கார்மேக வண்ணனாகிய கண்ண பிரானும், வில்லுக்கு ஒருவன் என விளங் கும் விஜயனும், தத்தம் மனைவியோடு காண்டவ வனத்திலுள்ள ஓர் அழகிய பூஞ்சோலையில், நீராடியும் பூக்களைப் பறித்தும், மகிழ்ச்சியோடு இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியோடு தங்கியிருக்கும் காலத்தில், அவர்களிடத்து அக்கினி தேவன் அந்தண வடிவம் கொண்டு அவர்களிடம் வந்தார். அவ்விருவரும் முறைப்படி உபசாரம் செய்து அந்த அந்தணவடிவில் வந்த, அக்கினி தேவனை வரவேற்றனர். அப்பொழுது அந்தணன், “நான் மிகுதி யான பசியில் உள்ளேன். நான் உய்யும்படி எனக்கு உணவு தருவீராக” என வேண்டி நின்றார். கிருஷ்ணார்ச்சுனர் அந்த அந்தண னுக்கு உணவு அளிக்க ஒப்புக் கொண்டு “என்ன மாதிரியான உணவு வேண்டும் என்று கேட்டனர்.
காண்டவன்
‘தருகின்றோம்’ என்று சொன்னவுடன் இவர்கள் வாக்குத் தவறமாட்டார்கள் என்று உறுதி செய்து கொண்டு, அந்த அந்தணன் உணவு உண்டவன் போலச் செருக்குக் கொண்டு, “நான் அருமறைகள் ஓதும் அந்த ணன் அல்லேன்; நான் அக்கினி தேவன்; ”காண்டவம்’ என்ற பெயரை யுடைய இந்த வனத்தை, எனக்கு உணவாகத் தருதல் வேண்டும்;நான் வாய் வைத்து இக்காண்டவ வனத்தை நெருப்பினால் 2. था था செய்தால், தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரன், தன் ஏழு மேகங்களை அனுப்பி என்னிலிருந்து கிளம்பும் அனலை அழித்துவிடுவார். அதனால் என் எண்ணம் நிறைவேறாது. ஆதலின் நீங்கள் சொன்னபடி, எனக்குக் காண்டவ வனத்தை உணவாகக் கொடுக்க வேண்டும். இதைத் தவிர எனக்கு வேறு தேவை இல்லை” என்று கூறினார். காண்டவவனம், என்பது இந்திரனுக்குரிய காடு ஆகும். நிஜ வடிவத்தோடு கேட்டால் இந்திரன் மகனான அர்ச்சுனனும், அவ்விந் திரனுக்குரிய தம்பியாகிய உபேந்திரனது அவதாரமாகிய கண்ணபிரானும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்று கருதியே, உண்மை வடிவத்தோடு வராமல் அந்தண வடிவந்தாங்கி வந்து கேட்டார்.
கொடுத்த வாக்குறுதிப்படி, காண்டவ வனத்தைப் பற்றிக் கொள்ளும்படி அக்கினி தேவனுக்கு அர்ச்சுனன் கூறிவிட்டான். அதைக் கேட்டு மகிழ்ந்த அக்கினி தேவன், ”எடுக்க எடுக்கக் குறையாத இரண்டு அம்பறாத் தூணிகளையும், அழிக்க முடியாத வில்லையும், வெள்ளைக் குதிரை களையும், அநுமக் கொடியையுடைய, பெரிய தேரையும் விசயனுக்குக் கொடுத் தார்.
