துரோண பர்வம் – பதினோராம் நாள் போர்ச் சருக்கம் துரோணர் தலைமை ஏற்றல்
சிகண்டியை முன்னிட்டுக் கொண்டு அர்ச்சுனனால் பிதாமகர் பீஷ்மர் வீழ்த்தப்பட்டபின், கெளரவர் சேனைக்கு யாரைச் சேனாதிபதியாக்குவது எனத் துரியோதனனும், கர்ணனும் ஆலோசனை செய்தனர். அப்பொழுது துரியோதனன் கர்ணனைப் பார்த்து, ”நண்பனே! எல்லாவற்றிலும், யாவர்க்கும் மேம்பட்டு விளங்கிய நம் பிதாமகர் பீஷ்மர் இது நாள் வரை நமக்குச் சேனாதிபதியாக இருந்தார். அப்பெருமகன் வயது, அறிவு, வீரம், வேத ஞானம், அனுபவம் ஆகிய அனைத்திலும் மேம்பட்டவராக விளங்கினார். அவரால் நாம் பத்து நாட்கள் எந்தவிதக் குறைவு மின்றிப் பாதுகாக்கப்பட்டோம். அவருக் குப்பின் அவரளவு தகுதியுள்ள யாரைச் சேனாதிபதியாக்கலாம்? தலைவன் இல்லாத படை மாலுமி இல்லாத மரக் ‘கலம் போன்றதாகும். எனவே நம்மிடையே யாரைச் சேனாதிபதியாக்கலாம். சொல்வா யாக ” என்று கூறினான்.
அதற்கு கர்ணன், “அரசே! இங்கு உள்ள அனைவருமே சேனைத் தலைவனுக்குரிய தகுதி பெற்றவர்களே! குலம், ஞானம். வலிமை, வீரம், அறிவு, அனுபவம் போன்றவற்றில் எல்லாரும் மேம்பாடு உடையவர்கள் என்றாலும், நமக்கு ஆசார்ய ராய் இருப்பவரும், வயது முதிர்ந்தவரும், அஸ்திரப் பயிற்சிப் பெற்றவரும், வேத ஞானமுடையவரும் ஆக விளங்கக்கூடிய ஆசாரியர் துரோணரையே சேனாதிபதி யாக்கலாம்” என்றான். கர்ணனின் வார்த்தைகளைக் கேட்டுத் துரியோதனன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான். அரசர் கூட்டத்தின் நடுவில் முழுநிலவு என விளங்கிய துரோணரை அடைந்தான். அவரிடம்,”ஆசார்யரே! உம்மைவிடச் சிறந்த வில்லாளி உலகில் எவரும் இல்லை. எனவே உம்மைச் சேனாதிபதியாக்கி எதிரி களை வெற்றி கொள்ள விரும்புகின்றோம். எங்களை நீங்கள்தான் பாதுகாக்க வேண் டும் என்றான் .இதனைக் கூறியபொழுது எல்லாரும் ஆமோதித்து ஆரவாரம் செய் தார்கள். வாழ்க, வாழ்க என்று முழங்கினர்.
துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டு ஆசார்யர் துரோணர் பெருமகிழ்ச்சி அடைந்தார். அப்பொழுது அவர், “துரியோ தனா! உன்னுடைய வார்த்தைகளைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். என்னுடைய முழுத்திறமையையும் காட் டிப் போர் புரிவேன். வீரர்களுக்கும் நல்ல வழி காட்டிச் செல்வேன். ல்வேன். பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் மகன் திட்டத்துய்மன் என்னைக் கொல்லக் காத்திருக்கின்றான். என்றாலும், அவனையும் பாண்டவர் சேனையையும் நிச்சயம் வெற்றி கொள் வேன்” என்று கூறினார்.
ஆசார்யர் துரோணரின் ஒப்புதல் கிடைத்தவுடன் துரியோதனாதியர், இந்திரன் முதலான தேவர்கள் தேவ சேனாதி பதியாக முன்னின்று முடிக்கும் முருகப் பெருமானுக்கு அபிடேகம் செய்ததுபோல முறைப்படி அபிடேகம் செய்து, அப்பெரு மகனைச் சேனாதிபதி ஆக்கினர். வெற்றி முழக்கங்கள் எங்கணும் எழுந்தன; பாண்ட வர்களை வெற்றி கொண்டது போன்ற பெருமகிழ்வு கெளரவர்களிடையே ஏற்பட்டது.
பதினோராம் நாள் ஆகிய அன்று ஆசார்யர் துரோணர் கௌரவர் சேனையைச் சகடவியூகமாக வகுத்தார். சிந்து நாட்டு மன்னனும், துரியோதனன் தங்கை துச்சளையின் கணவனுமான ஜயத்ரதனும், துரியோதனன் இளைய தம்பி விகர்ணனும், துரோணரின் வலப்பக்கத்தில் நின்றனர்.
