எட்டாம் நாள் போர். போர்க்கலை
எட்டாம் நாள் உதயமாயிற்று. கடலானது ஆரவாரம்செய்து கொண்டு செல்வது போன்று இருதிறத்துச் சேனைகளும் குருக்ஷேத்திரப் போர்க்களத்திற்குச் செல்ல லாயின.
எட்டாம் நாள் அன்று பீஷ்மர் கூர்மவியூகத்தை வகுத்தார். பகதத்தன் துரோணர் போன்றோர் பீஷ்மரை அடுத்து நின்றனர். துரியோதனன், அஸ்வத்தாமனை அடுத்துச் சென்றான். கிருபர் துரியோதனனை அடுத்துச் சென்றார்.
கெளரவர்களின் கூர்மவியூகத்தைக் கண்டார் தருமபுத்திரர். அவர் சேனைத் தலைவன் திட்டத்துய்மனை அழைத்து, ”சேனைத் தலைவரே! கௌரவர்கள் இன்று கூர்ம வியூகத்தை வகுத்துள்ளனர். அதற்கு ஏற்றாற் போல நம் வியூகம் அமைய வேண்டும் ” என்றார். உடனே திட்டத்துய்மன் ‘சிருங்கடம்’ என்னும் பெயரை யுடைய வியூகத்தை அமைத்தான். அவ் வியூகம் நாற்சந்தி அமைப்பைப் போன்றது பீமசேனனும் சாத்யகியும் ஆயிரக்கணக் கான வீரர்களுடன் சிருங்கடத்தினைப் பாதுகாத்தனர்; அந்த வியூகத்தின் நாபி ஸ்தானத்தில் அர்ச்சுனன் நின்றான். தருமபுத்திரரும், நகுல சகாதேவர்களும் மத்தியில் நின்றனர்.
‘சிருங்கடம்’, ‘கூர்மம்’, ‘மகரம்’ போன்ற வியூகங்கள் அமைக்கப்படுதலைக் காணும் போது போர்க்கலையை நம் முடைய முன்னோர்கள் எந்த அளவுக்குத் திறமையாகக் கற்றிருந்தார்கள் என்பது நன்கு புலனாகின்றது. வியப்பாயுமுள்ளது. இன்றைய போர்முறைக்கும். பழைய போர்முறைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தாலும், போர்க் களத்தில் வியூகம் வகுக்கின்ற முறை. சிலபோர்முறை உத்திகள் போன்றவை இக்காலப் போர்முறைக்கு ஓரளவு உதவி கரமாக இருக்கின்றன என்றால் மிகை யாகாது.
பீஷ்மருடன் போரிட்ட பீமன்
எட்டாம் நாளாகிய இன்று பீஷ்மர் ஆரவாரத்துடன் போரைத் தொடங்கினார். அவரால் பாண்டவர் படை சிதறி ஓடத் தொடங்கியது. இதனைக் கண்டு பீமன் ஓடிவந்து பீஷ்மரோடு கடும் போரிட்டான். இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. அப்பொழுது துரியோதனன் தன் படை களுடன் பீஷ்மருக்கு உதவியாக வந்து போரிட்டான். ஆனால் பீமன் சளைக்க வில்லை. பீஷ்மரின் சாரதியை வீழ்த்தி னான். அதனால் பீஷ்மரின் தேர் தாறு மாறாய் ஓடலாயிற்று. அப்பொழுது பீமன் ஓரம்பினால் துரியோதனன் தம்பியான சுநாபன் என்பவனைக் கொன்றான். அதனைப் பார்த்து ஆதித்யகேது, பக்வாசி, குண்டதாரன், மகோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலட்சன் என்ற துரியோ தனன் தம்பிமார் எழுவர் வந்து பீமனை கடுமையாகத் தாக்கினர். அதனால் பீமன் ஆவேசங்கொண்டு அந்த எழுவரையும் கொன்றான். ஆக அன்றைய காலைப் பொழுதில் துரியோதனன் தம்பிமார் எண்மரைக் கொன்றான். அரசவையில் செய்த சபதத்தை இன்றே நிறைவேற்றி விடுவான் போல உள்ளதே என்று அஞ்சிய மற்றவர்கள் அவ்விடத்தைவிட்டு ஓடி விட்டனர். இதனைப் பார்த்த துரியோதனன் பெருந்துயரம் அடைந்தான். பீஷ்மரை நிந்தித்தான். பீஷ்மரும் வழக்கப்படி அவனுக்கு ஆறுதல் கூறினார்.
இரவான் வீரமரணம்
இந்த எட்டாம் நாள் பாண்டவர்களுக் கும் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தியது. அர்ச்சுனனின் அருமை மகன் இரவான் கொல்லப்பட்டதேயாகும். நாக கன்னிகைக் கும், அர்ச்சுனனுக்கும் பிறந்த இந்த அருமை மைந்தன் பாண்டவர்களுக்காக களப்பலிக்கு ஆட்பட்டுத் தன்னை அர்ப் பணித்தவன். இன்று அதோடு நில்லாமல் போர்க்களத்தில் புகுந்து கெளரவர் சேனையைப் பெரிதும் நாசப்படுத்தினான். இவனை எதிர்க்கத் துரியோதனன் அலம் பரசன் என்ற அரக்கனை அனுப்பினான். இருவருக்கும் கோரமான யுத்தம் நடந்தது. முடிவில் அலம்பரசன் இரவானைக் கொன்றான்.
