மகாபாரதம் – 62 உமாமகேசுவர சம்வாத சருக்கம்… சூட்சுமமான தர்மம் எது?

0
37

உமாமகேசுவர சம்வாத சருக்கம்

(உமையம்மைக்கும் ஈசுவரனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை பற்றிக் கூறும் சருக்கமாகும். இச்சருக்கத்தினால் உலக முதல்வன் சிவபிரான் என்பதும், இல்லறத்தின் மாண்பும், கொல்லாமையின் உயர்வும், இல்லறத்தான் அறம் செய்யும் ஆறுகளும், செல்வர் – வறியவர் நிலைகளும், தண்டனை செய்தவன் இயல்பும், சிவ வழிபாடும் அறியப்படுகின்றன).

தர்மபுத்திரர் அடுத்து பிதாமகர் பீஷ்மரை நோக்கி, “பிதாமகரே! பிறவிப்பிணி அகலவும், இரு வினையிருள் ஒழியவும் ஐம்புலன்களை வெல்லவும் ஆன மறையொழுக்கத்தை கூறுவதோடு மோட்சத்தைக் கொடுக்கும் தகுதி பெற்ற கதையொன்றும் சொல்வீராக என்று கேட்டார்.

“முற்காலத்தில் கண்ணபிரானால் நீ கேட்ட உண்மைகளை நாரதர் அறிந்தார். பீஷ்மனாகிய நான் அக்கண்ணபிரானால் உணர்ந்தபடி கூறுகின்றேன் கேள்” எனப் பிதாமகர் பீஷ்மர் கூறலானார்.

கயிலாய மலையில் ஓர் அழகிய பூங்காவில் வில்வ மரத்தின் நிழலில் சிவபெருமான் உமையம்மையுடன் வீற் றிருந்தார். அங்கு, சித்தர்கள், இயக்கர்கள் கந்தர்வர்கள், தேவர்கள், முனிவர்கள், கின்னரர், கிரும்புருடர், வித்தியாதார், பூத கணங்கள் முதலானோர் போற்ற வெள்ளி மலைக்கேற்பவுள்ள வெண்மையான ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது சிவபெருமானைப் பார்த்து, சக்தியாகிய உமாதேவி, “உலகத்திலுள்ள உயிர்களை உண்டாக்கியது யார்? காப்பவர் யார்? இறுதியில் அழிப்பவர் யார்? உலகத்தில் முச்சுடராய் விளங்கும் அவர்கள் யார்? கூறுவீராக” என்று கேட்டாள்.

அதற்கு சிவபெருமான், “அளவற்ற உயிர்க் குலத்தின் முத்தொழிலையும் புரி பவன் நானே! என் உருவினுள் அழிக்கும் தொழிலையுடைய உருத்திரனும், காக்கும் தொழிலையுடைய விஷ்ணுவும், படைக் கும் தொழிலையுடையவனும், விஷ்ணு வின் உந்திக்கமலத்தில் தோன்றியவனும் ஆகிய பிரம்மனும் அடக்கம். பிரம்மனால் உயிர்க்குலம் படைக்கப்பட்டுப் பல்வகை யாய் விரிந்தன; பிரமன் படைத்த உயிர் களைக் காப்பவன் விஷ்ணுவாவான். அந்த ஜீவராசிகளை அழிப்பவன் உருத்திரன் ஆவான். சந்திரனும், சூரியனும், அக்னியும் என்னுடைய முக்கண்களாகும்” என்று கூறி னார். அதற்கு உமையம்மை, “ரிஷப வாகன ரூடரே! அப்படியென்றால் உங்களு டைய கண்களை மூடிப் பார்க்கலாமே! அப்பொழுது உலகம் ஒளியில்லாது போய் விடுமா? அதனையும் பார்த்து விடுவோம்” என்று சிவபெருமானின் (முக்கண்ணனின்) இருகண்களை உமையம்மை தன் இரு கைகளால் மூடினாள்.

உடனே மூன்றுலகங்களையும் இருள் சூழ்ந்தது. தேவர்களும், முனிவர்களும் மாந்தர்களும் நீண்ட காலம் இருளில் தவித்தார்கள். விண்ணுலகமும் மண்ணுலக மும் செயலற்று போயின.

