ஸ்ரீ தமிழ் முருகன் பெருமையும் கந்த புராண மகிமையும்
கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீமத் ராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல், பதினெண் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் கந்தபுராணம் ஒரு மங்கல புராணம்; மாங்கல்ய புராணம்.
‘மாங்கல்ய புராணம்’ என்ற சிறப்பிற்குக் காரணம் இப்புராணத்தில் பார்வதி கல்யாணம், தெய்வயானை கல்யாணம், வள்ளி கல்யாணம் என்று பல கல்யாண வைபவங்கள் விவரிக்கப்படுகிறது.
இப்புராணம் துஷ்டர்களை சம்ஹாரம் செய்து இஷ்டர்களைக் காக்கும் தர்ம புராணம். கண்ணன் சொல்லும் கீதை போல் கந்தபுராணமும் ஞான போதனை தரும் ஓர் ஒப்பற்ற அற நூலாகத் திகழ்கிறது.
கந்தபுராணம் சர்வ மங்களம் பொங்கும் பாற்கடல். பக்தி மணம் பரப்பும் கற்பகச் சோலை.
கந்தபுராணம் சிவனருள்பெற்ற ஆன்மீக அரிச்சுவடி. சிவம் என்றாலே மங்களம் என்று பொருள். மங்களத்தைக் கொடுக்கும் நந்நூல் கந்தபுராணம். ஸ்ரீராம நாம பிரவசனம் நடக்கும் இடமெல்லாம் ஆஞ்சநேய மஹாப்பிரபு எழுந்தருளி பக்தர்களை கடாக்ஷிப்பது போல் சிவபெருமானும், கந்தபுராணம் பிரவசனம் சொல்லப்படுகின்ற இடமெல்லாம் ரிஷபாரூடமூர்த்தியாக எழுந்தருளி சிவ பக்தர்களைக் காத்து ரக்ஷிக்கின்றார்.
தமிழ் பூவுலகம் உய்வதற்கு சூதமுனிவர் அருளிச் செய்த பதினெண் புராணங்களுள் ஒன்றான கந்தபுராணம் ஜொலிக்கும் நவரத்தின கிரீடமாகத் திகழ்கிறது.
இந்த உத்தமமான பதினென் புராணங்களுள் பரம் பொருளான சிவபெருமானின் மகிமைகளைச் சொல்லும் புராணங்கள் பத்து. அந்த பத்து புராணங்களுள் ஸ்கந்த புராணம் மிகவும் சிரேஷ்டமானதாகவும், சிறப்பான தாகவும் எங்கும் பிரகாசமாய்த் திகழும் வேதவேதாந்த ஆகம பொக்கிஷமாகவும் போற்றப்படுகிறது.
குன்றுதோறாடும் குமரப் பெருமான் குமரகோட்டம் எனும் திருக்கோயிலில் எழுந்தருளி பக்தர்களைக் காக்கும் கருணாமூர்த்தியாகத் திவ்யதரிசனம் தருகின்றார் . அப்பெருமானை முப்போதும் பூஜிக்கின்ற பேறு பெற்றவர் கச்சியப்பசிவாசாரியார்.
“கச்சியப்பர் இருபாதம் உச்சிவைப்போம்’ என்று கொண்டாடும் அளவிற்கு பெரும்பேறு பெற்ற ராமகாதையை வரைந்த கம்பனுக்கு இணையானவர் கச்சியப்பர்.
“அம்” என்றால் ஆறாயிரம் பாக்களும் “இம்” என்றால் ஈராயிரம் பாக்களும் புனையவல்ல பெரும்புலவர் கச்சியப்பர். அகிலம் தழைக்கப் பொழியும் முகில் மழை போல் ஆன்மீகம் தழைக்க பக்தி மழை பொழிந்தவர் கச்சிசயப்பர் என்றால் அது மிகையாகாது.
கச்சியப்பர் வடமொழியிலும் தேன் தமிழாம் தென்மொழியிலும் நல்ல புலமை பெற்றவர்.
குமர கோட்டத்தில் பரம்பரை அர்ச்சகராக இருந்து வந்த ஆதிசைவ குலத்தைச் சேர்ந்த காளத்தியப்ப சிவாசாரியாருக்கு மகனாகத் தோன்றியவர் கச்சியப்பர்.