இச்செய்தி அர்ச்சுனனுக்கு எட்டியது! தாங்க முடியாத துயரக்கடலில் மூழ்கி னான். அப்பொழுது அவன் கண்ணபிரா னைப் பார்த்து, “கண்ணா! பரந்தாமா! விதுரர் போர் நேர்ந்தால் இருபக்கமும் பெரும் நாசத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். எங்கே நாம் கேட்டோம்? வெறும் நிலப்பரப்புக்காக விலைமதிப் பற்ற உயிர்களை வாரிக் கொடுக் கின்றோம்”. “ஐந்து கிராமங்களையேனும் கொடு, யுத்தம் வேண்டாம்” என்று அந்தக் கண்ணி லான் மகனை உலகத்துக்கெல்லாம் படி அளக்கும் நீங்கள் அன்று யாசித்தீர்கள்; மூர்க்கனான அவன் எங்கே கேட்டான். சிறிதும் கண்ணோட்டமில்லாது, “ஈ இருக்கும் இடம் எனினும் யான் அவர்க்கு அரசு இனிக் கொடேன்” என்று மார் தட்டிக் கூறிவிட்டான். இன்று நான் என் பெற்றகரிய புதல்வனை இழந்தேன். அவனும் இதற்குள் பத்துக்கு மேற்பட்ட தம்பியரை இழந்தான். இந்த நாசம் தேவதைானா? ‘கோழை’ என்று என்னை இகழ்வார்களே என்ற காரணத்தினால் போர்க்களத்தி லிருந்து விலகாமல் இருக்கின்றேன்” என்று வருந்திக் கூறினான்.
இரவான் கொல்லப்பட்தைக் கேட்ட தும் பீமனுடைய குமாரன் கடோத்கஜன் என்பவன் சேனைமுழுவதும் நடுங்கும்படி கர்ஜித்து கௌரவசேனையை அழிக்க ஆரம்பித்தான். அதனால் கெளரவ சேனை சிதறி ஒ ஓட ஆரம்பித்தது. இதனைக் கண்ட துரியோதனன் கடோத்கஜனை எதிர்க்க முன்வந்தான். துரியோதனனுக்கு உதவியாக வங்க தேசத்து மன்னன் வந்தான். எட்டாம் நாள் யுத்தத்தில் துரியோதனன் தைரிய மாகப் போர் புரிந்தான். கடோத்கஜ னுடைய படையிலிருந்த அநேக வீரர்களை வதம் செய்தான். அப்பொழுது கடோத் கஜன் துரியோதனன் மீது கத்தியை வீசி னான். வங்க மன்னன் துரியோதனனை அக்கத்தியினின்று தடுத்துக் காத்தான். இருவருக்கும் கடுமையான போர் நடந்தது.
பீஷ்மர், துரியோதனன் கடோத்கஜ னிடம் போராடிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி கேட்டு துரோணர் தலைமை யில் பெரும்படை ஒன்றை அ அனுப்பினார். கௌரவ வீரர்கள் ஒன்று சேர்ந்து கடோத் கஜனை எதிர்த்தார்கள். கடோத்கஜன் திணறலானான். பெருமுழக்கமிட்டான். அந்த முழக்கம் தருமபுத்திரருக்கு எட்டியது.
உடனே அவனுக்கு உதவியாக பீமன் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பினார். முன்னைவிட கோரமான யுத்தம் நடக்கலாயிற்று. துரோணர், துரியோ தனன் தம்பியர் பலருடன் சேர்ந்து பீமனுடன் கடுமையாகப் போரிட்டார். பீமன் திருதராட்டிரன் புதல்வர்களைக் கண்டதும் அளவற்ற கோபம் கொண்டான். கார்காலத்தில் மேகங்கள் மலைகளை மூடுவது போல அவர்களை அம்புகளினா லேயே மூடினான். எதிர்த்த துரியோ தனனை நிலை கலங்கத் தாக்கினான். பின்னர் குண்டபேதி, விராஜன், தீப்தலா சனன், தீர்க்பாகு, சுபாகு, மகரத்வஜன், அநாதிருஷ்டி போன்ற திருதராட்டிரன் மைந்தர்களைக் கொன்றான். தன்னுடைய சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட தும் மற்றைய சகோதரர்கள் ஓடியே விட்டனர். அன்று மட்டும் பீமன் பதினாறு திருதராட்டிரர் புதல்வர்களைக் கொன்றான். இதனால் துரோணர் கோபங் கொண்டு பீமனை எதிர்த்தார். பீமன் அதனைச் சாதுரியமாகத் தடுத்துவிட்டான்.
அந்த நேரத்தில் சூரியன் மறைந்தான். இரவு தொடங்கியது போரை அப்படியே நிறுத்திவிட்டு, இருதிறத்து வீரர்களும் தங்கள் தங்கள் பாசறைக்குத் திரும்பினர். இந்த எட்டாம் நாள் போரில் பாண்டவர்கள் தங்கள் அருமை மைந்தன் இரவானையும், கௌரவர்கள் திருதராட்டிரர் மைந்தர்கள் பதினாறு பேரையும் இழந்தார்கள். ஆக இது இருதிறத்தாருக்கும் ஒரு துக்க நாளாயிற்று.
ஒன்பதாம் நாள் போர். மந்திராலோசனை
இதுவரை தன்னுடைய தம்பியர் இருப துக்கு மேற்பட்டவர் இறந்ததைக் கண்டு துரியோதனன் பெருங்கவலை கொண் டான். எனவே அவன் சகுனி, துச்சாதனன், கர்ணன் போன்றோரை அழைத்து மந்திரா லோசனை செய்யத் தொடங்கினான்.
