தேவேந்திரன் மயங்கிய கதையும் மாதவிலக்கு, தாம்பத்திய உறவு, கருவளர்ச்சி, உடலியல் பற்றிய விளக்கங்களும்.
கருடன் பரமபத நாதனைத் தொழுது, “சர்வலோக சரண்யரே! மனிதனின் உடலில், தோல், நரம்பு, எலும்பு, இரத்தம், மாமிசம், தலை, கைகள். கால்கள், நாக்கு, நாசி, இரகசிய உறுப்பு, நகம், ரோமம் முதலியவற்றால் அமைக்கப்பட்டு, இந்திரஜாலம் போலத் தோன்றுகிறதே! இந்த சரீரம் எங்ஙனம் உண்டாகிறது? அதை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.
பலவுலகங்களையும் படைத்துக் காக்கும் பரந்தாமன், பறவைக்கரசனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:
“காசிப முனிவரின் மைந்தனே! நீ கேட்ட கேள்வி, நல்லதொரு கேள்வியாகையால், அதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்லுகிறேன். கேள் …” “மாத விலக்கான பெண்கள், நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பே இருக்க வேண்டும்.முன்பு ஒரு காலத்தில், இந்திரன் தன் அரியணையில் அமர்ந்து அரம்பையர்கள் ஆடிய ஆட்டத்திலும் கந்தர்வர்கள் இசைத்த கானத்திலும் மதி மயங்கியிருந்தான். அந்தச் சமயத்தில் தேவகுருவான வியாழ பகவான் அங்கு வந்தான். இந்திரன் மங்கையர் மயக்கத்தில், தன் ஆசிரியன் வந்ததையும் கவனியாமல், அவருக்குச் செலுத்த வேண்டிய மரியாதையையும் செலுத்தாமல், ஆடுகின்ற அரம்பையரின் அங்க நெளிவுகளிலும் வளைவுகளிலும் ஆசை வயப்பட்டிருந்தான். ஆசிரியனுந் தன்னை, ஆயிரங் கண்ணன் வரவேற்பளித்து, கௌரவிக்காமல் இருந்ததைக் கண்டு மனம் புழுங்கி, அங்கிருந்து வெளியேறினான்
“ஆசிரியனை மதியாததால், இந்திரனின் செல்வ வளங்கள் சிதைந்தன. அதையறிந்த இந்திரன் வியாழனை இகழ்ந்ததால் வந்த வினையென்பதை ஆராய்ந்து உணர்ந்தான். திகைத்தான். ஆசிரியனைத் தேடிச் சென்றான். அவனது இருப்பிடத்திலும் பிற இடங்களிலும் அவனைக் காண முடியாததால், குழம்பிய உள்ளத்தோடு நான்முகனிடம் சென்று நடந்தவற்றை அவனிடம் முறையிட்டான்.
நான்முகன் சிந்தித்தான். “குல குருவை இழந்ததால் தீவினை கொழுந்து விட்டு வளர்ந்துள்ளது. அதனை அருந்தும் செவ்வியும் கிட்டியது என்று உணர்ந்து, அதற்கேற்ப. இந்திரனை நோக்கி, “இந்திரா! நீ செய்த பிழை பிழையேதான். அதற்கு உன் ஆசிரியன் உனக்களித்த தண்டனையும் சரியானதுதான். ஆகையால் உன் ஆசான் வருமளவும் இடைக் காலத்தில் உனக்கு ஓர் ஆசான் வேண்டுமல்லவா? தானவனான துவஷ்டா என்று ஒருவன் இருக்கிறான். அவன் மகன் விச்சுவவுருவன் என்று ஒருவன் இருக்கிறான். அவன் முத்தலையன். சீரிய ஒழுக்க முடையவன். அறிவிற் சிறந்தவன். அவனையே உனது குருவாகக் கொள்வாயாக!” என்று கூறினான்.
பிரமதேவன் கூறிய அறிவுரையை ஏற்ற இந்திரன் விச்சுவவுருவனைத் தன் ஆசிரியனாகக் கொண்டான். இந்திரன் வேள்வியொன்று செய்ய விரும்பினான். அந்த விருப்பத்தைத் தன் புதிய ஆசானிடம் புகன்றான். வேள்வி துவங்கியது. வஞ்சகனான தானவன், அந்த வேள்வியில், தன் குலத்தைச் சேர்ந்த தானவர்களுக்கு ஆக்கங் கூறி மந்திரங்களைச் சொல்லி வேள்வியைச் செய்தான். புதிய ஆசிரியனது வஞ்சகச் செயலை அறிந்த இந்திரன் கோபங்கொண்டு தன் குருவாகிய விச்சுவவுருவனைத் தன் வஜ்ராயுதத்தால் வெட்டினான். அவனது மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டியவுடன் அந்த வஞ்சகன் ஒழிந்தான். ஆனால் அவனுடைய தவவலிமையினால் சோம பானஞ் செய்யும் அவன் தலைகளில் ஒன்று காடையாயிற்று. சுராபானஞ் செய்யும் தலை ஊர்க்குருவியாயிற்று. அன்ன பானஞ் செய்யும் தலை. கிச்சிலிப் பறவை ஆயிற்று.
