கௌரவர்கள் செய்த சூழ்ச்சியினால் பாண்டவர்கள் சூதாடி நாட்டையும், நகரத்தையும், செல்வத்தையும் தோற்றனர். மேலும் அக்கெளரவர்கள் திரெளபதியைப் பல்லோர் நிறைந்த அவையில் துகிலுரிய முனைந்து அவமானப்படுத்தினர். அவமானத்தைத் தாளாத பாண்டவர்களும், திரௌபதியும், கெளரவர்களைக் கொல்வ தாகச் சபதம் செய்தனர். பின்னர் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும், குறைவில்லாதபடி நிறைவேற்றினால் பாண்டவர்களுக்கு உரிய நாட்டை மீண்டும் கொடுப்பதாக ஓர் உறுதி மொழி தரப்பட்டது. அந்த உறுதி மொழியை நிறைவேற்ற பாண்டவர்களும், திரௌபதியும் அஸ்தினாபுரத்தை விட்டுத் தங்கள் தங்கள் ஆயுதங்களுடன் புறப்பட்ட னர். புறப்படும் பொழுது கர்ணன், துச்சாதனன் முதலானோர் பாண்டவர்களை இகழ்ந்து பேசினர். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது பாண்டவர்கள் வர்த்த மானபுரம் என்னும் வடக்கு வாயிலாக வடக்குப் பக்கம் செல்லத் தொடங்கினர்.
பாண்டவர்கள் நாட்டை இழந்து நகரத்தை இழந்து ஏற்பட்ட அவமானத்தால் மனம் குன்றிக் காட்டிற்குச் செல்கின்றார்கள் என்பதை அறிந்த நகர மக்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். பீஷ்மர், துரோணர், விதுரர் போன்ற பெரியவர்களின் கையா லாகாத தன்மையைக் குத்திக் காட்டிப் பேசினர். நிந்தித்தனர். நாட்டு மக்கள் எல்லாம் துரியோதனனுடைய ஆட்சியில் இருக்க விருப்பமில்லாமல் பாண்டவர் களைப் பின் தொடர்ந்தனர். இதனை அறிந்த தருமபுத்திரர், “பெரியோர்களே! நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். இங்கு என் பாட்டனார் பீஷ்மர், ஆசார்யர் துரோணர், பெரிய தந்தையார் திருதராட்டிரர், சிறிய தந்தையார் விதுரர், எங்கள் தாய் குந்தி தேவி, எங்கள் பெரிய அன்னை காந்தாரி அம்மையார் முதலானோர் வாழ்கின் றார்கள்; உங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. நீங்கள் எங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று விரும்பினால் திரும்பிச் செல்லுங்கள். அதுவே எங்கட்குக் காட்டும் மரியாதையாகும் ” என்றார். தருமருடைய இந்த உறுதியான மொழி களைக் கேட்டு வேறு வழியில்லாது நகர மக்கள் பாண்டவர்களிடம் விடை பெற்றுச் சென்றனர். அந்தணர்கள் மட்டும் பாண்ட வர்களுடன் சென்றனர். அன்று கங்கைக் கரையை அடைந்து, ‘பிரமாணம்’ என்னும் ஆலமரத்தின் அடியில் தங்கினர். தண்ணீர் தவிர வேறு எதுவும் உண்ணாது அன்றைய நாளைக் கழித்தனர். உடன் வந்திருந்த அந்தணர்கள் அன்று இரவு அவர்கட்கு ஆறுதல் மொழி வழங்கினர். அன்று அம்மரத்தடியிலேயே படுத்துறங்கினர்.
தொடர்ந்து சென்ற அந்தணர்கள்
பொழுது புலர்ந்தது. பாண்டவர்களும் அவர்களுடன் வந்தவர்களும் காலைக் கடன்களை முடித்தனர். னர். உடன்வந்த அந்தணப் பெருமக்களை நோக்கி, தரும புத்திரர், “அந்தணப் பெருமக்களே! நாங்கள் இப்பொழுது காட்டிற்குச் சென்று கொண்டிருக்கின்றோம். இனிமேல் காய் கனி கிழங்குகளை உண்டு, விலங்குகளும் பாம்புகளும் வாழ்கின்ற இந்தக் காடுகளில் தான் இருக்கப் இருக்கப் போகின்றோம். அதனால் எங்களுடன் தொடர்ந்து வரவேண்டாம்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர்கள், “தருமபுத்திரரே! நீங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண் டாம். எங்களுக்கு வேண்டிய உணவினை நாங்களே தேடிக்கொள்வோம். உங்களின் நலன் பொருட்டு மந்திரங்களை உச்சரிக் கவும், தியானம் செய்யவுமே வருகின் றோம். உங்களுடைய துன்பங்களில் நாங் களும் பங்கேற்கிறோம். வழியில் உங்களின் மனத்திற்கு நிம்மதியான கதைகளையும் தர்மங்களையும் சொல்லி வருவோம். எங்களைத் தடைசெய்ய வேண்டாம்” என்றார்கள். தருமபுத்திரர் அவர்களின் அன்புக்குக் குக் கட்டு கட்டுப்பட்டு மறுமொழி கூறாது விட்டார். ஆனால் உடன்வருகின்ற அந்தணர்களுக்கு உணவு போன்றவை கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் அவரைப் வாட்டியது. பெரிதும்
பாண்டவர்களின் புரோகிதரான தெளமி யரும் அவர்களுடன் அஸ்தினாபுரத்தை விட்டுக் காட்டிற்குச் செல்கின்றார் என்பதை முன்னரே கூறியுள்ளோம். அவர் இப்பொழுது தருமரின் மனத்துயரை மாற்ற ஆழ்ந்த சிந்தனை செய்து ஓர் உதவி செய்யலானார். அவர் தருமபுத்திரரைப் பார்த்து, “யுதிஷ்டிரரே! சூரியன் உலக உயிர்களைக் காப்பவன்; மழையைத் தருபவன். அவன் இல்லையென்றால் உலகில் எதுவும் இல்லை. அவனை நாள்தோறும் தியானம் செய்வாயாக. அதன் மூலம் பலவிதமான நன்மைகளைப் பெறலாம் என்று கூறி, ‘சூர்யாஷ்டோத்ர சதநாமம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி, சூரிய பகவானை முறைப்படி பூசை செய்தார். அவ்வாறே தருமபுத்திரரையும் செய்யும்படி செய்தார்.
