இராமாயண கதையுரைத்த சருக்கம்
திரிபுரமெரித்த விரிசடை கடவுளாகிய சிவபெருமானைக் கொண்டு இயமனை வெற்றி கண்டு சிரஞ்சீவியாய் வாழ்ந்து வரும் மார்கண்டேய முனிவர், பாண்டவர்கள் இருக்குமிடமாகிய காம்யக வனத்திற்கு மீண்டும் வருகை தந்தார். அவரைப் பாண்டவர்கள் எதிர் கொண்டு வணங்கி வரவேற்று ஆசனமிட்டு உபசரித்தனர்.
அப்பொழுது அம்முனிவரிடம். தர்மபுத்திரர் சிந்து நாட்டு வேந்தன், தங்கை துச்சளையின் கணவன் ஆகிய சயத்திரதன் தாரத்துக்கும், தங்கைக்கும் வேறுபாடு தெரியாமல் திரெளபதியைக் கவர்ந்து சென்ற நீசத் தன்மையை எடுத்துக் கூறி வருந்தினார். யாகாக்கினியில் தோன்றிய திரௌபதிக்கு நேர்ந்த துயரச் சம்பவத்திற்கு மார்கண்டேயர் மனம் வருந்தி, தர்ம புத்திரரை நோக்கி, “யுதிஷ்டிரரே! வருந்த வேண்டாம். எல்லாம் வினையின் செயல்.
திரேதா யுகத்தில் இரகு குல திலகனாகிய இராமபிரானது மணமாலையை சூட்டிக் கொண்ட சீதாப்பிராட்டியும், தென் னிலங்கை வேந்தன் இராவணனால் சிறையெடுக்கப்பட்டு அசோக வனத்தில் பத்து மாதம் துயர வாழ்க்கை வாழ்ந்திருக் கின்றாள். அத்தகைய சிறையிலிருந்த செல்வியின் ஏற்றத்தைக் கூறுவதுதான் இராமாயணம் ஆகும். பத்தினிக்கு ஏற்பட்ட துயரத்தைக் கண்டு நீ மட்டும் இன்று துன்புறவில்லை, அன்றே கோசலை மைந்தன் இராமபிரான், மாற்றானால் சிறையெடுக்கப்பட்டு பத்து மாதம் பிரிந்து பெருந்துயரம் அடைந்துள்ளார்.
அவனுடைய காவியம் சொல்ல சொல்ல இனிக்கும். கேட்க, கேட்க காது குளிரும். மங்காத புகழ் பெற்ற அப்பெருமானுடைய வரலாறு கார் உள்ளளவும், கடல் உள்ளன வும் நிலைத்து நிற்கக் கூடியது” என்றார்.
அதனைக் கேட்ட தர்மபுத்திரர், “முனிவரே, நீங்கள் அந்த சிறையிருந்த செல்வியின் ஏற்றத்தைக் கூறுகின்ற புனித இராம கா காதையை கூறுங்கள் கூறுங்கள்” என்று மிகுந்த ஆவலோடு கேட்க, மார்கண்டேய முனிவர் சொல்லலானார்.
1) பால காண்டம்
வற்றாத நீர் வளம் மிக்குத் திகழும் சரயூ நதியினால் பல்வளமும் பாங்குடன் பெற்றுத் திகழும் கோசல நாட்டினை. முத்தி தரும் நகர் ஏழினுள் ஒன்றான அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு சூரிய குலத்துதித்த தசரதன் என்பான் ஆண்டு வந்தான். அவன் சம்பரா சூரன் போன்ற பெரிய அசுரர்களை வென்ற பெருந்தீரன். குடிமக்களை உயிராகவும், தான் அவர்களுக்கு உடலாகவும் இருந்து அக்குடிமக்களை உயிரெனக் காத்தான். அவன் கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற பண்புடைய மூவரை மணந்து இன்ப வாழ்க்கை நடத்தி வந்தான். எல்லாப் பேறுகளையும் பெற்றிருந்த அவன் புத்திரப் பேறு மட்டும் பெறாது மிகவும் வருந்தி யிருந்தான்.