இந்த இன்னல்களைக் களைய முக் கண்ணன், மூன்றாவது கண்ணாகிய நெற்றிக்கண்ணைத் திறக்க, அதன் கோடிக் கணக்கான சூரிய ஒளி பிரகாசமானது எங்கணும் வெளிப்பட்டுப், பாய்ந்து படர்ந்திருந்த இருளைப் போக்கியது. அதனால் உயிர்க்குலங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று தழைத்தன.

அதன்பின் உமையம்மை பெருமானின் இரு கண்களை மூடிய தன் இரு கைகளை விலக்கிக் கொண்டு, “ஐயனே! தவறு செய்து விட்டேன். பொறுத்துக் கொள் வீராக” என்று வேண்டினாள். பின்னர் அப்பெருமாட்டி, உயிர்க்குலம் தழைக்கும் படியாகச் சில வார்த்தைகளைக் கூறலா னாள்.

இல்லறத்தில் இருக்க வேண்டிய பண்புகள்

”மனையாளொடு வாழும் இல்லறத்தில் இயல்பாக இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்றைக் கூறுவீராக” என்று கேட்க அதற்குச் சிவபெருமான், “கல்வி யைக் கரையிலாக் காஞ்சி மாநகரில் இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களைச் செய்து’ அறப்பெருஞ் செல்வி, எனப் பெயர் பெற்றவளே! பார்வதியே! தீய வழியில் அல்லாது நல்வழியில் பொருளைத் திரட்டி, காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கும் பிரம்மச்சாரி, துறவறத்தான் முதலானவர்களுக்கும், தூய விருந்தினர்க்கும், அன்னத்தைப் புசிக்கும் படி கொடுத்த சிறந்த தர்மவானாகிய இல்லறத்தானை, பெற்றெடுத்த தாய் தந்தையரை வணங்கிப் பாதுகாக்கின்ற நல்ல தன்மையை காட்டிலும் வேறு சிறந்த பேறு உண்டோ?

(இல்லறத்தார்) தம் பெற்றோர் இறந்த பின்னர் பிதுரர்களுக்கு செய்ய வேண்டிய அரிய கடமைகளைச் செய்து வருகின்ற விருந்தினரிடத்து இன்சொல் கலந்து முகமலர்ந்து உபசரித்தல் வேண்டும். இதுவே இல்லறத்தார் செய்ய வேண்டிய சிறந்த தர்மம் ஆகும்.

“மனைவியராகிய பெண்டிரோ மணந்த கணவன் இறந்த பின்பு, அந்த கணவன் சென்ற கதியிலேயே தானும் சென்று கூடுவதற்கான விரதங்களைச் செய்து கொண்டு தங்கள் உள்ளத்தை இறைவனைத் தியானிக்கும் தவத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

(கைம்பெண்டிர் கடைப்பிடிக்கும் விர தங்கள் (1) தரையின் கண் பாயின்றிப் படுத்தல் (2) நெய் போன்றவற்றைத் தொடாத எளியவுணவு (3) இடைவிடாது தியானத்தில் ஈடுபடல் (4) அழகிய சேலைகளைத் தவிர்த்தல் (5) தலை முண்டித்தலும் உண்டு)” என்று கூறினார்.

சூட்சுமமான தர்மம் எது?

அதன் பின் பார்வதி, “அனைவரும் அறிந்து கொள்ளும்படியான சூட்சுமமான தர்மம் ஒன்றினை கூறுக” என்றாள்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து “அறங்களுக்கெல்லாம் சிறந்த அறம் கொல்லாமையே” என்றார். அதற்கு உமையம்மை, “ஓர் உயிரையும் கொல்லாத மார்க்கத்தில் நிலைத்து நிற்றல் முடியாததாகும். அத்தகைய கொல்லா மையைக் கடைப்பிடித்து, செய்கின்ற விதம் எப்படி? சொல்வீராக” என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான், “ஐம்புலன் களையும் அடக்கி, காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற அறுவகைப் பகைகளைச் செற்று, சஞ்சாரம் புரியாமல் ஒரே இடத்தில் இருந்து தவம் புரியும் மகான்களிடத்தில் இந்தக் கொல்லா விரதத்தைக் காணலாம்” என்றார்.