காந்தார நாட்டு மன்னன் சகுனி, தன் படைவீரர்களுடன் முன் வரிசையில் இருந்தான். கிருதவர்மா, சித்திரசேனன், துச்சாதனன் போன்றோர் துரோணருக்கு இடப்பக்கம் இருந்தனர். காம்போஜர்கள், யவனர்கள் அணிவகுத்து முன்புறம் சென்றனர். கர்ணன் தன் சேனையுடன் போர்க்களத்திற்குச் சென்றபொழுது அவனுடைய தேரில் கச்சைவடிவமான கொடி பறந்தது. கர்ணன் பாண்டவர்களை முழுதாக வெற்றி கொள்வான் என்று கெளரவ சேனைகள் எண்ணி மகிழ்ந்தார்கள்.
பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகம்
பதினோராம் நாளான அன்று தரும புத்திரர், தன் சேனைகளைக் கிரௌஞ்ச வியூகமாக வகுத்தார். சேனையின் முன்னே அர்ச்சுனன் தேரைக் கண்ணபிரான் செலுத்திச் சென்றார். விற்களில் சிறந்தது காண்டீபம்; வில்லாளியில் சிறந்தவன் அர்ச்சுனன், தேவர்களில் சிறந்தவர் வாசு தேவர். ஆயுதங்களில் சிறப்புடையது சுதர்சனத் திருச்சக்கரம் என்ற எண்ணத்தில் பாண்டவசேனை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, போர்க்களம் நோக்கிச் சென்றது.
தரும புத்திரரை உயிருடன் பிடிக்க முனைதல்
துரோணர் கெளரவர் சேனைக்குத் தலைமை ஏற்றதும், துரியோதனன், கர்ணன், துச்சாதனன் முதலானோர் ஆலோ சனை செய்து பதினொன்றாம் நாள் போரில் தரும புத்திரரை உயிருடன் சிறை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இதனைச் சேனைத் தலைவராகிய துரோணரிடம் துரியோதனன் தெரிவித்தான்.
இதனைக் கேட்டதும் ஆசார்யர் துரோணர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். பீஷ்மரைப் போலவே துரோணருக்கும் பாண்டவர்களைக் கொல்ல மனமில்லை அதிலும் தருமபுத்திரரைக் கொல்வது தருமமன்று என்று எண்ணிக் கொண்டிருந்த அவரிடம் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டதும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
அதனால், அவர், “துரியோதனா! தரும் புத்திரரை உயிருடன் நீ பிடிக்கவேண்டும் என்று விரும்புவதைக் கேட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பகை யற்றவர் தருமபுத்திரர் என்பதை நீ உண்மை யாக்கினாய். தருமபுத்திரரை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று நீ கூறியதனால் பாண்டவர்களுடன் சமாதானமாகப் போக விரும்புகிறாய் என நான் அறிகிறேன். சகோதர நேசத்தை நீ விடவில்லை. நின் எண்ணப்படியே தருமபுத்திரரை உயிருடன் பிடித்துவிடலாம்” என்றார்.
ஆனால் துரியோதனன் எண்ணமே வேறு. அவன் உள்ளத்தில் பகையுணர்வும் குரோதமும் முன்போலவே இருந்தன. அது குறையவே இல்லை. அதனால் அவன் உடனே, துரோணரிடம், “ஆசாரியரே! தருமபுத்திரரைக் கொன்றால் பாண்ட வர்களுடைய கோபம் தணியாது. ம் தணியாது. முன்னை விட அதிகரிக்கும். அப்பொழுது அனை வரும் நாச நாசமாகும் வரையில் போர் நடக்கும். நம்முடைய சேனை நிச்சயம் தோற்கடிக்கப்படும். பாண்டவர்களும் உயிருடன் இருக்க மாட் மாட்டார்கள். கண்ணபிரான் மட்டும் உயிருடன் இருந்து நாட்டைக் குந்திதேவியினிடமோ திரௌ பதியினிடமோ ஒப்படைத்துத் துவாரகை சென்று விடுவார். இதில் நமக்கு எந்தவித லாபமுமில்லை. அதற்குப் பதிலாக நாம் தருமபுத்திரரை உயிரோடு பிடித்துவிட்டால் போர் சீக்கிரமாகவே முடிந்துவிடும். தருமத்திற்குப் பயந்த தருமபுத்திரனை எப்படியாவது மறுபடியும் சூதாட்டத்திற்கு இழுத்துத் தோற்கடித்துக் காட்டிற்கு அனுப்பிவிடலாம்” என்று உள்ளத்தி லுள்ளதை அப்படியே கொட்டிவிட்டான். இவ்வாறு அவன் கூறியதற்குக் காரணம் பத்து நாட்கள் நடந்த போரில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் ஆகும். இந்தப் போரின் முடிவு குல நாசமே தவிர வேறு பயன் இல்லை என்பதை அறிந்த அவன், அதனால்தான் தருமபுத்திரரை உயிருடன் பிடிக்கவேண்டும் என்று துரோணரிடம் கூறினான்.
இதனைக் கேட்ட துரோணரின் மகிழ்ச்சி நீங்கியேவிட்டது, என்றாலும் தருமபுத்திர ரைக் கொல்லாமலிருக்க வழி ஏற்பட்டதே என எண்ணி அவன் கூறியதற்கு ஒப்புக் கொண்டார்.
