வழிபாடுகளும் பூஜைகளும் நம்மை மலர்ச்சிப்படுத்துகிற விஷயங்கள். இறைசக்தியானது நம்மைச் சுற்றி அரண்போல் காப்பதற்கு பூஜைகளும் வழிபாடுகளும் மிக மிக அவசியம். அப்படியொரு அளப்பரிய சக்தியைக் கொண்டதுதான் நவராத்திரி காலம்.
நவராத்திரி என்பது சக்திக்கு உரிய காலம். சக்தி வழிபாட்டுக்கு உரிய காலம். சக்தியை ஆராதித்து பூஜிப்பதற்கு உகந்த காலம். இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கனிந்த முகமும் கருணை விழிகளும் கொண்டு, ஆயிரம் மடங்கு சாந்நித்தியத்துடனும் சக்தியுடனும் தேவி திகழ்கிறாள் என்பது ஐதீகம்.
நவராத்திரி காலத்தில் முடிந்தவரை அம்பாள் குறித்த ஸ்லோகங்களை, ஸ்தோத்திரங்களை, நாமாவளிகளைப் பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. நவராத்திரி விரதம் இருப்பவர்கள், மெத்தையிலோ கட்டிலிலோ படுத்து உறங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
இசையால் இறைவனை வசமாக்கலாம் என்பார்கள். அம்பிகையானவள், சங்கீதப் பிரியை என்கிறது புராணம். எனவே நவராத்திரி நாட்களில் அம்பாள் குறித்த பாடலை தினமும் பாடி பக்தி செலுத்துவதும் வழிபடுவதும் மனதில் சாந்த குணத்தை ஏற்படுத்தும். மனதில் தெய்வீகக் குணத்தை வளர்க்கும். இல்லத்தில் கணவன் மனைவி இடையே ஆன கருத்து ஒற்றுமை மேலோங்கும்.
நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை உரிய நியமங்களின்படி வணங்கி வாருங்கள். செம்மண் கோலமிடுவது இல்லத்தில் தெய்வ சாந்நித்தியத்தைக் கொண்டுவரும். இதில் அம்பாள் மகிழ்ந்துவிடுவாள்.
ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மகிழ்ந்து போவாராம்!
நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். நவராத்திரி நாட்களில் வெள்ளிக்கிழமையன்று ஐந்து சுமங்கலிகளுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் மாங்கல்ய தோஷம் விலகும். திருமண பாக்கியம் கைகூடும். மாங்கல்ய பலம் பெருகும். கணவரின் தீராத நோயும் தீரும்.
நவராத்திரி தொடர்பான ஸ்லோகம், மந்திரங்கள் தெரியவில்லையே என்று வருந்தத் தேவையில்லை. ’ஓம் லலிதாதேவியே நமஹ’ என்றோ ‘ஓம் மாத்ரே நமஹ’ என்றோ தினமும் 108 முறை ஜபித்து வந்தாலே பூரணப் பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் புராணச் சரிதங்களைப் படித்து வந்தாலோ, காதாரக் கேட்டு வந்தாலோ மகா புண்ணியம் என்கிறார்கள். நோய்கள் எதுவும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம். கடன் முதலான பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் விலகும். தனம் தானியம் பெருகும்.
நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என விரும்பாதவர்கள் எவருமில்லை. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்றும் அரசியலிலும் சமூகத் தொடர்புகளிலும் பிரகாசிக்க வேண்டும் என்றும் வேலைகளில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்து கெளரவமாக வாழ வேண்டும் என்றும் தொழிலில் விருத்தி அடையவேண்டும் என்று நினைப்பவர்கள், ஆசைப்படுபவர்கள், நவராத்திரி காலங்களில் தேவியை வணங்கவேண்டும். சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள், புடவை, ஜாக்கெட் வைத்துக் கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு புத்தாடைகள், வளையல், ரிப்பன் முதலானவற்றை வழங்கி ஆராதிக்கவேண்டும்.
நவராத்திரியில் அம்பிகையைக் கொண்டாடுவோம்; அவளின் அருளைப் பெறுவோம்.