(கன்னியைத் தானமாகத் திருமணத்தில் பெற்ற மணமகனின் மேம்பாட்டினைக் கூறும் சுருக்கம் என்று பொருள்படும். கன்னியை ஆடவனுக்கு மணம் புரிந்து கொடுக்கும் அறம் கன்னியாதானம் ஆகும். இது முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று.
இச்சுருக்கத்தில் தெரிவையர் இயல்பு அவர்களைப் புரக்கும் வகை, சகவாசத்தின் மேன்மை. பசுக்களின் மேன்மை, பல் வகைத் தானங்கள், அறநெறி வாரா பொருளை ஏற்றவர் எய்தும் பயன் முதலியனவும் கூறப்பட்டுள்ளன)
“ஒரு தந்தை தன் பெண்ணை எப்படிப் பட்ட எண்ணமுடையவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் நலம் பயக்கும்?” என்று தரும புத்திரர் கேட்க பிதாமகர் பீஷ்மர் அஷ்டாவக்ரன் கதை மூலம் பதில் கூறுகின்றார்.
”தருமபுத்திரரே சொல்கின்றேன் கேள். ஒரு முனிவருக்கு அஷ்டாவக்கிரன் என்னும் ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு பிரம்மச்சாரி. அந்த அஷ்டாவக்கிரன் வதான்யர் என்னும் ஒரு முனிவரிடம் சென்று “உன் பெண் சுப்ரையைத் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு இங்கு வந்துள்ளேன். அதனால் எனக்கு வேதமந்திரங்கள் முழங்கிட அக்னி அருந்ததி சாட்சியாக உங்கள் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பீராக” என்று கூறினான். அதற்குப் பெண்ணைப் பெற்ற தந்தையாகிய வதான்யர் “நம்பி! இமயமலை காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணியோடு உரையாடி நேர்மை தவறாமல் வருவாயானால் என் மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுப்பேன்” என்று கூற, அஷ்டாவக்கிரன் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
உபசரிப்பை ஏற்றுக்கொண்ட அஷ்டாவக்கிரன்
அஷ்டாவக்கிரன் சங்கநதி, பதும நிதிக்குத் தலைவனாகிய குபேரனுடைய அளகாபுரி சென்று அங்குள்ள அற்புதக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து ஓர் ஆண்டுக்காலம் அங்கு இருந்தான். பின்னர் பார்வதி தவம் செய்யும் தவச் சாலையை அடைந்தான். அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடினான்.அங்கிருந்து ஒரு காட்டகத்தை அடைந்து அங்கு ஒரு வீடு இருப்பதைப் பார்த்து உள்ளே போனான். அங்கு வசித்த அழகான நங்கையொருத்தி இவனைக் கண்டு உபசரித்தாள். உபசரிப்பை ஏற்றுக் கொண்ட அஷ்டவக்கிரன் அவள் பக்கம் திரும்பாமல் உறங்கி எழுந்தான். இதனைக் கண்ட அந் நங்கை “ஐயா, நான் பக்கத்தில் படுத்திருந்தும் நீங்கள் என்னை விரும்பாது திரும்பிக் கொண்டது ஏன்?” என்று கேட்டாள். அதற்கு அஷ்டாவக்கிரன் ”பெண்ணே! நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டவன். பிரம்மச்சரிய விரதம் பூண்டவர்கள் பிற பெண்களை விரும்பார். ஆகவே நான் உன்னை விரும்பவில்லை. நான் ஊருக்குச் சென்று அங்கு எனக்காகக் காத்திருக்கும் பெண்ணை மணந்து கொள்வேன். எனவே நீயே விரும்பி வந்தாலும் நான் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று பதிலுரைத்தான். பொழுது விடிந்தவுடன் அவன் தன் தகரம் போய்ச் சேர்ந்தான்.
அஷ்டாவக்கிரனின் உள்ள உறுதியை அறிந்த வதான்யர் தன் மகள் சுப்ரையை அந்தப் பிரம்மச்சாரிக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
ஆகையால் “தருமபுத்திரா! இத்தகைய கருத்தினையுடையவனுக்கு அயல் பெண்ணை விரும்பாதவனுக்கு இராம பிரான்போல ஏகதார விரதனாக இருப்ப வனுக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொடுத்தால் அவள் நலமுடன் வாழ்வாள்” என்று பிதாமகர் பீஷ்மர் கூறினார்.
