சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்திற்கு அதிக தடுப்பூசி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தலைநகர் சென்னையை அடுத்து பாதிப்பு எண்ணிக்கையில் கோவை இருந்து வந்தது. இந்நிலையில், கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். அதன்படி, கோவை புறக்கணிக்கப்படுகிறது, கோவையில் பாதிப்பு உயர்கிறது. கோவைக்கு கொரோனா தடுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் அதிகம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கோவைக்கு அதிக கொரோனா தடுப்பூசி வாங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன்;- செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் உள்ளிட்ட தமிழகத்திற்கான தேவைகள் குறித்து மத்திய அரசிடம் பேச இருப்பதாகக் கூறினார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டாம் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வுகள் இருக்கா இல்லையா என்பதை விரைவில் அரசு சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு வராத நிலையில் மத்திய அரசு தடுப்பூசிகளை கொடுத்துள்ளதாகவும் அதிலும் அதிகமாக தமிழக அரசு கோவைக்கு கொடுத்துள்ளதை வரவேற்கிறேன் என்றார். சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டது போல நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தற்போது 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், அதன் பின்னர்தான் நீட் தேர்வு எப்படி வரப்போகிறது என்பது தெரியவரும் என்று கூறினார்.