத்துள்ள மேலோய், தம்மை மேலும் மேலும் போற்றுகிறோம்.’
“அருட்கடலே, தாம் தமது திருவடிகளை இந்த அயோத்தியின்கண் நாட்டியதின் வாயிலாக நான் தன்னியன் ஆகியுள்ளேன். என் குடும்பம் தம் கருணைக்கு இலக்காகியிருக்கிறது. எங்கள் இக்ஷ்வாகு வம்சமே அருளுக்குப் பாத்திரமாயிருக்கிறது. கிருபை கூர்ந்து தாங்கள் ஈண்டு எழுந்தருளியிருப்பது பலப்பல புண்ணிய க்ஷேத்திரங்கள் ஒன்று கூடுவதற்கு நிகரானது. இந்த ராஜ்ஜியத்திலுள்ள அனைத்தையும் தங்கள் திரு வடியில் சமர்ப்பிக்கிறேன். தங்கள் ஆணையைச் சிர மேற்கொண்டு அதை அப்படியே நிறைவேற்றி வைக் கிறேன். நான் யாண்டும் தங்கள் தொண்டன்.”
வேந்தனுடைய வினயபூர்வமான வணக்கம் வந்திருந்த விஸ்வாமித்ர மஹரிஷிக்கு நிறைமகிழ்வை ஊட்டுகிறது. புன்முறுவலுடன் அவர் பேசுகிறார்: “வேந்தே, வாக்குத் தத்தத்தைத் தாம் வேண்டியவாறு வழங்கியுள்ளீர்கள். அதை நிறைவேற்றி வைப்பதிலும் தாம் உறுதிப்பாடே வடிவெடுத்து இருப்பீராக. நான் யாகம் ஒன்று நடாத்தி வருகிறேன். மாரீசன், சுபாகு என்னும் இரண்டு அரக்கர்கள் இரத்தத்தையும் மாமிசத்தையும் கொட்டி அந்த யாகத்தைப் பாழ்படுத்த உறுதிபூண்டிருக்கின்றனர். என்னுடைய தபோபலத் தால் அன்னவர்களுடைய விஷமத்தைத் தடுக்க எனக்கு இயலும். ஆயினும் மேலாம் இலட்சியம் ஒன்றை முன்னிட்டு அப்போக்கில் என் தபோபலனை நான் பாழ்படுத்தலாகாது. செங்கோல் தாங்கிய செம்மலே, உம்முடைய மூத்த செல்வனாகிய இராமன் ஒருவனுக்கு மட்டுமே இந்த அரக்கர்கள் இருவரையும் ஒழித்துத் தள்ளுவது சாத்தியமாகும். வெறும் பத்தே பத்து நாட்களுக்கு மட்டும் தம் புதல்வனுடைய பணிவிடை எனக்குத் தேவையாக இருக்கிறது. உமது அருமைச் செல்வனுக்குத் தீங்கு ஏதும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். பொதுநலனுக்காக அவனுடைய தெய்விகப் பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது. என் கருத்தை இங்கு வீற்றிருக்கும் வசிஷ்ட மஹரிஷியும் ஏனைய மகாத்மாக்களும் முற்றிலும் ஆமோதிப்பார்கள்.”
தசரதச் சக்ரவர்த்தி ஸ்தம்பித்துப் போகிறார். சிறிது நேரம் அசையாத ஊமைபோன்று நிற்கிறார். பிறகு மனத்தை ஒருவாறு சாந்தப்படுத்துகிறார். திக்கித் திக்கித் தடுமாறிப் பேசுகிறார்: “இராமனுக்குப் பதி னாறு ஆண்டு இன்னும் பூர்த்தியாகவில்லை இராக்ஷசர்களை எதிர்த்துப் போர் புரிகிற அனுபவம் அந்த இளம் கன்றுக்கு இன்னும் வரவில்லை. என்னுடைய படை முழுவதையும் எனக்குப் பின்பலமாக வைத்துக் கொண்டு தங்களுடைய யாகத்தின் தூய்மையை நானே பாதுகாக்கிறேன் ஆதலால் இதுவிஷயத்தில் தாங்கள் கொண்டுள்ள ஆவலை அகற்றிவிடுங்கள். அதே சந்தர்ப்பத்தில் தங்களிடம் மற்றும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறேன். இராக்ஷசர்களை எதிர்த்துப் போர் புரியும் செயலில் இராமனுடைய வல்லமையை இவ்வளவு விரைவில் சோதிக்கவேண்டாம்.”