முதலில் துரியோதனன் அவர்களைப் பார்த்து, ”கர்ணா! துரோணர், பீஷ்மர், கிருபர் போன்ற பெரு வீரர்கள் இருந்தும் பாண்டவர்களை வெல்ல முடியவில்லை; அதற்குரிய காரணம் தெரியவில்லை. துரோ ணர் போன்ற பலசாலிகளின் முன்னிலை யிலே பீமன் என் தம்பியர் இருபதுக்கும் மேற்பட்டவரைக் கொன்று குவித்து விட்டான். பாண்டவர்களின் வெற்றியைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது யாது?” எனக் கேட்டான்.
கர்ணனின் கோபம்
அதற்கு கர்ணன் எழுந்து, “துரியோதனா! கவலைப்பட வேண்டாம். பீஷ்மர் மிகவும் சக்தி வாய்ந்தவர். மூன்று உலகில் உள்ளவர்களும் அவரை வெற்றி கொள்ள முடியாது. ஆனாலும் நாம் தோல்வி அடைவதற்கு அவர்தான் காரணம். அவர் பாண்டவர்களிடம் அன்பு கொள்வது தான். அன்பு கொண்ட பாண்டவர்களை அவர் எவ்வாறு கொல்வார்? வெற்றியில் அக்கறை இல்லாமல் அவர் நடந்து கொள்கிறார். எனவே அவரை ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு போர்க்களத்தை விட்டுப் போகச் சொல். நான் ஒருவனே பாண்டவர்களைக் கொல்வேன்” என்று கூறினான்.
இதனைக் கேட்டு துரியோதனன் பெரு மகிழ்ச்சி கொண்டான். அவ்வாறே செய்வ தாகக் கூறிப் பீஷ்மர் இருப்பிடம் சென் றான். அவரை வணங்கினான். பின்னர் அவரைப் பார்த்து, “பெருமானே! நாங்கள் தங்களை முன்னிட்டுக் கொண்டு போரில் தேவர்களையும் வெற்றி கொள்ளச் சித்த மாய் இருக்கிறோம். அவ்வாறு இருக்கப் பாண்டவர்களை வெல்வதில் என்ன தடை உள்ளது? தாங்கள் பாண்டவர்களைக் கொல்வதில் முனைப்புடன் இருக்க வேண்டும். பாஞ்சாலர்களைக் கொல்வேன் என்றீர்கள், இன்னும் அதனை நடைமுறை படுத்தவில்லை. பாண்டவர்களிடம் கொண்ட அன்பின் காரணமாக அவர் களைக் கொல்லாமல் இருக்கின்றீர்கள். எனவே போர் செய்ய கர்ணனுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அவன் பாண்டவர் களை அவர்கள் சுற்றத்தாருடன் கொல் வான்” என்று கூறினான்.
பீஷ்மரின் அறிவுரை
துரியோதனன் வார்த்தைகளில் உள்ள விஷமத்தனத்தைப் பீஷ்மர் புரிந்து கொண் டார், அதனால் அவர், “துரியோதனா! சக்திக்குத் தக்கபடி யுத்தம் செய்கிறவனும், உனக்காகவே யுத்தத்தில் ஈடுபடுகிறவனு மான என்னை ஏன் விஷமத்தனமான சொற்களைச் சொல்லிப் புண்படுத்துகின்றாய். நீ எப்போதும் விஷயங்களைத் தவறாகவே புரிந்து கொள்கிறாய். வேண்டுமென்றே பெரியோர்கள் சொல்லியவற்றைக் கேட்கா மல், வலிய வரவழைத்துக் கொண்ட விரோதத்தின் பயனை இன்று அனுபவிக் கிறாய். அவசரமும் ஆத்திரமும் படாதே! இதுவரை ஆத்திரப்பட்டு செய்தவையே போதும்! தைரியத்தை இழக்காமல் போர் செய்வதே இப்போது உனக்கு வேண்டியது. நான் மனசாட்சிக்கும், தெய்வத்திற்கும் விரோதமில்லாமல் போர் செய்கின்றேன். ங்களை தீ ஆனால் இரண்டு விஷயங்களை நீ வற்புறுத்தக்கூடாது. நான் செய்யவும் மாட்டேன்.
“முதலாவது, பெண்களை, பெண் போன்ற நடத்தையுடையவர்களை நான் கொல்ல மாட்டேன். என் மனம் இடம் தராது. அவர்களிடம் போரும் செய்ய மாட் டேன் இரண்டாவது பாண்டவர்களை என் கையால் கொல்ல என் மனம் இடம் தராது. மற்றபடி பிற எல்லாரையும் தாட்சணிய மின்றிக் கொல்வேன். இஃது உறுதி. ஆகையால் நீ கடித்திரிய முறைப்படி மனத்தளர்ச்சியில்லாமல் போரினைச் செய்வாயாக வருவது வரட்டும்” என்று சொல்லிவிட்டுத் தனது சேனையை வகுக்க வேண்டிய முறையைக் கூறினார்.
துரியோதனன் மன ஆறுதல் அடைத் தான். தம்பி துச்சாதனனை அழைத்து, “தம்பி! நம்முடைய முழுபலத்தையும் இன்று யுத்தத்தில் செலுத்துக. பீஷ்மர் பரிசுத்தமான எண்ணத்துடன் தான் போர் புரிகின்றார். சிகண்டி ஒருவனை மட்டும் எதிர்க்க முடியாது என்கிறார். ஆகையால் சிகண்டியை அவரிடம் நெருங்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். அஜாக்கிரதை யாக இருந்தால் சிம்மத்தையும், செந்நாய் கொன்று விடுவது போலச் சிகண்டி பீஷ்மரைக் கொன்றுவிடுவான் ” என்று கூறினான்.