பெண்கள் எல்லாம் தீவினையின் படிவங்களா?
- ‘தெரிவையர் எல்லாம் பாவவுருவம் (பெண்கள் எல்லாம் தீவினையின் படிவங்கள்) என்று உரைப்பர் உலகினர். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?” என்று தரும புத்திரர் கேட்டார்.
அதற்கு பிதாமகர் பீஷ்மர் ” ஒரு முறை நாரத மாமுனிவர் உலகை வலம் வந்த காலத்தில் அவர் எதிரே ‘பஞ்ச சூடை’ எனும் அழகான பெயரை உடைய பெண் ஒருத்தி வந்தாள். அவளை நோக்கி நாரதர், “பஞ்ச சூடை/ பெரியோர்கள் பெண் களைப் பற்றி நல்லபிப்பராயம் கொள்ள வில்லை என்றாலும் கற்றுணர்ந்தோர் பெண்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? மறைக்காமல் சொல்லுவாயாக என்று கேட்டார். அப்போது அந்தங்கை நாரத முனிவரிடம்,
“தூய்மையானவரே! “நீராழம் கண்டாலும் காணலாம். மங்கையரின் மன ஆழத் தைக் காண முடியாது” என்பர். அவர்கள் நகை, நல்லாடை, நற்சாந்து, நற்பூ, நல்லுணவு முதலியவற்றின் மேலேயே அன்பு வைப்பர். ஆடவர் யாராக இருந் தாலும் அவருடன் சேர விரும்புவர்.
தம்மை விரும்பும் ஆடவர் முன் தம் அழகு காட்டி மயக்கித் திரிவர். கரும்பு போல இனிக்கப் பேசும் அப்பெண்களிடத்து பஞ்சமா பாதகங்களும் குடியிருக்கும் என்று கூறி அந்த பஞ்ச சூடை போயினாள்.
“இதனை நீ உணர்ந்து கொள்க” என்று பீஷ்மர் தருமபுத்திரர் கேட்ட கேள்விக்குப் பதிலாகக் கூறினார்.
“அத்தகைய பெண்களை எவ்வகையில் காப்பது? கூறுவீர்களாக” என தருமபுத்திரர் கேட்டபோது பீஷ்மர் விபுலன் கதைமூலம் அவர்களைப் பற்றிக் கூறலானார்.
“முன்னொரு காலத்தில் தேவசர்மா என்னும் முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி பெயர் ‘ருசி’ என்பதாம். அவள் மேல் இந்திரன் மோகம் கொண்டு அவளைச் சேர விரும்பினான். இதனைத் தேவசர்மா அறிந்து இல்லாளைப் பாதுகாத்து வந்தார்.
ஒருநாள் தேவசர்மா ஒருத்தருக்கு யாகம் செய்து கொடுக்கும்பொருட்டு வெளியே போனார். மனைவியை விட்டுப் பிரிந்து செல்லும் அந்த முனிவர் தன் சீடன் விபுலனை அழைத்து தன் மனைவி ருசியைத் தான் திரும்பி வரும்வரை நன்கு பாதுகாத்திருக்குமாறு கூறிச் சென்றார்.
அவர் போனதைப் பார்த்து இந்திரன் தேவசர்மா மனைவியுடன் சேர்ந்து மகிழ அங்கு வந்து அவளுடன் பேசலானான். இதனை அறிந்த விபுலன் ருசியின் தேகத்துள் அவள் அறியாமல் பிரவேசித்து ‘ஆயிரங்கண்ணனே! என்னைச் சேரும் பொருட்டுத் தகாத வார்த்தைகளைப் பேசு கின்றாய். இப்போதே இவ்விடத்தைவிட்டு போவாயாக” என்று ருசியைப் போலவே பேசினான்.
