தேவர்களின் தந்தை; உலகின் தலைவன்; பக்தர்களிடம் அன்புடையவன்; பிறப்பில்லாதவன்; எங்கும் வியாபித் திருப்பவன்; எல்லோராலும் தொழப்படுபவன்; அத்தகைய நாராயணனை வணங்குகின்றேன் பாரதம் கேட்க விரும்புகின்றோம் ஒரு காலத்தில் ‘ரோமஹர்ஷனர்’ என்ற பெயருடைய பௌராணிகர் ஒருவர் இருந்தார். அவர் புராணச் சொற் பொழிவுகள் நிகழ்த்துவதில் வல்லவர். சூத குலத்தைச் சேர்ந்தவர்.
அவருக்கு ‘உக்கிரசிரவஸ்’ என்பவர் மகனாகப் பிறந்தார். தம் தந்தையைப் போலவே இவரும் சொற்பொழிவுகள் செய்வதில் சமர்த்தர்; ஒருநாள் அவர் ‘நைமிசாரண்யம்’ என்ற பெயரையுடைய தபோவனத்திற்குச் சென்றார்.
அந்த நைமிசாரண்யத்தில் சௌனகர் என்னும் முனிவர் ஸத்ர யாகத்தைச் செய்து கொண்டு இருந்தார். அந்த யாகம் பன்னிரண்டு ஆண்டுகள் நடைபெறக்கூடிய தன்மை உடையது. யாகத்தின் பொருட்டு அங்கு ஏராளமான ரிஷிகள் கூடி இருந்தனர்.
ரிஷிகளை அங்கு கண்ட உக்கிரசிரவஸ் அடக்கத்துடன் அவர்களை வணங்கினார். பயபக்தியுடன் அவர்களைப் பார்த்து, ”தவசிரேஷ்டர்களே! இன்றைக்கு உங்கள் தரிசனம் கிட்டியதால் பாக்கியம் உள்ளவனானேன்; வியாச முனிவரால் அருளப்பெற்ற கதைகள் எல்லாவற்றையும் அறிந்துள்ளேன்; அதனை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்; அதனைக் கேட்டருள வேண்டும்” என்று பணிவுடன் கூறினார்.
உக்கிரசிரவஸ் கூறியதைக் கேட்டதும், அந்த ரிஷிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்தக் கதைகளைக் கேட்க விருப்பம் உடையவர் ஆனார்கள். எனவே அவர்கள் ஒன்று சேர்ந்து உக்கிரசிரவஸைக் கௌரவித்தனர். அவர் உட்கார ஆசனம் ஒன்றைத் தந்தனர். உக்கிரசிரவஸ் அதில் அமர்ந்தார். தாம் வந்த களைப்பு நீங்க அதில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார்.
அங்கு கூடி இருந்த ரிஷிகளில் ஒருவர் உக்கிரசிர வஸைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்: “சூதபுத்திரரே! தற்போது தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்? இவ்வளவு காலம் எங்கெல்லாம் சஞ்சரித்தீர்? அதனைச் சொல்ல வேண்டும்,’ என்று கூறினார்.
இதைக் கேட்டு உக்கிரசிரவஸ் அவர்களுக்குப் பதில் கூறத் தொடங்கினார்.”வியாச மகரிஷி மகாபாரதக் கதைகளை அருளிச் செய்தார். வியாசருடைய பேரனுக்குப் பேரன் பரிட்சித்து மகாராஜா. அவருடைய புதல்வர் ஜனமேஜயர். அந்த ஜனமேஜயர் சர்ப்ப யாகம் என்ற யாகமொன்றைச் செய்தார். அந்த யாகத்தின் போது வியாசர் கட்டளைப்படி,வைசம்பாயனர் என்பவர் ஜனமேஜயருக்கு அக்கதைகளைக் கூறினார்; அவர் சொல்லும் பொழுது நான் அக்கதையை உடன் இருந்து கேட்டேன்; அதன் பின்னர் பல க்ஷேத்திரங்களுக்கும், தீர்த்தங்களுக்கும், நாடுகளுக்கும் சென்றேன். பாரதப் போர் நடைபெற்ற ‘சமந்தபஞ்சகம்’ என்னும் இடத்திற்கும் போய் இருந்தேன்; அதன் பின்னர் உங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் இங்கு வந்தேன். நான் உங்களுக்குப் புராணங்களில் உள்ள புண்ணிய கதைகளைக் கூறட்டுமா? அல்லது அரசர்கள், ரிஷிகள் இவர்கள் வரலாற்றைச் சொல்லட்டுமா? எதைச் சொல்லட்டும்?” என்று கேட்டார்.