அட்சய பாத்திரம்
கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி தூயமொழிகளால் தருமபுத்திரர் செய்த இந்தத் துதி மொழிகளைக் கேட்டு, சூரியன் பெருமகிழ்ச்சி அடைந்தான். அவன் உடனே தர்மபுத்திரரின் முன்தோன்றி, “தருமபுத்திரரே! நான் கொடுக்கும் இந்த அட்சய பாத்திரத்தைப் பெற்றுக்கொள். பன்னிரண்டு ஆண்டுகள் குறைவில்லாமல் இதன் மூலம் உணவினைப் பெறலாம். நீங்கள் எத்தனை பேருக்காகிலும் இதிலி ருந்து உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் இதிலிருந்து பெற இயலும்” என்று கூறியதோடு, “இன்னும் பதிநான்கு ஆண்டுகள் கழித்து, நீங்கள் உங்கள் நாட்டைப் பெறுவீர்” என்று வாழ்த்தி, அந்த அட்சய பாத்திரத்தைத் தருமபுத்திரரின் கையில் கொடுத்துவிட்டு மறைந்தான். வணங்கிப் பெற்றுக் கொண்ட தருமபுத்திரர் அந்தப் பாத்திரத்துடன் கரையேறித் தௌமியரின் பாதங்களைப் பணிந்து, பின்னர் திரௌபதியை அழைத் துக் கொண்டு சமைக்கும் இடத்திற்குச் சென்றார். அவளுடைய உதவியால் சமையலை மந்திரப்பூர்வமாகச் சங்கல்ப மாத்திரையில் செய்தார். அதனால் அந்தப் பாத்திரத்தில் இருந்து சமைத்த உணவு பதார்த்தங்கள் பெரும் அளவில் வந்தன. முதலில் அந்தணர்களுக்குப் படைத்து, பின்னர் தம்பியர்க்கு இட்டு, அதன்பின்னர் தான் உண்டார். எஞ்சியதை திரௌபதி உண்டாள். உணவு மிச்சம் இல்லாமல் போய்விட்டது. இத்தகைய அபூர்வமான பாத்திரம் சூரியனிடமிருந்து கிடைத்ததைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைத்தனர். பாண்டவர்கள் அங்கிருந்து தெளமியரையும், அந்தணர்களையும் உடனழைத்துக் கொண்டு காம்யகவனம் சென்றார்கள்.
மைத்திரேயர் சாபம்
அஸ்தினாபுரத்தில், தம்பிப் பிள்ளைகள் பாண்டவர்கள் காட்டை நோக்கிச் செல்கின் றார்களே என்று கேட்டுத் திருதராட்டிரர் பெரிதும் துயரம் அடைந்தார். விதுரர் அங்கு வந்து திருதராட்டிரரிடம், ”அரசே! அரசனாக இருப்பவன் மற்றவர் பொருள் மேல் ஆசைபடக்கூடாது. ஆனால் இங்கு சகுனி. பாண்டவர்களை வஞ்சித்தான். சூதாட்டத்திற்கு வலிய அழைத்து மாயத்தினால் தோல்வியடையச் செய்தான். நீயோ இருவருக்கும் பொதுவானவன். நீ இருவரிடமும் நியாயமாக நடந்துகொள். உலகில் தர்மம் நிலைபெறும்படி செய். பாண்ட வர்க்குரிய நாட்டைக் கொடுத்துவிடு இதனால் உம்முடைய புகழ் வளரும். இல்லையென்றால் பதின்மூன்று ஆண்டு கள் கழித்துச் சபதம் செய்து போன பாண்ட வர்கள் நம் குலத்தை நாசம் செய்வர். அதனால் குருவம்சம் அழியும். யுதிஷ் டிரனை அழைத்துச் சமாதானம் செய்து கொள். கர்ணன், சகுனி போன்றோர் பாண்டவர்களுடன் சமாதானமாக இருக் கட்டும். தீய செயலைச் செய்த துச்சாத னனைத் திரௌபதியிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள். இவ்வாறு செய் தால் நம் குருவம்சம் நன்கு தழைக்கும் தழை ” என்று பலவாறு அறிவுரை கூறினார்.