ஆனால் இந்த கொல்லா விரதநெறி மற்றவர்களால் பின்பற்ற முடியாது. உதாரணமாக மன்னனானவன் போரினா லும், தீயவர்க்குத் தண்டனை அளித்தலினா லும், வேட்டையினாலும், கலப்பைக் காரின் முனையினாலும், தன்னை மறந்த நிலையினாலும், பிதுரர்களுக்குச் செய்யும் கருமாக்களினாலும், வேத நெறிச் சடங்கு களினாலும், கொல்லும் உயிர்களுக்காக கொலை பாவம் கிட்டாது. இவை அறத்தின் பாற் பட்டவையே. ஏற்றி வைத்த விளக்கினில் தாமாக வந்து விழுகின்ற விட்டில் பூச்சிகளுக்காக அந்த விளக்கினை ஏற்றி வைத்தவர்களுக்குப் போலத்தான் கூறியதும்” என்றார். பாவம் மேலே இல்லாதது

பிறர் (கசாப்புக்கடைக்காரன்) கொன்ற பிராணியை நாவின் சுவைக் காரணமாக வாங்கியுண்பார். அந்தப் பாவத்திற்காக பூமியில் மறுபடியும் பிறந்து, சரீரத்துக்கு ஏற்படக்கூடிய எல்லா வகைத் துன்பங் களையும் அனுபவித்து, எல்லாவகை நாகப்படுகுழியிலும் வீழ்ந்து அல்லலுறு வர். இனி தொடக்கத்து மாமிசம் உண்டிருந்து, பின்னர் பாவத்திற்கு அஞ்சி உண்ணாது கைவிட்டவர் தேவலோகத்தை அடைவர். எக்காலத்துமே ஊன் உண்ணா தவர் நிரந்தரமாகச் சுவர்க்கத்தை அடைந்து இன்புறுவர்.

தன் உயிர் போல் பிற உயிர்களையும் காக்க வேண்டுமென்று நினைத்து ஓர் உயிரையும் கொல்லாததோடு பிறர் கொன்ற மாமிசத்தை உண்ணாதவரை, எல்லா ஜீவ ராசிகளும் தமது பெரிய கைகளைக் கூப்பிக் கொண்டு மாதா வயிற்றிலிருந்து தொழுது கொண்டு ஜனிக்குமாகில் அவர் பெருமையை அறிய வல்லார் யாரே! (ஒருவருமிலர்) (“கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும்” என்ற திருக்குறள் இங்கு பொருத்தமாக இருப்பதை எண்ணிப் பார்த்து மகிழ்க.)

”அரிசி முதலாய உணவுப் பொருள் களையும், பழங்களையும் பறித்து தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்தால் தீமை நேராது; பாவம் சேராது. ஆனால் தெய்வத்துக்கு என்று சொல்லிக் கொண்டு இனிய உயிர்க்கொலை செய்தல்தான் பெரும் பாவமாகும். அதனை அத்தெய்வத் துக்குப் படைத்தல் அதனைவிட பாவ மாகும்” என்று கொல்லாமையின் இன்றி யமையாமை பற்றியும், அதன் சிறப்பினைப் பற்றியும் கூறலானார்.

“இல்லறத்தார்க்கு செல்வம் இருக்கு மானால் எவ்வகைத் தர்மங்களில் உதவ வேண்டும் என்பதை கூறுவீராக” என்று உமையம்மை கேட்டாள்.

அதற்குச் சிவபெருமான். “அறவழியில் திரட்டிய செல்வம் இருக்குமானால் அதனை இல்லறத்தார். தன் மனைவி, சுற்றம், விருந்தினர், துறந்தார், வழிபடுந் தெய்வம், பிதுரர் போன்றவர்களுக்குக் கொடுத்து தாமும் நுகர்ந்து, வருந்தி வந்த வர்களுக்கு உதவி செய்து யாரிடத்திலும் இன்சொல் பேசி இருத்தலே சிறந்த அறநெறியாகும். இத்தகைய தர்ம நெறி நால்வகை வருணத்தார்க்கும் உரியது ஆகும்.

