என்.ஆர்.காங்கிரசுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது என்றும் அமைச்சரவை பட்டியலை விரைவில் முதல்வர் ரங்கசாமி வெளியிடுவார் என்றும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மாதம் 7-ந் தேதி முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று பாதித்தால் சிகிச்சைக்கு சென்றார். மேற்கொண்டு அமைச்சர்கள் பதவியேற்பு வைபவம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரியில் துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவியை பாஜக கேட்டதாக கூறப்பட்டது.
இதனை என்.ஆர். காங்கிரஸ் ஏற்க மறுத்தது. துணை முதல்வர் என்ற பதவியே புதுவையில் கிடையாது என்றும் ரங்கசாமி கூறினார். அதற்கு பாஜக தரப்பு அதை மத்திய அரசு மூலம் திருத்தம் செய்து கொண்டு வருகிறோம் என்று கேட்டது ஆனால் ரங்கசாமி சம்மதிக்கவில்லை. இதனால் அமைச்சர்கள் யார் யார் என்பதில் முடிவு வரவில்லை.
என்ஆர் காங் பிடிவாதம்
இதையடுத்து சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர் பதவியை பாஜக தரப்பு கேட்டதாம். 2 அமைச்சர்கள் பதவி மட்டும்தான் தருவோம்; சபாநாயகர் பதவி எங்களுக்குதான் எனவும் என்.ஆர். காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதனால் என்.ஆர். காங்கிரஸை வழிக்கு கொண்டு வர பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
அமைச்சர் பதவிகள்
அண்மையில் அமித்ஷாவுடன் நடந்த பேச்சுக்கு பின்னர் சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியை தருவதற்கு ரங்கசாமி ஒப்புக் கொண்டார். 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகள் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பாஜக தரப்பில் அமைச்சர்கள், சபாநாயகர் பதவியை யாருக்கு வழங்குவது என ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் பாஜக கொடுத்த பட்டியலில் சபாநாயகர் பதவிக்கு செல்வம், அமைச்சர்கள் பதவிக்கு நமச்சிவாயம், ஜான்குமார் பெயர் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரங்கசாமி திட்டம்
என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி உள்ள நிலையில், அமைச்சர்களாக யார் யாரை நியமிப்பது என்று ரங்கசாமி முடிவு செய்யவில்லை. சீனியர்கள் மட்டுமில்லாமல் ஜூனியர்களுக்கும் வாய்ப்பு தர திட்டமிட்டுள்ளாராம். ரங்கசாமி இறைபக்தி அதிகம் உள்ளவர் என்பதால் எதற்குமே நல்ல நேரம், நல்ல காலம் பார்ப்பார் . அந்த வகையில் வளர்பிறையில் வரும் 14-ம் தேதி பதவியேற்பு விழா நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுமூக முடிவு
இந்நிலையில புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் நமச்சிவாயம், செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம், கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கையும் முதல்வர் ரங்கசாமி எடுத்து வருகிறார். விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும். என்.ஆர்.காங்கிரஸ் உடனான அமைச்சரவை பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சமூக முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிடுவார் என்றார். துணைமுதல்வர் பதவி குறித்த கேள்விக்கு தலைமை பதில் அளிக்கும் என்றும் நமச்சிவாயம் தெரிவித்தார்.
குழப்பம இல்லை
தொடர்ந்து பேசிய மாநில தலைவர் சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில் எந்த வித குழப்பமும் இல்லை என்றும் அமைச்சரவை பங்கீட்டில் முதல்வர் ரங்கசாமிக்கு பாஜக எவ்வித நெருக்கடியும் அளிக்கவில்லை என்றும் அமைச்சரவை பட்டியலை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.