அக்கினிதேவன் ஆட்சி
உடனே அர்ச்சுனன், அகன்ற பெரிய தேரில் ஏறி, தேர்ப்பாகன் செலுத்த, காண்டீ பம் என்னும் வில்லை வளைத்து, காட்டில் வாழும் உயிர்களெல்லாம் தளர்ச்சியடைய வும், அண்ட முகடு உடையவும், அமரர்கள் அஞ்சவும், எட்டுத்திக்குப் பாலகர்கள் நடுங் கவும், நாணினைக் கையினால் தெறித்துப் பேரொலி எழுப்பினான். அப்பொழுது காளி, கராளி, மனோ சவை, சுலோகிதை. சுதூம்பரவருணை, புலிங்கினி, விசிவரூபி என்று பெயர்பெற்ற தன் ஏழு நாக்குகளைக் கொண்டு விளங்கும் அக்கினி தேவன், அர்ச்சுனனுடைய வில்லையும், அதனை அவன் அருமையாகத் தெறித்த அவன் தாமரைக் கைகளையும், அவனுடைய வீரத்தன்மையையும் கண்டு வியந்து, அவனை ‘வாழ்க’ என வாழ்த்தி, அக் காண்ட வனத்தைச் சூழ்ந்து கொண்டு, தன் ஏழு நாக்குகளையும் அக்காண்டவ வனத்தின் மீது வைத்து, அதனை எரிப் பதற்கு தொடங்கினார்.
ஊழித்தீயின் வடிவம் போல, அகன்ற இப்பூவுலகு பரப்பு முழுவதும் தன் னுடைய வடிவத்தை வளர்த்துக் கொண்டு, எட்டுத்திக்குகளிலும் தன் வடிவத்தை ஓங்கச் செய்து கொண்டு, வாயு தேவன் (பெருங்காற்று) அக்கணம் வந்து துணை செய்ய, கிருஷ்ணார்ச்சுனர்கள் வனத்தின் வெளியிலே நின்று கொண்டு எரிவதற்கு எந்தவித இடையூறும் வாராமல் பாதுகாக்க அக்கினி தேவன் சகல உயிர்களும் அழிந்துப் போகும்படி, அக்காண்டவ வனத்தை அழிக்கலானார்.
அந்தத் தீ, அக்காண்டவ வனத்தினுள் உள்ள இருளையெல்லாம் நீக்கியது; பகலவன் ஒளிக் கதிர்களை வீசி, எங்கணும் பகலாக்குதல் போல விண்ணெங்கும் நெருப்புச் சுவாலைகள், கொழுந்துவிட்டு எரிந்தன. ஆகப் பகலினைப் போலவே காட்சி அளித்தது. மரங்களில் பற்றி எரியும் நெருப்புச் சுவாலைகள், பின் பனிக் காலத்தில் சருகுகள் உதிர்ந்துபோக, இள வேனிற் காலத்தில் தளிர்க்கும் செந்நிறம் வாய்ந்த தளிர்களைப் போல விளங்கின. அந்தப் புதிய நெருப்புச் செந்தளிர்கள், மரக்கொம்புகள் தோறும் பரவி, அவற்றை வெடிக்கச் செய்து, அந்தச் செந்தளிர்ச் சருகுகள் எங்கணும் பரவின.
அமராவதியை நெருங்கிய தீ
சிங்கம், யானை,யாளி,புலி,மான், காட்டுப்பன்றி, காட்டெருமை முதலான விலங்குகள், அடங்கலும் இடி முழக்கம் போலப் பேரொலி செய்து கொண்டு, தப்பிக்க முயன்று, நான்கு திக்குகளில் ஓடி நெருப்பிடை வெந்து அழிந்தன. வானத் தில் பறக்கவிட்ட காற்றாடிகள் போலத், தீயிற்கு அஞ்சி மேலெழுந்து செல்லும் பறவைகள், நெருப்பின் சுவாலைக்குத் தாங்க முடியாது, அந்நெருப்பிலேயே விழுந்து இறந்தன. அவற்றில் பிழைத்தவை அர்ச்சுனன் அம்புக்கு இலக்காகி இறந்தன.