(இவ்விடத்து, ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்ற திருக்குறளையும், முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்” என்ற திருக்குறளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் ) வறுமைக்குக் காரணம் என்ன?மகாபாரதம் – 61

உமாதேவி மீண்டும் சிவபெருமானைப் பார்த்து “உலகில் சிலர் செல்வ வளம் பெற்றும், சிலர் செல்வ வளம் இல்லாது வறுமையில் தவழ்ந்தும் விளங்கக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்குச் சிவபெருமான், “பல சாத்திரங் களையும் ஆராய்ந்தறிந்த ஞானிகளுக்கு முற் பிறப்பில் செல்வத்தைக் கொடுத்தவர்கள் இப்பிறப்பில் அளவற்ற செல்வத்தை உடையவர்கள் ஆவார்கள். முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் கொடுக்காத உலோபி யரே இப்பிறப்பில் தரித்திரத்தில் உழன்று, வருந்தி பிச்சை எடுப்பவர் ஆவார். ஆகவே மேதினியில் நல்வினையைச் செய்தோர் சுகம் பெறுவர். தீவினையைச் செய்தோர் வறியராகித் துயரம் அடைவர்” என்று கூறினார்.

முற்பிறப்பின் கர்மமா?

”சிவபெருமானே! அரசன் தண்டிக்கும் படியான விளைவு ஒரு குற்றவாளிக்கு அவன் செய்த முற்பிறப்பின் கர்மத்தாலா அல்லது அவன் எடுத்துள்ள இந்த பிறவியின் கர்மத்தாலா கூறுவீர்களாக” என்று உமையம்மை கேட்டாள்.

அதற்கு அப்பெருமான், “உமாதேவி! அரசன் தண்டனை முற்பிறவியின் செயலாலே விளைவது. இயம தண்டனை இப்பிறப்பின் செயலாலே விளைவது. இருவர் தண்டனையாலும் சிறிது பாவமே கழியும். எஞ்சிய பாவங்கள் பல பிறவிகள் எடுத்து அனுபவித்தால் தான் கழியும் அல்லது நீங்கும்” என்று கூறினார்.

உமையம்மை கேட்ட கேள்விகளுக் கெல்லாம் சிவபெருமான் பதில் கூறினார். அச்சிவபெருமான் உமையம்மையை நோக்கி, “பார்வதியே! இவ்விடத்து உன் அருகில் நின்று உன்னைப் போற்றுகின்ற மாதரார் அறிந்து கொள்ளும்படி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களைப் பற்றிக் கூறுவாயாக” என்று கேட்டார்.

அங்ஙனமே தன்னைப் போற்றுகின்ற மாதர்களுக்கு “பெண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களை” விவரித்து உமை யம்மை கூறினார். கேட்ட மாதரார்கள் அனைவரும் உமையம்மையை மனதாரப் போற்றினர். வணங்கினர்.

”பின்னர் சிவபெருமான் உமையம்மை யோடு தன் இருப்பிடம் சேர்ந்தான்” என்று யாழிசை வல்லான் நாரதர் சாற்றிட, அதனைக் கண்ணபிரான் கேட்டுப் பீஷ் மருக்குச் சொல்ல, பீஷ்மர் தர்மபுத்திரரிடத் தில் கண்ணபிரான் தனக்கு கூறியவையாக எடுத்துக் கூறினார்.

அதற்குப் பீஷ்மர். “தர்மபுத்திரரோ சிவ பெருமான் பார்வதிக்குச் சொள்ள இக்கதையை கேட்டறிந்தவர்கள் கொடிய தீவினைகள் நீங்கி, மிகுதியான செல்வத்தை எளிதாகப் பெற்று, மேன்மையாகப் பூமியில் வாழ்ந்து இறுதியில் பிறப்பிறப் பில்லாத மோட்சத்தை அடைவார்கள்” என்று கூறிய அவர், மேலும்,

“தர்ம நந்தனா! சிவபெருமானை நாள்தோறும் சிந்தனை செய்தால் எந்தத் தீவினையும் சுலபமாக நீங்கி விடும்” என்ற உண்மையை எடுத்து கூறினார். கேட்டவர் அனைவரும் பீஷ்மரை மனமாரப் போற்று வாராயினர்.

அதன்பின் திருமாலாகிய கண்ணபிரான், முனிவர்கள், தருமபுத்திரர் முதலாய மன்னர்கள், பீஷ்மர் மற்றுமுள்ளோர் உள்ளம் நெகிழ, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, மனமாகிய தாமரை மலரை அப்பெருமான் திருவடிகளில் சாத்தி, பிரம்ம தேவன் விதிக்கும் விதியையும் மாற்றும் வல்லமை படைத்த மேலான ஆதியாம் பரம்பொருளை, பிறைச்சந்திரனை அணிந்த பெம்மானை, கொன்றை மாலை அணிந்தவனை. சிவபெருமானைத் தோத்தரித்து தத்தம் வசங்களை இழந்து, சுவை குன்றாத பேரின்பக் கடலில் மூழ்கித் திளைத் திட்டார்கள்.

