திருக்கயிலைத் திருமாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் – நவரத்தின பொன்மணி சிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரியன் உதித்தாற் போன்ற பேரொளி யுடன் அருள்வடிவான ஈசனும் கருணையே வடிவான ஈசுவரியும் எழுந்தருளியிருந்தனர்.
அங்கே தேவகானம் வேதமந்திர ஜபத்தோடு இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. சிவகணத்தவர்கள் மத்தளம் முழக்கினர். இப்பேர்ப்பட்ட ரம்மியமான வேளையில் அம்பிகை யின் வதனம் மட்டும் சற்று சோர்வுடன் காணப்பட்டது. அம்பிகையின் மனநிலையைப் புரிந்து கொண்ட மகேசன், ஈசுவரியின் முகம் நோக்கி, ”சர்வ லோகநாயகீ! சங்கரீ! உனது இன்முகம் வாட்டத்துடன் காணப்படுவது ஏன்?” என்று அன்போடு வினவினார்.
ஈசனின் நளினமான மொழிகேட்டு நாயகி, “அங்கிங்கெனாதபடி எங்கும் பேரொளி பொங்க காட்சி தரும் நாதன் அறியாததா? பிரபோ! எளியவள் தாக்ஷாயணி யாக பிறந்தபோது என் தந்தை தக்ஷனால் அவமானப்பட்டு அக்னியில் பிரவேசித்துத் தங்களைப் பிரிந்தேன். உங்கள் போதனையை மதியாததால் நான் பட்ட அவமானம், இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அதனால் நான் மறுபிறவி எடுக்க எண்ணுகிறேன். தேவரீர் திருவருள் புரிய வேண்டும்” என்று வேதனையோடு விளம்பினாள்.
அம்பிகையின் மொழி கேட்டு, சிவபெருமான், “ஜகஜனனி! தக்க தருணத்தில் தகுந்த வரம் கேட்டாய்! லோகக்ஷேமத்திற்காக நல்ல காரியங்கள் நடக்க இருக்கிறது. உனது பூலோக அவதாரம் பிரபஞ்சத்திற்கு உத்தமமான உயர்ந்த வழிகாட்டும்.
பூலோகத்தில் வாழ்ந்து வரும் பர்வதராஜனான இமவான்,மேனை தம்பதியர் எனது அன்பிற்கு பாத்திரமானவர்கள். அவர்கள் உன்னைத் தங்கள் புத்திரியாக அடையவேண்டும் என்பதற்காக பல்லாண்டு காலமாக தவம் புரிந்து வருகின்றனர். அவர்கள் தவம் பலிதமாக இது ஒரு நல்ல தருணம். சென்றுவா தேவீ! ஜய விஜயீ பவா!”
உமாமஹேஸ்வரி உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விட்டாள். அக்கணமே தமது அவதார வைபவத்தைப் பூர்த்தி செய்யப் புறப்பட்டாள். ‘ஓஷதிபிரஸ்தம் ‘ எனும் நகரத்தைப் பன்னெடுங் காலமாக அரசு புரிந்துவந்த பர்வதராஜன் தவம்புரிய சித்தம் கொண்டான். ஒரு நாள் அரியணை விட்டுக் கீழே இறங்கினான்.
நாடாண்ட மன்னன் இமவான் அணிமணி ஆபரணம் களைந்தான். ருத்ராக்ஷ மணிமாலைகள் தரித்தான் பொன்பட்டு வஸ்திரம் களைந்தான். காவி அணிந்தான் நாடுகளைந்தான். மனைவியோடு காடு புகுந்தான். இமயமலைச் சாரலில் மனைவி மேனையுடன் பர்ண சாலையில் தவத்தை மேற்கொண்டான்.
தவத்தால் உயர்ந்தான் வரதராஜன். தியானத்தால் அவன் முகத்தில் ஒரு பிரகாசம் ! மணி முடி அணிந்த தலை சடைமுடியால் மூடியது. காற்று, மழை, வெய்யில், பனி எதையும் பொருட்படுத்தவில்லை. சிவநாமத்தையே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டான்.
மன்னனின் பர்ணசாலையை அடுத்துள்ள மானஸசரஸ் தடாகத்தில் நீலோத்பல மலர்கள் மலர்ந்து தடாகத்திற்குக் குடை பிடித்தாற் போல் அழகுற காணப்பட்டது. மானஸசரசில் இருந்து மன்னன் நித்திய பூஜைக்கு மலர் பறித்துச் செல்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தான். வழக்கம் போல் மலர்பறிக்க வந்த மன்னன் மலர்கள் இடையே பேரொளி பிரகாசிக்கக் கண்டான். ஒருகணம் அதிசயித்தான். பேரொளிக்குக் காரணம் காண நீலோத்பல மலர் அருகே சென்றான்.
பேரொளி கண்டு அதிசயித்த இமவான் மலர் மீது பெண் குழந்தை சயனித்திருக்கக் கண்டு ஆச்சரியப் பட்டான். முழுநிலவின் தோற்றத்துடன் கூடிய வதனம். அந்த வதனத்திலே வட்ட கருவிழிகள் மூன்று – பிறைசூடிய சுருளேறிய கரும் கூந்தல் – முல்லை அரும்பின் செல்லச் சிரிப்பு – நான்குத் திருக்கரங்கள்.