கண்ணனின் அறிவுரை
ஒன்பதாம் நாள் அன்று யுத்த களத்தில் அபிமன்யுவிற்கும் அலம்பரசனுக்கும் கடும் போர் நடந்தது. புகழ்பெற்ற அர்ச்சுனனைப் போலவே அபிமன்யுவும் போர் செய்து, அலம்பரசுவைத் தேரிழந்து ஓடச் செய்தான். மற்றோர் இடத்தில் சாத்யகிக் கும், அஸ்வத்தாமனுக்கும் பெரும்போர் நடந்தது. சாத்யகியின் அம்புவிற்கு ஆட்பட்டு அஸ்வத்தாமா மூர்ச்சையடைந் தான். மூர்ச்சை தெளிவடைந்து அஸ்வத் தாமா எழுந்து மீண்டும் சாத்யகியைத் தாக்கினான். துரோணர் அப்போது அஸ்வத்தாமனுக்கு உதவியாக வந்தார். அதனைக் கண்ட அர்ச்சுனன் சாத்யகிக்கு உதவும் பொருட்டு வந்தான், ஆனால் அது அர்ச்சுனன் – துரோணர் போராக மாறியது. எல்லாப் பாண்டவ வீரர்களும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டனர். பீஷ்மரும் துரியோத னனுக்குக் கொடுத்த உறுதிமொழிக்கேற்ப உக்கிரமாகப் போர் செய்து அவர்களை நிலைகுலையச் செய்தார். பீஷ்மரால் பாண்டவ சேனை நிலைகுலைவதைப் பார்த்து, கண்ணபிரான் மனம் வருந்தினார். உடனே தேரை நிறுத்திவிட்டு, அர்ச்சுன னைப் பார்த்து,”பார்த்தா! முன்னம் விராட நகரில் நீ செய்து கொண்ட சபதத்தை நிறைவேற்றிக் கொள். இதுவே தக்க தருணம். மனக் கவலையின்றி அனைவரை யும் வெற்றி கொள்க” என்றார். அர்ச்சுனன் அதனைக் கேட்டுப் போர் செய்ய விருப்பம் அற்றவனாய் இருந்தான். எனவே அவன், ”பெருமானே! கொல்லக்கூடாதவர்களைக் கொன்று நாட்டை அடைய விரும்ப வில்லை; இருப்பினும் உம்முடைய கட்டளையை ஏற்று நான் பீஷ்மரை வதம் செய்கிறேன். தேரை அவ்விடம் செலுத்து” என்றார். தேரைக் கண்ணபிரான் பீஷ்மர் அருகே கொண்டு சென்றார். இருவருக்கும் கடுமையாக போர் நடந்தது. ஆனால் அர்ச்சுனன் தயங்கித் தயங்கியே போரிட்டு வந்தான்.இதனைக் கண்டதும் கண்ண பிரானுக்குக் கோபம் வந்துவிட்டது. அவ ருடைய கண்கள் சிவந்தன. கைகளாலேயே கொல்லும் ஆற்றலுடைய அப்பரந்தாமன் ஆயுதம் எடுக்காமலேயே பீஷ்மரைக் கொல் லும் பொருட்டு தேரைவிட்டு இறங்கி, அவரை நோக்கி ஓடினார்.
அங்கிருந்த படைகள் யாவும் நடுங்கின. “பீஷ்மர் மாண்டார்” என ஒலமிட்டன. கண்ணபிரான், தன்னை நோக்கி ஓடிவரும் காட்சியைப் பீஷ்மரும் கண்டார். தன் னுடைய பெரிய வில்லை நாணேற்றிய படியே மன அமைதியுடன், “தாமரைக் கண்ணனே ! தாமோதரனே! வாரும். என் அருகே வாரும். என்னை நீரே கொல்லும். அவ்வாறு செய்தால் நான் மூவுலகங்களும் போற்றப்படும் பெருமை பெறுவேன். நான் தங்கள் அடிமை” என்று வணங்கிக் கூறினார்.
கண்ணபிரான் பீஷ்மரைக் கொல்ல ஓடியதை அர்ச்சுனன் கண்டான். தேரி லிருந்து இறங்கி ஓடி வாசுதேவரின் கால் களைக் கட்டிக் கொண்டான். ”பெருமானே! பரந்தாமா! பாற்கடல் வண்ணா/ பவள வாயா! நான் போர் செய்ய மாட்டேன் என்று முன்னர் கூறிய உறுதி மொழியை நினைவுபடுத்திக் கொள்ளுங் கள். நீர் இப்பொழுது போர் செய்தால் உலகம் உம்மைப் பொய்யன் என்று தூற்றும். நான் பிதாமகரைக் கொல்கிறேன். என்பொருட்டு நீர் யுத்தம் செய்ய வேண் டாம். நானே எதிரிகளை அழிக்கின்றேன்” என்று உறுதி கூறினான்.
அர்ச்சுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணபிரான் கோபம் தணிந்தார்.
