மகத்துவம் நிறைந்த மாசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மாசி மகம், மகா சிவராத்திரி, உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மாசி மாதத்தில் சூரியன் கும்பம் ராசியில் பயணம் செய்கிறார். எனவே கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இம்மாதம் முழுவதும் புனித நீராட ஏற்ற காலமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். மாசிமாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது.
மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர். மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான். மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் எந்தெந்த நாட்களில் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.
மாசி மாதத்தில் முக்கிய பண்டிகை நாட்கள்:
மாசி 3ஆம் தேதி பிப்ரவரி 15 ஆம் தேதி மாத சதுர்த்தி
மாசி 4 ஆம் தேதி பிப்ரவரி 16ஆம் தேதி வசந்த பஞ்சமி
மாசி 5ஆம் தேதி பிப்ரவரி 17 ஆம் தேதி சஷ்டி விரதம்
மாசி 7 ஆம் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ரத சப்தமி சூரிய ஜெயந்தி – கிருத்திகை விரதம்
மாசி 11 ஆம் தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஜெய ஏகாதசி
மாசி 13 ஆம் தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
மாசி 14 ஆம் தேதி பிப்ரவரி 26 ஆம் தேதி மாசி மகம்
மாசி 18 ஆம் தேதி மார்ச் 02 ஆம் தேதி சங்கடஹர சதுர்த்தி
மாசி 22ஆம் தேதி மார்ச் 06 ஆம் தேதி வாஸ்து நாள் காலாஷ்டமி மகேஷ்வராஷ்டமி
மாசி 24ஆம் தேதி மார்ச் 08 ஆம் தேதி வியாதிபாத சிரார்த்தம்
மாசி 27ஆம் தேதி மார்ச் 11 ஆம் தேதி மகா சிவராத்திரி
மாசி 28ஆம் தேதி மார்ச் 12 ஆம் தேதி போதாயன அமாவாசை
மாசி 29 ஆம் தேதி மார்ச் 13 ஆம் தேதி மகா அமாவாசை