மரகதலிங்கம் மாயமானது தொடர்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்து புகாரின் விசாரணை நிலை குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.ஐ ராஜ்சேகர் ஆய்வு செய்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் எதிரே குன்னத்தூர் சத்திரம் அருகில் மாநகராட்சி வரிவசூல் அலுவலகத்தில் பழமையான மரகத லிங்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்திரத்தன்மை இழந்ததாக கூறி அக்கட்டிடத்தை இடித்தபோது, அங்கிருந்த மரகதலிங்கம் உள்ளிட்ட பொருட்கள் மதுரை மாநகராட்சி கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதில் மரகதலிங்கம் மட்டும் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் 2013-ல் தல்லாகுளம் போலீஸில் புகார் கொடுத்தார். தொடர்ந்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையிலும் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் மதுரை வந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், மரகதலிங்கம் மாயம் குறித்து மாநகராட்சி ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
மரகதலிங்கம் எனக் குறிப்பிட்டுள்ள ஆவணம் ஒன்றைக் கைப்பற்றினர். இது தொடர்பாக ஓரிரு மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரிக்க முயன்ற போது, முறைப்படி மாநகராட்சி நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெற்று, சம்மன் அனுப்பி அழைத்தால் மட்டுமே விசாரணைக்கு ஒத்துழைப்போம் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி, ஏடிஎஸ்பி அந்தஸ்திலுள்ள அதிகாரி ஒருவர் மூலம் மாநகராட்சி அனுமதியைப் பெற்று விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில் மரகதலிங்கம் மாயம் தொடர்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்து புகாரின் விசாரணை நிலை குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ ராஜ்சேகர் ஆய்வு செய்தார்.
புகாருக்கு வழங்கிய ஒப்புகை நகல் ( சிஎஸ்ஆர்) போன்ற விவரங்களைக் கேட்டறிந்தார்.
புகார் கொடுத்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் போலீஸ் புகார் கிடப்பில் போடப்பட்டதாக சிலைக்கடத்தல் தடுப்புப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.