தன் தேருக்குத் திரும்பினார். பீஷ்மர் தொடர்ந்து அர்ச்சுனன் மீதும், கண்ண பிரான் மீதும் அம்புகளை மழையாகப் பொழிந்தார். அவருடைய தாக்குதலுக்குட் பட்டு பாண்டவசேனை பயம் கொண்டு ஓடத் தொடங்கியது. அன்றைய போரில் பீஷ்மர் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் போர் செய்வதை அனைவரும் கண்டனர்.
அச்சத்துடனும், நடுக்கத்துடனும் சேனையைத் தடுக்கும் ஆற்றலை அப்பொழுது பாண்டவர்கள் இழந்திருந் தனர். பீஷ்மர், கண்ணபிரான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பல அஸ்திரங் களைக் கொண்டு பாண்டவர்களைத் தாக்கி னார். அன்றைய போரில் பீஷ்மர் தன் போர்த் திறனைப் பெரிதும் வெளிப்படுத்தி னார் எனலாம்.
அதே சமயத்தில் சூரியன் மறைந்தான். இருதரப்புப்படை வீரர்களும் போரை நிறுத்திக் கொண்டனர். காயம் அடைந்த வீரர்கள் உடனே பாசறைக்குத் திரும்பினர்.
அன்றைய போரில் பீஷ்மரால் ஏற்பட்ட வெற்றியைக் கண்டு துரியோதனாதியர் பெருமகிழ்வு கொண்டனர். அவரைப் பற்றி புகழ்ந்து கொண்டாடினர். அனைவரும் தத்தம் இருப்பிடத்திற்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொண்டனர்.
பத்தாம்நாள் போர். சிகண்டி
பொழுது புலர்ந்தது. இருதரப்புப் படையினரும் போருக்கு ஆயத்தம் செய்தனர். பேரிகைகளும் முரசங்களும் முழங்கப்பட்டன. சங்கங்கள் ஊதப் பட்டன. பாண்டவர்கள் சிகண்டியை முன்னிட்டுக் கொண்டு போருக்குத் தயார் ஆனார்கள். சிகண்டி எல்லாப் படைகளுக் கும் முன்னால் நின்றான். பீமனும் அர்ச்சுனனும். இருபக்கப் பாதுகாவலர் ஆயினர். உப பாண்டவர்கள், அபிமன்யு, சாத்யகி. சேகிதானன் ஆகியவர்கள் சேனையின் பின்பக்கத்தைப் பாது காத்தனர். தருமபுத்திரர் நகுல சகாதேவர் களுடன் சிங்க நாதம் செய்து கொண்டு போருக்குப் புறப்பட்டார். விராட மன்னன் அவரைப்பின் தொடர்ந்து சென்றார். பாண்டவ சேனையானது இத்தகைய நிலையில் போருக்குத் தயாராய் வந்தது.
பீஷ்மரின் மார்பைப் பிளந்த சிகண்டியின் அம்புகள்
கௌரவர்களும், பாண்டவர்களைப் போலவே பீஷ்மரை முன்னிட்டுக் கொண்டு போருக்குத் தயாராகிப் புறப் பட்டு வந்தனர். துரோணரும், அஸ்வத் தாமாவும் கௌர கௌரவப்படையைப் பின் தொடர்ந்து சென்றனர். அதற்குப் பின்னால் பகதத்தனும் அவனைத் தொடர்ந்து கிருபர், கிருதவர்மா, முதலானோர் பின் தொடர்ந் தனர்.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் உக்கிரமான போர் தொடங்கியது.
அப்பொழுது சிகண்டியை முன்னால் வைத்துக் கொண்டு அர்ச்சுனன் பிதாமகர் பீஷ்மரை ஆவேசமாகத் தாக்கினான். சிகண் டியின் அம்புகள் பிதாமகரின் மார்பைப் பிளந்தன. அப்பொது பீஷ்மரின் கண்களி லிருந்து தீப்பொறி பறந்தது. அவர் பார்வை அவனையே எரித்துவிடும் போல இருந் தது. அடுத்த நிமிடம் அவர் கோபம் தணிந்துவிட்டது. தனக்கு இறுதிக்காலம் வந்துவிட்டதையுணர்ந்த அவர், சிகண் டியை எதிர்க்காமல் நின்றார்.
பார்த்தவர்களெல்லாம் அவருடைய வீரத்தைக் கண்டு போர் மரபு மாறாத் தன்மையைக் கண்டு வியந்தனர். தேவர்கள் போற்றினர். ஆனால் சிகண்டியோ எதையும் கவனிக்காமல் அம்புகளைச் சாரி சாரியாக விட்டு மார்பைச் சல்லடைக்கண் ஆக்கினான். அந்தச் சமயத்தில் அர்ச்சுனன் அம்புகள் பலவற்றைப் பீஷ்மர் மேல் ஏவினான். அவை அவர் உடல் முழுவ தையும் துளைத்தெடுத்தன. தம்முடைய அருமைச் சீடன்தான் அம்புகளை எய்கி றான் என்பதை உணர்ந்த அவர், ஒரு சக்தி ஆயுதத்தை அர்ச்சுனன் மேல் ஏவினார். அதனை அர்ச்சுனன் ஓர் அம்பினால் துண் டித்தான். இதுதான் கடைசிப் போர் என்று எண்ணி, பிதாமகர் கத்தியும் கேடயமுமாகக் கீழே இறங்கினார். ஆனால் அர்ச்சுனன் அவர் இறங்குவதற்குமுன் அவற்றையும் தன் அம்பினால் அழித்தான். உடல் முழுவதும் அர்ச்சுனன் அம்புகள் துளைத் தெடுத்தன. மனவுறுதி வாய்ந்த அப்பெருமகன் தேரினின்று இறங்கித் தரையில் சாய்ந்தார். தேவர்கள் வானத்தில் கை கூப்பி வணங்கி நின்றார்கள்.