பின்னர் விபுலன் பழைய தன் வடிவத்துடன் இந்திரன் எதிரே வந்து “இந்திரா நீ என் குரு பத்தினியைத் தழுவ வந்துள்ளாய் என்பது எனக்குத் தெரியும். எனவே நீ இங்கிருந்து போய்விடு. இல்லையேல் நான் உன்னை சபிப்பேன்” என்றான். உடனே இந்திரன், “விபுலா! உணவு பெற வேண்டி இங்கு வந்துள்ளேன். என்னைக் கோபித்துக் கொள்ளாதே.” என்று கூறி வணங்க விபுலன் அவனுக்கு நல்ல அறிவுரை கூறி குரு பத்தினியைக் காப் பாற்றினான்.
பின்னர் வந்த குருவை வணங்கி நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினான். தேவசர்மாவாகிய அக்குரு மகிழ்ந்து மெச்சி தன் சீடனுக்கு வேண்டிய வரம் கொடுத்து தன் மனைவியுடன் மகிழ்ந்து வாழ்ந்திருந் தார்.
அதனால் “தருமபுத்திரரே! பெண்களின் கற்பினைப் பாதுகாத்தல் எல்லார்க்கும் கடமையாக இருக்க வேண்டும். இதனை நீ தெரிந்து கொள்வாயாக” என்றார்.
இங்கு ‘சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை.” என்ற திருக்குறளை நினைவு கூர்க.
பசுக்களின் சிறப்பு
4) பசுக்களின் சிறப்பினைக் கூறுக என்று தருமபுத்திரர் கேட்க பிதாமகர் பீஷ்மர் சியவன முனிவர் கதையை எடுத்துக் காட்டலானார்.
குளிர்ந்த யமுனை கங்கை நதிகளினுள் பன்னிரெண்டு ஆண்டு காலம் வசித்துக் கொண்டு சியவன முனிவன் கடுந்தவம் செய்து வந்தான். ஒருநாள். வலைஞர்கள் மீன் பிடிக்க கங்கை ஆற்றில் வலையை வீசினார்கள். தண்ணீருக்குள் தவம் புரிந்த கொண்டிருந்த சியவன முனிவர் வலையில் அகப்பட்டுக் கொண்டு மீனுக்குப் பதிலாக வலையோடு வெளியே வந்தார். செம்பட வர்கள் “புனிதரே, தெரியாமல் தங்களை மீனென நினைத்துப் பிடித்து விட்டோம் பொறுத்துக் கொள்க; எங்களைக் காப்பாற்றுவீராக” என வேண்டி நின்றனர்.
அப்போது அந்த முனிவர் “வலைஞர் களே உங்கள் பால் எந்தவிதக் குற்றமும் இல்லை. உங்கள் குலத்தொழிலைச் செய்து என்னைப் பிடித்தீர்கள். எனவே மீன் களோடு மீன் போல என்னையும் ஒரு மீனாக எண்ணி விலைபேசி விற்று அக் காசினை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
மீனவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் அந்த விவகாரத்தை அந்த நாட்டை அப்போது ஆண்டுவந்த நகுஷ மகாராஜாவிடம் மீனவர்கள் எடுத்துச் சென்றனர். அரசன் இதனைக் கேட்டு அறிந்து சியவன முனிவரிடம், “முனிவரே! அறிவில்லாத மூடர்கள் தவறுதலாகத் தங்களை மீன் என எண்ணிப் பிடித்து விட்டார்கள்; பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றான். அதற்குச் சியவனமுனிவன், “அரசே! வலையில் அகப்பட்ட மீன்களை யெல்லாம் விற்கும்போது என்னையும் விற்க வேண்டுமல்லவா! ஆனால் என்னை மட்டும் விற்காது விட்டு விடுகிறார்கள். இது நியாயமா? தர்மந்தானா?”என்று கேட்டார்.