கச்சியப்பர் குமரகோட்டத்துப் பெருமானைப் பக்தி யோடு முப்போதும் பூஜித்து வந்தார். கந்தபுராணத்தைத் தமிழில் திருச்செவி சாதிக்க திருவுள்ளம் கொண்ட கந்த பெருமான் ஒரு நாள் கச்சியப்பர் கனவில் வேலும் மயிலும் செ கொண்டு எழுந்தருளினார். கச்சியப்பர் உடல் புளகம் போர்க்க-மெய் விதிர் விதிர்க்க முருகனை நிலம் கிடந்து சேவித்தார்.
முருகப் பெருமான் கச்சியப்பரைத் திருக்கண் மலர்ந்து, ”பக்தா! சங்கர சம்ஹிதையின் முதற்காண்ட மான சிவ ரகசியத்துள்ளே நமது சரிதை கூறப்பட் டுள்ளது. அதனை நற்றமிழில் பாடுவாயாக! எமது புராணத்தை எழுதத் தொடங்கும் உனக்கு ‘திகட சக்கர’ என அடி எடுத்துக்கொடுக்கின்றோம்” என்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தியாமியானார்.
அன்று சுந்தரமூர்த்தி நாயனார்க்கு ஈசன் “பித்தா” என்று அடி எடுத்துக் கொடுத்தாற் போல் சிவன் மகன் முருகன் இன்று கச்சியப்பருக்கு அடியெடுத்துக் கொடுத்தார்.
கச்சியப்பர் கனவு கலைந்து எழுந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். தேவாதி தேவனைக் காணவில்லை! ஆனந்தக் கண்ணீர் தாரைதாரையாகப் பெருகியது. அதற்குமேல் உறங்கவில்லை கச்சியப்பர்.
எம்பெருமான் அடியெடுத்துக் கொடுத்த ”திகட சக்கர” எனும் அமுதமொழியை மனதினிலே நிலை யாகக் கொண்டார். நன்னீராடி திருவெண்ணீறு அணிந்து ருத்ராக்ஷ மாலைகள் தரித்து முருகனின் திருநாமத்தைச் சிந்தையிலே கொண்டார். ஏடும், எழுத்தாணியும் எடுத்துக் கொண்டார். நேராக குமரகோட்டத்திற்குப் புறப்பட்டார்.
கோயில் புறத்தே நின்று கோபுரத்தைத் தரிசித்தார். திருக்கோவிலுள் சென்று திருச்சந்நதிகளை வழிபட்டு முருகன் சந்நதி வந்தார்.
ஏடும் எழுத்தாணியும் எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். வேழமுகத்து விநாயகரைப் பிரார்த்தித்து ஏட்டில் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கினார். எழுதத் திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் சகட சக்கர வின்மணி யாவுறை விகட சங்கரன் மெய்ப் பதம் போற்றுவோம் என்று விநாயகர் காப்புப்பாயிரம் எழுதி முடித்தார்.
சுவடிகளை முருகனின் பாதகமலங்களில் சமர்ப்பித்து, எடுத்துப் பார்த்து படித்து மகிழ்ந்தார். காதலால் கசிந்து கண்ணீர் மல்கினார். ஒரு நாளுக்கு நூறு பாடல்கள் என்ற கணக்கில் எழுதத் தொடங்கினார்.
முதல் நாள் நூறு பாக்களை முடித்த பெருமிதத்தில் எழுதிய சுவடிகளை இரவு நடை சாத்தும் தருணத்தில் குமரப்பெருமானின் பாதகமலங்களில் சமர்ப்பித்து அவன் தாளைத் தலையால் வணங்கினார்.
மறுநாள் நடை திறந்ததும் முருகன் சந்நிதி சென்று சுவடிகளை எடுத்து முதல் நாள் எழுதியதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தார். படிக்கப் படிக்க கச்சியப்பருக்குப் பேரானந்தம் பொங்கிப் பெருகியது. அதற்குக் காரணம் சுவடியில் ஆங்காங்கே பிழைதிருத்தம் செய்யப்பட்டிருந்தது. முருகப் பெருமானின் பேரருளை எண்ணி எண்ணி அகமும் முகமும் மலர்ந்தார்.