தரையில் சாய்ந்த பீஷ்மர்
திருமாலின் திருவடிகளிலிருந்து இறங்கி, சிவபெருமான் திருமுடிவழியாக விண்ணிலிருந்து இறங்கி, உலகவுயிர்களின் உடலுக்கும், உணவுக்கும், ஆன்மாவுக்கும் சகல நன்மைகளையும் தந்து, அந்த உலக உயிர்களுக்கெல்லாம் அன்னையாக விளங்கும். பகீரதனின் அரிய முயற்சி யினால் இவ்வுலகில் பாயும் கங்கையின் புத்திரர்; தன் தந்தை சந்தனுவின் சுகத் திற்காக, தன் சுகங்களையெல்லாம் தியாகம் செய்த கர்மவீரர்; தன் உறுதியான கொள்கை யினால் ‘சிகண்டி’ என்னும் பகையைத் தேடிக்கொண்ட கொள்கைப் பிடிப்புள்ள கோமான்;குருகுலத்தின் புகழைக் குன்றின் மேல் வைத்த விளக்கென வைத்த பெரு மகன்; பரசுராமனை வென்ற நிகரற்ற வீரர்; தம்மைச் சந்தேகித்த துரியோதனனுக்குத் தம் சத்தியத்தை நிரூபிக்க உடல் முழுவதும் நெருப்பாக எரிக்கும் அம்புகள் பாய்ந்து உடல் கீழே விழும்வரையில் அவனுக்காகத் தன் கடமையைச் செய்த கங்கா தேவியின் தவப்புதல்வர்; தம் கடமையைச் செய்து விட்டோம் என்ற திருப்தியில் பத்தாம் நாள் தேரினின்று கீழே விழுந்து, தரையில் சாய்ந்தார்.
பீஷ்மர் விழும்பொழுது உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அங்கமெல்லாம் வாயாக விளங்கி அழுதன.
பீஷ்மருடைய உடல் தரையைத் தீண்ட வில்லை. அவர் தேகத்தில் குத்தி நின்ற அம்புகள் எல்லாம் செங்குத்தாக நின்று பிதாமகரின் உடலை அப்படியே தாங்கி நின்றன. அந்த அம்பு சயனத்தில் படுத்துக் கிடந்த அவர் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது, ‘பீஷ்மர் வீழ்ந்தார்’ என்ற செய்தி எட்டியவுடன் இருதிறத்துச் சேனை களும் அவரைப் பார்க்க ஓடிவந்தன.
நான்முகனை இந்திராதி தேவர்கள் வணங்குவது போல பீஷ்மரை எல்லாத்தேசத்து மன்னர்களும், குடிமக்களும் வணங்கி நின்றார்கள்.
உத்தராயணத்தில் உயிர் விடுதற்குக் காத்திருக்கும் பீஷ்மர்
அப்பொழுது அப்பெருமகனார். “என் தலையில் அம்புபடவில்லை. அதனால் அது தொங்குகிறது. உயரத்தில் தூக்கி வையுங்கள்” என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார்.எல்லாரும் தலையைத் தூக்கி வைப்பதற்குத் தலையணையைக் கொண்டு வந்தார்கள். ஆனால் பீஷ்மர் அவற்றை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் அர்ச்சுனனைப் பார்த்து, ”பார்த்தா! ஐயனே! என் தலை ஆதாரமில்லாமல் தொங்குகிறது. அது தொங்காமல் இருக்கச் சரியான தலை யணையைக் கொடு” என்று புன்முறுவ லுடன் கூறினார். அதனைக் கேட்ட அர்ச் சுனன் தன் அம்பறாத் தூணிலிருந்து மூன்று அம்புகளை எடுத்துப் பிதாமகரின் தலையை அவற்றின் கூர்மையான முனை யின் மேலே விளங்கும்படி வைத்தான். தலையின் தொங்குதல் நின்றது.
அதனைப் பார்த்துப் பீஷ்மர், “அரசர்க் சுரசர்களே ! அர்ச்சுனன் அமைத்திருக்கும் தலையணை எனக்கு மகிழ்ச்சியைத் தரு கின்றது. என் தேகத்தை விட்டு உயிர் பிரியும் காலம் இதுவன்று; உத்தராயணம் வரும்வரையில் நான் இந்த அம்புப் படுக்கையில் இப்படியே கிடப்பேன். அதுவரையில் என் உயிர் என் தேகத்தில் தங்கியிருக்கும். யார் உயிருடன் இருக் கின்றீர்களோ அவர்கள் என்னை வந்து பார்க்கலாம்” என்றார். (சூரியன் வடக்கில் சஞ்சரிக்கும் தை,மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்னும் ஆறுமாதங்களை உத்தராயணம் என்பர். அவ்வாறே சூரியன் தென்வீதியில் சஞ்சரிக்கும் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறுமாதங்களும் தட்சிணாயன காலம் ஆகும். தேவர்களுக்கு இரவாகிய தட்சிணாயனத்தில் இறக்கின்றவர்களுக்கு நற்கதியில்லை. எனவே உயர்கதி பெற விரும்புபவர்கள் தேவர்களுக்குப் பகலாகிய உத்தராயணத்தில் இறக்கவே விரும்பு வர். ஆதலால் பீஷ்மர் தட்சிணாயனத்தில் உயிர்விட விரும்பாது உத்தராயணத்தை எதிர் நோக்கியே அம்புப்படுக்கையில் கிடக்கலானார். தந்தையிடம் வேண்டிய பொழுது உயிர்விடும் வரத்தைப் பெற்றி ருந்தார். ஆதலால் உத்தராயணம் வரும் வரை காத்திருக்கக் கூடிய முடிவினைப் பீஷ்மர் எடுத்தார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.)