திருதராட்டிரரின் கோபம்
முதலில் பொறுமையோடு கேட்ட திருத ராட்டிரர், விதுரர் வற்புறுத்திக் கூறவே பொறுமையை இழந்தார். பிள்ளைப் பாசத்தால் அவர் மனம் மாறியது. எனவே விதுரர் மேல் கோபங்கொண்டார். விதுரரைப் பார்த்து, “விதுரா! நீ எப்பொழுதும் பாண்டவர்களின் சார்பாகவே பேசுகின் றாய். அவர்களுக்கு நல்லதையே செய்கின் றாய். என் பிள்ளைகளாகிய துரியோதனா தியர்க்கு விரோதமாகவே நடந்து கொள் கின்றாய். நீ சொன்னவை எல்லாவற் றையும் நான் ஏற்க மாட்டேன். பாண்டவர் களுக்காக என் மக்களை நிராதரவாக விட்டு விட முடியாது. உன்னுடைய டய ஒருதலை பட்சமான நடத்தையை நான் நன்கு அறிந்து கொண்டேன். என் எதிரில் இனி நிற்க வேண்டாம் உனக்கு விருப்பமானால் பாண்டவர்கள் கூடவே போய் இருக்க லாம்” என்று கோபமாகக் கூறினார்.
விதுரர் பாண்டவர்களைச் சந்தித்தல்
அதனைக் கேட்ட விதுரர், மிக்க வருத்தம் அடைந்தார். “இனி இந்தக் குலம் நாசம் அடையும்” என்று எண்ணி வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறிப் பாண்டவர்கள் இருக்கும் வனத்திற்குச் சென்றார். சிறிய தந்தையாகிய விதுரர் தங்களை நோக்கி, வருவதைப் பார்த்துப் பாண்டவர்கள் பெருமகிழ்ச்சி யடைந்து எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தனர். பின்னர் அவர் வந்ததற்குரிய காரணத்தைக் கேட்டனர் அப்பொழுது அவர், “என் இனிய மக்களே! மன்னரிடம் இனி என்ன செய்யவேண்டுமென்பதை, நீங்கள் இங்கு வந்தபின் கூறினேன். அவர் அதனை ஏற்கவில்லை. வியாதியுள்ளவன் பத்திய உணவை விரும்பமாட்டான். அது போல என் வார்த்தைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் விட்டு வந்துவிட்டேன்” என்றார். அவரை விதுரர் தம்மீது கோபித்துக் கொண்டு. காட்டிற்குச் சென்று பாண்டவர்களுடன் சேர்ந்துவிட்டார் என்பதை அறிந்தது முதல் திருதராட்டிரர் பெரிதும் கவலையுற்றார். ”என்ன காரியத்தை என் அவசரபுத்தியில் செய்துவிட்டேன்; விதுரன் அங்கு சென்றால் பாண்டவர்கள் பலம் அதிகரிக்குமே ! எனவே, மீண்டும் விதுரனை அழைத்துக் கொள்ளல்தான் சிறந்தது” என்று முடிவு செய்து,சஞ்சயனை அழைத்து, அவனிடம் சஞ்சயா! என் பிரியமான தம்பி விதுர னைத் தகாத வார்த்தைகளால் கடிந்து கொண்டேன், அதனால் என் மீது கோபம். கொண்டு காட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் எனக்கு நன்மையே நாடுபவன்; அவனை நான் அழைத்ததாகக் கூறி, எப்படியாவது அழைத்துவா” என்று கூறி அனுப்பினார். சஞ்சயனும் மகிழ்ச்சியுடன் காம்யகவனம் சென்றார்.
சஞ்சயன் விதுரரைச் சந்தித்தல்
அங்கு பாண்டவர்கள் மான் தோலை ஆடையாக உடுத்தியிருப்பதையும், அவர்க ளுடன் திரௌபதியும். ம். ரிஷிகளும், அந்தணர்களும் இருப்பதையும், அவர்கள் நடுவில் விதுரர் இருப்பதையும் கண்டான். நேராகச் சென்று விதுரரையும், தருமர் முதலான பாண்டவர்களையும் வணங்கி னான். உடனே சஞ்சயன், “விதுரரே! மன்னர் திருதராட்டிரர், உம் நினைவுடனே எப்போதும் இருக்கின்றார். உம்மைப் பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை. அவர்தான் என்னைத் தங்களிடம் அனுப்பி னார். எனவே பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு எம்முடன் மன்னரைக் காண வருக” என்று வேண்டினான். அண்ணன் தம்பி பாசமல்லவா! அதனால் சஞ்சயன் கூறியதைக் கேட்டவுடன் விதுரர் மனம் மாறினார். உடனே பாண்டவர் களிடம் விடைபெற்றுக் கொண்டு