பொழுது புலர்ந்தது. தெய்வத்தின் அருளால் உயிர் பிழைத்திருந்த திட்டத்துய்மனின் தேர்ப்பாகன் விரைந்து தருமபுத்திரரிடம் சென்றான். நடுநடுங்கிக் கொண்டே அவன், “அரசே! அஸ்வத்தாமா நேற்று இரவு பாசறையில் நுழைந்து திட்டத் துய்மன், சிகண்டி, பாஞ்சால தேசத்து மன்னர்கள், சோழன், அரசி பாஞ்சாலியின் புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றுவிட்டான். எஞ்சியவரை கிருபரும் கிருதவன்மாவும் கொன்றுவிட்டார்கள்” என்று கூறினான்.
அதனைக் கேட்டுத் தருமபுத்திரர் மயக்க மடைந்தார். உடனே அவர் தம் தம்பியரும் சாத்யகியும் பிடித்துக் கொண்டனர். மயக்கம் தெளிய வைத்தனர். மூர்ச்சை தெளிந்த தருமபுத்திரர் அஸ்வத்தாமனின் அட்டூழியத்தை எண்ணி எண்ணிப் புலம்ப லானார். “வெற்றி பெற்ற எங்களை எதிரி கள் எங்கள் குழந்தைகளைக் கொன்று வென்று விட்டனர். நம்முடைய வெற்றி யானது இப்பொழுது தோல்வியாகி விட்டது. பெரும் வாணிகர்கள் பெருங் கடலைக் கடந்துவிட்டு, பின்னர் ஒரு குளத்தில் மூழ்கி இறந்தது போன்ற நிலை எங்களுக்கு உண்டாகிவிட்டதே! இந்தத் துயரத்தை எவ்வாறு தாங்கிக் கொள் வோம்? அதிலும் பெற்ற அன்னையாகிய திரௌபதி இந்த மாபெருந் துயரத்தை எவ்வாறு தாங்கப் போகிறாள்?” என்றெல்லாம் கூறிப் புலம்பலானார்.
அதன்பின் அருகில் நின்று கொண்டிருந்த நகுலனிடம், பாஞ்சாலியை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். பின்னர் பாசறைக்குச் சென்றார். அங்கு வெட்டுண்டு கிடந்த புதல்வர்களையும், திட்டத்துமனையும், சிகண்டியையும், மற்றும் பலரையும் கண்டு வாய்விட்டு அலறினார்.
அந்த நேரத்தில் பாஞ்சாலி அங்கு வந்தாள். வெட்டுண்டு கிடந்த தன் அருமைப் புதல்வர்களை – இளம் பஞ்ச பாண்டவர்களைக் கண்டாள். மயக்க முற்றாள். பின்னர் ஒருவாறு தெளிந்தாள். பெற்ற வயிறு பற்றி எரிந்த நிலையில் வாய்விட்டு அலறினாள். பீமன், நகுலன் ஆகியோர் சமாதானம் செய்தனர். அருகில் நின்ற தருமபுத்திரரைப் பார்த்து, “குருகுல மன்னரே! முதலில் அபிமன்யுவைப் பறி கொடுத்தீர்; அடுத்து அரவானைப் பறி கொடுத்தீர். பின்னர் வலிமை மிக்க கடோத் கஜனைப் பறிகொடுத்தீர். இன்று நம் செல்வங்களான இளம் பஞ்சபாண்டவர் களையே பறிகொடுத்தீர். நம் பேர் சொல்லக்கூட பிள்ளை இல்லாத நிலை வந்துவிட்டதே! இந்தப் பிள்ளைகளை யெல்லாம் வாரிக் கொடுத்து விட்டு எந்த நாட்டை ஆளப்போகின்றீர்? புத்திர சோகமானது காட்டுத் தீ போலப்பற்றி எரிகின்றதே! என்ன செய்வேன் பாவி. என் புதல்வர்களை அநியாயமாகக் கொன்ற அந்தக் கோழையை – அந்த அஸ்வத் தாமனைக் கொன்றாக வேண்டும். இல்லா விட்டால் நெருப்பில் பிறந்த நான் நெருப்பிலே போய்விடுவேன்” என்று கூறி அழுதாள்.
அதற்குத் தருமபுத்திரர், “திரௌபதி! அஸ்வத்தாமன் வெகு தூரம் சென்று விட்டான். மேலும் அவன் சிரஞ்சீவி யாயிற்றே! அவனை எவ்வாறு கொல்ல முடியும்?” என்று கேட்டார்.
அதற்குத் பாஞ்சாலி, “அவன் சிரஞ்சீவி என்றால் அவன் தலையில் மணி ஒன்றுள் ளது. அம்மணி அவனுடன் பிறந்தது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அம்மணியை அவன் தலையில் இருந்து அறுத்து எடுத்துக் கொண்டு வாருங்கள் அதை என்னிடம் காட்டினால் நான் உயிர் வாழ்வேன்” என்று கூறிப் புலம்பினாள்.