வீடுமன் முத்தி அடைந்த சருக்கம்

(இச்சருக்கம் பீஷ்மர் மோட்சம் அடைத் ததைக் கூறும் பகுதியாம். மோட்சம் என்பதற்கு அந்தமில் இன்பத்து அழி வில்லாத வீடு எனப் பொருள் கொள்வர்).

பீஷ்மர் தர்மபுத்திரரிடம், ”தர்மபுத்திர நல்வினையால் செல்வம் ஒருவனுக்குச் சேரும். அந்த நல்வினை அவனுடைய நற்செய்கையால் வரும். அந்த நற்செய்கை அவனுக்கு திருமாலின் திருவருளால் ஏற்படுவதாகும். ஆதலால் பூமியில் பிறந்த அனைவரும் இலக்குமியின் கணவனும், யது குலத்தில் உதித்தவனும், பிரம்மனைப் படைத்தவனும், கஜேந்திரன் என்னும் யானையை முதலையின் வாயினின்று காத்தவனும், பாற்கடல் வண்ணனும், வைகுந்த வாசனும், ஆலிலை மேல் அன்று பாலகனாய் அறிதுயில் கொண்டவனும் ஆகிய பரந்தாமனை, திருமாலை, ஸ்ரீமந் நாராயணனைப் பக்தி சிரத்தையோடு இரவு பகல் பாராது வணங்க வேண்டும். தோத்திரம் செய்து போற்ற வேண்டும். மேலான மோட்சம். அவன் அருளின்றி எய்த முடியாது” என்று கூறினார்.

“மோட்சம் கொடுப்பவன் திருமாலே யாதலின் அந்த திருமாலை நாள்தோறும் பணிந்து ஏத்தி உன்னுடைய வினைகளை அகற்றிக் கொள்வாய்” என்று அன்புடன் உரைத்தருளிய பீஷ்மரைத் தர்மபுத்திரர் மகிழ்ச்சியுடன் பார்த்து, “பிதாமகரே! வழிபடுதற்குரிய தகுதி பெற்றவர் யார்? சொல்வீர்” என்று கேட்டார்.

மோட்சத்தை அடையும் வழி

அதற்குப் பீஷ்மர், “தர்மபுத்திரரே! பல்வகை நூல்களைப் பாங்குடன் கற்றுத் தேர்ச்சி பெற்று, சிறந்த ஞானமும் பெற்ற மேதையரே வழிபடும் தெய்வத்திற்கும் மேலாகப் போற்றத்தக்கவர் ஆவர். அத்தகைய மேதையர்க்கு பூசை செய்து அவர் விரும்புகின்ற பொருள்களைக் கொடுத்து இனிய சொற்களைப் பேசி உபசரித்தோர் எல்லாவித செல்வங்களை யும் பெற்று அனுபவித்து இறுதியில் மோட்சத்தை அடைவர்” என்று கூறினார்.

அதன்பின்னர் தர்மபுத்திரர், ‘ஞானவானே! இந்தப் பூமியில் அத்தகைய மேதையரேயன்றி இன்னும் மரியாதை காட்டி வழிபாடு செய்தல், வரவேற்றல், உணவு படைத்தல் முதலிய சிறப்புகளுக்கு உரியவர் யாவர்?” எனக் கேட்க.

உடனே பீஷ்மர், “மேதையுரைவிட மிகச் சிறப்புக்குரியர் புனிதமான வேதங் களை யோதும் அந்தணப் பெருமக்களே யாவர்” என்று கூறி அவர்களைப் பற்றி விவரமாகக் கூறினார். ஆக ஞானியரைவிட வேதியரே ஆற்றலுடையவர் என்றார் பீஷ்மர் என்க.

அந்த வார்த்தையைக் கேட்ட தர்ம புத்திரர் உள்ளம் மகிழ்ந்து, “தூயவரே! என் மனத்தில் எழுந்த சந்தேகங்கள் யாவும் தங்களால் நீங்கப் பெற்றன. மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறி அப்பிதாமகரின் திருவடிகளில் விழுந்து வங்கினார்.

