திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாக்களை கோயிலுக்குள் ஏகாந்தமாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது.
இதன்படி, நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிலும் வாகன சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோயிலுக்குள்ளேயே தினமும் வாகன சேவைகள் நடைபெற்றன. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான நேற்று காலை வழக்கமாக தங்க ரத ஊர்வலம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா நிபந்தனைகளால், தங்க ரதத்திற்கு பதில், சர்வ பூபால வாகன சேவை கோயிலுக்குள் நடத்தப்பட்டது. இதில், உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளி காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு குதிரை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி அருள் பாலித்தார். இத்துடன் வாகன சேவைகள் நிறைவடைந்தன. இன்று காலை கோயிலுக்குள் சக்கர ஸ்நான (தீர்த்தவாரி) நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
Related