“துரோணர், தருமபுத்திரரை உயிரோடு பிடிக்கப் போகின்றார்” என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களுக்கு எட்டி யது. அதனால் தருமபுத்திரருக்குப் போதிய பாதுகாப்பு இருத்தல் வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். அதற்கேற்றபடி போரின் தன்மையை ஒழுங்குபடுத்திக் கொண்டார்கள். தரும புத்திரருக்குப் பாதுகாப்புக் குறையாமலிருக்க அவர் இருக்குமிடத்தில், போதிய படைகளை இருக்க வைத்தார்கள்.
துரோணர் தலைமையில் நடந்த முதல் நாள் யுத்தத்தில், துரோணர், தம்முடைய வீரத்தை நன்றாகக் காட்டிப் போர் புரிய லானார். நெருப்பானது உலர்ந்த காட்டை கொளுத்துவது போலப் பாண்டவர்கள் சேனையைத் துரோணர் அழிக்கலானார். ஒரு துரோணர் பல துரோணர்களாகப் போரிடுகிறார் என்று எண்ணி, பாண்ட வர்கள் சேனை அஞ்சுமாறு அங்கும் இங்கும் தன் தேரைச் செலுத்திச் சரமாரி யாக அம்புகளை மழையெனப் பொழிந் தார்.
சகுனியுடன் சகாதேவன் போர்
திட்டத்துய்மன் இருந்த இடத்தில் சென்று, பாண்டவர் சேனையை நாசம் செய்தார். பின்னர் மாயச் சண்டையில் வல்லவனான சகுனிக்கும் சகாதேவனுக்கும் போர் உக்கிரமாக நடந்தது.தேர்க்கால்கள் உடைந்தன. இருவரும் கீழே இறங்கி, கதாயுதங்களைக் கொண்டு இரு மலைகள் மோதுவது போல மோதலானார்கள். மற்றோர் இடத்தில் சல்லியன் தன் மருமக னான நகுலனுடன் போரிட்டான். நகுலன் தன் மாமனுடைய தேர்,தேர்க்கொடி, வெண்கொற்றக்குடை, முதலானவற்றை அழித்து வெற்றிச் சங்கு ஊதினான். கிருபாச் சாரியார் திருஷ்டகேதுவுடன் போரிட்டு அவனைத் தோற்கடித்தார், விராடனோ கர்ணனை எதிர்த்துப் போரிட்டான். அபிமன்யு சிங்கக்குட்டி போல் போர்க் களத்தில் குதித்து, கிருதவர்மன், ஜயத்ரதன், சல்லியன், பௌரவன் ஆகிய நான்கு பெரிய வீரர்களுடன் போரிட்டு, அவர் களை முறியடித்தான்.
அதன்பிறகு பீமனுக்கும் சல்லியனுக்கும் ஆக்ரோஷமான போர் நடந்தது. முடிவில் பீமனால் சல்லியன் அடியுண்டு புறங்காட்டி ஓடினான். அதனால் கெளரவர் சேனை தைரியம் இழந்தது. நிலை குலைந்தது.
இதனைக் கண்டு, தன் சேனையை உற்சாகப்படுத்துவதற்காகத் துரோணர் தம் தேர்ப்பாகனைத் தருமபுத்திரர் இருக்கும் இடத்துக்குச் செல்லும்படி கூறினார். அவனும் வாயு வேகமாக, மனோவேக மாக தருமபுத்திரருக்கு அருகே சென்றான். இதனை அறிந்த தருமபுத்திரரோ துரோணர் மேல் அம்புகளை மழையெனப் பொழிந்தார். ஆனால் ஆசார்யர் துரோணர் கலங்கவில்லை. மேலும் தருமபுத்திரர் விடுத்த பாணங்களை அழித்துவிட்டுத் துரோணர் முன்னேறலானார், அதோடு தருமபுத்திரரின் வில்லையும் அழித்தார். அந்த நேரத்தில் திட்டத்துய்மன் அங்கு அங்கு வந்து தருமபுத்திரரை நெருங்கவிடாமல் அவருடன் கடும் போர் செய்தான். துரோணரும் அவனுடன் கடும்போர் செய்து அவனைப் பின்னிட வைத்தார். அப்பொழுது ‘தருமபுத்திரர் பிடிபட்டார், தருமபுத்திரர் பிடிபட்டார்’ என்ற வதந்தி போர்க்களம் முழுவதும் பரவியது. இந்தச் செய்தி அர்ச்சுனனுக்கு எட்டியது.