இங்ஙனம் கச்சியப்பர் எழுதுவதும் கந்த பெருமான் திருத்துவதுமாக 10345 பாக்களைத் தொடுத்து முடித்து மால்மருகன் திருமேனிக்குப் பாமாலை சாத்தினார்.
காப்பியம் முழுமை பெற்றதும் அதனை முருகனின் அங்கீகாரத்துடன் அரங்கேற்றம் செய்ய ஆசைப்பட்டார் கச்சியப்பர்.
பண்டைய நாளில் ஒரு புலவனின் படைப்பினை அரங்கேற்றம் செய்ய வேண்டுமானால் அவரது படைப்புக்களைப் பண்டிதர்கள் முன்னால் படித்துக் காண்பித்து அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அது சமயம் புலவர்களிடையே நூல் பற்றிய வாதப் பிரதி வாதங்கள் நடக்கும். தர்க்கம், குதர்க்கம் என்று அவையே அல்லோலப்படும்.
இதற்கெல்லாம் ஈடுகொடுத்து சொற்குற்றம், பொருட்குற்றம், இலக்கணப்பிழைகள் என்று வாதாடும் புலவர்களின் கேள்விக்குத் தகுந்த வியாக்கியானங்களைச் சொல்லி அவையோர் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் காப்பியம் அரங்கேற்றமாகும். அரங்கேற்றமான பிறகு ராஜ மரியாதைகளுடன் காப்பியம் செப்பேடு செய்து பாதுகாக்கப்படும்.
இப்படித்தான் திருத்தொண்டத் தொகை எனும் பெரிய புராணம், கம்பராமாயணம், தொல்காப்பியம் போன்ற எத்தனையோ காப்பியங்கள் அரங்கேற்றமாயின.
மன்னர் முன்னிலையில் புலவர்கள், புரவலர்கள், ஆன்மீக அன்பர்கள் சூழ்ந்திருக்க, கந்த புராணம் அரசாங்க அங்கீகாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின. கச்சியப்பர் அவையோரைப் பணிந்து கந்த புராண காப்பியத்தைப் படிக்கத் தொடங்கினார். ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்ற காப்பு செய்யுள் வரிகளைப் படித்தார்.
அப்பொழுது அவையிலே சலசலப்பு. புலவர் ஒருவர் எழுந்து, “திருவாளர் கச்சியப்பப் புலவரே! உமது காப்புச் செய்யுளில் குற்றம் கண்டோம். ‘திகடசக்கரம்! என்று எவ்வாறு புணரும்? திகழ்+தசம் என்பது திகடசம் என புணருதற்கு இலக்கண நூல்களில் விதி இல்லையே!
“ள” – கரத்தின் முன் “த” கரம் வந்தால் “ட” கரமாவதற்கு விதி உள்ளது. “ழ” கரத்தின் முன் “த” கரம் வந்தால் “ட” கரமாவதற்கு இலக்கணத்தில் எங்கே விதி உள்ளது?” என்று வினா எழுப்பினார்.
புலவரின் கூற்றிற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் கச்சியப்பர் “தகைசான்ற பெரியீர்! இதை நானும் அறி வேன். காப்பின் முதலடி முருகப் பெருமானால் எடுத்துக் கொடுக்கப்பட்ட திருவாக்கு. அந்த அருள்வாக்கு இந்த காப்பியத்திற்கு சூட்டப்பட்ட மணிமகுடம் ” என்றார்.
“அங்ஙனமாயின் அந்த முருகப் பெருமானே அவை முன் எழுந்தருளி உமக்கு அருளிச் செய்ததை அவை அறிய சொல்லட்டும்.”
“இதுதான் உங்களது முடிவென்றால் இன்று அவை கலையட்டும். நாளைக் கூடும் அவையில் அவையோர் ஐயத்திற்குப் பதில் கூறப்படும்” என்று பணிவோடு பகர்ந்தார். கச்சியப்பரின் வேண்டுகோளை ஏற்று அவை கலைக்கப்பட்டது.
கச்சியப்பர் முருகன் திருமுன் கவலைதோய்ந்த முகத்துடன் தியான நிலையில் அமர்ந்தார். கந்தப் பெருமானை நேத்திரங்களில் நீர் சிந்த தோத்திரம் செய்தார்.