அதற்கு ரிஷிகள், “வியாச மகரிஷி அருளிச் செய்த மகாபாரதக் கதைகளையே நாங்கள் கேட்க விரும்புகிறோம்; அதனையே கூறுங்கள்,” என்றனர்.
இதைக் கேட்டவுடன், உக்கிரசிரவஸ் என்ற பெயரை யுடைய சூதர் சொல்லத்தொடங்கினார். அவர்கள் கூற்றுக்கு ஒப்புக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
எல்லாவற்றிற்கும் மூலகாரணன்; யாவற்றையும் படைத்தவன்; மங்கள ரூபன்; மாறுதல் இல்லாதவன்; சர்வ வல்லமையுள்ளவன்; அப்படிப்பட்ட அரியை வணங்கு கின்றேன்; உலக மக்களால் வணங்கப்படுபவர்; மகாத்மா; ஆச்சரியமான செய்கைகளை உடையவர்; மகாபாரதம் என்னும் பெருநூலை அருளிச் செய்தவர்; அத்தகைய வியாசரை வணங்குகின்றேன்; அவருடைய அனுக்கிரகத்தினால் இந்த நாராயணனுடைய கதையைச் சொல்லத் தொடங்குகின்றேன். வியாசர் தம்முடைய தவத்தினாலும், பிரம்மச்சரியத்தி னாலும் வேதங்களை நான்காக வகுத்தார். அதன் பின்னர் இந்தப் புண்ணியமான இதிகாசத்தைச் செய்தார்.
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள குகைக்கு வேதவியாசர் சென்றார். அங்கு நீராடிவிட்டுத் தருப்பைப் புல்மேல் அமர்ந்து,மனத்தில் தியானித்து தவம் செய்தார். தன்னுடைய ஞானக்கண்ணால் அறிந்து தன்னுடைய தபோபலத்தினால் ஆராய்ந்து மகாபாரதக் கதையைத் தன் மனத்தில் நிச்சயித்துக் கொண்டார்.
அதனை அவர் பலவிதமான கிளைக்கதைகளுடன் ஓர் இலட்சம் சுலோகங்களினால் இயற்றினார். பின்னர் “இதை என் சீடர்களுக்கு எவ்வாறு கற்பிப்பேன்?” என்று மனத்தில் எண்ணினார்.
அவருடைய எண்ணத்தை, உலக உயிர்களைப் படைத்தருளிய பிரம்ம தேவர் உணர்ந்தார். எனவே வியாச மகரிஷியை மகிழ்விக்கும் பொருட்டும், உலக நன்மையின் பொருட்டும் அவர் முன் நேரில் தோன்றினார். பிரம்ம தேவரைக் கண்டவுடன் வியாசர் திகைப்படைந்தார். தலைவணங்கி, கைகூப்பி நின்றார்.பிரம்மதேவர் அமர ஒரு சிறப்புடைய ஆசனம் நல்கினார். பிரம்மதேவர் அதனை அங்கீகரித்து அந்த ஆசனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் பிரம்மாவினால் உத்தரவு கொடுக்கப்பட்ட வியாசர், அந்த ஆசனத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அதைக் கண்ட பிரம்மதேவர், வியாசரைத் தம் அருகில் அமரும்படி கட்டளை இட்டார். இதனால் வியாசர் மகிழ்ச்சி அடைந்தார். புன்னகை தவழ அவர் அருகில் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
உலக நாயகரான பிரம்மதேவரைப் பார்த்து ”பகவானே! அரிய காவியம் ஒன்றை நான் செய்திருக்கிறேன்; வேதத்தில் உள்ள இரகசியம்,சீக்ஷை,வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம் ஆகிய ஆறு வேதாங்கங்கள்; மூப்பு,இறப்பு, பயம், வியாதி, உற்பத்தி, நாசம் இவைபற்றியும்; தவம், பிரம்மச்சரியம் பற்றியும்; மனிதர், விலங்கு, தாவரங்கள் பற்றியும்; ஆத்மஞானம், தர்க்க சாஸ்திரம், வைத்தியம், பாசுபதம்,ஞான, தேவமாநுடஜாதி போன்றவை பற்றியும்; புண்ணிய க்ஷேத்திரங்கள், நதிகள், பர்வதங்கள், காடுகள், கடல்கள், நகரங்கள் பற்றியும் விவரமாகச் செய்துள்ளேன். ஆனால், இதனை எழுதுகின்ற ஆற்றல் உள்ளவர்கள் பூமியில் எவரும் இல்லை; என்ன செய்வதென்று தெரியவில்லை,” என்று வியாசர் கூறினார்.