ஒரு காலத்தில் சினமே வடிவெடுத்திருந்த விஸ்வாமித்ர மஹரிஷி இப்பொழுது சினந்துகொண்ட வர் போன்று பாசாங்கு பண்ணுகிறார். அளந்தெடுத்த சொற்களை உறுதியுடன் இயம்புகிறார்: “வேந்தே, இப்பொழுது தாம் கொடுத்துள்ள வாக்கினின்று பின் வாங்குகின்றீர். ரகு குலத்து அரசன் ஒருவனுக்கு இச் செயல் ஒவ்வாது. இக்ஷ்வாகு வமிசத்து அரசர்கள் இது வரையில் தர்மத்தினின்று வழுவியது கிடையாது; ஆனால் தாமோ கொடுத்துள்ள உறுதிமொழி யினின்று வழுவுகின்றீர். இக்குறைபாட்டின் மூலமாக உம் குடும்பத்திற்குக் கேட்டை வரவழைக்கின்றீர். நான் எண்ணிவந்த எண்ணம் நிறைவேறப்பெறாது திரும்பு கிறேன் உம்முடைய செல்வனோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டு நெடுங்காலம் வாழ்ந்திருப்பீராக.”
அரசவையிலே அமர்ந்திருந்த ஆன்றோர்கள் உள் ளத்தில் இச்சம்பவம் சங்கடத்தை உண்டுபண்ணியது விஸ்வாமித்ர மஹரிஷிக்கு அதிருப்தி ஏற்படுமானால் அதற்கேற்ற அசம்பாவிதத்தை விளைவித்தவனுக்கு வில்லங்கம் நிச்சயமாக வரும். சான்றோர் ஒருவர் எதையுமே தமக்காகவென்று வேண்டுவதில்லை. அவர் எதை வேண்டினாலும் அது யாண்டும் பொது நல னுக்கு உரியது ஆகும். அப்படி அவர் வேண்டியதை வழங்க மறுப்பவனுக்குப் பொல்லாங்கு வருவது திண்ணம். இவ்வுண்மையை வசிஷ்ட மஹரிஷி நன்கு அறிந்திருந்தார். ஆதலால் இச்சங்கடத்தைச் சரிப்படுத்த அவர் முன்வந்தார். அறநெறி பிறழாத அரசன் ஒருவன் கொடுத்த வாக்கினின்று ஒருபொழுதும் பிறழுவ தில்லை என்று தசரதச் சக்ரவர்த்திக்கு அமைதியாக ஞாபசுமூட்டினார். கொடுத்துள்ள சொல்லினின்று விலகுபவனுடைய புண்ணியங்கள் யாவும் அழிந்து பட்டுப் போகின்றன. இனி, விஸ்வாமித்ர மஹரிஷியோ ஒரு சாதாரணமான மூர்த்தி அல்லர். ஆற்றல்கள் அனைத்துக்கும் அவர் உறைவிடம். தாம் நடத்தி வந்த யாகத்தை அவர் தாமே காக்க வல்லவர் அப்படியிருந் தும் இராமனுடைய பணிவிடை அதற்குத் தேவை என்று தெரிவித்ததன் வாயிலாக அந்த அரசகுமார னுக்கு வாழ்க்கைப் பயிற்சி ஒன்று கொடுக்க அவர் எண்ணியிருந்தார். இராமன் எதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்திருக்கிறானோ அதற்கேற்ற பயிற்சியை அவனுக்குத் தரவேண்டியது அவசியமாயிற்று. இராம னுக்கோ எந்தச் சூழ்நிலையிலும் எக்கேடுமே ஒரு பொழுதும் வாராது. இங்ஙனம் வசிஷ்டர் விளக்கியது சக்கரவர்த்திக்கு இப்பொழுது விளங்கிற்று. இராம னையும் அவனுடன் இணைபிரியாதிருக்கும் இலட்சு மணனையும் யாகம் காத்தல் பொருட்டு அனுப்பி வைப்பதாகப் பணிவுடன் விஸ்வாமித்ரரிடம் தெரி வித்தார்.
