கருடன் மாதவப் பெருமாளை நோக்கி. “ஜகத்ரக்ஷகரே! துர்மரணம் அடைந்தவன் என்ன கதியை அடைகிறான்? அவனுக்கு எவ்விதமான கர்மம் செய்யத்தக்கது? இதை எனக்குக் கூற வேண்டும்” என்ற வேண்டினான்.
ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் கூறலானார்:
“கருடா! காலால் தாண்டியதாலும் கழுத்தில் சுறுக்கிட்டுக் கொண்டதாலேனும் விஷம் அருந்தியேனும் அக்கினியில் விழுந்தும் வைரத்தைப் பொடி செய்து உண்டேனும். பறவைகளின் அலகினாலும், எருதுகள் முட்டியேனும், ஜலத்தில் விழுந்தேனும், நாய் நரிகள் கடித்தேனும் மடிந்தவர்களும், குஷ்ட ரோகத்தினாலும் தேகத்தில் புழு வுண்டாகி இறந்தவனும், பிராமண வைணவர்கள், மிலேச்சர்கள். சண்டாளர்கள் இவர்களில் யாராலேனும் அடிபட்டு மரணமடைந்தவனும் இடி விழுந்து இறந்தவனும், மரம் வீழ்ந்து மடிந்தவனும், சூத்திர மங்கையர், ஆடை வெளுக்கும் வண்ணாத்தி, இவர்களைத் தீண்டிவிட்டு, ஸ்நானம் செய்யாமல் மரித்தவனும் நற்கதியடைய மாட்டார்கள். அவர்கள் நரகத்தையே அடைவார்கள்.
அவ்வாறு மரித்தவரைச் சார்ந்தவருக்கு ஆசௌசம் இல்லை. அவர்களுக்காக உடனடியாகக் கிருத்தியங்களைச் செய்ய வேண்டியதுமில்லை. நாராயண பலியைச் செய்த பிறகே கருமங்களைச் செய்யலாம். துன்மரணத்தை அடைந்தவன், அவன் பிராமணனாயின் ஆறு மாதங்களுக்குப் பிறகும். அவன் க்ஷத்திரியனாயின் இரண்டு மாதங்களுக்குப் பிறகும், வைசியனாயின் பதினைந்து நாட்களுக்குப் பிறகும். சூத்திரனாயின் அவன் இறந்தவுடனேயும் அவரவர்க்குரிய கர்மங்களைச் செய்ய வேண்டும். கங்கா தீரத்திலாவது. யமுனா தீரத்திலாவது நைமி சாரணியத்திலாவது புஷ்கர க்ஷேத்திரத்திலாவது. அரசமர நிழலிலாவது, மாட்டுக் கொட்டிலிலாவது, இல்லத்திலாவது நாராயணபலியைச் செய்தல் வேண்டும்.
“வேத மந்திரங்களால். பகவானை ஸ்தோத்திரம் செய்து, ஆராதனை செய்து, தெற்கு முகமாக இருந்து கொண்டு, சங்கு, சக்கர பீதாம்பரம் தரித்தவராயும், நித்தியராயும் ஸர்வாந்தர்யாமியாகியும், திவ்விய மங்கள விக்கிரக அனந்த கல்யாண குண விஸ்வரூபராகியும் இருக்கும் ஸ்வாமீ! மரித்தவனுக்குத் தேவரீரே நற்கதி கொடுக்க வேண்டும்!” என்று அந்தப் பகவானைப் பிரார்த்தனை செய்து. தியானஞ்செய்து, பக்தியுடன் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து, தானிய தானம் கொடுத்து பிண்ட தர்ப்பணம் முதலி யவற்றைச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்த தினத்திற்கு மறுதினம், சுவர்ணத்தினால் ஸ்ரீவிஷ்ணு பிரதிமை ஒன்றையும் தாமிரத்தினால் ருத்திரப் பிரதிமை ஒன்றையும் வெள்ளியினால் பிரமாவின் பிரதிமை ஒன்றையும் இரும்பினால் யமனுடைய பிரதிமை ஒன்றையுஞ் செய்வித்து, மேற்கில் ஸ்ரீ விஷ்ணுவையும் கிழக்கில் பிரமனையும் தெற்கில் யமனையும் வடக்கில் ருத்திரனையும் மத்தியில் மரித்தவனையும் வைத்துப் பூஜித்து, ஐந்து கும்பங்கள் வைத்து, அவற்றில் நவரத்தினங்கள் பெய்து, பூணூல் சாற்றி, அலங்காரஞ் செய்து. மேலே சொன்ன ஐந்து தேவர்களையும் குறித்து சிரார்த்தம் செய்து. பிண்டம் வைத்து. எட்டு வகைத் தானங்களையும் செய்து, செப்புப் பாத்திரத்தில் திலதமும் ஹிரண்யமும் வைத்துத் தானம் வழங்கி, ரிக் வேதம் ஓதியவருக்குப் பயிரோடு கூடிய பூதானத்தையும். யஜுர் வேதம் ஓதியவருக்குக் கன்றுடன் கூடிய பசுவையும் சாமவேதம் ஓதியவருக்கு சம்பா நெல்லும் கொடுக்க வேண்டும். முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளினால், மரித்தவனது உடலைப் போலப் பிரதிமை ஒன்றையும் செய்ய வேண்டும்.
”கருடா! அந்த முந்நூற்று அறுபது காம்புகளுக்கும் விவரம் சொல்லுகிறேன்!’ கேட்பாயாக. சிரசுக்கு நாற்பதும், கழுத்துக்குப் பத்தும், மார்புக்கு இருபதும், வயிற்றுக்கு இருபதும், இரு கரங்களுக்கு நூறும், இடைக்கு இருபதும். தொடைகளுக்கு நூறும், முழந்தாள்களுக்கு முப்பதும், இனக் குறிக்கு நாலும், விருஷணங்களுக்கு ஆறும், கால்களுக்குப் பத்தும் வைத்து, மீண்டும் சிரசுக்குத் தேங்காயும் முகத்துக்குப் பஞ்சரத்தினமும், நாவுக்கு வாழைப் பழமும், மூக்கிற்கு எட்பூவும், காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்கு சவுரியும், தோலுக்கு கிருஷ்ணாஜீனமும் ஸ்தனப் பிரதேசத்துக்கு குன்றியும், நாபிக்குத் தாமரைப் பூவும் விருக்ஷணங்களுக்கு பனங்காய்களையும் வைத்து, சந்தன புஷ்பங்களால் அலங்காரஞ் செய்து, சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்களைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் துன் மரணம் அடைந்தவன் நற்கதியை அடைவான். இவ்விதமாகக் கர்மம் செய்யும் புத்திரனுக்குப் பத்து நாட்களும் மற்ற தாயத்தார்களுக்கு மூன்று தினமும் ஆசௌசம் உண்டு!”.