அதன்பின் பிதாமகர் பீஷ்மர் அர்ச்சுன னைப் பார்த்து,”என் அன்புக்குரிய பௌத் திரனே/ உடலெல்லாம் எரிகின்றது; நெஞ்சு வறள்கிறது. குடிக்கத் தண்ணீர்க் கொஞ்சம் கொடு” என்று கேட்டார். உடனே அர்ச்சுனன் தன் வில்லை வளைத்து, பீஷ்மருடைய வலப்பக்கத்தில் அம்பை நிலத்திற்குள் போகும்படியாக விட்டான். அந்த அம்பு உடனே பாதலத்தில் சென்று மறைந்தது.மறைந்த அந்த இடத்திலிருந்து ஓர் இனிய சுவைமிக்க நீரூற்று தோன்றியது. அது உயரக் குதித்துப் பாய்ந்தது. தாயாகிய கங்கை தன் அருமை மகனுடைய தாகத் தைத் தீர்க்க அங்கே ஊற்றாக எழுந்தனள் போலும் ! அமிர்தம் போன்ற அந்தப் புனித இனிய நீரைக் குடித்துத் தாகம் தணிய பீஷ்மர் மகிழ்ச்சி கொண்டார்.
தன்னைப் பார்க்க வந்த துரியோதன னிடம், ”துரியோதனா! உனக்கு நல்லறிவு உண்டாகட்டும். அர்ச்சுனன் என் தாகத் தினை எப்படி தீர்த்தான் பார்த்தாயா? இந்த அரிய செயலை உலகத்தில் வேறு எவன் செய்வான்? இனியும் தாமதிக்க வேண்டாம். பாண்டவர்களிடம் சமாதான மாகப் போ. இந்தக் குருக்ஷேத்திர யுத்தம் என்னோடு முடியட்டும்” என்றார். துரியோ தனனுக்கு அவரின் பொன்மொழிகள் பிடிக்கவில்லை.
பீஷ்மரைப் பார்த்துவிட்டு அரசர்கள் வீரர்கள் அனைவரும் தத்தம் பாசறைக்குச் சென்றனர்.
பிதாமகரும் கர்ணனும்
பீஷ்மரை இழந்த கெளரவ சேனை. இடையனை இழந்த ஆட்டுமந்தையைப் போலத் தத்தளித்து, நிலைகுலைந்து தடுமாறியது. சத்யசந்தரான பீஷ்மர் தரையில் சாய்ந்த போதே கௌரவர்கள் அனைவரும் போர்க்களத்தில், “கர்ணா! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டார்கள். அதற்குக் காரணம் கர்ணன் போரில் கலந்து கொண் டால் வெற்றி நிச்சயம் என அவர்கள் எண்ணியதேயாகும்.
பீஷ்மரால் அவமானப்படுத்தப்பட்ட கர்ணன், இல்லாமலேயே பத்து நாட்கள் யுத்தம் நடந்தது. அவன் கோபங்கொண்டு “நீர் போர்க்களத் தலைமையேற்றிருக்கும் வரை நான் போர் புரியமாட்டேன். நீர் பாண்டவர்களை வெற்றி கொண்டு நாட்டைத் துரியோதனனுக்குக் கொடுத் தால் நான் கானகம் சென்று விடுவேன். நீர் தோல்வியுற்று மரணமடைந்தால் உம்மால் அதிரதன் என்று கூட மதிக்கப்படாத நான் தேர்மேல் ஏறி துரியோதனனுக்கு வெற்றியை ஈட்டித் தருவேன்” என்று சபதம் செய்து துரியோதனன் சம்மதத் தையும் பெற்று, கடந்த பத்து நாட்களாகப் போரில் கலந்து கொள்ளாதிருந்தான்.
பீஷ்மரை வணங்கிய கர்ணன்
‘பீஷ்மர் சாய்ந்தார்’ என்று அறிந்தவுடன் கர்ணன் நடந்தே சென்று அம்புப் படுக்கை யில் படுத்திருந்த பீஷ்மரைக் கண்டு வணங்கினான். பின்னர் அவன், “குருகுலத் தோன்றலே! ஒரு குற்றமும் செய்யாது உம்மால் மிகவும் வெறுக்கப்பட்ட ராதேயன் மகன் கர்ணன் உங்களைக் காண வந்துள்ளேன் ; உம்மை வணங்கு கிறேன்” என்று கூறி இருகை கூப்பி வணங்கி நின்றான். அப்பொழுது அவன் ஒருவித பயம் கலந்த, மரியாதை உணர்வோடு விளங்கினான். இதனைப் பீஷ்மர் கண்டார். தலையை அசைத்து அவனை அருகில் கை காட்டி அழைத்தார். மிக்க கருணையோடு அவன் சிரசின் மேல் கையை வைத்து, தந்தை மகனை ஆசீர்வதிப்பது போல ஆசீர்வாதம் செய்தார். அம்புகளின் வழியாக அவனைப் பார்த்தார். பின்னர் அவனிடம் மெல்ல, “கர்ணா! நீ ராதேயன் மகன் அல்லன்! குந்தி தேவியின் மூத்தமகன்; சூரியன் அருளால் பிறந்த பானுகுமாரன் நீ. உலக ரகசியமெல்லாம் அறிந்த நாரதர் இதனை எனக்குச் சொல்லியிருக்கிறார். நீ ஒரு க்ஷத்திரியன்: சூரிய குமாரனான உன்மேல் எனக்கு எந்த விதக் கோபமுமில்லை.