இந்த நெருப்புச் சுவாலை விண்ணுல கிலும் பரவி, அமராவதி நகரையும் அழிக்கத் தொடங்கியதைக் கண்ட இந்திரன், யுகாந்த காலத்தீயோ அல்லது முக்கண்ண னாகிய சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து விட்ட நெருப்புச் சுவாலையோ, என எண்ணி நிலைகுலைந் தான். நடு நடுங்கினான். இந்திராணியும், தன் படுக்கையை விட்டு எழுந்து, அஞ்சி ஒடித் தன் கணவனைப் பற்றிக் கொண்டாள்.அமரர்கள் ஊழிக்காலத் தீ என்று எண்ணி, ‘இனி நம் கதி என்னா குமோ’ என்று நடுங்கினர். ஆக விண்ணுல கமே நிலை குலைந்தது, பின்னர் இந்திரன் தன்னைச் சரி செய்து கொண்டு, ஐராவதத் தின் மேலேறிக் கீழே பார்க்கும்பொழுது தனக்கு உரிமையான காண்டவவனம் பற்றி எரிவதைக் கண்டான்; திடுக்கிட்டான். பின்னர், அக்கினி தேவன் செய்த செயல் தான், என்பதை அறிந்தான். அதனால் கோபங்கொண்டு சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலா வர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்ற தனக்கு உரிமையான ஏழு மேகங்களை ஏவி, “நீங்கள் பெருமழை பொழிந்து காண்டவ வனத்தைப் பற்றியுள்ள நெருப்பினைத் தணிப்பீர்” என்று ஆணையிட்டான்.
பிரமிக்க வைத்த மழை
இந்திரன் கட்டளையை ஏற்ற அந்த ஏழு மேகங்களும், ஏழு பெருங்கடலினுள்ளும் (உப்பு, கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர்க் கடல்கள்) புகுந்து வேண்டிய அளவு நீரை முகந்து, வானத் திடத்தே சென்று, “முன்பு கண்ணன் கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்துத் தடுத்தது போல இப்பொழுது, அர்ச்சுனன் தன் அம்புகளைத் தொடர்ச்சி யாக விட்டுத் தடுத்தாலும், அக்கினியைப் பரவாமல் தடுத்து அழிப்போம்” என்று உறுதிசெய்து கொண்டு, பேரொலி செய்து, யுகாந்த காலத்து மழையைப் போல, மிகப் பெரிய அளவில் மழையைப் பொழிந்தன. ஆனாலும் பரவிய நெருப்புச் சுவாலையை அணைக்க முடியவில்லை. அக்கினி மேலும் பரவலாயிற்று. இதனைக் கண்டு மேலும் கோபமுற்று, தன் ஏழு மேகங் களிடம் “நீங்கள் பொழிவது நெருப்புச் சுவாலையை அழிக்கப் போதவில்லை. இன்னும் வேகமாக, அதிகமாக நீரை பொழியுங்கள்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே அந்த மேகங்களும், மண்ண வரும் விண்ணவரும், பிரமிக்கும்படி மழையைப் பொழிந்தன.
ஆனால் அர்ச்சுனன், பரவி எரிகின்ற நெருப்புச் சுவாலையின் மேலே, பெய்யும் மழை விழாதபடி சரத்கூடம் அம்புகளைத் தொடர்ச்சியாகத் தொடுத்துக் கட்டினான். அதனால் காண்டவவனத்தின் நடுவிலே மழை நீர் விழாமல், அவ்வனத்தைச் சுற்றிலும் மழை நீர் விழுந்தது. அவ்வாறு இடையில் நீர் விழாமல், சுற்றிலும் நீர் விழுவதானது, அக்கினி தேவனுக்கு அளித்த சரக்கூடமாகிய, கவிகையைச் சுற்றிலும் முத்துச் சரங்கள் தொங்க விட்டது போல் இருந்தனவாம்.
