Home Aanmeega Bhairav கன்யாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் வரலாறு…. History of Mandaikadu Bhagavathi Amman, Kanyakumari District ….

கன்யாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் வரலாறு…. History of Mandaikadu Bhagavathi Amman, Kanyakumari District ….

0
 
 

கன்யாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரைச்சாலையில் உள்ள கிராமம் மண்டைக்காடு. இங்கு அருட் பாலிக்கிறாள் பகவதி அம்மன். மண்டைக்காடு முன்பொரு காலத்தில் அடர்ந்த வனமாகவும், மணல் மேடாகவும் இருந்தது. இப்பகுதியைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள மக்கள், தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு ஓட்டி வருவார்கள். சிலர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு பசு மாடுகளை வளர்த்து வந்தனர். இந்த மாடுகளை பெரும்பாலும் வனத்திலே விட்டுத்தான் வளர்ப்பார்கள். அந்த மாடுகளை மலை மாடுகள் என்று கூட அழைப்பதுண்டு. இந்த மலை மாடுகள் இரவிலும் அங்கேயே பட்டியல் வைத்து அடைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மாடுகள் அடைக்கப்படும், அல்லது கூடும் இடத்தை மந்தை என்று அழைப்பார்கள். அந்த வகையில் இவ்விடம் மந்தைக்காடு என்று அழைக்கப்பட்டது.
அது மருவி மண்டைக்காடு என்று அழைக்கப்படலாயிற்று. இந்த மண்டைக்காடு பகுதியில் முற்காலத்தில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகினர். இந்த நோயின் தாக்கத்தை மந்திரவாதிகள் பேய், பிசாசு, இறந்து போனவர்களின் ஆவி என்று பலவாறு கூறி மக்களிடம் பணம் பறித்து வந்தனர். குறிப்பாக மந்தைக்காடு பகுதியில் இருந்த சுணை அருகே கணவனால் கோபத்தில் தாக்கப்பட்ட பெண் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தாள். அந்த பெண்ணை அவ்விடத்தில் அடக்கம் செய்திருந்தனர். அந்த பெண்ணின் ஆவி தான் காரணம் என்று கூறி நோயின் தாக்கத்தில் இருந்தவர்களிடம் பேய் விரட்டினேன் என்று கூறி பணம் மற்றும் கோழி, ஆடு முதலான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்களை மந்திரவாதிகள் வசதியாக்கிக் கொண்டனர்.