குழந்தையின் தெய்வத்திருமேனி கண்டு, ஈசுவரியே தனக்குப் பெண்ணாக பிறந்துள்ளாள் என்பதனைப் புரிந்து கொண்டான் மன்னன். கண்ணன் சிறைச் சாலையில் விஷ்ணுவாக வசுதேவர், தேவகிக்கு காட்சி கொடுத்தாற் போல் இங்கே அம்பிகை யும் பார்வதியாக பர்வதராஜனுக்குத் தரிசனம் கொடுத்தாள். அம்பிகை நொடிப்பொழுதில் மாயத் தோற்றத்தை மறைத்து சாதாரணமான மனுஷ தோற்றத்துடன் மாறினாள். இமவான் குழந்தையை அன்போடு எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான். முத்தமாரி பொழிந்தான்.
பர்ணசாலைக்கு எடுத்துச் சென்றான். மேனாவிடம் குழந்தையைக் கொடுத்து, மானஸசரசில் குழந்தை கிடைத்த செய்தியைச் சொன்னான். பூமழை பொழிந்தது. தேவதுந்துபிகள் ஒலித்தன. உலகங்கள் யாவும் மலர்ந்தன. மேனா தாய்ம்மை பொங்க குழந்தைக்குப் பாலூட்டி மகிழ்ந்தாள். “பார்வதீ!” என்று பெயரிட்டு பூரித்தாள். மன்னர்க்குப் பெண் பிறந்த செய்தி பூ மணம் மேவி வரும் தென்றல் போல் பூ மண்டலம் எங்கும் பரவியது.
இமவான் குழந்தையுடனும் மனைவியுடனும் தனது திருமாளிகை சென்றான். குழந்தை பிறந்த வைபவத்தைச் சிறப்பாகக் கொண்டாடினான். தானதருமங்களைச் செய்தான். ஆலயங்களுக்குப் பூஜைகள் செய்தான். இமவான் மாளிகையில் உற்சவ உற்சாகம் ஊஞ்சலாடியது.
தேவர்களும், தவசியர்களும், மண்ணுலக மன்னர் களும் தேவ மகளிரும் இமவான் மாளிகைக்கு வந்து அரச குடும்பத்தினரை வாழ்த்தினர்.
பர்வதகுமாரி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். இமவானும் மேனையும் எல்லை இல்லா இன்பத்தில் மூழ்கித் திளைத்தனர்.
பார்வதி ஐந்து வயது பிராயத்தை அடைந்தாள். அவள் சித்தமெலாம் சிவமயமானது. பார்வதியின் உள்ளத்தில் பரமேசுவரனின் திருத்தோற்றம் பிரகாசித்தது.
சிவனுக்கு உகந்த பண்டிகைகளைத் தனது தோழியர் களான ஜயை, விஜயையுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடினாள். தோழியருடன் சேர்ந்து எப்பொழுதும் சிவ பார்வதி விளையாட்டு விளையாடிவந்தாள்.
பார்வதிக்குப் பரமசிவனை மணக்க வேண்டும் என்ற ஆசை அந்தச் சின்ன வயதிலேயே இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. பெற்றோர்களிடம் தனது ஆசையைச் சொன்னாள். பெற்றோர்கள் பெருமிதம் பூண்டனர். இருப்பினும் இச் சிறுவயதிலேயே மகளைப் பிரிய வேண்டுமே என்ற ஏக்கமும் எழத்தான் செய்தது.
பெற்றோர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்ட பார்வதி, பெற்றோர்களிடம் நயமாகப் பேசினாள்.
”பெண் என்று பிறந்துவிட்டால் மாற்றான் வீட்டுக்குப் போய்த்தானே ஆக வேண்டும். அதற்காக வருந்துவது விவேக மற்றதல்லவா! நடப்பதெல்லாம் நான்மறை நாயகனின் திருவிளையாடல் அல்லவா! மலரிடை பிறந்த என்னை மணமேடை இருத்த வேண்டியது உங்கள் கடமையல்லவா! நான் கயிலாசபதியான ஈசனை கணவ னாக அடைய வேண்டும் என்று மனத்தால் வரித்து விட்டேன்.
சித்தத்தைச் சிவன்பால் வைத்தாற்கு எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வரவேண்டாமா? தந்தையே ! நான் மேருமலைக்குத் தவம் செய்யப் போகிறேன். எனக்கு உத்தரவு தாருங்கள்!”
மகளின் வார்த்தைகள் பெற்றோர்கள் இதயத்திற்கு சற்று இதமாக இருந்தது. இமவான் மேருமலையில் பார்வதி தவம் செய்ய பர்ணசாலை அமைத்தான். அவளுக்குத் துணையாக தோழியர் ஜயை, விஜையை இருவரையும் பணிப் பெண்கள் பலரையும் அனுப்பத் தீர்மானித்தான்.
மங்கல நாளன்று இமவானும், மேனையும் அன்புமகள் பார்வதி தேவியை மேள, தாள இன்னிசை முழக்கங் களுடன், வேத கோஷம் ஒலிக்க முத்து மணிபல்லக்கில் உட்காரவைத்து மேருமலை புறப்பட்டனர். பெற்றோர்கள் பொங்கி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டனர்.
பார்வதி தேவி தவம் புரியச் சென்றாள். பரமசிவனே தக்ஷிணா மூர்த்தியைப் போல் மரநிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு சின்முத்திரையுடன் ஞான யோகம் செல்லும் குருவாக கோயில் கொண்டார்.
கந்த புராணம் – 2 தவம் புரிந்த நாயகி, அம்பிகையின் மொழி | Asha Aanmigam