பீமசேனனைத் தொடர்ந்த தர்மர்
பாஞ்சாலியின் துயரத்தையும், புலம் பலையும் அறிந்த பீமன், நகுலன் தேரைச் செலுத்த அஸ்வத்தாமா சென்ற வழியில் சென்றான். பீமன் நகுலனுடன் நகுலனுடன் தேரில் தேரில் ஏறிக் கொண்டு சென்ற பின்னர், கண்ணபிரான் தருமபுத்திரரை நோக்கி, “அரசே! புத்திர சோகத்தாலும், பாஞ்சாலியின் புலம்பலாலும் அஸ்வத்தாமாவைக் கொல்லப் பீமன் விரைந்து சென்று கொண்டிருக்கின்றான். அந்த அஸ்வத்தாமன் கொடிய ‘பிரமசிரஸ்’ என்னும் அஸ்திரப் பயிற்சியைப் பெற்றவன். அதனால் பீமனால் அவனை வெல்ல முடியாது. அவன் கொடியவன்; முன்பின் யோசியாதவன்; ஆத்திரக்காரன்; தீய குணங்கள் உள்ளவன்; அந்தப் பிரமசிரஸிலிருந்தும். அவனிடமிருந்து பீமனை எப்படியாவது காக்க வேண்டும்” என்று கூறிய அவர், கருடக் கொடி பறக்கும் தன் தேரைத் தருமபுத்திரரும், அர்ச்சுனனும், சகாதேவனும் அமர்ந் திருக்க ஓட்டினார். பீமசேனனைத் தொடர்ந்து அத்தேர் சென்றது.
பிரமசிரஸ் அஸ்திரம்
பாகீரதி நதிக்கரையில் புழுதி படிந்த மேனியனாய் அஸ்வத்தாமாவையும், அவனருகில் வியாச முனிவரையும், பீமனும், நகுலனும் கண்டார்கள். அஸ்வத்தாமா வைக் கண்டவுடன் வில்லம்புகளை எடுத்துக்கொண்டு பீமனும் நகுலனும் ஓடினார்கள். அவர்கள் பின்னால் அர்ச் கனன், சகாதேவன், கண்ணபிரான் முதலான அனைவரும் ஓடி வந்தனர். பாண்டவர்களையும் கண்ணபிரானையும் கண்டவுடன் அஸ்வத்தாமன், “தன்னைக் கொல்லத்தான் ஓடி வருகின்றார்கள்” என்று அஞ்சி, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு புல்லை இடக்கையால் எடுத்து, ‘பாண்டவர்கள் அழியட்டும்’ என்று கூறி, மந்திரங் கள் பல சொல்லி, ‘பிரமசிரஸ்’ என்ற அஸ்திரமாக அதனை ஆக்கி விடுத்தான். மூவுலகங்களையும் எரிக்கின்ற நெருப்புப் போன்று அந்த அஸ்திரம் புறப்பட்டு அனலைக்கக்கிக் கொண்டு பாண்டவர்களை நெருங்கியது.
உடனே அர்ச்சுனன், தேவதைகளையும், ஆசார்யர்களையும் தியானித்து, “அஸ்வத்தாமாவின் அஸ்திரம் தன்னுடைய நிலையி லிருந்து தணிய வேண்டும்” என்று கூறி மந்திரப்பிரயோகம் செய்து ஏவி விட்டான். அதுவும் நெருப்பைக்கக்கிக் கொண்டு சென்றது.
இரண்டு அஸ்திரங்களும் முட்டின; மோதின; அதனால் இடிகள், எரி நட்சத்தி ரங்கள் விழுந்தன. பூமி நடுங்கியது.
உடனே நாரதரும், வியாசரும் அனைவருக்கும் நன்மை செய்ய விரும்பி அந்த இரு எரி அஸ்திரங்கள் இடையில் நின்றனர். அந்த அஸ்திரங்கள் மனிதர்களுக்குப் பெருந் தீங்கு விளைவிக்கும். எனவே அர்ச்சுனன் தன்னுடைய அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுவிட்டான். ஆனால் அஸ்வத்தாமாவால் அது முடியவில்லை. திரும்ப அழைத்துக் கொள்ளும் பயிற்சி அவனிடம் இல்லை.
உடனே வியாசர், “அர்ச்சுனன் தான் விட்ட அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். அஸ்வத்தாமா! அந்த அஸ்திரத்தின் சக்தி மிகப்பெரியது. ஆதலின் நீ உன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள். இல்லையென்றால் உன் தலையில் இருக்கின்ற மணியைக் கொடுத்துவிடு அதனால் பாண்டவர்களின் கோபம் நீங்கும்” என்று கூறினார்.