விசுவவுருவன் தானவனாயினும் அவன் குருவான படியால், அவனைக் கொன்ற இந்திரனுக்கு பிரமஹத்தி தோஷம் பீடித்தது. தேவர்கள் தங்கள் தலைவனைப் பீடித்த பிரமஹத்தி தோஷத்தை நிவர்த்திப்பதற்கு ஒரு வழி செய்தார்கள். அவர்கள் பெண்களையும் மண்ணையும் தண்ணீரையும் வேண்டி, இந்திரனைப் பீடித்த தோஷத்தை பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் தேவர்களை நோக்கி, “இதனை நாங்கள் போக்கிக் கொள்வது எப்படி?” என்று கேட்டார்கள்.
அதற்குத் தேவர்கள். “நீரிலே தோஷம் நுரையாகக் கழியும், மண்ணிலே உவராகக் கழியும். பெண்களுக்குப் பூப்பாகக் கழியும்!” என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும். “பழி சுமக்கும் எங்களுக்குப் பயனேதும் உண்டா?” என்றார்கள். அதற்கு தேவர்கள். “பெண்கள் கருவுயிர்க்கும் வரையில் கணவரை மருவிக் களிக்கலாம். மண்ணகழ்ந்த குழி தானே நிறையும்! நீர் இறைக்க இறைக்க சுரக்கும்! மரம் வெட்ட வெட்டத் துளிர்க்கும்!” என்றார்கள்.
இவ்வாறு இந்திரனைப் பீடித்த பிரமஹத்தி பாவம். மங்கையர் முதலானவரிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்று கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான (மாதவிலக்கான) ஸ்திரீயை நான்கு நாட்கள் வரையில் பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும். பயிஷ்டையானவள். முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலிருப்பாள்: இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவளை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பாளைப் போலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு, சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களை எல்லாம் செய்வதற்கு உரியவளாகச் சுத்தியை அடைவாள், பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையிலுள்ள இரட்டை நாள் ஏழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷப் பிரஜை உண்டாகும்.
ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகிறவன் தன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும். நான்கு தினத்துக்குமேல் பதினெட்டு நாள் வரையில் இரவுக் காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந்தரித்தால் குணவானாகவும், தனவானாகவும் தர்மிஷ்டனாகவும் ஸ்ரீவிஷ்ணு பக்தி உடையவனாகவுமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான். பயிஷ்டையான நான்கு தினங்களுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பந்தரிக்கும். ரஜஸ்வலையான ஐந்தாம் நாள் ஸ்திரீகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரீ புருஷர்கள் சந்தன. புஷ்ப தாம்பூல வஸ்துக்களைத் தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்தால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல் அந்தக் கருவானது விருத்தியாகும். மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதங்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும் பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோணிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.
கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று, கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெருக்கும். இருபதாவது நாளில் மேலும் அதற்குச் சிறிது தசையுண்டாகிறது. இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியடைகிறது, ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்சபூதத்தின் சேர்க்கையுண்டாகிறது. இரண்டாவது மாதத்தில் தோல் உண்டாகிறது. மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. நான்காவது மாதத்தில் மயிரும் புறவடிவும் உண்டாகும். ஐந்தாவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். ஆறாவது மாதத்தில் கழுத்தும் சிரசும், பற்களும் உண்டாகும். ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக் குறியும் பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும். எட்டாவது மாதத்தில் எல்லா அவயவங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் ஜீவன், சுழி முனை என்ற நாடியின் மூலத்திலிருந்து, பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்துத் துக்கித்துக் கொண்டே, பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.
வைனதேயா! பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களையடைந்து, பத்து நாடிகளால் அலங்கரிக்கப்பட்டு, பிராண, அபான, வியான, உதான, சமான. நாக, கூர்ம, கிருக, தேவதத்த, தனஞ்சயன் என்ற தசவித வாயுக்களோடு சேர்ந்துள்ளது. மேலும் அந்தச் சரீரம், சுக்கிலம். எலும்பு, நீர், ரோமம். இரத்தம் என்ற ஆறு கோசங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப் பட்டிருக்கும் ஸ்தூல் சரீரத்தில் (பருவுடலில்) தோலும் எலும்பும் மயிரும், மாமிசமும் நகமும் பிரித்வியின் (மண்ணின்) குணத்தால் உருவாகின்றன. வாயில் உண்டாகும் உமிழ்நீராகிய எச்சிலும், சிறுநீரும், சுக்கிலமும் ஊனீரும், புண்ணீரும் அப்புவின் (நீரின்) குணமாகின்றன. பசி, தாகம், நித்திரை, சோம்பல், காந்தி முதலியவை தேயுவின் (நெருப்பின்) குணமாகின்றன. இச்சை கோபம். நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல், கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்) குணமாகும். சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சத்தி ஆகியவை ஆகாயத்தின் குணமாகும். காதுகள், கண்கள். மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும் ஞானேந்திரியங்களாகும். இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான பெரிய நாடிகளும் காந்தாரி, கஜசிம்மஹி, பூழை, யச்சு, அலாபு, குரு, விசாகினி என்ற ஏழு நாடிகளும் சரீரத்தின் மிக முக்கியமான நாடிகளாகும்.