அஸ் தினாபுரம் சென்று மன்னர் திருதராட்டி ரரைக் கண்டு வணங்கினார். திருதராட்டி ரரும் விதுரர் வந்துள்ளார் என்றவுடன் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார். பின்னர், “அறநெறியாளனே! உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை. நான் சொன்ன கடுஞ்சொற்களுக்காக வருந்த வேண்டாம்” என்று கூறி விதுரரை வர வேற்றார். விதுரரும் திருதராட்டிரரிடம், “அண்ணா! நீங்கள் என் மேலான குரு. தங்களிடம் எனக்கு எந்த விதமான வருத்தமும் கிடையாது. அதனால் தான் தங்களைக் காண விரைந்து வந்தேன். நான் என்றும் பாண்டவர்களிடமும் கௌரவர்களிடமும் வேறுபாடு காட்டியதில்லை. எல்லோரும் என்னுடைய பிள்ளைகள் தான்” என்றார். விதுரர் கூறியதைக் கேட்டுத் திருதராட்டிரர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
மீண்டும் சூழ்ச்சி
விதுரர் அஸ்தினாபுரம் திரும்பியதை அறிந்த துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் என்னும் நால்வர் கூட்டணி பெருங்கவலையுற்றது. அதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யலானார்கள். “கர்ணன் ஆலோசனைப் படி அனைவரும் போர்க்கோலம் பூண்டு காட்டிற்குச் சென்று அங்குள்ள பாண்டவர் களுடன் போர் புரிந்து அவர்களைக் கொன்றுவிடவேண்டும்’ என்று முடிவு செய்தார்கள்.இதனை ஞானக் கண்ணால் அறிந்த வியாசபகவான், திருதராட்டிரரிடம் சென்று.”மைந்தா! உன் மைந்தர்கள் கபடமான முறையில் மாயச்சூதாடி, நாட்டைக் கைப்பற்றியதோடு மட்டு மல்லாமல், உன்னுடைய சபையில் உன்னெதிரிலேயே திரௌபதியை அவமா னப்படுத்தி, காட்டிற்கு அனுப்பி விட்டார் கள். இப்பொழுதோ காட்டிலேயே அவர் களைக் கொல்ல ஏற்பாடு செய்து வருகின்ற னர். அப்படி அவர்கள் சென்றால் அர்ச் சுனனின் ஒரு பாணத்திலேயே அவர்கள் அழிவார்கள்.உடனே அதனைத் தடுத்து நிறுத்தவும். மேலும், பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால் நல்லது. இல்லையெனில் கௌரவர்கள் குலமே அழியும். இவ்வளவு நடந்தும் துரியோ தனன் மனம் மாறவே இல்லை போல் உள்ளதே” என்று கூறினார்.
வியாசர் கூறிய அறிவுரை
அதற்குத் திருதராட்டிரர், “நான் சொன் னால் துரியோதனன் வேறு ஏதாவது காரணம் சொல்லித் தன் வழிக்குத் திருப்பி விடுகிறான்” என்றார். அதற்கு வியாசர், ”திருதராட்டிரனே! வேறு பணியின் காரணமாக, நான் அவசரமாகச் செல்ல வேண்டியுள்ளது. மைத்திரேய மகரிஷி என்ற ஞானி இங்கு வர இருக்கின்றார். முதலில், அவர் பாண்டவர்களைச் சந்தித்துப்பின் இங்கு வர உள்ளார். அவர் நல்ல தர்ம நெறிகளைக் கூறி உன் மகனைத் திருத்த முயல்வார். அவர் வார்த்தைகளைக் கேட்டு நடந்தால், உன் மைந்தர்களுக்கு நன்மையே பயக்கும். மாறாக அவர்கள் அவமரியாதையாக நடந்து கொண்டால் அல்லது அவமானப்படுத்தினால் அவர் சபித்து விடுவார். ஜாக்கிரதையாக அவர்களை இருக்கச் சொல்லவும்” என்று கூறிச் சென்றுவிட்டார்.
மைத்ரேய மாமுனிவரின் வருகை
வியாசர் சென்ற சற்று நேரத்திற்கெல் லாம் மைத்ரேய மாமுனிவர் அங்கு வந்தார். திருதராட்டிரர் தன் மைந்தர்களுடன் அவரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கி, ஆசனத்தில் அமர்த்தி உபசாரம் செய்தார். பின்னர் அவர், “முனிவர் பெருமானே! உம்முடைய வரவு நல்வரவு ஆகுக. பாண்டவர்களைக் காட்டகத்துக் கண்டீர்களா? அவர்கள் நலமுடன் இருக் கின்றார்களா?” என்று விசாரித்தார்.