அதைக் கேட்ட நகுஷ மகாராஜன் சிறிது நேரம் யோசித்தான். பின்னர் “உங்க ளுக்காக, உங்களை பிடித்த வலைஞர் களுக்கு ஆயிரம் பொன் தருகிறேன்.” என்றான். அதனைக் கேட்ட முனிவர், “என் மதிப்பு இவ்வளவு தானா?” என்றார். பின் ”ஒரு லட்சம் பொன் தருகிறேன்” என்றான் மன்னன். அப்பொழுதும் முனிவன் திருப்தி அடையவில்லை. பின்னர் ஒரு கோடி பொன் கொடுப்பதாக நகுஷன் கூறினான். அதற்குச் சியவனன் “என்னுடைய மதிப்பு எவ்வளவு என்பதை மற்ற முனிவர்களைக் கலந்தாலோசித்து பின்னர் கொடுங்கள்” என்றார்.
மன்னன் நகுஷன் என்ன செய்வது என்று யோசித்திருக்கும் வேளையில் கோவிடம் (பசுவிடம்) பிறந்தவராகிய கவிஜாதன் (கவிஞன் எனவும் கூறுவர்) என்ற முனிவர் நகுஷனை அணுகி, “நகுஷ மன்னா! இந்த சியவனமுனிக்கு உலகம் ஏழினை கொடுத்தாலும் ஈடாகாது. தேவர்களுக்குச் சிறந்த ஹவிஸாக உதவுவது பசுக்களே. அதனால் அவர்கள் ஒளியோடு விளங்கு கின்றனர். யாகமும், ஹோமமும் எப்போ தும் பசுக்களைப் ளைப் பொறுத்தே அமை கின்றன. யாகத்தை நடத்துவதும் அவை தான். மனிதர்களுக்குச் சுகத்தை கொடுப் பவையும் அவையே. பசுக் கூட்டம் எந்த விடத்தில் அச்சமின்றி மூச்சு விடுகின்றதோ அந்தத் தேசத்தின் பாவத்தையே அந்த பசுக் கூட்டம் போக்கி விளங்கச் செய்கின்றது. பித்ரு லோகத்திற்கு அழிவில்லாத சுவர்க்க மாகிய அமிர்தத்தை பெருக்குபவை பசுக்களே. இம்மை, மறுமை, வீடு என்ற மூன்று நிலைகளை அறிந்த அந்தணர்களின் மனத்து இடைவிடாது செபிக்கும் மந்திரங் களும் பசுக்களே. ஆதலின் அந்தணர் குலமும் பசுக்கள் குலமும் ஒன்றே. ஒன்றே இரண்டாகப் பகுக்கப்பட்டிருக்கின்றது. அந்தணர் குலத்தில் மந்திரங்கள்:- பசுக்கள் குலத்தில் உண்டாகும் நெய் முதலாகிய ஹோமத் திரவியங்கள் ஆகையால் இம்முனிவனுக்குப் பசுவை விலையாக கொடுக்க முயல்வாய்.” இன்னும் சொல்கின்றேன் கேள்.
தேவர்களில் உயர்ந்த மும்மூர்த்திகள்
“தேவர்களில் உயர்ந்தவர்கள் பிரம்ம. திருமால், ருத்திரர் என்ற மும்மூர்த்திகள் ஆவர். அவர்கள் தூயவர்கள். அம்மூவரினும் சிறந்தவர் தவசியர். அவர் கொண்டொழுகும் நடைமுறைகள் பசுவினால் சித்திக்கின்றன” என்று கூறிய கவிசாதமுனி மேலும்,
“அத்தகைய பசுவொன்றை சியவனர் போன்ற புனிதர்க்கு மனமகிழ்ந்து ஈந்தவர். அப்பசுவின் தேகத்திலுள்ள ஒரு மயிருக்கு ஓர் ஆண்டு காலம் தேவலோகத்தை அடைந்து, எல்லா நற்பேறுகளையும் பெற்று, அனுபவித்து, பின் சுவர்க்க லோகத்தை அடைவர். இது மட்டு மல்லாது, சிவபெருமான் தன் மேனி முழுதும் பூசும் விபூதியும், அவன் இடபக் கொடியும், இடப வாகனமும் பசுவினால் தான் உண்டாக்கப்பட்டன. அதனால் இந்த புனித சியவன முனிவருக்கு நிகராவது பசுவேயாகும். அதனைச் சியவன முனிவரின் விலைக்கீடாக சொல்லி வலைஞர்க்குக் கொடுத்து உதவுக” என்று சொல்லி முடித்தான்.