அப்பொழுது வேதவியாசர் அங்கு வந்து, “பீஷ்மரே! தர்மபுத்திரருக்கு உறுதி யளிக்கும் உண்மையான உரைகளை எடுத்துச் சொல்லி அவரைப் புனிதராக் கினீர். இனி, தர்மபுத்திரர் முதலாக உள்ள அனைவரும் தத்தம் இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதி கொடுப்பீராக” என்றார்.

அதன்பின் பீஷ்மர் தர்மரைப் பார்த்து, “தர்மபுத்திரா பிறர் மனைவியை விரும்பாதே! தாய் தந்தையராகிய குந்தி, திருதராட்டிரர், காந்தாரி ரி ஆகியவர்களை விருப்பத்தோடு பாதுகாப்பாயாக. எம்பெருமான் கண்ணபிரான் உரைகளை சிரமேற்கொண்டு அவற்றின்படி இனியும் நடப்பாயாக; நல்லாட்சி செய்து இனிது வாழ்வாயாக. உத்தராயணம் வந்தபின் என்னிடம் வருவாய் ” என்று கூறி அனைவர்க்கும் விடை கொடுத்தார்.

(உத்தராயணம் என்பது சூரியன் வடக்கு முகமாக செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலமாகும். அவ்வாறே சூரியன் தெற்கு முகமாக செல்லும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சிணாயனம் எனப்படும்).

அஸ்தினாபுரி அடைதல்

அதன்பின் தர்மபுத்திரர் மற்றவரோடு பீஷ்மரை நமஸ்கரித்து, கண்ணபிரா னோடும் மற்றவரோடும் அஸ்தினாபுரி அடைந்தார். தவம் செய்யும் முனிவர்கள் தங்கள் தங்கள் சென்றார்கள். இருக்கைகளுக்குச்

தருமபுத்திரர் அஸ்தினாபுரத்திற்கு வந்து பெற்றோர்களின் (குந்தி, திருதராட்டிரர், காந்தாரி) பாதங்களை வணங்கி, சிம்மா சனத்தில் வீற்றிருந்து, சில நாட்கள் பூமியை யாண்டு உலகினைக் காப்பாற்றி வந்தார். அதன் பின் சூரியன் வடக்கு முகமாகச் செல்லத் தொடங்கியபின், உத்தராயணத் தில் பீஷ்மரிடத்துச் செல்லும் பொருட்டு அனைவரும் சூழ்ந்து வரத் தேர் மேல் ஏறித் தருமபுத்திரர் சென்றார்.

தான் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் வந்து சேர்ந்த முனிவர்களோடும். மற்றவர்களோடும் தர்மபுத்திரர் பீஷ்மரை வணங்கி நின்றார். அப்பொழுது தர்மபுத் திரர், “பரிசுத்த ஞானியே! தெளமிய முனி வர், கிருபாசாரியார், முனிவர்கள், பெரிய தந்தை திருதராட்டிரர், என் தம்பிமார்கள், சித்தப்பா விதுரர், யுயுத்சு, பெண்கள், கண்ணபிரான் முதலானவர்கள் தங்களைக் காண வந்துள்ளார்கள். அவர்களை அருளோடு நோக்குவாய்” என்றார். (யுயுத்சன்-திருதராட்டிரருக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவர். திருதராட்டிர ருக்குப் பின் இந்திரப் பிரத்தத்தை ஆண்டவர்).

தர்மபுத்திரர் இவ்வாறு கூறியவுடன் பீஷ்மர் கண் விழித்துப் பார்த்து அங்கு நின்ற முனிவர் முதலானோர்க்கு இன்சொல் கூறி, சூழ நின்ற தம் குலத்தினோர்க்கு நல்லறிவு சொல்லி, துளபமாலை அணிந்த பரந்தாமனைப் பலமுறை போற்றி இது காறும் மூச்சு அடக்கினதை விடுத்து, தன் உடலில் பொருந்தியிருந்த உயிரை வெளியேறச் செய்தார். அப்போது அந்த உயிர் பேரொளியாய் எழுந்து விண்ணில் சென்று மறைந்தது.