அதற்கு அம்மாமுனிவர், “அரசே! தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு, பல இடங்க ளுக்குச் சென்று வந்தேன்.முடிவில் பாண்ட வர்களைக் குரு ஜாங்கலம் என்ற இடத்தில் தற்செயலாகச் சந்தித்தேன்.சடையைத் தாங்கி மான் தோலை உடுத்தி இருந்தனர். உன் மைந்தர்கள் செய்த வஞ்சனைச் செயல் களையெல்லாம் நன்கு அறிந்துகொண் டேன். அதனால்தான் அவர்கள் காட்டில் ஏன் வாழ்கிறார்கள் என்ற விஷயமும் எனக்குத் தெரிந்தது. பெரிய தந்தையாகிய நீரும், பிதாமகர் பீஷ்மரும், ஆசார்யர் துரோணரும் இருக்கும் போதே இத்தகைய வஞ்சனையான கொடிய செயல்கள் நடந்திருப்பதைக் கண்டு பெரிதும் வருத்த மடைகின்றேன். சகோதரர்களுக்குள் விரோதம் வராமல் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும். அதனை ஏனோ தவற விட்டுவிட்டீர்கள். இனியாவது கெளரவர்களை அறவழியில் நடந்து, பாண்டவர்களிடம் நட்பாக இருக்கச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டு, அந்தச் சபையிலிருந்த துரியோதனனைப் பார்த்து, “அரசகுமாரனே! உனக்கு நன்மை தருபவனவற்றையே சொல்லுகின்றேன் கேள். எக்காலத்தும் பாண்டவர்களிடம் விரோதம் பாராட்டாதே. ஏனெனில் அவர் களை உன்னால் வெற்றிகொள்ள முடியாது. பதினாயிரம் யானை பலமுள்ள ஜராசந்த னையும், பகாசூரனையும் பீமன் ஒருவனே கொன்றான். காட்டிற்குச் சென்ற பின்னும் பகாசூரன் தம்பி கிர்மீரன் என்னும் அசுர னையும் அவன் ஒருவனே கொன்றான். பீமனை வெல்ல முடியாது என்பதற்கு இவையே சான்றுகளாகும். அதோடு வில்லுக்கு ஒரு விசயனாகிய அர்ச்சுனன் வேறு இருக்கின்றான். அவனையும் யாராலும் எளிதில் வெல்ல முடியாது. பாஞ்சால மன்னன் துருபதன் அவர்களுக் குப் பெருந்துணையாக இருக்கின்றான். எல்லாவற்றிற்கும் மேலாக துவாரகை வாசன் பரந்தாமன் கண்ணபிரானின் கருணை அவர்களுக்கு என்றும் இருக் கின்றது. இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொள். அதுதான் உனக்கு நல்லது” என்று நயமாக அறிவுரைகள் பல கூறினார்.
மைத்ரேயரின் சீற்றம்
இவ்வாறு மைத்ரேய முனிவர் நயமாக அறிவுரைகள் கூறியதை, மூடனான துரியோதனன் ஏற்றுக் கொள்ளவில்லை. செவிடன் காதில் சங்கு ஊதியது போலா யிற்று. மேலும் அவன் தன் தொடைகளைக் கையால் தட்டிக் கொண்டும், அலட்சிய புன்னகையை அவரைப் பார்த்து உதிர்த்தும்; முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டும் மிக மிக அலட்சியமாக இருந்து காது கொடுத்து கேளாது விட்டான். இதைப் பார்த்த முனிவருக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. அதனால் அரவக் கொடியோனைப் பார்த்து, சீறி, “இந்தக் கர்வத்தின் படுபயங்கரமான பலனை விரைவில் நிச்சயம் அடையப் போகின் றாய். போர்க் களத்தில் பீமனுடைய கதையால் தொடை பிளக்கப்பட்டு மாளத்தான் போகிறாய்” என்று கூறிக் கோபத்துடன் அவ்விடத்தைவிட்டு அகன்று போகும் பொழுது, துரியோதனன் முனிவரிடம் அலட்சியமாக நடந்து கொண்டதை, அமைச்சர் சொல்லக் கேட்டுத் திருத ராட்டிரர் திடுக்கிட்டு, “முனிவர் பெரு மானே! என் மகன் தங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது பெரும் தவறுதான். அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என் மகனைச் சபிக்க வேண்டாம்” என்று கத்தினார். அதற்கு மைத்ரேய மாமுனிவர்! அரசே! உன் மகன் பாண்டவர்களுடன் சமாதானத்தை ஏற் படுத்திக் கெ கொண்டால் என் சாபம் பலிக் காது. இல்லையெனில், நான் கூறியவை நடந்தே தீரும். உன் மகன் ஆணவம் பிடித்து அலைகிறான். அந்த ஆணவமே அவனை மீளமுடியாத படுபாதாளக் குழியில் வீழ்த்தும்” என்று கூறிச் சென்றுவிட்டார்.
கிர்மீரன் வதம்
மைத்ரேய முனிவர் சென்றபின் திருதராட்டிரர் தம்பி விதுரரிடம், “விதுரா! மைத்ரேய மாமுனிவர் குறிப்பிட்ட கிர்மீரன் என்பவன் யார்? அவனைப் பீமன் ஏன்? எவ்வாறு கொன்றான். சொல்லுக” என்று கேட்டார்.
