கருட புராணம் அவா இன்மையே ஆனந்த வாழ்வு)
திருமாலின் உந்தியில் பிரமதேவன் தோன்றி, இவ்வுலகம் அனைத்தையும் படைத்தான். விசாலமான இந்த உலகத்தில் தவம் புரிவதற்குச் சிறந்த இடமாகவும், ஆரணியங்களுக்கெல்லாம் அரசாகவும் விளங்குவது நைமிசாரணியம். அந்த வனத்தை நோக்கி, புராணங்களைச் சொல்லுவதில் வல்லவரான சூதமாமுனிவர் சென்று கொண்டிருந்தார். அந்த நைமிசாரணியத்தில் வேத வேதாங்கங்களை ஐயந்திரிபற கற்று உணர்ந்தவர்களும் ஸ்ரீ ஹரிகதா சங்கீர்த்தன சீலர்களுமான சவுனகர் முதலான முனிவர்கள் ஆசார சீலர்களாய், சொரூபத்தியானம் செய்பவர்களாய் கூடியிருந்தார்கள். அவர்களைச் சேவிப்பதற்காகவே சூதமா முனிவர் வந்தார். அவரைக் கண்டதும் சௌனகாதி முனிவர்கள் உற்சாகமடைந்து அவரை எதிர்கொண்டு வரவேற்று நன்கு உபசரித்து, உயர்ந்ததொரு தூய்மையான ஆசனத்தில் அவரை அமரச்செய்து பூஜித்து வணங்கினார்கள்.
அதன் பிறகு அங்கிருந்த அருந்தவ முனிவர்கள் அனைவரும் சூதபுராணிகருக்கு அஞ்சலிசெய்து, “சூதமா முனிவரே! தங்களிடமிருந்து வைஷ்ணவ சைவ புராணங்களை மகிழ்ந்திருக்கிறோம். நாங்கள் கேட்டு பிரமனைக் குறித்த புராணங்களை இராஜஸகுணப் புராணங்களாகவும், சிவனைக்குறித்த புராணங்களைத் தாமஸ புராணங்களாகவும் ஸ்ரீவிஷ்ணு புராணம் ஒன்றையே தத்துவங்களைச் சொல்லும் ஸத்துவ புராணமாகவும் நாங்கள் கருதியிருக்கிறோம். ஆகவே, விஷ்ணு சம்பந்தப்பட்ட உயர்ந்த ஒரு புராணத்தைத் தாங்கள் சொன்னால் அதை நாங்கள் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம் .தாங்களோ, பகவானின் அம்சமாக விளங்கும் வேத வியாஸ முனிவரின் சீடர். அவர் தங்களுக்கு யாவற்றையும் ஓதி உணர்வித்திருக்கிறார். நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. தர்மார்த்த காம மோட்சம் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் புருஷார்த்தங்களையும் கொடுப்பதாகிய சாத்வீ கமான புராணம் ஒன்றை தேவரீர் கருணைகூர்ந்து எங்களுக்குச் சொல்ல வேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்” என்று விண்ணப்பித்தனர்.
“மாமுனிவரே! உலகில் உயிரினங்களுக்குப் பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? ஜனனம் எடுத்து, பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு, எந்தச் செய்கையால் சுவர்க்கமும் நரகமும் அடைய நேரிடுகிறதெனக் கூறப்படுகிறது? எந்தக் காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன? எப்போது பிரேத ஜன்மம். என்ற பூதப் பிரேத பைசாசாதி ஆவிப்பிறவிகள் தோன்றுகின்றன? எதனால் அத்தகைய ஜன்மம் நீங்கும்? எதனால் முக்தி என்ற மோட்சம் கிடைக்கும்? இவற்றையெல்லாம் எங்களுக்குப் புரியும் வகையில் தாங்கள் தெளிவாகச் சொல்லவேண்டும்!” என்று மிகவும் விரும்பிப் பணிவோடு கேட்டார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சூதமாமுனிவர் தம் குருநாதரான வியாச மகரிஷியின் திருவடித் தாமரைகளைத் தமது இருதயத்தில் தியானித்து, பிறகு சிரசின் மேல் தம்மிரு கரங்களையும் குவித்து, சர்வ ஜகத்காரணனும் ரக்ஷகனுமான ஸ்ரீமந்நாராயணனைத் தொழுது வணங்கிப் பூஜித்துவிட்டு, சௌனகாதி முனிவர்களை நோக்கி, “அந்தணோத்தமர்களே! அருந்தவ முனிவர்களே! யாவற்றையும் நன்குணர்ந்த நல்லவர்களே! நீங்கள் நல்லதொரு கேள்வியையே கேட்டீர்கள்.. நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையாகநான் ஒரு நல்ல புராணத்தைச் சொல்லுகிறேன். மனம் ஒருமிக்க கவனமாகக் கேளுங்கள். முனிவர்களே! தேவதேவனும், சர்வாந்தர்யாமியும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெருந் தொழில்களை விளையாட்டாகவே செய்பவனும், புருஷோத்தமனும், பரமபத சோபானனுமான ஸ்ரீமந் நாராயணனை, முன்பு ஒரு சமயம் பக்ஷிராஜனான ஸ்ரீ கருடாழ்வான் பணிந்து, இப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போன்றதொரு கேள்வியை உலக நன்மையின் பொருட்டுக் கேட்டான். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் தக்க விடையளித்தார். அந்தக் கதையை திருமால். கருடனுக்குக் கூறியவாறே நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன்; கேளுங்கள்.
பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்மாவை நோக்கி, “ஓ ஜகந்நாதா! பரந்தாமா! எள்ளுக்குள் எண்ணை போல் எங்கும் நிறைந்துள்ள பராபரப் பொருளே! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? அவர்கள் மரணமடைந்த பிறகு என்ன காரணத்தால் சுவர்க்க, நரகங்களை அடைகிறார்கள்? எந்தப் பாவத்தால், ஜீவர்கள் மரித்த பிறகு. பிரேத ஜன்மத்தை அடைகிறார்கள்? எந்தப் புண்ணியத்தைச் செய்தால் அந்த ஜன்மம் நீங்கும். எந்தக் கர்மத்தால் நிரதிசய இன்ப வீடான தேவரீரின் உலகை அடைவார்கள்? முன்பு செய்த பாவங்களை மரண காலத்தில் எவ்வாறு நீக்கிக் கொண்டு நல்லுலகம் அடையலாம்? எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும்? இறக்கும்போது யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும்!” என்று வேண்டினான்.
ஸ்ரீமந் நாராயண மூர்த்தியானவரும், எல்லோர் மனத்திலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லாச் செயல்களுக்கும் காரணமாகிய வருமான ஸ்ரீ ஹரிபகவான், புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார்:
“கருடனே! நீ நல்லதொரு கேள்வியைக்
கேட்டுவிட்டாய்! அதையும் நல்லமுறையில் கேட்டாய்!
நீ கேட்டவைகள் அனைத்துமே உலகினருக்குப் புரியாத இரகசியங்கள். அவற்றை நாம் கூறுவோம். கவனமாகக் கேள். எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது ஒரு நாளில் இறப்பது நிச்சயம் என்பதை ஒருசேதனனாயினும் நினைப்பதில்லை. உ ல கி ல் பிறந்துவிட்டது உண்மைஎன்பதுபோல இறத்தலும் உண்மையென்று நினைப்பவன் கோடியில் ஒருவனாவது இருக்கிறானோ, இல்லையோ? உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றுவன் என்று யமதர்மன் ஒருவன் இருக்கிறான் என்றும், வாழ்வின் இறுதிக் காலத்தில் அவன் கையில் அகப்பட்டேயாக வேண்டும் என்றும் அடுத்தடுத்து நினைத்து திடுக்கிடுபவன் எவனோ அவனே, ‘நேற்றைய பொழுது போய் விட்டது! இன்றையப் பொழுதும் போய்விட்டது! இதுபோல் நாளாக நாளாக நமது வாழ்நாள் வீணாளாகக் கழிகின்றதே? நமன் வந்து விட்டால் என்ன செய்வது?’ என்று நினைத்துப் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி, அறநெறிப்படி வாழ்வான். ஒருவன் தனக்குரிய கர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும்.
இன்ன குலத்தில் பிறந்தவன் இன்ன மரபுப்படி இத்தகைய கர்மங்களைச் செய்யவேண்டும் என்று வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன. கருடா! அத்தகைய குலாசார தர்மங்களை உணர்ந்து ஒருவன் தான் பிறந்த குலத்திற்கு ஏற்ற கர்மங்களைச் செய்வதோடு, மேலும் கீழும் செல்லாமல் உரிய கர்மங்களையே எவன் ஒருவன் முறைப்படிச் செய்கிறானோ, அவனே எல்லாவிடத்திலும் மேன்மையடைவான்.
“பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். அவர்களில் பிராமணருக்கு, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு கர்மங்கள் உள்ளன. க்ஷத்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படை பயிற்றல், பொருதல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு. வைசியருக்கு ஒதல், வேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏருழல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு, ஓதல், முன்னவர்க்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுக்காத்தல், வேட்டல் முதலிய ஆறு காமங்கள் உண்டு! ஓ கருடா, அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கப்படி நடப்பதே அவரவர்க்கு பெரிய தவமாகும்! அத்தவத்தில் வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து, நெடுநாள் வாழ்ந்து, இறுதியில் தமக்குரிய உலகை அடைவார்கள். ஆகையால் யாவரும் தத்தமக்கு உரிய ஒழுக்கத்தில் நிலை நிற்பதே சிறப்பாகும். யாவராயினும் எந்தப் பொருளையும் விரும்பலாகாது. எத்தகைய மாதவத்தையும் அத்தகைய இச்சையே கெடுத்து விடும். அவாவை ஒழித்து பற்றற்றவர்களே பேரறிஞர்களாவர்!” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.