தக்ஷகன்
அப்பொழுது இந்திரன், தன்னுடைய நண்பன் தக்ஷகன் என்னும் நாகம், இந்த நெருப்புச் சுவாலையில் அகப்பட்டுக் கொண்டால் இறந்துவிடுவானே என்று அஞ்சினான். அதனால் தேவர்களெல்லாம் ஒன்று கூடி, அந்த தக்ஷகனைத் தேடித் திரியலாயினர். அதனைக் காண முடிய வில்லை. ஆனால் அந்தத் தக்ஷகனுடைய மனைவியாகிய நாகம், தன் மகனாகிய அசுவசேனன் என்னும் நாகக்குட்டியை வாயில் கௌவிக்கொண்டு, நெருப்புச் சுவாலையிலிருந்து தப்பி, உய்ய அந்தரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அர்ச்சுனன், ஓர் அம் பினைக் கொண்டு பெண் நாகத்தின் தலை யையும், குட்டி நாகத்தின் வாலையும், துண்டித்தான். அதனைக் கண்டு இந்திரன் அக்கினிச்சுவாலையின் வெளியில் விழுந்த தன் நண்பன் தக்ஷகன் மகனாகிய அசுவ சேனன், என்னும் அந்தக் குட்டி நாகத்தைக் காப்பாற்றினான். அதாவது வருணாத் திரத்தைச் செலுத்திக் காப்பாற்றினான். தலையே துண்டாகிப் போனதால், தாய் நாகம் துடிதுடித்து அக்கினிச்சுவாலையில் விழுந்து இறந்தது.
தப்பிப் பிழைத்த அசுவசேனன் என்னும் குட்டி நாகம், அர்ச்சுனனுக்குப் பகைவன் யார் என்று விசாரித்தது. துரியோதனன் நண்பனாகிய அங்கநாட்டுக்கதிபதி கர்ணன் தான், என்று அறிந்து அவனிடம் சென்று, ”தான வீரனே! என் தாயை அர்ச்சுனன் கொன்று நெருப்புச் சுவாலையில் விழச் செய்தான்.அவனை நான் பழி வாங்க வேண்டும். என்னை உன் மகன்போல் ஆதரி; என்றும் உனக்குத் துணையாய் இருந்து, அர்ச்சுனனைக் கொல்வேன். அப்பொழுதுதான் என் மனம் நிம்மதி அடையும் ” என்று வேண்டி நின்றது. கர்ணனும் அடைக்கலமாக வந்த அந்த அசுவசேனன் என்னும் குட்டி நாகத்தை ஆதரித்து வளர்த்து வந்தான்.
அர்ச்சுனன் மீது போர் தொடுக்க முடிவு
தன் நண்பனாகிய தக்ஷகனைத் தேடியும் காணாமல் போகவே இந்திரன் வெகுண்டு, அர்ச்சுனன் மேல் போர் தொடுத்தான். முப்பத்து முக்கோடி தேவர்களையும் போரிடச் செய்து, தானும் போரிடலா னான். அந்த மாதத்திற்குரியவனாகிய சூரியன். அட்டவசுக்களில் ஒருவரான பிரபாசன் என்னும் பீஷ்மர், என்ற இவர்களைத் தவிர மற்ற முப்பத்தொரு தேவர்களும், அந்த முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தலைமை தாங்கிப் போரிடலாயினர். முப்பத்து மூன்று தேவர்கள் என்பவர்கள் :
(1) துவாதசாதித்தர்: (பன்னிரு சூரியர்)
(1) தாத்தரு, (2) சக்கரன், (3) அரியம்பன், (4) மித்திரன், (5) வருணன், (6) அஞ்சுமான். (7) இரணியன், (8) பகவான், (9) திவாச்சு வரன், (10) பூடன், (11) சவித்துரு, (12) துவட்டன்.
(2) ஏகாதசருத்திரர் : (1) மாதேவன்.(2) சிவன், (3) உருத்திரன், (4) சங்கரன், (5) நீலலோகிதன், (6) ஈசானன், (7) விசயன், (8) வீமதேவன், (9) பவோற்பவன், (10) கபாலி, (11) செளமியன்.