அப்பொழுது விதுரர் திருதராட்டிர ரிடம், “அரசே! பாண்டவர்கள் இங்கிருந்து புறப்பட்டு இரவு பகலாக மூன்று நாட்கள் நடந்து காம்யக வனத்தை நள்ளிரவு நேரத்தில் அடைந்தனர். அப்பொழுது வழியில் நள்ளிரவு நேரத்தில் கிர்மீரன் என்னும் அரக்கன் அவர்களை வழிமறித்துக் கொண்டு நின்றான். சிவந்த ஒளிவீசும் கண்கள்; நெருப்புப் பொறி பறக்கும் பார்வை; மேகம் போன்ற கரிய திருமேனி; இடி முழக்கம் போன்ற கர்ணகடூரமான அவன் குரலை கேட்டுப் பறவைகளும் விலங்குகளும் பயந்து ஓடும்; அத்தகைய அச்சந் தரத்தக்கவன்தான் பாண்டவர்களை வழிமறித்து நின்றான். அவனைக் கண்ட வுடன் திரௌபதி அச்சம் கொண்டு பாண்டவர்களின் பின்னால் ஒதுங்கி நின்றாள். பகாசூரனின் தம்பி கிர்மீரன்
“இயமனைப் போன்ற கொடிய தோற்றத்துடன் விளங்கிய அவனை, தருமர் பார்த்து, “அரக்கனே! நீ யார். காரணமின்றி எங்களை ஏன் வழி மறிக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த அரக்கன், “நான் பகாசூரனுடைய தம்பியாவேன். என் பெயர் ‘கிர்மீரன்’ என்பதாகும். இந்தக் காம்யக வனத்தில் அச்சமின்றி மனிதர் களைக் கொன்று தின்று, வாழ்ந்து வருகின் றேன்.தைரியமாக என் எதிரே வந்து நிற்கும் நீ யார்?” என்று கேட்டான். அதற்குத் தருமபுத்திரர், “ஐயா! நான் பாண்டவர்களில் மூத்தவன். என் பெயர் யுதிஷ்டிரன். தருமன் என்றும் அழைப் பார்கள். இப்பொழுது என் தம்பியருட னும், திரெளபதியுடனும், இந்த வனத்தில் இந்த இடத்தில் வசிக்க வந்திருக் கின்றோம்” என்றான்.
அதனைக் கேட்ட கிர்மீரன் என்னும் அந்த அரக்கன், “அப்படியா! நீர் என் விரோதி பீமனின் அண்ணனா? அந்தப் பீமனைத் தான் கொல்ல இங்கு வந்துள் ளேன். அந்தப் பீமன் ஏகசக்ர நகரில் எதிர்க்க யாருமில்லாது காட்டு ராஜாவைப்போல விளங்கிய என் தமையன் பகாசூரனைக் கொன்றான். என் நண்பன் இடும்பனையும் இடும்ப வனத்தில் கொன்றான். அதோடு அவன் தங்கை இடும்பியையும் அபகரித்துக் கொண்டான். அவன் எங்கே இருக்கின்றான் என்று சொல்லுங்கள். அவனைக் கொன்று பழிக்குப் பழி தீர்த்துக் கொள்ளப் போகிறேன் ” என்று இடிமுழக்கம் போலச் சப்தமிட்டான்.
அதனைக் கேட்ட தருமபுத்திரர், ”ஏன் வீணாக அலட்டிக் கொள்ளுகிறாய். உன்னால் எங்கள் பீமனைக் கொல்ல முடியாது” என்று கோபமாகக் கூறினார். அதனைக் கேட்டுக் கொண்டே வந்த பீமன், அங்கிருந்த ஒரு பெரிய மரத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு தோளின்மேல் சாய்த்துக் கொண்டு அவன் எதிரில் நின்று ”நான்தான் நீ கூறுகின்ற பீமன்” என்று கூறினான். பக்கத்திலிருந்து அர்ச்சுனன் அவனைக் கொல்லத் தன் காண்டீபத்தை எடுத்தான். பீமன் அதனைப் பார்த்து. தம்பியைத் ஈடுத்து நிறுத்தி, “நான் மட்டும் தனியாகப் பார்த்துக் கொள்கிறேன். நீ வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிரு” என்று கூறி உடனே போரில் இறங்கினான்.
பீமனுக்கும், கிர்மீரனுக்கும் கடுமை யான போர் நடந்தது. ஒருவர்க்கொருவர் தாம் தாம் பிடுங்கிய மரங்களினால் மோதிக் கொண்டனர். பெருஞ்சிங்கங்கள் இரண்டு ஆக்ரோஷத்துடன் போரிடுவது போல இருவரும் உக்கிரமாகப் போரிட்டனர். அந்தக் காடு முழுவதும் போரிடும்போது அவர்கள் எழுப்புகின்ற இடிமுழக்கம் போன்ற குரல் எதிரொலித்தது. இறுதியில் பீமன் கிர்மீரனைப் பிடித்து மேலே தூக்கி, பெரிய மரமொன்றைச் சுழற்றுவது போலப் பலமுறைச் சுழற்றிச் சுழற்றிக் கீழே வீசி னான்.
கீழே விழுந்த அவன் கழுத்தை நெரித்தான். அவன் கண்கள் பிதுங்கி வெளியே வந்தன. அப்பொழுது பீமன், ”பாவியே/ உன் சகோதரன் பகாசூரன் போன இடத்திற்கே போய்ச் சேருவாய்” என்று கூறி, பூமியில் புரட்டிப் புரட்டிக் கொன்றான். உயிரற்ற அந்தப் பிணத்தை தன் காலால் தூக்கி எறிந்தான். பின்னர் அவன் சகோதரர்களும், திரெளபதியும் பீமனை மனமாரப் பாராட்டினர். அங்கிருந்து காம்யக வனத்திற்கு சென்றனர். என்று கூறிய பின் பீமனால் கொல்லப்பட்ட அந்தக் கிர்மீரன் பிணத்தை வழியில் நான் கண்டேன்” என்றார்.