போற்றுதற்குரிய பெரியவர்கள் எல்லாரும் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். ராஜ குமாரர்களாகிய இராமனும் இலட்சுமணனும் ஆங்கு அழைத்து வரப் பட்டனர். அச்சிறுவர்கள் விண்ணுலகத்தினின்று மண்ணுலகத்துக்கு வந்தவர்கள் போன்று தென்பட்ட னர். இளைஞர்களைத் தொடர்ந்து தாய்மார்கள் மூவரும் ஆங்கு எழுந்தருளி அவர்களுக்கேற்ற ஆசனங் களில் அமர்ந்தனர் தந்தையாகிய தசரதர் தம் தனயர் களுக்குப் புதியதாய் அமைந்த கடமையை எடுத்து விளக்கினார். இளைஞர்கள் இருவரும் தலைவணங்கித் தந்தையின் ஆணையை ஏற்றுக்கொண்டனர். அடுத்த படியாக அவர்கள் அன்னைமார் மூவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். அதே பிரகாரம் பிறகு பிதாவைப் போற்றினர். அடுத்தபடியாக ராஜ குடும்பத்து ஆச்சாரியரான வசிஷ்ட மஹரிஷியை வணங்கினர். ‘இனித் தங்களுக்கு வாய்ப்பதாக இருக்கும் குருவாகிய விஸ்வாமித்ர மஹரிஷிக்குத் தங்களுடைய வழிபாட் டைச் செலுத்தினர். அதன் பிறகு ஆங்கு அமர்ந்திருந்த முதியவர்கள் எல்லார்க்கும் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் எல்லாருடைய ஆசீர் வாதங்களையும் பெற்றுக்கொண்டு ராஜகுமாரர்கள் இருவரும் மஹரிஷியைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆத்மீகப் பேராற்றலைப் பின்பற்றிப் பூவுலகுக்குரிய பராக்கிரமம் பணிவுடன் புறப்பட்டுப் போனதன் காட்சி அதுவாகும். நில உலகத்தவர்களுக்கும் வான் உலகத்தவர்களுக்கும் காண்பதற்கரிய காட்சியாக அது தென்பட்டது ஞான ஒளியுடன் மிளிர்ந்த மாமுனிவர்க்கு இருமருங்கிலும் ஆற்றலின் வடிவினர்களாகிய ராஜகுமாரர்கள் ஊக்கத்துடன் நடந்து சென்றனர்.
அயோத்யாபுரிக்குள்ளே ஆத்மீக ஆற்றலின் திருவுருவமாகிய விஸ்வாமித்ர மஹரிஷி நுழைந்த வுடனே மக்கள் எல்லார் உள்ளத்திலும் பேரானந்தம் பொங்கியது. இராமனை அழைத்துச் செல்ல அவர் எண்ணங் கொண்டிருந்தது உடனடியாகத் திகைப் பையும் துயரத்தையும் ஊட்டியது. விஷயத்தை அவர் எடுத்து விளக்கியபொழுது மேன்மக்கள் எல்லார்க்கும் ஒருவிதத்தில் மன அமைதி வருவதாயிற்று. இந்த மூன்று வித உணர்ச்சிகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று விரைவில் வந்தன. இச்சம்பவத்தில் மானுட வாழ்க்கைக் குரிய பாடங்கள் சில அடங்கியிருக்கின்றன. நெற்பயிர் நன்கு வளர்தல் பொருட்டு அதை இடம் மாற்றிப் பண்பட்ட பூமியில் நடுதல் வேண்டும். அதேவிதத்தில் நல்ல பயிற்சியின் பொருட்டு இளைஞன் ஒருவன் பிறப்பகத்தினின்று பயிற்சிக்கூடத்துக்குப் போய் ஆகவேண்டும். கோழிக்குஞ்சுகள் ஓரளவு வளர்ந்தான பிறகு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் பயிற்சியைப் பெறுதற்பொருட்டு தாய்க்கோழி அவை களை விரட்டியோட்டுகிறது. இப்பாடத்தை இயற்கை மக்களுக்குப் புகட்டுகிறது சிறுவர்கள் நெடுங்காலம் பெற்றோர்கள் பராமரிப்பிலேயே பாதுகாத்து வைக்கப் படுவதில் பயனொன்றுமில்லை. பிறரைச் சார்ந்திருக் கும் கோழைத்தனம் உதவாது. தன்னையே சார்ந்திருக் கும் திண்மையை விரைவில் பெற்றாக வேண்டும். அதன் பொருட்டு வளர்ந்து வருகிற இளைஞர்கள் பெற்றோர் களிடமிருந்து பிரிந்து புதிய சூழ்நிலைக்குப் போவது அவசியம். புதிய சூழ்நிலையில் உள்ளம் உறுதி பெறுகிறது. அறிவு தீட்டப்பெறுகிறது. ஞானம் ஓங்குகிறது. சமயோசித புத்தி உருவெடுக்கிறது.
