“பா.ஜ.க’வினரின் விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல மாட்டோம். எங்கள் செயல்பாடுகள் பதில் அளிக்கும்” என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது, “18 முதல் 44 வயதுகுட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகளைத் தமிழக அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசுதான் வழங்குகிறது.
இதன்படி, புதுக்கோட்டைக்கு 1.40 லட்சம், திருச்சிக்கு 52 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டன. புதுக்கோட்டையைவிடத் திருச்சி பெரிய மாவட்டம். எனவே கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுள்ளோம்” என்றார்.
மேலும் பா.ஜ.க’வினரை பற்றி குறிப்பிட்ட கே.என்.நேரு, “தேர்தலில் எங்களை எதிர்த்து பா.ஜ.க’வினர் போட்டியிட்டனர். அவர்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. பொதுமக்கள் எங்களைத்தான் தேர்வு செய்தனர். எனவே, அவர்கள் எங்களை வாழ்த்த மாட்டார்கள். எங்களை விமர்சனம்தான் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் மக்களுக்குப் பணியாற்றி நல்ல பெயர் எடுக்க வேண்டும். அவர்களுடைய விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல மாட்டோம். எங்கள் செயல்பாடுகள் பதில் அளிக்கும். மக்களுடன்தான் நாங்கள் இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டே இருக்க முடியாது” என கூறினார்.
Facebook Comments Box