அடுத்த கணமே பூமி அதிர, கெளரவர் சேனை நிலைகுலுங்க, கண்ணபிரான் தேரை இரத்த ஆற்றையும், எலும்புக் கூட்டங்களையும், பிணக்குவியலையும் கடக்கச் செய்து துரோணர் எதிரே நிறுத்தினார். அர்ச்சுனன் துரோணருடன் கடும்போர் புரிந்தான். ஒருவர்க்கொருவர் சளைக்காமல் போரிட்டார்கள். மாலை நேரம் வரை இடைவிடாது வெற்றி தோல்வியின்றி போர் நடந்தது. பின்னர் போர்க்களத்தில் செலுத்திய அம்புகள் வானத்தை மூடி இருட்டாக்கிவிட்டன. அதனால் துரோணர் பின் வாங்கினார். கடும்போர் புரிந்தும் தருமபுத்திரர் பிடிபட வில்லை. யுத்தம் அன்று நிறுத்தப்பட்டது. கௌரவ சேனை பெருநஷ்டத்துடன் பாசறை சென்றது. பாண்டவர் சேனையோ ‘தருமபுத்திரரைக் காப்பாற்றினோம்’என்ற மகிழ்ச்சியோடு பாசறை சென்றது. துரியோ தனாதியர் தாம் திட்டம் போட்டவாறு தருமபுத்திரரைப் பிடிக்க முடியவில்லையே என்று வருந்தினார்கள்.
பன்னிரெண்டாம் நாள் போர்ச் சருக்கம்
தருமபுத்திரரை உயிருடன் பிடிக்கும் முயற்சி முதல் நாளில் தோல்வியடைந்தது. அதனால் துரோணர், துரியோதனனை, நோக்கி, ”அரசே! அர்ச்சுனன் அருகில் இருக்கும் வரை தரும புத்திரரைச் சிறை பிடிக்க முடியாது. ஏதாவது உபாயம் செய்து அர்ச்சுனனை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டால் சேனையை உடைத்துத் தருமபுத்திரரைச் சிறைபிடிக்க இயலும்.
அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று கூறினார்.
துரோணர் சொன்னதைத் திரிகர்த்த ராஜனான சுசர்மன் என்பவன் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய சகோதரர்களுடன் ஆலோசனை செய்து, “சம்சப்தக விரதம் பூண்டு தருமபுத்திரிடமிருந்து அர்ச்சுனனைத் தனியாகப் பிரித்துவிடலாம்” என்று துரியோதன னிடம் கூறினான். ஒரு முக்கிய நோக்கத் திற்காக ஒரு படையோ, ஓர் அமைப்போ தனியாளோ தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு குறிப்பிட்ட செயலை முடிப்பது தான் ‘சம்சப்தகம்’ என்பதாகும். இதனைத் ‘தற்கொலைப்படை’ என்று சொல்லலாம். இதனைத் திரிகர்த்த ராஜனாகிய சுசர்மனின் சகோதரர்கள் அர்ச்சுனனைக் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்திற்காகச் செய்யலானார்கள்.
ஒரு பெருஞ்சேனையைத் திரட்டிக் கொண்டு, எல்லோரும் சேர்ந்து அக்கினிக்குப் பூஜை செய்து, புல்லால் செய்யப்பட்ட ஆடைகளைக் கட்டிக் கொண்டு, சரீரத்தை விட்டுவிட உறுதி பூண்டு அந்தச் சம்சப்தகர்கள் “நாங்கள் யுத்தத்தில் அர்ச்சுனனைக் கொல்லாமல் திரும்பமாட்டோம், அப்படி செய்யாது புறங்காட்டி ஓடினோமானால், எல்லாப் பாவங்களையும் செய்த பெருந்தோஷம் எங்களுக்கு உண்டாகட்டும்” என்று கூறிப் போர்க்களத்தில் இயமனுடைய தெற்குத்திக்கை நோக்கிப் பிரவேசித்தார்கள்.
இதனை அறிந்த அர்ச்சுனன் தருமபுத்திர ரைப் பார்த்து, ”இந்தச் சம்சப்தக விரதம் பூண்டவர்கள் என்னைக் கூப்பிடுகின்றார் கள். போருக்கு யார் என்னை அழைத்தாலும் நான் பின் வாங்கமாட்டேன் என்று உறுதி பூண்டுள்ளேன். ஆதலின் அந்தச் சுசர்மனையும், அவனது பரிவாரங்களையும் கொன்றுவிட்டுத் திரும்புவேன். அனுமதி தருக” என்று வேண்டினான்.
தர்மபுத்திரருக்குப் பாதுகாவலனான சத்தியஜித்
அதற்குத் தருமபுத்திரர், “அர்ச்சுனா! துரோணர் என்னை உயிருடன் பிடித்துக் கொடுப்பதாகத் துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துள்ளார். இதனை அறிந்து கொள்” என்றார். அதற்கு அர்ச்சுனன், “அரசே! உமக்குப் பாதுகாப்பாகச் சத்யஜித் இருக்கி றான். ஆதலின் உங்களுக்கு எந்தவிதத் நீங்கும் நேராது என்று என்று சொல்லிப் பாஞ் சால நாட்டு இளவரசன் சத்யஜித்தைத் தருமபுத்திரருக்குக் காப்பாக வைத்துவிட்டு சம்சப்தகர்களுடைய அழைப்பை ஏற்று பசி கொண்ட சிங்கம் போல அவர்களை எதிர்க்கச் சென்றான்.