”ஆனால் நீ பாண்டவர்களைக் காரண மின்றி வெறுக்கின்றாயே என்பதே என் வருத்தத்திற்குக் காரணமாக இருந்தது. உன்னுடைய மாரியன்ன கைம்மாறு கருதாக் கொடைத் தன்மையை யான் அறிவேன், வீரத்தில் நீ அர்ச்சுனனுக்கும், கண்ணனுக்கும் நிகரானவன் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை; பாண்ட வர்களை – உன் தம்பியரைச் சிநேகம் செய்து கொள்வதே உனக்கு நல்லது. பிறகு உன் விருப்பம். யுத்தத்தில் என் பங்கு இன்றோடு முடிந்தது. அதுபோல நீயும் பாண்டவர்கள் மீதுள்ள பகையையும் முடித்திட வேண்டும்” என்று நிதானமாக, உணர்ச்சியுடன் கூறினார்.
இதனைக் கேட்ட கர்ணன் மிகுந்த பணிவோடு, ”பிதாமகரே! நான் குந்தி தேவியின் மூத்த மைந்தன் என்பதை அறிவேன். நான் தேரோட்டியின் மகன் அல்லன் என்பதும் எனக்குத் தெரியும். துரியோதனனின் நிழலில் வாழ்ந்து, அவன் உணவை உண்டு வருபவன். அதனால் அவனுக்குக் கட்டுப்பட்டவன்; அவனை விட்டு அவன் விரோதிகள் பக்கம் சேர்வது என்பது என்னால் இயலாத செயல். துரியோதனனுக்காக நான் போர் புரிந்தே தீர வேண்டும். அதற்குத் தங்கள் அனுமதி வேண்டும். தருவீரா? உங்களைப் பல முறை பலமாக நிந்தித்துள்ளேன். தாங்கள் அவற்றை எல்லாம் மனத்தில் கொள்ளாது மன்னித்து அருளல் வேண்டும்” என்று உள்ளம் கலங்க, கண்களில் நீர் வழியக் கூறினான். தர்மங்கள் அனைத்தையும் அறிந்த பிதாமகர், “தானவீரன் கர்னா! உன் விருப்பப்படியே செய்க. தருமம் வெற்றி பெறும் ” என்று கூறினார்.
கர்ணனுக்குப் பீஷ்மர் ஆசி
அதனைக் கேட்டு கர்ணன், “கங்கை மைந்தரே! பரசுராமனை வென்ற வீரரே! பிதாமகரே! சிகண்டியால் அடிக்கப்பட்டு போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் படுத் திருக்கின்றீர். தருமத்தின் சிகரமும். உத்தமருமான உமக்கே இந்த கதி என்றால் இந்த உலகத்தில் ஒருவனும் புண்ணியத் தின் பயனை அடையமாட்டான் என்பது உறுதி கெளரவர்களுக்கு ஒரு தெப்பமாக விளங்கினீர்; இனி, அவர்கள் பாண்டவர் களால் தாக்கப்பட்டுத் துன்ப நிலையை அடையப் போகின்றார்கள். அர்ச்சுனனும், கண்ணபிரானும் நெருப்பும், காற்றும் சேர்ந்தது போன்று சேர்ந்து கெளரவர் நாட்டையே நாசம் செய்யப் போகிறார்கள். இதில் சந்தேகமில்லை. பெருமானே! தங்களுடைய அருள்பார்வையை என்மேல் செலுத்த வேண்டும்” என்று வேண்டினான்.
அதற்கு பீஷ்மர் “ராதேயன் மைந்தனே! நதிகளுக்குக் கடல் போலவும், விதைகளுக்கு மண்ணைப் போலவும், உயிர் களுக்கு மேகம் போலவும், உன்னை நண்பனாகக் கொண்ட கௌரவர்களுக்கு ஆதாரமாக இருக்கின்றாய். துரியோதன னைக் காப்பாற்றுவாயாக. அவனுக்காக நீ காமபோஜர்களை ஜெயித்தாய். இமயமலை யின் குகைகளிலுள்ள கிராதகர்களை யெல்லாம் அவனுக்காக அடக்கினாய். கரிவிரராஜாக்களுடன் போர் செய்து வெற்றி பெற்றாய். இன்னும் அநேக செயல்களைச் செய்தாய். இனி, கெளரவர் களுக்கு ரக்ஷகனாக இரு. உனக்கு மங்களம் உண்டாகட்டும். பகைவர்களோடு போர் செய். கெளரவப் படையை, உன் படையென நினைத்துப் போர் செய்” என்று கூறி ஆசீர்வதித்தார்.
கர்ணன், பிதாமகரின் அருளாசி பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தேரேறிப் போர்க்களத்துக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் துரியோதனன் பெருமகிழ்ச்சியுற்றான். பீஷ்மர் பலத்தை இழந்ததை மறந்தான்.
மகாபாரதம் – 47 எட்டாம், ஒன்பதாம், பத்தாம் நாள் போர்… உத்தராயணத்தில் உயிர் விடுதற்குக் காத்திருக்கும் பீஷ்மர்