கண்ணபிரான் பிரதிக்ஞை
பாண்டவர்கள் சூதாடி. நாட்டைக் கௌரவர்களிடம் இழந்து விட்டு. காட்டிற்குப் போய் விட்டார்கள் என்பதை அறிந்து, கண்ணபிரான், குந்திபோஜன், சேதி நாட்டு மன்னன் த்ருஷ்டகேது, கேகயன் பே போன்றோர் பாண்டவர்கள் இருக்குமிடத்திற்கு வந்து அவர்களை கண்டனர். பெரும் வேதனையுற்றனர். எல்லோரும் கோபமுற்று, துரியோதனாதி யரின் இரத்தத்தை நிலமகள் குடிக்கப் போகின்றாள் என்றனர். துரியோதனன். துச்சாதனன், மாமன் சகுனி, கர்ணன் தான் இவற்றிற்கெல்லாம் காரணம்; அவர்களை அழிக்க வேண்டும் என்றனர். கண்ண பிரானும் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்டுப் பெரிதும் வருந்தினார்.
சுண்ணனிடம் முறையிட்ட திரௌபதி
அப்பொழுது திரௌபதி விரித்த தன் கூந்தலோடு கண்ணபிரானிடம் வந்து, ”பெருமானே! ஆபத்பாந்தவா! அனாத ரக்ஷகா | ஒற்றை வஸ்திரத்தில், தீண்டத் தகாத நிலையில் நான் இருந்த பொழுது சபைக்கு அரக்கன் துச்சாதனனால் கூந்த லைப் பற்றி இழுத்து வரப்பட்டேன். திருத ராட்டிரர் சபையில் அவர் எதிரில் என்னை அவமானப்படுத்தினார்கள். அந்த தேரோட்டி மகனோடு சேர்ந்து கொண்டு அவர்கள் ‘தாசி’ என்றே என்னைப் பலவாறாகக் கூறி ஏசினார்கள். பிதாமகர் பீஷ்மரும், பேரரசர் திருதராட்டிரரும் நான் யார் என்பதையும் எத்தகையவள் என்பதை யும் அவர்களின் மருமகள் என்பதையும் குரு வம்சத்தை விளங்க வைத்தவள் என்பதை அறவே மறந்து விட்டார்கள். அந்தக் குரு குலத்திலே பிறந்த இளைய மகன் ‘விகர்ண னுக்கு ‘ இருந்த அறிவுத் தெளிவுகூட இந்தப் பெருமக்களுக்கு இல்லாமல் போய் விட்டது. ஜனார்த்தனா! காளிங்க நர்த்தனா! அப்பொழுது வலிமை மிக்க என் கணவர்களும் என்னைக் காப்பாற்றாது விட்டு விட்டார்கள்” என்று அழுது கொண்டே கூறினாள்.
கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக, அத்திரெளபதி மேலும், “கோபாலா! கோவிந்தா! அற்பர்களால் அவை நடுவில் துன்புறுத்தப்பட்டேன். அவமானப்படுத்தப் பட்டேன். பதினாயிரம் யானை வலிமை கொண்ட பீமனுடைய வலிமையே அப்பொழுது பயன்படாமல் போய் விட்டது. கேவலம் பலமில்லாதவர்கள்கூட உலகில் தங்கள் மனைவியைப் பகைவரிட மிருந்து பாதுகாப்பார்கள். ஆனால் என் கணவர்களோ செயலற்று நின்றிருந்தார்கள்.
பாண்டு ராஜாவின் மருமகள் என்றும் பாராது என் தலைமயிரைப் பிடித்து இழுத்தார்கள். இந்த ஐந்து பெரு வீரர்களின் மனைவி என்று அறிந்தும் என்னை அவமானப்படுத்தினார்கள். அந்தப் பாவி துச்சாதனன் துகிலுரித்தபோது, “கண்ணா! சுமலக்கண்ணா! கோவிந்தா! கோபாலா! பரந்தாமா! பாற்கடல் வண்ணா! புண்டரீகஷா! வைகுந்தவாசா ! அச்சுதா! ஆயர்தம் கொழுந்தே என்னும் நின் திரு நாமங்கள் தான் அன்று பயன்பட்டன. எம் பெருமானே! உன்னைவிட உன்னுடைய திருநாமங்களை உளமாரச் சொல்லுதலே அதிக சக்தி வாய்ந்தவை என்பதை நான் அன்று அறிந்து கொண்டேன். தா தாமோதரா! உலகமுண்ட பெருவாயா! அன்று எனக்கு கணவர்களும் இல்லை; பந்துக்களும் இல்லை; சகோதரர்களும் இல்லை அன்று நீர்தான் அந்தர்யாமியாய் நின்று காத்து அருள் புரிந்தீர். நீர் அந்த கெளரவர் அவையில் அன்று இருந்திருந்தால் இத்தகைய தீய நிகழ்ச்சிகள் நடந்திருக்குமா! நீர்தான் விட்டிருப்பீரா! மாமாயா! மணி வண்ணா! இனி நீரே எனக்கு கதி. உன் சரண் அல்லால் வேறு சரண் எனக்கு இல்லை” என்று கோபாவேசமாய், பெருமூச்சு விட்டுக் கொண்டு கதறிக் கதறி அழுது கொண்டே கூறினாள்.