இவைகளைப் பற்றி கேள்வியுற்ற அவ்வழியாக பயணம் செய்த ஒரு மடாதிபதியின் சீடர் ஒருவர் மந்தைக்காட்டிற்கு விஜயம் செய்தார். சுணை(நீர் ஊற்று, தற்போது கிணறாக உள்ளது) அருகே வந்தார். 63 கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் கூடினர். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சுவாமிஜி, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார். சாது ஸ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் அவ்விடத்தில் கூடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது.
உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப் பார்த்தபோது, காயம் எதுவும் இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள் கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள். பின்னர் இத்தகவல் திருவிதாங்கூர் மன்னருக்கு தெரிய வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அன்றிரவு, மன்னரின் கனவில் வந்த பகவதி அம்மை, ‘‘ நான் இங்கே குடிகொண்டுள்ளேன்.
புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும்’’ என்று கூறினாள். மறுநாள் மன்னர், அமைச்சர், காவலர்கள் மற்றும் அரண்மனை ஜோதிடர்களையும் அழைத்துக்கொண்டு மண்டைக்காடு வந்து, புற்றின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பின்னர், பகவதி அம்மை கனவில் கூறியதுபோல், புற்றில் சந்தனம் சாத்தி வழிபட்டார். மன்னர் களபம் சாத்தி வழிபட்டதும் புற்றில் ரத்தம் வடிவது நின்றது. பகவதி அம்மை தன் கனவில் தோன்றியதை மக்களுக்கு விளக்கிய மன்னர். இங்கு தினமும் பூஜை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன் பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
மக்களின் பிணி தீர்க்க வந்த கேரளத்து சாது, அம்மன் புற்றில் எழுந்தருளிய காட்சியைத் தரிசித்து உள்ளம் குளிர்ந்தார். தாம் வந்த வேலை முடிந்தது என்று நினைத்த சாது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே இடது புறத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினார். பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, ‘‘நான் இந்தக் குழியில் தியானம் செய்யப்போகிறேன். நான் தியானத்தில் ஆழ்ந்ததும், இந்தக் குழியை மண்ணால் மூடிவிட்டு மறுநாள் காலையில் வந்து பாருங்கள்’’ என்று கூறினார். சிறுவர்கள், சாது கூறியபடியே, அவர் தியானத்தில் ஆழ்ந்ததும் மண்ணைக் கொட்டி குழியை நிரப்பினர். சிறுவர்கள் நடந்ததை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மறுநாள் சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, குழிக்குள் சாது தியானத்தில் ஆழ்ந்ததுபோல் இருந்தார்.
அவரிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. அவர் சமாதி அடைந்துவிட்டார் என்பதை உணர்ந்த மக்கள், குழியின் மேல் பலகை வைத்து அதன் மேல் மண்ணைக் கொட்டி, குழியை மூடிவிட்டனர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரில் இப்போது அமைந்திருக்கும் பைரவர் சந்நதிதான், சாதுவின் சமாதி என்று கூறுகிறார்கள். மண்டைக்காடு பகவதிக்கும், பின்னர் சாதுவின் சமாதி பீடத்திலும் நைவேத்தியம் செய்கிறார்கள். ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், வழியாக கேரள மாநிலம் கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை கோட்டாறு சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன் வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக வந்துகொண்டிருந்தார்.
அப்போது இரவாகிவிட்டது களைப்படைந்த வியாபாரி, மண்டைக்காடு கோயில் அருகே ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரிடம், ‘‘பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தப் பகுதியில் ஊணு களிக்க கடை ஏதும் உண்டா?’’ என்று கேட்டார். அந்த நபர், விளக்கொளியில் மிளிர்ந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலைச் சுட்டிக்காட்டி, அதோ வெளிச்சம் தெரிகிறதே அங்கு சென்றால் உணவு கிடைக்கும்’’ என்று கேலியாகச் சொன்னார். அதனை நம்பிய வியாபாரி, கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு வியாபாரி எதிர்பார்த்தபடி கோயில் விடுதியாகக் காட்சியளித்தது. அங்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவரிடம்,அம்மச்சி சாப்பிட ஏதும் கிட்டுமா’’ என்று கேட்கவும், இலையில் அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார் அந்த மூதாட்டி.
அத்துடன் நிற்காத மூதாட்டி வண்டி மாடுகளுக்குத் தண்ணீரும் தீவனமும் தயாராக இருப்பதாகக் கூறினார். காளை மாடுகளுக்கு உணவு கொடுத்த வியாபாரி, நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே தங்கினார். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, மூதாட்டி அங்கு இல்லை. இரவு வீடு இருந்த இடத்தில் கோயில் இருப்பதைக் கண்டார். இரவு தனக்கு உணவளித்தது பகவதி அம்மை தான் என்பதை உணர்ந்தார். நெஞ்சுருகி அம்மன் பாதத்தில் விழுந்து வணங்கினார். வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துணியில் கட்டி கோயில் திருப்பணிக்கான காணிக்கையாக வைத்தார். கொல்லத்துக்குச் சென்று மண்டைக்காட்டில் நடந்த அதிசயத்தை மக்களிடம் சொன்னதுடன், அமுது படைத்த பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்து படையல் செய்வதற்காக, ஆண்டுதோறும் இருமுடி கட்டி மண்டைக்காட்டுக்கு வரத் தொடங்கினர்.
இருமுடியில் ஒருமுடியில் பொங்கலிடத் தேவையான பொருட்களும் மற்றொரு முடியில் பூஜைக்குத் தேவையான பொருட்களும் இருக்கும். ‘‘அம்மே சரணம், தேவி சரணம், மண்டைக்காட்டம்மே சரணம், சரணம் தா தேவி, சரணம் தா தேவி பொன்னம்மே’’ என்று சரண கோஷம் ஒலிக்க, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருமுடி சுமந்து பக்திப் பரவசத்துடன் மண்டைக்காட்டுக்கு ஆண்டுதோறும் வருகிறார்கள். இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால் ‘பெண்களின் சபரிமலை’ என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது
பக்கத்துணை இருப்பாள் பகவதி அம்மன்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here