ரிஷிய சிருங்கர்
அதனால் தசரத மன்னன் அங்க நாட்டில் வாழும் கலைக்கோட்டு முனிவர் என்று சொல்லப்படும் ரிஷிய சிருங்கரை அழைத்துக் கொண்டுவந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் நிறைவில் தேவ புருஷன் ஒருவன் தோன்றி, அமுதம் நிறைந்த கலசம் ஒன்றை வசிட்ட மாமுனிவர் கையில் கொடுத்தார். அதனை அவர் வாங்கி, புத்திரப் பேறுக்காக ஏங்கியிருக்கும் தசரதனிடம் கொடுத்தார். தசரதன் அதனை. கோசலைக்கு ஒரு பாகமும், கைகேயிக்கு ஒரு பாகமும், மிச்சமிருப்பதை இரு பங்காக்கிச் சுமித்திரைக்கும் கொடுத்தார். அதன் பயனாகக் கோசலைக்கு இராம பிரானும், கைகேயிக்குப் பரதனும், சுமித்திரைக்கு இலக்குவனோடு சத்துருக்க னனும் என நான்கு மைந்தர்கள் பிறந்தனர். மைந்தர் நால்வரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நன்கு வளர்ந்து வந்தனர். அவர்கள் வசிட்ட மாமுனிவரிடத்தில் எல்லாக் கலைகளை யும் கற்றுச் சிறந்திருந்தனர்.
ஒருநாள் தசரதன் அரியணையில் அமர்ந்திருந்த பொழுது திரிசங்கு என்னும் மன்னனுக்காக ஓர் உலகத்தையே படைத்துக் காட்டிய ஆற்றல்மிக்க விசுவா மித்திரர் என்னும் முனிவர் அங்கு வந்தார். உடனே தசரதன் எழுந்து வணங்கி, தாங்கள் இங்கு எழுந்தருளியது ‘என் குலம் செய்த தவமே’ என்று கூறி வரவேற்றார். பின்னர் ஆசனத்தில் அமரச் செய்தார். அப்பொழுது விசுவாமித்திரர், தசரதனை நோக்கி, “மன்னா! மரங்கள் நிறைந்த வனத்துள் யான் செய்யும் தவ வேள்விக்கு இடை யூறாக அரக்கர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களையெல்லாம் அழிக்க, நின்மைந்தர் நால்வரில் கரிய செம்மலான இராமனை என்னுடன் அனுப்பிவை” என்றார்.
தாடகை வதம்
அதனைக் கேட்ட தசரதன், கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்து அவன் முதலில் இராமபிரானை அனுப்ப மறுத்தார். பின்னர் வசிட்ட மாமுனிவர் அறிவுரையை ஏற்றுக் கொண்டு இராம பிரானோடு இலக்குவனையும் அனுப்பி வைத்தார். அவ்விருமைந்தர்களும் விசுவாமித்திரர் நிழல் போல அவரைத் தொடர்ந்து சென்றனர்.
காட்டில் விசுவாமித்திரர் யாகம் செய்த காலத்து அகத்தியர் சாபத்தால் அரக்கி யாகிய தாடகை என்பவள் அந்த யாகத்தை அழிக்க வந்தாள். பெண்ணென்று முதலில் கொல்ல மறுத்த இராமபிரான், விசுவா மித்திரர் தூண்டுதல் பேரில் ஓர் அம்பினை எய்து அவளைக் கொன்றார். அதன்பின் அவள் மைந்தர்கள் மாரீசன், சுபாகு என்ற இருவர் யாகத்தை அழிக்க வந்தனர். இராமபிரான் ஓர் அம்பினால் சுபாகுவைக் கொன்றார். மாரீசனைக் கடலில் தள்ளினார். அவன் தப்பி ஓடி விட்டான். அதன்பின் இராம லக்குவர் வில்லேந்தி இனிது காக்க, விசுவாமித்திரர் யாகத்தை இனிது முடித்தார்.
அப்பொழுது விதேக நாட்டினை மிதிலையைத் தலைநகராகக் கொண்டு ராஜரிஷி என்று அனைவராலும் போற்றப் படுகின்ற ஜனகர் என்ற ஓர் அரசர் ஆண்டு வந்தார். யாகம் செய்வதற்குரிய இடத்தை அமைப்பதற்காக உழும் பொழுது, திருமகள் மகள் அன்ன பெண் குழந்தையைக் கண்டெடுத்தனர். அதற்குச் ‘சீதை’ என்று பெயர் வைத்து ஜனகர் வளர்த்து வந்தார். அக்குழந்தையோடு கண்டெடுக்கப்பட்டது திரியகம்பம் என்னும் சிவபெருமான் வில்லாகும். இந்த வில்லை யார் வளைக்கின்றார்களோ, அவர்களுக்கே சீதை மணமாலை சூடுவாள் என்று ஜனகர் அறிவித்திருந்தார்.