ஜீவன் உண்ணுகின்ற சாறு முதலியவற்றை மேலே சொன்ன வாயுவே, அந்தந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது. வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன. அந்த அக்கினியை வாயுவானது ஊதி விருத்தி செய்கிறது! சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்பட்ட ரோமங்களும் முப்பத்திரண்டு பற்களும், இருபது நகங்களும். இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும், ஆயிரம் பலம் இறைச்சியும், நூறுபலம் இரத்தமும், பத்துப்பலம் மேதஸும். பத்துப்பலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும் மூன்று பலம் முக்கிய இரத்தமும் கபமும் மலமும் மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன, அண்டத்திலுள்ளவையெல்லாம் பிண்டத்திலுமுண்டு. பிண்டத்திலுள்ளவையெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன. உள்ளங்காலை அதலலோகம் என்றும், கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும் அதற்கு மேற்பட்ட பகுதி நிதலம் என்றும். ஊறு, தராதலம் என்றும், குஹ்யத்தை ரசாதலம் என்றும், இடையைப் பாதலம் என்றும், நாபியைப் பூலோகம் என்றும், இதயத்தைச் சுவர்க்கலோகம் என்றும்.தோளை மகாலோகம் என்றும், முகத்தை ஜனலோகம் என்றும், நெற்றியைத் தவலோகம் என்றும். சிரசைச் சத்தியலோகம் என்றும் சொல்லுகிறார்கள்.
திரிகோணத்தை மேருகிரியென்றும் கீழ்க்கோணத்தை மந்தரபருவதம் என்றும், அந்தக் கோணத்துக்கு வலது புறம் கைலாயம் என்றும். இடதுபுறம் ஹிமாசலம் என்றும். மேற்பாகம் நிஷேப முகபர்வதம் என்றும், தென்பாகம் கந்தமாதன பர்வதம் என்றும். இடது உள்ளங்கையிலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந்தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும். தசை சூசைத்தீவு என்றும், நரம்பு கிரெளஞ்சத் தீவு என்றும். தொக்கு சான்மலித் தீவு என்றும், ரோமத்திரள் பிலட்சத் தீவு என்றும், உகிர்புஷ்கரத் தீவு என்றும் வழங்கப்படும். மூத்திரம், உப்புக்கடல் என்றும், நீர் பாற்கடல் என்றும், கபம் சுராசிந்து என்றும், மஜ்ஜை – நெய்க்கடல் என்றும், வாய்நீர் கருப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனியபுனல், சுத்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.
சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் நாத சக்கரத்தில் சூரியனும் பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும் இதயத்தில் புதனும் வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் இராகுவும், காலில் கேதுவும் உள்ளனர். மனித உடலில் பதினான்கு உலகங்களும் சப்தகுலாசலங்களும் தீவுகளும் நவக்கிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன். ஜீவன், கர்ப்பவாசம் செய்யும்போது, தானே அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வளவுதான் என்றும் இன்ன வித்தை இவ்வளவுதான் என்றும் கோபம். யோகமும். போகமும் இவ்வளவுதான் என்றும் இன்ன சமயத்தில் இன்னவிதமாக மரணமுண்டாகத் தக்கது என்றும் பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரமன் விதித்து நிச்சயித்து விடுகிறான்.
ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும் யோகமும் மற்ற யாவுமே மறுஜன்மத்திலாவது ஒருங்கே அடைவதற்காகவாவது ஒரு ஜீவன் நற்கர்மங்களைச் செய்யவேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன. ஜீவன் தன் பூர்வ ஜன்மத்தில் செய்த கர்ம வினைப்பயனையே மறு ஜன்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை. கருடா! காசியபன் மைந்தனான உனக்கு, இவை அனைத்தையும் உலக நன்மையைக் கருதிக் கூறினேன். இனி நீ கேட்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதையும் நீ கேட்கலாம் நான் அதற்கும் பதில் சொல்லுகிறேன்!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
கருட புராணம் – 20 மாதவிலக்கு, தாம்பத்திய உறவு, கருவளர்ச்சி, உடலியல் பற்றிய விளக்கங்களும்