சந்தர்ப்பத்திற்கேற்ற செயல்களைச் சமாளிக்கும் திறமை தானாக வருகிறது. இத்தகைய வாழ்க்கைப் பயிற்சி இளைஞர்களுக்கு முற்றி லும் இன்றியமையாததாகும். பிறப்பகத்தில் பெறும் பயிற்சியைப் பார்க்கிலும் படிப்புக் கூடத்தில் பெறும் பயிற்சி யாண்டும் மேலானது. இக்கோட்பாட்டை நடைமுறையில் கொண்டு வருவதற்கே விஸ்வாமித்ர மஹரிஷி அயோத்தியின்கண் வந்து இராமனைப் பல வந்தமாக ஏற்றுக்கொண்டு சென்றார். இவை யாவுக் கும் மேலாக அந்த மஹரிஷியின் பெரிய பொறுப் பொன்று இருந்தது. அரிய பெரிய அஸ்திர சஸ்திரங் களை அவர் அடையப் பெற்றிருந்தார். அவைகளைப் பற்றிய ஞானம் அவரோடு மறைந்துபட்டுப் போக லாகாது; தக்க பாத்திரம் ஒன்றைத் தேடி அப்பாத்திரத் தினிடத்துத் தாம் பெற்றிருந்த போர்த்திறமையை ஒப்படைப்பது அவருடைய கடமையாயிற்று அதன் பொருட்டே அதற்கேற்ற பாத்திரமாகப் பூவுலகில் பிறந்திருந்த பரம புருஷனாகிய இராமனை அழைத்துச் சென்றார். எக்காரியத்துக்காக இராமன் மண்ணுல் குக்கு வந்திருந்தானோ அக்காரியத்துக்கு ஏற்ற நல்ல பயிற்சியைத் தருகின்ற கடமை விஸ்வாமித்ரருக்கு உரியதாயிருந்தது. அதை உணர்ந்தே அவர் இராம னைத் தம்மோடு அழைத்துச் சென்றார்.
மஹரிஷியும் அவருடைய மாணாக்கர்களாகிய இராமனும் இலட்சுமணனும் முதல் இரவைச் சரயு நதிக்கரை ஓரத்தில் கழித்தனர். அப்பொழுது இளை ஞர்கள் இருவருக்கும் பலம், அதிபலம் என்னும் இரண்டு மந்திரங்கள் உபதேசிக்கப்பட்டன. இந்த மந்திரங்களை ஜபிப்பதன் வாயிலாக மானுடன் ஆயாசத்தையும் பசியையும் தாகத்தையும் சிரமமின்றிச் சமாளிக்க முடியும். குருவை அணுகியதன் விளைவாக இவர்கள் பெற்ற முதல் பேறு இதுவாம்.
இராமாயணம் – 4 இராக்ஷசர்களை எதிர்த்துப் போர் புரியும் செயலில் இராமனுடைய வல்லமை | Asha Aanmigam