(3) அட்டவசுக்கள்: (1) அனலன், (2) அனிலன், (3) ஆபன், (4) சோபன், (5) தரன், (6) துருவன், (7) ப்ரத்யூஷன், (8) பிரபாசன் (இவன்தான் பீஷ்மராகப் பிறந்தவன்).
அசுவினித் தேவர்கள்-இருவர்.ஆக மொத்தம் முப்பத்து மூன்று வருதல் காண்க.
மகனுடன் போரிட்ட இந்திரன் இவர்களும் அர்ச்சுனனுடன் போரிட்டு, தாங்கள் ஏறி வந்த வாகனங்களையும் கையில் பிடித்த ஆயுதங்களையும் இழந்து, உடம்பில் இரத்தம் பெருக்கெடுத்து ஓட, உள்ளம் நடுங்கி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, புறங்காட்டி ஒடலாயினர். அதே போல, இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற எட்டுத் திக்குப் பாலகர்களில் அக்கினியும் வாயுவும் அருச்சுனனுக்குத் துணை ஆயினர். வருணன், ஏழு மேகங் களும் தன்னிடத்துள்ள நீரை உறிஞ்சி விட்டதனால், நீரில்லாது மனமழிந்தான். இந்திரன் தவிர்த்த ஏனைய ஐவரும், அருச்சுனனை எதிர்த்துப் போரிட ஆற்றாது. தம் இருப்பிடம் போய்ச் சேர்ந்தனர். ஆனால் இந்திரனோ விடவில்லை. தன் மகன் என்றும் எண்ணாமல், அவனுடன் போரிட்டான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. இறுதியில் அர்ச்சுனன் தன் தந்தை என்று எண்ணாமல்,இடியின் வடிவம் எழுதிய அவன் கொடியைத் துண்டித்தான். அந்த நிலையில் அசரீரி ஒன்று, “தக்ஷகன் முன்னமே குருக்ஷேத்திரம் அடைந்து விட்டான்; அவன் காண்டவ வனத்தில் இல்லை; கிருஷ்ணார்ச்சுனரோடு போர் செய்ய வேண்டாம். ஏனெனில் அவர்களை வெற்றி பெறுவது கடினம்” என்று கூறியது.
அசரீரியின் வார்த்தையைக் கேட்டு, இந்திரன் போரை நிறுத்தினான். உடனே அர்ச்சுனன் வெற்றிச் சங்கை ஊதினான். கண்ணபிரானோ அர்ச்சுனனின் போர்த் திறங்களைக் கண்டு வியந்தார். பின்னர் இந்திரன் முதலான தேவர்களும், நாரதமா முனிவரும், அர்ச்சுனனை வெகுவாகப் புகழ்ந்தனர். காண்டவ வனத் தகனத்தில் தப்பியவர்கள்:
(1) தக்ஷகன், (2) தக்ஷகனுடைய குட்டி அசுவசேனன், (3) மயன் என்னும் அசுரச் சிற்பி, (4) சிவபெருமானைப் போன்ற மந்தபாலன் என்னும் கரிக்குருவி பெற்றுக் கொடுத்த நான்கு பறவைக் குஞ்சுகள்.
மந்தபாலன் என்னும் முனிவருக்கு கரிக்குருவி பெற்றுக் கொடுத்த நான்கு பறவைக் குஞ்சுகளை அக்கினி பற்றாதிருந்த வரலாறு :
“பெண்களைத் தீண்டேன்” என்று சபதம் செய்து கடும் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டித்த, மந்தபால முனிவர் என்பவர் தம் இறுதிக் காலத்தில் மோட்சம் புக விரும்பினார். ஆனால் அவர் கண் பார்வைக்கு மோட்ச உலகமே தெரிய வில்லை; அதனால் தன் பால் வந்த பராசர முனிவரை, ‘கடும் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டித்த எனக்கு, மோட்சவுலகம் தென் படாதது ஏன்?” என்று மந்தபாலமுனிவர் கேட்டார். அதற்கு பராசரமுனிவர், “முனிவர் பெருமானே! புத்திரர்கள் பிறந் தால்தான், மோட்ச உலகம் சித்திக்கும். இல்லையென்றால் ‘புத்’ என்ற நரகம்தான் சித்திக்கும். அதனால்தான் கோசல நாட்டு மன்னன், தசரதன் தனக்குப் புதல்வர்கள் இல்லை என்ற குறையைப் போக்க புத்திரகாமேஷ்டியாகம் செய்தார். ஆகை யால் ஒரு மகனை நீரும் பெற்றுக் கொள் வீராக” என்று கூறினார்.