பின்னர் நகுஷராஜன் சியவன முனிவரோடு நன்கு ஆலோசித்துப் பேசி அவர் இசைந்தபடியே அவ்வலைஞர்க்கு ஒரு பசுவினைக் கொடுத்து உதவினான். வலைஞர்களும் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட பசுவை அந்த முனிவனுக்குக் கொடுத்தார்கள்.
சொர்க்கம் சென்ற மீனவர்கள்
சியவன முனிவரும் பசுவை ஏற்றுக் கொண்டு, வலைஞர்களை நோக்கி. “உங்களிடத்திலிருந்து பசுவைப் பெற்றுக் கொள்கின்றேன். நீங்கள் பாவத்தை விட்டு வலையினால் எடுக்கப்பட்ட மீன்களோடு சுவர்க்கத்திற்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். பரிசுத்த ஆத்மாவான அந்த முனிவரின் மகிமையால் அவர் சொன்ன படியே, அந்த வலைஞர்கள் தங்கள் மீன்களுடன் சொர்க்கம் சென்றனர்.
அதன்பின்னர் சியவன முனிவர், கோதானம் செய்த நகுஷ மகாராஜனி டத்தில், “நீ இறந்த பின் தேவலோகத்தை ஆளும் இந்திரன் ஆவாய்” என்று சொல்லி வரமளித்து காட்டிற்குச் சென்றார். அதனால் நகுஷன் இந்திர பதவி பெற்றான் என்பது வெளிப்படை.
அந்தச் சியவன முனிவர் பன்னிரண்டு ஆண்டு காலம் மீன்களோடு ஒருசேர வசித்துப் பழகி வந்த பழக்கத்தால், அந்த மீன்கள், வலையில் அகப்பட்டுப்படுகின்ற துன்பத்தை கண்டார். ஆகையால் தானும் அங்ஙனமே பன்னிரண்டு ஆண்டு காலம் வலையில் அகப்பட்டு அவற்றின் துன்பத்தை அறிந்தார். அனுபவித்தார். அந்தச் சியவன முனிவருடன் சேர்ந்து வாழ்ந்த பழக்கத்தால் அந்த மீன் கூட்டம் வலைஞரோடு சொர்க்கம் சேர்ந்தது.
இந்தக் கதையினால், “தர்மபுத்திரரே! சேர்விடத்தின் மேன்மையையுணர்ந்தாய். பசுக்களின் மாண்பினை அறிந்தாய் ” என்று பிதாமகர் பீஷ்மர் கூறினார்.
பூமியில் செய்ய வேண்டிய தானங்கள் ”பூமியில் தகுதியுடன் செய்ய வேண்டி எல்லாத் தானங்களையும் எனக்குச் சொல்வாயாக” என்று தர்மபுத்திரர் அடுத்த ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “தர்ம புத்திரரே! பொன், வெள்ளி, செம்பொன் னாடை, ஒளியுள்ள மணி வகைகள், தேர், பல்லக்கு, யானை, குதிரை போன்ற வற்றைத் தானம் செய்யலாம். இவற்றினும் சிறந்தது கன்னிகா தானம். அதனினும் சிறந்தது அன்னதானம். அஃதாவது பசி போக்க சோறிடுதல் ஆகும். அதனினும் சிறந்தது குளத்து நீரை குடிக்கத் தந்திடுதல் (குளம் வெட்டல்). அதனினும் நன்மை பயக்கக் கூடியது தான் கற்றறிந்த வித்தையை மற்றவருக்குக் கற்பித்தல் ஆகும். (வித்தியாதானம்) அவற்றினும் சிறந்தது எள்ளைத் தானம் செய்தல்; அதனினும் சிறந்தது பூமிதானம்; அதனி னும் சிறந்தது கோதானம். அதைக் காட்டிலும் வருகின்ற விருந்தினர்க்கு அவர் விரும்பிய பொருளைக் கொடுத்தல் சிறந்தது ஆகும். அதனினும் சிறந்தது ஞான சமுத்திரத்தில் மூழ்கி கலைக்கடலைக் கடந்தவர்க்கு தானம் செய்தல் ஆகும். அதனினும் சிறந்தது வறியோர்க்கு அவர் விரும்பிய பொருளை கொடுத்து உதவுதல் ஆகும். அதனைவிட சிறந்த தானம் வேறொன்று மில்லை” என்று கூறினார்.