சென்ற அர்ச்சுனன் திரிகர்த்தராஜர்களைத் தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. பிரளய காலத்தில் நடைபெறும் ருத்திர தாண்டவ அரங்கம் போலப் போர்க்களம் விளங்கியது. தலையில்லா முண்டங்கள், வெட்டுண்ட அங்கங்கள். அங்கங்கள், பந்து போன்றது தலைகள், எங்கணும் பயங்கரமாகக் காட்சி அளித்தன.
சம்சப்தகர்களை எதிர்த்துப் போரிட அர்ச்சுனன் சென்றதும், துரோணர் அணி வகுக்கப்பட்ட பாண்டவ சேனையில் தருமர் இருந்த இடத்தைப் பலமாகத் தாக்க, தம் சேனைக்கு உத்தரவிட்டார். பெருஞ்சேனை ஒன்று துரோணர் தலைமையில் தம்மை எதிர்க்க வருவதைத் தருமபுத்திரர் கண்டார். அதனால் திட்டத்துய்மனிடம் அவர்,”ஆசார்யர் என்னை உயிரோடு பிடிக் காமல் இருக்க, ஜாக்கிரதையாகச் சேனையை வைத்திருப்பாயாக” என்றார்.
துருபதகுமாரனோ துரோணர் வரும் வரையில் காத்திருக்காமல், ஆசார்யர் துரோணரை எதிர்க்கத் தேரைத் துரிதமாகச் செலுத்தினான். தன்னைக் கொல்லுவதற்கு என்றே பிறந்தவன் அத்திட்டத்துய்மன் என்பதை நன்றாக அறிந்த அவர், அவனி டம் போர் செய்யாமல் பாண்டவசேனை மீது அம்புகளைச் சரமாரியாகத் தொடுத்து அவற்றைத் திக்குமுக்காடச் செய்தார். பின்னர் தருமபுத்திரர், இருக்குமிடத்திற்குச் சென்று, அவர்மீது அம்புகளை மழை யெனப் பொழிந்தார். யுதிஷ்டிரரும் எதிர்த் தாக்குதல் செய்து அம்புகளை மழையெனப் பொழிந்தார். அந்த நிலையில் அங்கிருந்த சத்யஜித் என்பவன் துரோணரை நோக்கிச் சென்று அவருடன் உக்கிரமாகப் போர் புரிந்தான். துரோணரும் இயமனைப் போல விளங்கிப் பல வீரர்களை வதம் செய்தார்.
பாஞ்சால ராஜகுமாரனான விருகன் என்பவன் அவர் பாணத்துக்கு இரையானான். சத்தியஜித்தும் அடிபட்டு மாண்டான்.
யானைப் படையை விரட்டிய பீமன்
இதனைக் கண்டு விராடன் மகன் சதானீகன் என்பவன் துரோணர் மேல் கோபத்தோடு பாய்ந்தான். ஆனால் அவனால் துரோணரை எதிர்த் தாக்குதல் செய்ய முடியவில்லை. அவனும் தலை அறுபட்டுக் கீழே வீழ்ந்தான். துரோணரின் வேகத்தை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டுமென்று வந்த வசுதானன் என்ப வன் துரோணரால் யமபுரத்துக்கு அனுப்பப்பட்டான். அதன்பின் தருமபுத்திர ரைக் காக்க வந்த சாத்யகியையும், சிகண்டி யையும்,யுதாமன்யுவையும் துரோணர் தம் பாணங்களால் விரட்டி அடித்தார். மற்றொரு துருபத புத்திரனான பாஞ்சாலன் என்பவன் துரோணரால் உயிரிழந்து தேரினின்று கீழே விழுந்தான். அவருடைய பேராற்றலைக் கண்டு துரியோதனன் கர்ண னிடம் கூறி மகிழ்ந்தான்.
அப்பொழுது கர்ணன், “நண்பா! பாண்டவர்கள் எளிதில் தோல்வியடைய மாட்டார்கள். நஞ்சினாலும், அரக்கு மாளிகை நெருப்பினாலும், சூதாட்டத் தினாலும் உண்டான துன்பங்களையும் வனவாசம், அஞ்ஞாதவாசம் ஆகிய வற்றையும் அவர்கள் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள். பாண்டவர்கள் மறுபடியும் ஒன்றுகூடி நம் சேனையைத் தாக்குவார்கள். பீமன், சாத்யகி, துருபதன்,விராடன், சிகண்டி, திருஷ்டகேது போன்றவர்கள் யுதிஷ்டிரரைக் காக்கக் கூடிவிட்டார்கள். அவர்களால் துரோணர் பலமாகத் தாக்கப் படுகிறார்.வயதான அவர் தாங்க மாட்டார். ஓநாய்கள் ஒன்று கூடி பெரிய சிங்கத்தையும் கொன்றுவிடும் அல்லவா! அதுபோல நாம் அவரைத் தனியாக விடக்கூடாது. துரோணர் இருக்குமிடத்திற்கு நாமும் செல்வோம்” என்று கூறினான்.
