ஆடி அமாவாசை! தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம் எது? என்னென்ன சமைத்து வைக்கலாம்…?
ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு உகந்த நேரம் எது என்பதை பார்ப்போம். இன்றைய ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் நீர்நிலைகளில் சென்று, தங்கள் முன்னோர் ஆதிகளுக்காக தர்ப்பணம் செலுத்துகிறார்கள். அமாவாசைகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது ஆடி அமாவாசை.
ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வருகிறதெனினும், தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் ஏற்படும் அமாவாசைகளுக்கே மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. உத்திராயண காலம் முடிந்து தட்சிணாயனத்தில் தொடங்கும் முதல் அமாவாசையாகும் ஆடி அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு.
பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள், அமாவாசை நாளில் பூமிக்கு நேரடியாக வருகிறார்கள் என்பது நம்பிக்கை. அவர்கள் வருகையின் போது, அவர்களின் பெயர் மற்றும் திதியை உச்சரித்து தர்ப்பணம் செய்வது, அவர்களுக்கு திருப்தியை அளித்து நம்மை ஆசீர்வதிக்க வழி வகுக்கும்.
முன்னோர்களின் ஆசிகள் பல தலைமுறைகளையும் நன்மையாக வழிநடத்தும் என்பதால், அமாவாசை தினங்களில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்வது ஒரு மரபாகக் கொண்டுவரப்படுகிறது.
இந்த ஆண்டில், ஆடி அமாவாசையை இன்று கொண்டாடுகிறோம். மக்கள் நீர்நிலைகளில் சென்று, தங்கள் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்து, பிண்டம், எள், நீர் ஆகியவற்றை கலந்து நீரில் விடுகின்றனர்.
இம்முறை அமாவாசை திதி இன்று காலை 3.06 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 1.48 மணி வரை நீடிக்கிறது. ஜூலை 24ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சூரியோதயத்திற்கு பிறகு காலை 7.30 மணி முதல் 12 மணி வரை தர்ப்பணத்திற்கு சிறந்த நேரமாகும்.
ராகு காலம் மற்றும் எமகண்ட நேரங்களை தவிர்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்று சாம்பார், காரக்குழம்பு, வடை, பாயசம், அப்பளம் போன்றவை குடும்ப மரபுப்படி சமைக்கலாம். இந்த படையலை மதியம் 12 மணி முதல் 1.20 மணிக்குள் பரிமாற வேண்டும்.
தர்ப்பணம், சூரியோதயத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டு வியாழக்கிழமை வரும் அமாவாசையில், சூரியோதயம் காலை 6 மணிக்குப் பிறகு ஏற்படுவதால், காலை 7.30 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்யும் நேரம் சிறந்தது.
நீர்நிலைக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே தர்ப்பண மந்திரங்களை உச்சரித்து, எள்ளும் தண்ணீரையும் அரைத்துப் பயன்படுத்தி, காக்கைகளுக்கு உணவு வைக்கலாம். வீட்டிலோ நீர்நிலையிலோ வழங்கப்படும் திதி, காசி அல்லது கயாவில் தர்ப்பணம் செய்ததற்கு நிகரான புண்ணிய பலனை தரும்.
இன்றைய நாளில் தர்ப்பணச் சடங்குகளை செய்யும் பிராமணருக்கு வாழைக்காய் மற்றும் அரிசி போன்றவற்றை தானமாக அளிக்க வேண்டும்.