(குறிப்பு: பூமிதானம் செய்பவன்
தேவலோகத்தில் தேவர்களாலும், கந்தர் வர்களாலும் பூஜிக்கப்பெற்று சுகமடைந்து மகிழ்ந்திருப்பான். அவனிடத்தில் எப்போ தும் புண்ணியங்கள் சேரும். இதனால் எல்லோரும் பூமியில் கொஞ்சமாவது தானம் செய்ய வேண்டும். கோதானம் செய்பவன் உயிர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவன் ஆகின்றான். ஏனெனில் பசுக்கள் பிராணிகளின் உயிர் என்று சொல்லப்படுகின்றன. அவை பாலினா லும், தயிரினாலும், நெய்யினாலும், கோமயத்தினாலும், தோலினாலும், எலும் பினாலும், கொம்புகளினாலும், வால்களினாலும் உபசாரம் செய்கின்றன. கோதானம் செய்து நல்ல லோகங்களை அடைந்த அரசர்கள் பலராவர். தேவர்கள் கோக் களிடத்தில் வசிக்கின்றனர் என்பர். வேதங்களும் உப நிஷத்துக்களும் பசுக் களின் படிவங்களாயிருக்கின்றன. அத்தகைய பசுவைத் தானம் செய்தல் சிலாக்கியமாகும். வறியார்க்கு ஒன்று ஈதலை வள்ளுவர் “வறியார்க்கொன்றீவதே ஈகை ” என்றார். அன்னதானம் பலத்தைக் கொடுப்பது உயிரை கொடுப்பது உலக வாழ்க்கையும், யாகங்களும் அன்னத்தை பொறுத்தவை. ஒளியும் பராக்கிரமும் அன்னத்தினால் உண்டாகின்றன. அன்னமே சிறந்த திருமகளாகக் கருதப்படுகின்றது. அதனால் தான் பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைத் தானம் செய்வதைவிட அன்னதானம் சிறப்புடையது எனக் கருதப்படுகின்றது. ஆகலின் அன்னத்தை யாருக்கும் எந்த நேரத்திலும் தானம் செய்தல் மேன்மையாகக் கருதப்படு கின்றது. பொன்னே சிறந்த தக்ஷிணை யாதலின், பரிசுத்தமாக விளங்கலின் அதனைதானம் செய்தல் சிறந்தது ஆகும்).
குளம் வெட்டல் சிறந்ததா?
அதன்பின் தர்மபுத்திரர், குளம் வெட்டல்’ சிறந்தது என்று கூறுவர். அதன் காரணத்தைக் கூறுக என தர்மபுத்திரர் கேட்டார்.
அதற்கு பீஷ்மர், ”குளம்தான் எல்லா உயிர்களுக்கும் சிறந்த ஆதாரமாகும். ஒருவன் வெட்டுவித்த குளத்திலுள்ள நீரை மனிதர்களும், பசுக்களும், மான்களும். பறவைகளும் குடிக்கும் என்றால் அந்த குளத்தை வெட்டிய அந்த மாபெரும் மனிதன் தன் குலத்தவரோடு சுவர்க்கப் பேற்றினை நிச்சயம் அடைவான். மேலும் நாலாம் வருணத்தவராகிய சூத்திரர்கள் யாகம் செய்ய வொண்ணாது; ஆதலின் அந்த வேள்விப் பயனைப் பெற அவர்கள் பரந்த குளத்தினை வெட்டுதல் அவர் களுக்கு பெருநன்மை பயக்கும்’ என்று கூறியருளினார்.
மகாபாரதம் – 61 கன்னியாதானம் வரன் பெருமிதம் உரைத்த சருக்கம்… உபசரிப்பை ஏற்றுக்கொண்ட அஷ்டாவக்கிரன்