கர்ப்பங்களை நாசமாக்கும் அஸ்திரம்
அதனைக் கேட்ட அஸ்வத்தாமா, “முனிவரே! பாண்டவர்கள் பெற்றிருக்கும் இரத்தினங்களைவிட இது மிக உயர்ந்தது. இதனை அணிந்து கொண்டவன் நோய், பசி போன்றவற்றால் துன்பப்பட வேண்டியதில்லை. தேவர்களாலும் அசுரர்களாலும், நாகர்களாலும் துன்பம் நேராது.இத்தகைய சிறந்த மணியை நான் கொடுத்துவிடுகின்றேன். ஆனால் நான் ஏவிய அஸ்திரத்தைத் திரும்ப அழைக்க மாட்டேன். அது பாண்டவர்களின் கர்ப்பங் களையும், உத்தரையின் கர்ப்பத்தையும் நாசமாக்கப் போகிறது” என்று கூறினான்.
அப்பொழுது கண்ணபிரான் அஸ்வத் தாமாவைப் பார்த்து, “அஸ்வத்தாமா! நீ இனிமேல் உண்டாகப் போகிற கர்ப்பங் களை வேண்டுமென்றால் நாசமாக்கிக் கொள். குருவம்சத்திற்கு ஒரே வாரிசாக விளங்கப்போகிற உத்தரையின் கர்ப்பத்தை மட்டும் அழித்துவிடாதே”என்றார். ஆனால் அஸ்வத்தாமன் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான்.
உடனே கண்ணபிரான் நீ அனுப்பிய கணை பயனற்றுப் போகப் போகின்றது. ”உன் கணையினால் உத்தரையின் கருவும், உத்தரையும் இறந்துபடும். ஆனால் இறந்தபின் அக்குழந்தையை நான் உயிர் உள்ளதாகச் செய்வேன். அக்குழந்தை நீண்ட ஆயுளுடன் குருவம்சத்தின் வாரிசாக வாழும் “என்றார். அப்பொழுதும் அஸ்வத்தாமா தான் ஏவிய அத்திரத்தைத் திரும்பப் பெறவில்லை.
பரிட்சித்து மன்னன்
அதனால் அஸ்வத்தாமாவின் அந்த ‘பிரமசிரஸ்’ என்ற அத்திரம் உத்தரையின் கர்ப்பத்தைத் தாக்கியது. உத்தரை விராட நாட்டு மன்னன் மகள்; அபிமன்யுவின் மனைவி, கண்ணன் அக்கர்ப்பத்தை மட்டும் காப்பாற்றி, “உன்னால் உத்தரை யின் கர்ப்பத்தில் உள்ள சிசு அழியாது. ‘பரிட்சித்து’ என்ற பெயருடன் புகழொடு நீண்ட நாள் வாழும். ஆனால் நீயோ பெயரைக் கெடுத்துக் கொண்டாய். மனிதர் களுடைய உறவில்லாமல் காட்டிலே பித்தனைப் போலத் திரிந்துகொண்டிருக்கப் போகிறாய்” என்று வெறுப்புடன் கூறினார். அஸ்வத்தாமாவின் கணையினால் உத்தரை இறந்தாள்; ஆனால் அவள் கரு கண்ணன் அருளால் பிழைத்துக் கொண்டது.
உடனே வியாசர், “நாங்கள் எவ்வளவு கூறியும் நீ அஸ்திரத்தைத் திரும்பப் பெற மறுத்துவிட்டாய். அற்பப்பயலே! என்முன் நிற்காதே! இங்கிருந்து போய்விடு” என்று கோபமாகக் கூறினார். பின்னர் அவரும் நாரதரும் மறைந்தனர்.
அஸ்வத்தாமாவும் பயனில்லாத காரியங்களைத் தொடர்ச்சியாகப் பல செய்து, கெட்ட பெயரினைப் பெற்று, மனம் வருந்தி பாண்டவர்களிடம் சிரசிலுள்ள மணியைக் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் சென்று அங்கு அலைந்து திரியலானான்.
பாண்டவர்கள் மணியைப் பெற்றுக் கொண்டு வந்து பாஞ்சாலியிடம் கொடுத்தனர். அதனைப் பெற்றுக்கொண்டதனால் அவள் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்தது. பின்னர், அவள், “இம்மணியை அணியும் தகுதியுடையவர் தருமபுத்திரரே ” என்று கூறி, அவரிடம் கொடுத்துவிட்டாள்.
தருமபுத்திரரும் அம்மணியை வாங்கித் தம் தலையில் அணிந்து கொண்டார். முழு நிலவு போல அழகிய தோற்றத்துடன் பிரகாசித்தார்.
அதற்குப்பின் கண்ணபிரான், அஸ்வத் தாமன் சிவபிரானிடம் வாள் பெற்ற வகையையும், அந்தச் சங்கரன் தந்த வாள் மூலம் திட்டத்துய்மன், சிகண்டி, உப பாண்டவர்கள் முதலானவர்களைக் கொன்ற விதத்தையும் விளக்கமாகக் கூறினார். இறுதியில், “எல்லாம் விதியின் செயல்” எனப் பெருமூச்சு விட்டார். அனைவரும் பாடி வீடு சேர்ந்தனர்.
சௌப்திக பருவம் முற்றியது.