“ஏறுமயில் ஏறி விளையாடும் ஞானவேளே! அடியெடுத்துக் கொடுத்துப் புலவர்களிடம் அடிவாங்க வைத்து விட்டீர்களே! ஐயனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்றோ? பாலசுப்ரமண்யப் பெருமானே! நாளை அவையில் உமது திருவடி எடுத்து வைத்து, எனக்கு எடுத்துக் கொடுத்த அடிக்கு இலக்கண விளக்கம் சொல்லுதல் வேண்டும்”
அன்றிரவு குமரகோட்டத்து குமரேசன் நீலமயில் மீது அமர்ந்து கரங்களில் கூர்வேல் தாங்கி கச்சியப்பர் கனவில் பிரசன்னமானார்.
”சுந்தரத் தமிழால் எமது புராணம் பாடிய புலவா! வருத்தம் வேண்டாம். விடிகின்ற பொழுது உமக்கு வெற்றியைத் தரும். நிம்மதி கொள்வாய்!” என்று சொல்லி மறைந்தருளினார்.
கனவு கலைந்தார் கச்சியப்பர். கந்தனின் கருணை உள்ளத்தைக் கண்டு கண்ணீர் மல்கினார். களி உண்ட வண்டு போல் பக்தி மயக்கத்தில் மூழ்கினார். மறுநாள் அவை கூடியது! அவை நடுவே ஓர் புலவன் காட்சி அளித்தான்.
பூரண சந்திரனைப் போன்ற அழகுமுகம். நெற்றியிலே திருவெண்ணீற்றுப் பேரொளி. திருமேனியிலே ருத்ராக்ஷ மணிமாலைகள். அரையிலே பொன்பட்டு வஸ்திரம். கங்கணம் கொஞ்சும் திருக்கரங்களிலே ஏட்டுச் சுவடி. அந்த புலவன் எழுந்தான். “அவையோர்களே!” என்று குரல் கொடுத்தான்.
தந்தைக்கு உபதேசம் செய்தவன் இன்று இலக்கணத்திற்கு விளக்கம் சொல்ல வந்தான். அவனைப் பார்த்ததும் அவையோர் பிரமை பிடித்தவர்போல் ஆயினர். இளமை எழில் கொஞ்சும் சித்தரை, வைத்தவிழி வாங்காமல் அவையோர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
புதிதாக வந்த புலவர், அவையோரை நோக்கி, ”அவையோர்களே! நேற்று நீங்கள் எழுப்பிய வினாவிற்கு விளக்கம் சொல்லவந்துள்ளேன். சோழ நாட்டில் வீரசோழியம் எனும் இலக்கண நூல் ஒன்று உள்ளது. அதில் சந்தி படலத்தில் பதினைந்தாம் செய்யுளில் திகழ்+தசம்=திகடசம் என்று புணர்வதற்கு விதி இருக்கிறது. அந்தச் சுவடியைப் படியுங்கள்” என்று சொல்லி சுவடியை அவையோர் முன் வைத்தான். முதல் நாள் ஐயம் எழுப்பிய புலவன் சுவடியை எடுத்துப் பதினைந்தாம் செய்யுளைப் படிக்கலானான்.
நான்கொடு மூன்றொன்ப தாம் உயிரின் பின்பு
நவ்வருமேல் ஏன்ற ஞாகாரம் தாம்; பதினைந்தினோடு எண்ணி தோன்றும் உடல்பின் தகாரம் வரினிரண்டும் ரண்டாய்த் தொடர்பால் ஆன்ற ஐந்தாம் உடலாம்; முன்பில் ஒற்றுக்கு அழிவுண்டே என்ற செய்யுளைப் படித்ததும் முருகப் பெருமான். “நிலைமொழி ஈற்றில் ழ் -ள் ஆகியன வந்து வருமொழி முதலில் த வந்தால் இரண்டும் புணர்ந்து “ட” ஆகும். என்பது தான் இந்த விதி. தகழ் + தசம் நிலைமொழி ஈற்று ‘ழ்’ வருமொழி முதல் ‘த’ இரண்டும் புணர்ந்து திகடசம் என்றானது.” என்று விளக்கம் சொல்லி மறைந்தருளினார். சோழநாட்டுப் புலவன் என்று கூறிக் கொண்டு வந்த முருகன் மறைந்ததும் புலவர்கள் பிரமித்தனர்.
