அமாவாசை எனும் மங்கலகரமான நாளில், வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். கண் திருஷ்டி விலகும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் யாவும் கைகூடும்.
அமாவாசை என்பது மங்கலகரமான நாள். வழிபாட்டுக்கு உரிய நன்னாள். முன்னோர்களை வணங்கி ஆராதனை செய்வதற்கு உரிய நாள். பித்ருக்களின் ஆசி கிடைக்கும் நாள். பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களின் ஆசி, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக மிக அவசியம். எனவே அமாவாசை நாளில், முன்னோர் வழிபாடு செய்யவேண்டும்.
அதேபோல், பசுவை வணங்குவதும் பசுவுக்கு உணவோ அகத்திக்கீரையோ அளிப்பதும் மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காலையும் மாலையும் விளக்கேற்றுவதும் குடும்பமாக அமர்ந்து பூஜை செய்வதும் விசேஷம் வாய்ந்தது. அதேபோல் நம் வீட்டில் இறந்த முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு நமஸ்கரிக்கவேண்டும்.
அமாவாசை நாளில், குலதெய்வ வழிபாடு செய்வதும் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகள் செய்வதும் நற்பலன்களை வழங்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நம்முடைய குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால் சென்று வழிபடலாம். இல்லையெனில் வீட்டில் குலதெய்வப் படம் இருந்தால், அந்தப் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூக்கள் சார்த்தி வணங்கி வழிபடலாம். படம் இல்லையென்றாலும் கூட, விளக்கேற்றி, விளக்கையே குலதெய்வமாக பாவித்து, மஞ்சள் குங்குமம் வைத்து பூக்கள் சார்த்தி வணங்கலாம்.
காலையும் மாலையும் இஷ்ட தெய்வங்களை, அமாவாசை நாளில் வணங்குவதும் வழிபடுவதும் வேண்டிக்கொள்வதும் சகல செளபாக்கியங்களையும் கொடுக்கும்.
அமாவாசை நாளில், முன்னோர் வழிபாடு செய்துவிட்டு, குலதெய்வப் பிரார்த்தனையை செய்துவிட்டு, இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு, மாலையில் விளக்கேற்றியதும் குடும்பத்தார் அனைவரையும் வீட்டு நடு ஹாலில் அமரச் சொல்லி, கிழக்குப் பார்க்க அமரச் சொல்லி அல்லது வாசல் பார்த்து அமரச் சொல்லி, திருஷ்டி கழியுங்கள்.
பூசணிக்காயில் சூடமேற்றி மூன்று முறை சுற்றவேண்டும். அடுத்து தேங்காயில் சூடமேற்றி திருஷ்டி கழிக்கவேண்டும். பின்னர், எலுமிச்சையில் சூடமேற்றி திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். பூசணிக்காயையும் தேங்காயையும் வீட்டின் முச்சந்தியில் உடைக்கவேண்டும். எலுமிச்சையை வாசலில் நசுக்கி அந்த எலுமிச்சையைக் கிள்ளி நாலாதிசைக்கும் வீசவேண்டும். இதனால் கண் திருஷ்டி கழியும். அடுத்தவர் நம் மீது கொண்டிருக்கும் பொறாமையும் எரிச்சலும் தவிடுபொடியாகும்.
இதுவரை காரியத்தில் தடையாக இருந்த விஷயங்களும் மங்கல காரியங்களும் நடந்தேறும். தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!