மாயன் அருளால், பீஷ்மர் மீண்டும் என்றும் அழியாத முன்னர் இழந்திருந்த எட்டாம் வசுபத பதவியைப் பெற்று யாவரும், ‘பிரபாசனன்’ என்று கூறி போற்றும்படி விளங்கினார்.(குறிப்பு: பீஷ்மர் ஐம்பத்தெட்டுத் தினங்கள் அம்பு படுக்கையில் கிடந்து பின்னர் சுவர்க்கம் புகுந்த நாள் மாசி மாதம்- சுக்கில பக்ஷம் -அஷ்டமிதிதி என்று கூறுவர்).

அப்பொழுது தேவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள். வானத்தில் துந்துபி. பேரிகைகள் முழங்கின; எல்லோரும் நேயமொடு பாண்டவர்களும், விதுரரும் யுயுத்சும் பல சந்தனக்கட்டைகளையும், பலவித வாசனைப் பொருள்களையும் கொண்டு வந்து கொடுத்தனர். சிதையை முறைப்படி அடுக்கி, அமைத்தனர். பின்னர் விமானத்தில் எழுந்தருளப் பண்ணி, அக்னிக்கு நைவேத்யம் செய்து, பின் செய்ய வேண்டிய முறைகளைப் பின்பற்றி ஈமச் சடங்குகளைச் செய்தார்கள். பலவகைத் தானங்களை செய்தார்கள். அதன்பின் கங்கை நதியை அனைவரும் அடைந்து ஸ்நானம் செய்து, செய்ய வேண்டிய ஈமக் கிரியைகளைச் செய்யக் கங்கை நதிக் கரையில் தர்மபுத்திரரும் கண்ணபிரானும் தங்கியபோது அவ்விருவர் முன்னே கங்கா தேவி பெண்ணாகி முன்வந்து நின்றாள்.

கங்கை என்பதை அறிந்த அனைவரும் அவளைப் பணிந்து வணங்கினர். அப்பொழுது கங்காதேவி தொழுது, அவர்களை நோக்கி, “தான் சங்கற்பித்த நாளிலன்றி மரணமில்லாதபடி தன் தந்தையாகிய சந்தனுவிடம் வரத்தைப் பெற்ற பீஷ்மர், பேடியாகிய சிகண்டி வில்லிலிருந்து விடுக்கப்பட்ட அம்பினால் உயிர் நீங்கும்படியான ஒரு தாழ்வு நிலை எப்படி உண்டாயிற்று? என்று மனமுருகி கண்ணபிரானிடம் முறையிட்டாள். (பீஷ்மர் தந்தை சந்தனு, பீஷ்மருக்கு ‘ஸ்வச்சந்த மரணம்’ என்னும் வரம் ஈந்தான் என்பர்).

அப்பொழுது கண்ணபிரான், “கங்கா தேவி! கடம்ப மாலையைத் தரித்த முரு கனைப் போன்ற சிகண்டி, முற்பிறப்பில் அம்பை என்ற பெண்ணாயிருந்து அப்போதே பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என்று கோரியபடி இப்பிறப்பில் சிகண்டி என்ற பெயருடையவளாய்த் தோன்றி, சிறப்புப் பொருந்திய பத்தாம் நாளில் உன் மகன் பீஷ்மரைக் கொன்றான். அதற்கு உண்மை காரணம் வசிட்ட மாமுனிவர் இட்ட சாபத்தால் பூமியில் மானிடனாகப் பிறந்து, இறந்தானேயல்லாமல் போரில் மும்மூர்த்திகள் கொல்ல முயன்றாலும் அவன் மரணத்தை அடைய மாட்டான். பெண்ணே? கவலைப்பட வேண்டாம். இப்பொழுது அட்டவசுக்களில் உன் மகன் ஒருத்தனாகச் சேர்ந்து விட்டான். அதாவது உயர்ந்த வசுபதம் பெற்றுள்ளான்” என்று கூறியவுடன் கங்கா தேவி மன ஆறுதல் அடைந்து கங்கை நதியில் இறங்கிப் போனாள். தர்மபுத்திரரோ தன் பாட்டனார் இறந்தமைக்காக வருந்தி கண்ணபிரான் உதவியுடன் ஈமக்கடன் செய்து முடித்தார்.

மகாபாரதம் – 62 உமாமகேசுவர சம்வாத சருக்கம்… சூட்சுமமான தர்மம் எது? Asha Aanmigam

Facebook Comments Box