அந்த நேரத்தில் பீமன் மேல் துரியோ தனன் ஒரு பெரிய யானைப்படையைச் செலுத்தினான். பீமன் அந்த யானைப் யா படையை விரட்டி விரட்டி அடித்ததோடு, துரியோதனனின் தேர்க்கொடியையும் வில்லையும், அறுத்துத் தள்ளினான். அப்பொழுது துரியோதனனுக்குத் துணை யாக ‘அங்கன்” என்ற அரசன் அங்கு வந்து வாயுபுத்திரன் பீமனை எதிர்த்தான். ஆனால் பீமன் அவனுடன் போரிட்டு அந்த அங்க னைக் கொன்று போட்டான். இதனைக் கண்டு கெளரவசேனை அஞ்சிச் சிதறலா யிற்று. யானைகளும், குதிரைகளும், தேரில் பூட்டியிருந்த குதிரைகளும் சிதறிக் கண் மண் தெரியாமல் ஓடினதால் காலாட் படைகளால் மிதிக்கப்பட்டு மாண்டு போயின.
இவ்வாறு கெளரவ சேனை சிதறி ஓடுவதையும் அழிந்து போவதையும் கண்ட பிரோக் ஜோதிஷ தேசத்து அரசன் பகதத்தன் என்பவன் கோபித்து. சுப்ரதீபம் என்ற யானையைப் பீமன் மீது ஏவினான். அந்த யானை காதுகளை விரித்துக் கொண்டும், துதிக்கையைச் சுழற்றிக் கொண்டும் பிளிறிக் கொண்டும் பீமன் மேல் பாய்ந்தது. ஆனால் அதற்குப் பீமன் அஞ்சவில்லை. மாறாக அதனைத் தன் கையினால் தாக்கினான். யானையானது சுழன்று சுழன்று ஒடி பீமனைக் கீழே தள்ள முயன்றது.மேலும் அது மதங்கொண்டு பீமனைக் கொல்லத் தன் துதிக்கையால் பற்றியது. ஆனால், பீமன் அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டு, மீண்டும் அதனைப் பலமாகத் தாக்கினான். அப்பொழுது “பீமசேனன் யானையால் கொல்லப்பட்டான்” என்று எண்ணிப் பாண்டவசேனை கூக்குரலிட் டது. தரும புத்திரரும், பாண்டவசேனை யும் பீமசேனன் கொல்லப்பட்டாக எண்ணிக் கலக்கத்தோடு அவன் இருக்கு மிடத்திற்கு விரைந்தனர்.
இந்திரனுக்கு நிகரான பகதத்தன்
அதற்குள் தருமபுத்திரர் பாஞ்சாலர் களோடு சேர்ந்து பகதத்தனை எதிர்க்கத் தொடங்கினார். யானையின் மீது ஏறிக் கொண்ட பகதத்தன் எல்லோரையும் பும் சாடினான். குயவனின் சக்கரம் போன்று விர்ரென்று சுழன்று பகதத்தன் யானை எல்லோரையும் துவைத்தும் மிதித்தும் நாசம் செய்தது. போர்க்களத்தில் போர்க்களத்தில் அட்ட காசம் செய்தது. அந்த யானையை எதிர்க்க முடியாமல் பாண்டவ சேனை நான்கு பக்கங்களிலும் சிதறி ஓடியது. அந்த ஒரு யானையே எல்லோரையும் துரத்தித் துரத்திக் கொன்றது. கூட்டம் கூட்டமாக யானைகள் அழியலாயின; பயங்கரமான பிளிறல் சப்தத்துடன் அந்த யானை, பாண்டவர் சேனையைக் கதறக் கதற விரட்டி அடிக்கலாயிற்று.
சம்சப்தகர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த அர்ச்சுனன் யானையின் பயங்கரமான பிளிறலையும் படைவீரர்களின் கூக் குரலையும் கேட்டு, கண்ணபிரானைப் பார்த்து, “கேசவா! பகதத்தன் யானையின் பேரொலி கேட்கின்றது. அதனால் பக தத்தன் போர்க்களத்தில் புகுந்துள்ளான் என்பது தெரிகின்றது. இந்திரனுக்கு நிகரா னவன் பகதத்தன். அவனுடைய தாக்குதலை எதிர் கொள்ள முடியாத நம் சேனையின் ஒலம்தான் தற்போது கேட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே என்னுடைய தேரை அந்த இடத்திற்குச் செலுத்துக” என்றான்.