வரம் கேட்க சென்ற மந்தபால முனிவர்
இதனைக் கேட்ட அம்முனிவர், ஒரு கரிய பெண் குருவியோடு, அதன் ஆண் பறவையாகத் தான் வடிவெடுத்து, அதனைக்கூடி நான்கு முட்டைகளைப் பிறப்பிக்கச் செய்தார். பின்னர் அப்பெண் குருவி அம் முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளாக்கி, அன்பு செய்து வாழ்ந் திருந்தது. ஜரிதாரி, ஸாரிஸ்ருக்வன், ஸ்தம்பமித்ரன், துரோணன், என்ற நான்கு புத்திரர் களாகிய குஞ்சுகளை அக்கினி எரிக்கக் கூடாது என்று அக்கினியிடம் வரம் கேட்டு உயர்தவம் செய்யச் சென்று விட்டார்.
அருச்சுனனால் காண்டவ வனம் எரிக்கப் பட்டபோது, தாய்ப்பறவையும், அதன் குஞ்சுகளும் தங்களைச் சுற்றி நெருப்பு சூழ்ந்து கொண்டதைக் கண்டு செய்வ தறியாது தவித்தன. அப்பொழுது தாய்ப் பறவை, “தன் நான்கு குஞ்சுகளை எலி வளைக்குள் புகுந்து தப்பித்துக் கொள்ளும் படி கூறியது. ஆனால் அந்தக் குஞ்சுகள், “தாயே எலி வளைக்குள் புகுந்தால் எங்களை எலி தின்றுவிடும். நாங்கள் வெளியில் இருந்து நெருப்பில் அகப்பட்டுக் கரிந்துபோனால் அடுத்த பிறவியில் நாங்கள் குஞ்சுகளாய் பிறப்போம். நீங்கள் தப்பிச் சென்று விடுங்கள்” என்று வேண்டிக் கொண்டது. அந்தத் தாய்ப் பறவை அந்த அக்கினிக்கு அஞ்சி தப்பிச் சென்றது.
அந்தச் சிறு குஞ்சுகள் அக்கினியைத் தோத்திரம் செய்தமையாலும், தன் குஞ்சுகளை எரிக்கக் கூடாது, என அவற்றின் தந்தை மந்தபால முனிவர் அக்கினியிடம் வரம் பெற்றமையாலும், அவை பிழைத்து விட்டன. அக்கினியும் அவற்றைத் தீண்ட வில்லை. பின்னர் காண்டவ வனம் அழிந்த பின், தாய்ப்பறவை தன் குஞ்சுகளோடு சேர்ந்து இனிது வாழ்ந்தது. அவற்றின் தந்தை மந்தபால முனிவர், அவற்றை வேறோர் வனத்தில் இருக்கச் செய்து, தவம் புரிந்து உயர் கதியாகிய மோட்சம் அடைந்தார்.
ஆக, இந்த நான்கு குஞ்சுகளோடு தாய்க் குஞ்சு, தக்ஷகனின் மகனான அசுவசேனன் என்னும் நாகக்குட்டி, தக்ஷகன், மயன் என்பவர்கள் தான் காண்டவ வனத்திலிருந்து உயிர் தப்பியவர்களாவர்.
மகாபாரதம் – 14 காண்டவ வனத் தகனச் சருக்கம், அக்கினிதேவன் ஆட்சி | Asha Aanmigam