அகலிகை சாபம் நீங்கியது
இதனைத் கேள்வியுற்ற விசுவாமித்திரர் இராமபிரானோடும் இலக்குவனோடும் மிதிலை நோக்கிப் பயணமானார். வழியில் தன் கணவன் கோதம முனிவரின் சாபத் தால் கல்லுருவமாகி நின்ற அகலிகையைக் கண்டு இராமபிரான், அக்கல்லின் மீது தன் திருவடியைப் பதித்தார். இராமபிரானின் புனித திருவடிகள் பட்டவுடன் கல்லுருவ மாகி நின்ற அகலிகை சாபம் நீங்கி இயற்கை உருவம் பெற்றாள். இதனைக் கண்டு மகிழ்ந்த விசுவாமித்திரர், “மழை வண்ணத்து அண்ணலே! நின் கை வண்ணம் அங்கு தாடகை வீழ்த்தியதில் கண்டேன். அகலிகையின் சா ட சாபத்தை நீக்கியதிலிருந்து நின் கால்வண்ணம் இங்கு கண்டேன்” என்று கூறிப் புகழ்ந்தார். பின்னர் மூவரும் மிதிலை ம மாநகரம் சென்ற னர். அதன்பின் சுயம்வர மண்டபத்தை அடைந்தனர். அங்கு யாராலும் தொட முடியாத அந்தத் தெய்வாம்சம் வாய்ந்த வில்லை இராமபிரான் எளிதில் எடுத்தார்; முறித்தார். அதாவது அந்த வில்லை எடுத்ததைத் தான் கண்டார்களாம். கண்ணிமைத்து விழிக்கும் நேரத்துக்குள் ஒடிந்து வீழ்ந்த ஒலியைத்தான் கேட்டார் களாம் அங்கிருந்தவர்கள். “இராமபிரான் வில்லை எடுத்தது கண்டோம் பின்னர் இற்று விழுந்ததைத்தான் கண்டோம்” என்றார்களாம். அந்த அளவு லாவகமாக எளிதில் உடைத்தார் இராமபிரான்.
அதன்பின அதன்பின் ஜனகராஜன் தன் மகள் சீதாப் பிராட்டியைத் தாரை வார்த்துக் கொடுக்க தசரதர் முன்னிலையில் சீதா-இராமத் திருக்கல்யாணம் இனிதாக நடந்தேறியது. அதன் பிறகு தசரதனின் மற்ற மைந்தர் களான பரதன்-மாண்டவியையும், இலக்கு வன் – ஊர்மிளையையும், சத்ருக்கன் – சுருத கீர்த்தியையும் மணந்து கொண்டார்கள்.
தசரதன் தன் நான்கு மைந்தர்களின் திருமணத்தை முடித்து கொண்டு அயோத்தி மாநகருக்கு மகிழ்ச்சியோடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது க்ஷத்திரிய வம்சத்தையே இருபத்தொரு தலைமுறை வேரறுத்த பரசுராமர் அவர்கள் எதிரே எதிரே வந்தார். வந்த அவர் இராமபிரானிடம் தன்னுடைய திருமால் வில்லைக் கொடுத்து, மிதிலையில் சிவன் வில்லை வளைத்த நீ இதனை வளைக்க முடியுமா? என்று சவால் விட்டார். இராமபிரான் அந்த வில்லை வாங்கி அமைதியாக எளிதாக வளைத்து அதன் அம்பிற்கு இரையாக அப்பரசுராமனின் தவ வலிமையை வாங்கிக் கொண்டார். தோற்ற அவர் தவம் செய்ய சென்று விட்டார். பரசுராமனுக்காக அஞ்சியிருந்த தசரதன் முதலானோர் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மகிழ்ச்சியுடன் அனைவரும் அயோத்தி வந்து சேர்ந்தனர்.
2) அயோத்தியா காண்டம்
அயோத்தி மாநகரம் வந்த பரதனும், சத்துருக்கனனும் தங்கள் பாட்டன் வீடாகிய கேகய நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் சென்ற பின் தசரதன் அரசவையைக் கூட்டி தனக்கு வயதாகிவிட்டதால் இராம் பிரானுக்கு முடிசூட்ட வேண்டும் என்று தான் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். அரசவையும் அவருடைய கருத்தை ஏற்று இராமபிரானுக்கு மறுநாளே முடி சூட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. அதனால் முடிசூட்டு விழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் வேகமாக நடைபெறலாயின.