பிரமாஸ்திரத்தை ஏவிய அர்ச்சுனன்
உடனே கண்ணன் பகதத்தன் போர் புரியும் இடத்திற்குத் தன்னுடைய தேரைத் திருப்பி ஓட்டத்தொடங்கினார். தேர் திரும்பிச் செல்வதைக் கண்டு திரிகர்த்தர்கள் அர்ச்சுனனைக் கூவி அழைத்துக்கொண்டு பின்னால் ஓடி வந்தார்கள். அதனைக் கண்டு அர்ச்சுனன் செயல் அற்றுப்போனான். அவனுடைய நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போல ஆனது. பகதத்தனை எதிர்ப்பதா? சம்சப்தகர்களை எதிர்ப்பதா? என்று அவன் திண்டாடினான். உடனே பெருமானைப் பார்த்து, ”பெருமானே! நான் பகதத்தனிடம் செல்வதா? திரிகர்த்தர்களிடம் செல்வதா? நமக்குத் தற்போது நன்மை தரத்தக்கது யாது?” என்று கேட் டான். பின்னர் கண்ணபிரான் ஆலோ சனைப்படி, சம்சப்தகர்களை எதிர்ப்பதே சரி என்று முடிவு செய்து அவர்களுடன் போரிடத் தொடங்கினான். பெரும்போர் கடந்தது. திரிகர்த்தராஜர்கள் ஏவிய அம்பு மழையால் கோபங்கொண்டு அர்ச்களன் பிரம்மாஸ்திரத்தை ஏவி அவர்களைக் கொல்லத் துவங்கினான். நூற்றுக்கணக் கான கொடி மரங்கள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. தேர்ப்பாகர்கள் விழுந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இளஞ்சூரிய னையும், செந்தாமரையையும் ஒத்தனவாய் பல தலைகள் இரத்த ஆற்றில் உருண்டோ டின. தாமரை ஓடையை யானை ஒன்று கலக்குவது போன்று அர்ச்சுனன் அந்தச் சேனையைக் கலக்கினான்.
இவற்றையெல்லாம் கண்ணன் பார்த்து அர்ச்சுனனின் போர்த் திறனை வியந்து பாராட்டலானார், “அர்ச்சுனா! இப்பொழுது செய்துள்ள காரியத்தை இந்திரன், இயமன், குபேரன், போன்றவர் களாலும் செய்யமுடியாது. நூற்றுக்கணக் கான திரிகர்த்தர்களைக் கொன்றுள்ளாய். இன்னும் மிச்சம் உள்ள சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டுப் பகதத்தனை நோக்கிப் புறப்படு ” என்று கூறினார். கண்ணபிரான் பாராட்டைக் கேட்டு அர்ச்சுனன் உற்சாக மடைந்தான்.
கருடன் பெரிய பாம்பை எதிர்ப்பது போன்று அர்ச்சுனன் சுசர்மாவை எதிர்க்கலானான். மூன்று பாணங்களை விடுத்து, சுசர்மா விடுத்த சக்தி ஆயுதத்தை அழித் தான். பின்னர் அவன் கொடி மரங்களை அறுத்தான். சுசர்மாவால் அர்ச்சுனனை எதிர்த்துப் போரிட முடியவில்லை. போரை விட்டு ஒடிவிட்டான். பின்னர் கௌரவர் சேனையை நோக்கிக் கண்ணன் தேரைத் திருப்பினான். சம்சப்தகர்களை முற்றிலும் அழித்தான்.
பார்வை இழந்த பகதத்தன்
அதன்பின் கண்ணபிரான் தேரைப் பக தத்தன் அருகில் கொண்டு போய் நிறுத்தினார். அர்ச்சுனனைக் கண்டவுடன் பசு தத்தன் தன் யானை மீது இருந்து கொண்டு அம்புகளை மழையாகப் பொழிந்தான். அப்பொழுது பகதத்தன் கண்ணபிரான் மீது சக்தி ஆயுதத்தை ஏவினான். அதனை அர்ச்சுனன் துண்டாக்கினான். பிறகு கழுகு இறகுகள் உள்ள அம்பினால் அர்ச்சுனன் கிரீடத்தின் மீது மோதச் செய்ய, அக்கிரீடம் திரும்பிக் கொண்டது. அதனைச் சரி செய்து கொண்டு பகதத்தனின் வில்லையும், அம்புகளையும் உடைத்தான்.
ஆத்திரம் அடைந்த பசுதத்தன் வைண வாஸ்திரத்தை அர்ச்சுனன் மீது ஏவினான். வலிமை வாய்ந்த அஸ்திரம் ஆகையால் கண்ணபிரான் அதனை மார்பில் தாங்கிக் கொண்டார். அதாவது அது வைஜயந்தி மாலையாக மாறி அவர் கழுத்தில் விழுந் தது. அப்பொழுது கண்ணபிரான் புதுப் பொலிவுடன் விளங்கினார். அதனைக் கண்டு அர்ச்சுனன் மிகுதியான மன வருத் தம் அடைந்தான். “கண்ணபிரானே! பரந் தாமா! தேரோட்டுதல் மட்டும் செய்யாது இந்த அஸ்திரத்தைத் தங்கள் திருமார்பில் ஏற்றுக் கொண்டது முறையன்று; உறுதி மொழியிலிருந்து மீறுகின்றீர்கள்” என்று கூறினான்.
அதனைக் கேட்டு கண்ணபிரான், ”அர்ச்சுனா! இந்த வைணவாஸ்திரம்; சக்தி வாய்ந்தது. பூமிதேவியின் வேண்டுதலால் நரகாசூரனுக்கு அன்று நான் வழங்கினேன். அது இப்பொழுது பகதத்தன் கையில் வந்தது. இஃது இந்திராதி தேவர்களையும் கொல்லும் தன்மை வாய்ந்தது.எனவே உன்னால் அதனைத் தாங்க முடியாது. உன் பொருட்டு நான் இதனை இன்று தாங்கி னேன். என் பொருள் என்னிடம் வந்து விட்டது. அவ்வளவுதான். இதில் வருத்தப் படக்கூடியது எதுவும் இல்லை. இனி எளிதில் பகதத்தனைக் கொல்லலாம். இனி நீ தாமதிக்காது அவனைக் கொன்றுவிடுக ” என்று கூறினார். அதனைக் கேட்டு அர்ச்சுனன் சமாதானம் அடைந்தான்.