திரௌபதிக்குக் கண்ணன் ஆறுதல்
இவ்வாறு அழுது புலம்பிய திரௌ பதியைக் கண்ணன் சமாதானம் செய்து, ‘திரௌபதி ! உன்னை யார் துன்புறுத்தினார் களோ, யார் அவமானப்படுத்தினார்களோ அவர்கள் அனைவரும் நிச்சயம் இரத்த வெள்ளத்தில் மி மிதந்து கிடப்பார்கள். பாண்டவர்களுக்குத் துணையாக, பாண்ட வர்கள் சகாயனாக நான் என்றும் இருப் பேன். அதைத்தான் நான் செய்வேன். நிச்ச யம் நீ விரித்த குழலை இனிது முடிப்பாய். அரசர்க்கரசியாவாய். உன்னுடைய சபதம் இனிது நிறைவேறும். வானம் விழுந் தாலும் மலையே வெடித்தாலும், பூமியே உடைந்து சுக்கு நூறானாலும், கடல் வற் னாலும் என் வார்த்தை பொய்யாகாது. இது சத்தியம்; சத்தியம்” என்று கூறி விண் அதிர மண் அதிரச் சபதம் செய்து கொடுத்தார். இந்தச் சபதத்தை கண்ணபிரான் செய்ததும் திரௌபதி சமாதானம் அடைந்து அழுத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அருகிலிருந்த அர்ச்சுனனைக் கடைக்கண் களால் பார்த்தாள். உடனே அர்ச்சுனன், “கண்ணபிரான் சொன்னவை நிச்சயம் நடக்கும். அப்பெருமானின் துணை கொண்டு அந்தக் கெளரவர்களை, அக்கர்ண னோடு நாசம் செய்வோம்” என்று சபதம் செய்தான்.
திட்டத்துய்மன் சகோதரிக்கு ஆறுதல்
இவ்வாறு கண்ணனும் பார்த்தனும் சபதம் செய்ததை சுட்டிக்காட்டிய திட்டத் துய்மன் தன் சகோதரியிடம், ‘திரௌபதி வருந்தாதே! நீ எண்ணியபடியே எண்ணி யாங்கு நடக்கும். பேரருளாளர் கண்ண பிரான் துணையிருக்க நமக்குப் பயமேன்? போர்க்களத்தில் துரோணரைக் கொல் வேன். அதற்காகவே நான் பிறந்தவன். பீஷ்மரைக் கொல்வதற்காக சகோதரன் சிகண்டி காத்துக் கொண்டிருக்கின்றான். அர்ச்சுனனோ தேரோட்டி மகன் கர்ணனை நிச்சயம் கொல்வான். பீமனோ துரியோ தனாதியர் கூட்டத்தையே கொன்று குவிப் பான். அவர்களின் இரத்தத்தை நெய்யாகப் பூசி நீ விரித்த கூந்தலை முடிக்கலாம் ” என்று ஆறுதல் கூறினான்.
அதற்குப்பின் கண்ணபிரான், “திரௌ பதி! அஸ்தினாபுரத்தில் உனக்கு ஏற்பட்ட கொடுமையான நிகழ்ச்சியின் போது நான் துவாரகையில் இருக்கவில்லை. இருந்தி ருந்தால் சூதாட்டத்தையே தடுத்திருப் பேன். அன்று திருதராட்டிரர், துரியோ தனன் ஆகியோர் என்னை அழைக்காமல் இருந்தாலும் அங்கு வந்து பீஷ்மர், துரோணர்களோடு கலந்து பேசி, அச்சூதாட்டத்தையே தடுத்திருப்பேன். அப்போது நான் சால்வ ராஜனை எதிர்த்துப் போரிட வேண்டி நாட்டை விட்டு வெளியே போயிருந்தேன். சேதி நாட்டு மன்னன் சிசுபாலனை இராஜசூய யாகத் தின்போது நான் வதம் செய்தேன் என்கிற கோபத்தினால் நான் துவாரகையில் இல்லாதபோது என் நகரத்தை அச்சிசுபாலன் தம்பி சால்வராஜன் முற்றுகையிட்டு, நகர மக்களை சொல்லொணாத துன்பத்தில் ஆழ்த்தினான். நான் துவாரகை சென்றதும் செய்தி தெரிந்து அவனைத் தொடர்ந்து துரத்திச் சென்று அவனை வதம் செய்து துவாரகைக்குத் திரும்பினேன். அஸ்தினா புரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தை யும் வந்த பின் தான் அறிந்து கொண்டேன். உடனே உங்களைப் பார்க்க இங்கே வந்தேன். அணை உடைந்து, பாய்ந்து வரு கின்ற வெள்ள நீரைத் தடுக்க முடியாதது போல இங்கு நடந்த செயல்கள் எல்லாம் நம் தலைக்குமேல் போய்விட்டன. அதனால் உங்கள் துக்கத்தை உடனே போக்க இயலாதவன் ஆகி விட்டேன்: எல்லாம் விதியின் செயல்” என்று கூறினார்.
அதன் பின்னர் கண்ணபிரான் அனை வரிடமும் விடை பெற்றுக்கொண்டு அர்ச் சுனன் மனைவி சுபத்திரையையும், அவன் குழந்தை அபிமன்யுவையும் துவாரகைக்கு அழைத்துச் சென்றார். திட்டத்துய்மனோ, திரௌபதியின் புதல்வர்களான இளம் பஞ்ச பாண்டவர்களை அழைத்துக் கொண்டு பாஞ்சால நகருக்கு ஏகினான்.
மகாபாரதம் – 19 வனம்புகு சருக்கம், அட்சய பாத்திரம், மைத்திரேயர் சாபம், திருதராட்டிரரின் கோபம்