அவையோர் அதிசயித்தனர். ஆன்மீக அன்பர்கள் “முருகா! கந்தா! கடம்பா!” என்று கோஷம் எழுப்பினர்.
பக்தனுக்காக இறைவனே முதலடி எடுத்துக் கொடுத்ததோடு மட்டுமின்றி தனது திருவடி தேய புலவனாக அவைக்கு எழுந்தருளி இலக்கண விளக்கம் சொன்ன விந்தை கண்டு நாடே வியந்தது. அவையே பிரமிப்பில் மூழ்கியது. புலவர் கச்சியப்பரின் பெருமைக்குத் தலைவணங்கினார்.
அவையோர் முருகப் பெருமானின் பேரருளையும், கச்சியப்பர் பொருட்டு கந்தபெருமான் நடத்திய திருவிளையாடலைப் பற்றியும் மூவுலகும் போற்றப் பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கச்சியப்பர் கந்தபுராணம் முழுமையும் படித்து பொருள் கூறி அவையோரின் நன்மதிப்பைப் பெற்றார்.
ஓர் நன்னாளில் கச்சியப்பரின் கந்தபுராண காப்பியம் அரங்கேற்றமானது. அரசன் பொன்னும் பொருளும் கொடுத்துப் புலவரைக் கௌரவப்படுத்தினான். விருதுகள் வழங்கினான், சில கிராமங்களைத் தானமாகக் கொடுத்தான்.
கச்சியப்பரைத் தங்க பல்லக்கில் அமரச் செய்து தொண்டை மண்டலத்தின் இருபத்து நான்கு கோட்டத்து வேளாளப் பிரபுக்கள் சுமக்க வீதிஉலா அழைத்துச் சென்று கெளரவித்தார். கச்சியப்பர் பூவுலகில் பல்லாண்டு வாழ்ந்து முருகப் பெருமானைப் பாடிப் புகழ்ந்து போற்றி அவனது திருவடி நிழலில் வைகினார்.
பூவுலகம் உய்வதற்கு சூதமுனிவர் அருளிச் செய்த பதினெண் புராணங்களில் பரம் பொருளான சிவ பெருமானின் சிவபுராணங்கள் பத்து. அந்த பத்து புராணங்களுள் ஸ்கந்தபுராணம் மிக உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும், எங்கும் பிரகாசமாய்த் திகழும் வேதவேதாந்த ஆகமபொக்கிஷமாகவும் போற்றப்படுகிறது.
ஸ்கந்தபுராணம் ஒருலட்சம் சுலோகங்களைக் கொண்டது. ஸமஹிதை என்று கூறப்படும் ஆறுபிரிவு களைக் கொண்டது. ஆறு சம்ஹிதைகளும் முறையே சனத்குமார ஸம்ஹிதை, ஸூதஸம்ஹிதை, பிரம்ம ஸம்ஹிதை, விஷ்ணு ஸம்ஹிதை, சங்சர ஸம்ஹிதை, ஸௌரஸம்ஹிதை என்று சொல்லப்படுகிறது.
இவற்றுள் வேதத்திற்கு நிகராகச் சொல்லப்படும் சங்கர ஸம்ஹிதையில் 30,000 சுலோகங்களும் பன்னிரண்டு காண்டங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றான சிவரஹஸ்ய காண்டம் 13,000 சுலோகங்களும் ஏழு காண்டங்களும் கொண்டது.
இவ்வேழு காண்டங்களுள் சம்பவகாண்டம் அசுரகாண்டம் – மஹேந்திரகாண்டம் – யுத்தகாண்டம்- வேதகாண்டம் – தக்ஷகாண்டம் எனும் ஆறு காண்டங்கள் மட்டுமே கச்சியப்ப சிவாச்சாரியரால் 10345 சுலோகங் களாலான கந்தபுராணம் எனும் புராணசம்பத்தாக அருளப்பட்டது. உலக முதல் மொழி தமிழில் வியாசபகவான் அருளிய கந்தபுராணம் தமிழ் கடவுளுக்கு சமர்ப்பணம்.
கந்த புராணம் – 1 ஸ்ரீ முருகன் பெருமையும் கந்த புராண மகிமையும் Skanda Purana