பின்னர் அர்ச்சுனன் இரண்டு அம்புகளை ஏவி சுப்பிரதீபம் என்ற பகதத்தன் யானையை வீழ்த்தினான். சுப்ரதீபம் என்ற அந்த யானை அதனால் வீழ்ந்தது. அதன்பின் அர்ச்சுனன் பகதத்தனைக் கொல்லத் தயார் ஆனான். அப்பொழுது கண்ணபிரான் அர்ச்சுனனிடம், “பகதத்தன் வலிமையுடையவன்; ஆனால் வயோதி கன்: மடிப்புடைய சதையானது அவனது கண்களை மூடிக் கொண்டிருக்கும். அக்கண்கள் திறந்திருக்கும் பொருட்டுப் பட்டுத் துணியினால் அந்தச் சதையைத் தூக்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றான். நிதானமாக எச்சரிக்கையுடன் செய்வாயாக” என்று வெற்றிக்குச் செய்ய வேண்டியதைக் குறிப்பாக உணர்த்தினார்.
கண்ணபிரான் கூறியதன் குறிப்பை உணர்ந்து கொண்ட அர்ச்சுனன் பட்டுத் துணியை அம்பினால் அறுத்தான். அதனால் மடிந்திருந்த சதையானது கண்களை மூடிக் கொண்டது. பகதத்தன் பார்வை இழந்து தத்தளித்தான். அப்பொழுது அர்ச்சுனன் அர்த்த சந்திரபாணம் ஒன்றை ஏவி அவனைக் கொன்றான். வலிமை மிக்க பகதத்தன் கீழே விழுந்து உயிர் துறந்தான்.
சம்சப்தகர்களையும், பகதத்தனையும் கொன்ற பின்னர் அர்ச்சுனன் துரோணர் இருக்குமிடம் நோக்கி வந்தான். எல்லோரையும் தன் அம்புகளால் கொன்று குவித்தான். ‘அர்ச்சுனன் வந்துவிட்டான்’ என்பதை அறிந்த பாண்டவ வீரர்கள் உற்சா கம் கொண்டனர். அப்பொழுது பீமன், திட்டத்துய்மன், தருமபுத்திரர் போன்ற வர்கள் ஒன்று சேர்ந்து துரோணரைக் கொல்ல முயன்றனர். அதனை அறிந்த துரியோதனனும், அவன் தம்பியரும். ‘துரோணரைக் காப்பாற்றுங்கள்! துரோண ரைக் காப்பாற்றுங்கள்!” என்று கூவினர். அந்நிலையில் பாண்டவ சேனைக்கும், கெளரவ சேனைக்கும் பயங்கரமான போர் நடந்தது. அர்ச்சுனன் கெளரவ வீரர்களைக் கொன்று குவித்தான். அதனால் கெளரவர்கள் சிதறி ஓடத் தலைப்பட்டனர். விருஷன், அசலன் என்ற ஒரே சாயலையுடைய சகுனியின் இரு சகோதரர்களை அர்ச்சுனன் அப்பொழுது கொன்றான்.
கர்ணனைக் காப்பாற்றிய துரோணர்
அப்பொழுது கர்ணன் அங்கு வந்தான். அர்ச்சுனனை எதிர்க்கத் தொடங்கினான். அப்பொழுது அர்ச்சுனன் கர்ணனின் ஒன்று விட்ட தம்பியர் மூவரைக் கொன்றான். அதன்பின் அர்த்த சந்திர பாணத்தால் கர்ணனின் வில்லை அறுத்தான். அதே சமயம் திட்டத்துய்மனும் சாத்யகியும் அங்கு வந்தனர்.
கர்ணன் இந்த மூவரிடமும் சிக்கிக் கொண்டதை அறிந்து துரோணர், ஜயத்ரதனுடன் விரைந்து வந்து கர்ணனைக் காப்பாற்றினார். அப்பொழுது சூரியன் மறைந்தான். இருதரப்பு வீரரும் தத்தம் பாசறைக்குச் சென்றனர்.
பன்னிரெண்டாம் நாள் போரிலும் தருமபுத்திரரை உயிருடன் பிடிக்காமல் போனது குறித்தும், பெரு வீரனான பகதத்தன் அர்ச்சுனனால் கொல்லப்பட்டது குறித்தும், கெளரவர்கள் பெரும் துயரக்கடலில் மூழ்கினார்கள். அதனால் துரியோதனன் அன்றைய தினம் மனம் புழுங்கி வருந்திக் கொண்டிருந்தான்.
மகாபாரதம் – 48 பதினோராம், பன்னிரெண்டாம் நாள் போர்… துரோண பர்வம்… சகுனியுடன் சகாதேவன் போர்