திருமால் திருவாய் மலர்ந்து கூறலானார். “கருடா! தானங்களைச் செய்ய வேண்டிய முறைகளையும், அத்தானங்களால் ஏற்படும் பயன்களையும் கூறுகிறேன்; கேள்.
“தானங்கள் யாவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்தப் பருத்தி தானமே மகாதானம் என்ற பெயரைப் பெற்றது. அறப்படி வாழ்ந்து அறங்களையே புகன்று,நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த அந்தணர்கள் பூணுகின்ற பூணூலுக்குப் பருத்தியே ஏதுவானது. சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் அவர்களுடைய மானத்தைக் காப்பதற்குரிய ஆடைகளையணிவதற்கும் பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும். பருத்தித் தானம் செய்தால், மாமுனிவர்களும் பிரமருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள். பருத்தி தானஞ் செய்தவனது வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தையடைந்து, அங்கேயே வாசஞ் செய்து, பிறகு சகலகுண சம்பன்னனாய் அழகிய மேனியையுடையவனாய், மஹா பலசாலியாய், உலகாளும் அரசனாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து, யாவரும் போற்றிப் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தையடைவான். திலதானமும், கோதானமும். பூமிதானமும். சுவர்ணதானமும், தானிய தானமும் செய்தால், மகா பாபங்கள் அனைத்தும் உடனே விலகி விடும்.
திலதானமும் கோதானமும் சிறப்பான தானங்களாகும். அவ்விரண்டு தானங்களும் மிகக்கொடிய பாவங்களையும் நசிக்கச் செய்வன. ஆகையால் இந்தத் தானங்களைச் சாதாரண, சாமானிய பிராமணர்களுக்குக் கொடுக்கலாகாது. உத்தம பிராமணருக்கே இவ்விரண்டு தானங்களையும் வழங்க வேண்டும். மங்கையருக்கும் தனக்கு வேண்டியவருக்கும் அம்மூன்றையும் உத்தேசமாகக் கொடுக்கலாமே தவிரத் தானமாகக் கொடுக்கலாகாது. தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம், ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதேயாகும். கிரகண புண்ணிய காலமும் தானம் செய்வதற்குச் சிறந்ததுதான். ‘ஓ வைனதேயா! எந்த மனிதனும் தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழுங்காலத்திலேயே தனக்கான தான தருமங்களைச் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு தானஞ் செய்ய விரும்புவோனுக்குப் புத்திரன் இருந்தால் அவனிடம் தான் தனக்காகத் தானம் செய்ய விரும்புவதைச் சொல்லி,அவனுடைய ஒப்புதலைப் பெற்ற பிறகே தானத்தைச் செய்தல் வேண்டும். ஒருவன் மரிக்கும் காலத்தில் திலத்தையும், இரும்பையும் லவணத்தையும், பருத்தியையும், தானியத்தையும், பொன்னையும், பூமியையும், கோவையும் தானம் செய்தால் மிகவும் விசேஷமாகும். எள்ளையும், இரும்பையும் தானம் செய்தால், யமதர்மன் மகிழ்ச்சியடைவான். லவணத்தானம் செய்தால் இறப்பவனுக்கு யமனிடத்தில் பயம் உண்டாகாது. பருத்தித் தானத்தைச் செய்தால் யமதூதர்களிடத்தில் பயம் உண்டாகாது. பருத்தி தானத்திற்கு முன்புச் சொன்னதை தவிர, இந்தப் பயனும் உண்டு.
தானியங்களைத் தானம் செய்தால், கூற்றுவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து, ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவார்கள். சுவர்ண தானத்திற்கும், கோதானத்திற்கும் பாபங்களையெல்லாம் நசிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு என்று முன்னமேயே உனக்குச் சொல்லியிருக்கிறேன். மரணமடையும் நிலையை அடைந்தவன். நம்மையே தியானித்து. நமது திருநாமங்களையே உச்சரிப்பானாகில் அவன் நிரதிசய இன்ப வீடாகிய நமது வைகுண்டலோகத்தை அடைவான். தந்தை இறந்த பிறகு அவனுடைய புத்திரன், கயா சிரார்த்தம் செய்வதைவிட தந்தை இறக்கும் சமயத்தில் அவன் தன் தந்தையின் அருகிலேயே நெருங்கியிருந்து தான தருமங்களைச் செய்வதே உத்தமமாகும். கூடாரமும், முசலமும், சூரிகையும், இரும்புத் தண்டமும் காலனுக்கு ஆயுதங்களாகும். பொதுவாகக் கூறவேண்டுமானால் அவனது ஆயுதங்கள் அனைத்துமே இரும்பால் ஆனவைகள். அதனால்தான் ஒருவன் மரிக்கும் காலத்தில் இரும்பை தானம் செய்தால் யமன் மகிழ்வான் என்று சொன்னேன். எவன் இறக்கும் போது எவனுடைய கிரகத்தில் இரும்பு தானம் செய்யப்படுகிறதோ. அந்த கிரகத்தில் யமதூதர்கள் அடி வைக்கவும் அஞ்சுவார்கள். இறப்பவன் யாராயினும் இரும்புதானம் செய்தல் வேண்டும். அந்தத் தானத்தைச் செய்தால் கண்டாமிருகன், ஔதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தி அடைவார்கள்.
“வைனதேயா! ஜீவனுடைய அங்கங்களாகிய கால் முதல் தலை வரையிலுமுள்ள உறுப்புகளில் பிரும்மருத்திர இந்திராதி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் இருக்கிறார்கள். தாயும், தந்தையும், குருவும், சுற்றமும் ஜீவர்களுக்கு ஸ்ரீவிஷ்ணுவேயன்றி மற்றொருவருமில்லை. “சர்வம் விஷ்ணு மயம் ஜகதி” என்ற அருள் வாக்கை நீயும் உணர்ந்திருக்கிறாய் அல்லவா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். சுவர்ணம், தானியம், தேன், நெய். பசு, யாகம், அந்தணர், அஜசங்கர இந்திராதி தேவர்கள், யாவுமே விஷ்ணு மயமேயாகும். ஒன்றைக் கொடுப்பவனும் வாங்குபவனும் பிறகு யாவரும் யாமேயன்றி வேறொன்றும் இல்லை. ஜீவர்கள் பூர்வத்தில் செய்த கர்மத்தை அனுசரித்துப் பாப புண்ணியங்களில் அவர்களது புத்தியை நாமே நாடச் செய்கிறோம். புண்ணியஞ் செய்தவன் சுவர்க்கம் அடைவான் பாபம் செய்தவன் நரகத்தை அடைவான்.”
கருட புராணம் – 18 தானத்தில் சிறந்த தானம் எது..? Asha Aanmigam