ஓம் நாராயணாய நமஹ என்று மகன் பிரகலாதன் உச்சரிக்க அதை கேட்டு கோபம் வந்தது இரண்யகசிபுவுக்கு. ஹரியின் பெருமை சொல்லாதே என்று தந்தை சொன்னாலும் நான் அப்படித்தான் சொல்வேன் என்று ஒவ்வொரு நிமிடமும் ஹரி நாமம் உச்சரித்தார் பிரகலாதன். உன் ஹரி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறான் அவனை என் முன்னால் வரச்சொல் என்று தந்தை கேட்க… என் ஹரி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டார் இரண்யன். கோபத்தோடு தூணை ஓங்கி அடிக்க அதில் இருந்து கோபத்தோடு ஆக்ரோஷ கர்ஜனையோடு வெளிப்பட்டது நரசிம்மம்.
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். இரவும் பகலும் அற்ற அந்தி சாயும் நேரத்தில் நரசிம்மரின் அவதாரம் நிகழ்ந்தது.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில்தான். நரசிம்மருக்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது. வைணவத்தில் அதிகம் வழிபடக் கூடிய தெய்வம் நரசிம்மர்தான். வட இந்தியாவை விட தென் இந்தியாவில்தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.
நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ”இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்” என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் வணங்கலாம். நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
நரசிம்மரை வழிபடும் போது ”ஸ்ரீநரசிம்ஹாய நம” என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையையும் கற்ற பலன் உண்டாகும். நரசிம்மரை ம்ருத்யுவேஸ் வாகா என்று கூறி வழி பட்டால் மரண பயம் நீங்கும்.
நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்கள் மற்றும் துளசி, சர்க்கரைப் பொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் மற்ற குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். கொரோனா நோய் பரவல் அதிகம் உள்ளதால் கோவிலுக்கு செல்ல முடியாது எனவே நமது வீட்டிலேயே பானகம் தயாரித்து படைத்து நரசிம்மரை வழிபட்டு அவருக்கு உரிய மந்திரத்தை கூறி வழிபடலாம். நரசிம்மரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
நரசிம்மர் ஆலயங்கள்
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி நன்னாளில், நரசிம்மர் அருள் புரியும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளு ம் நடைபெறுகின்றன. திங்கட்கிழமையான இன்றைய தினம் மாலை முதல் செவ்வாய்கிழமையான நாளை வரை நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய நரசிம்மர் ஆலயங்களைப் பார்க்கலாம்.