இராமபிரானுக்கு முடிசூட்ட போகின் றார்கள் என்பதைக் கைகேயியின் தாதி யாகிய கூனி என்னும் மந்தரை அறிந்தாள். எப்படியும் இராமபிரான் முடி சூடுவதைத் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். மிகுந்த கோபம் கொண்டு கைகேயியின் முன் நின்றாள். இராம பிரானுக்கு முடி சூட்டுவதால் என்னென்ன தீங்குகள் ஏற் படும் என்பதைத் தன் சொல் வன்மை யினால் அடுக்கடுக்காகச் சொல்லி அவள் மனத்தை மாற்றினாள். ‘நான் பெற்ற மகன் ாமன்’ என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் இராமன் கொள்ளும் கைகேயி கூனியின் சூழ்ச்சி யினாலும் தேவர்கள் பெற்ற வரத்தினாலும், விதியின் வன்மையாலும் மனம் மாறினாள். அதன் காரணமாகக் கைகேயி தசரதனிடம் (1) பரதன் நாடாள வேண்டும். (2) இராமபிரான் பதிநான்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற இரண்டு வரங்களைக் கேட்கும்படியாக கூனி தூண்டி அதில் வெற்றியும் பெற்றாள்.
தசரதன் பிதற்றல்
இராமபிரானின் முடிசூட்டு வைப வத்தைச் சொல்லுவதற்காக மகிழ்ச்சியோடு வந்த தசரதனிடம் கூனி சொல்லிக் கொடுத்த இரண்டு வரங்களையும் கைகேயி கேட்டாள். அதனைக் கேட்டு, தசரதன் கொடுக்கவும் முடியாமல், மறுக்கவும் மனமில்லாமல் திண்டாடினார், தள்ளாடி னார். அழுதார்; தொழுதார். ‘பரதனுக்கு மண்ணே கொள்; மற்றையது மற’ என்று கேட்டுக் கேட்டு அழுதார். “இனி நீ என் மனைவியும் இல்லை, பரதன் என் மகனும் இல்லை’ என்று சொல்லியும் பார்த்தார். அதற்கும் கைகேயி இணங்கவில்லை.
அதனால் தசரதன் தன் நினைவு இழந்தான். ‘இராமா, இராமா’ என்று பிதற்றிக் கொண்டிருந்தார்.
அதன்பின் கைகேயி, இராமபிரானை அழைத்து வரச்சொன்னார். தன்னை வணங்கிய இராமபிரானிடம் கைகேயி, “ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள. நீ போய்த்தாழிருஞ் சடைகள் தாங்கி, தாங்கரும் கடுந்தவம் மேற்கொண்டு பூழி வெங்கானம் நண்ணி, புண்ணிய நதிகளில் ஆடி, பதிநான்கு ஆண்டுகள் கழித்து வருக என்று மன்னவன் இயம்பினார்” என்றாள். அப்பொழுது அப்பெருமான், அன்றலர்ந்த செந்தாமரை போன்ற முகத்தவனாகி, “மன்னவன் பணியன்று; ஆகில் நும் பணி மறுப்பனோ” என்று கூறி அவளிடம் விடைபெற்று, தந்தையிடம் விடை பெற்ற தாகச் சொல்லி, பின்னர் கோசலையிடமும். சுமித்திரையிடமும் விடை பெற்று தந்தை உரையை சிரமேற்கொண்டு, இளை யாளாகிய சீதையோடும் இளையானாகிய இலக்குவனோடும் அயோத்தி மாநகரமே ஏங்கி வருந்தக் காடேகினார்.
கங்கை கரையை அடைந்த இராம பிரான், அங்கு வேடர் தலைவனாகிய குகனைத் தன் தம்பியாக ஏற்று, அவன் உதவியால் கங்கா நதியைக் கடந்து, சோலைகள் சூழ்ந்த சித்திர கூடத்தை அடைந்தார். அங்கு இலக்குவன் அழகான பர்ண சாலை ஒன்றைக் கட்டிக் கொடுக்க சீதா பிராட்டியோடு தங்கியிருந்தார்.
பரதன் குற்றமற்றவன்
தர்ம சொரூபியான இராமபிரான் காட்டிற்குச் சென்றதை அறிந்து, தசரதன் வாய்மையும், மரபும் காக்க தன்னுயிர் துறந்தார். கேகய நாட்டிற்குச் சென்றிருந்த பரதனும், சத்துருக்கனனும் அயோத்தி திரும்பினர். வந்தவுடன் தன் தமையன் இராமபிரான் காடேகியதையும், தன் தந்தை வானேகியதையும் அறிந்து, அவற்றிற்கு காரணமான தன் தாயை வெகுண்டான், நிந்தித்தான்; பலவாறு வைதான். பின்னர் கோசலையினிடத்துச் சென்று தான் குற்ற மற்றவன் என்று கூறி அழுதான். அவளும் அதனை ஏற்றாள். அதன் பின் இறந்த மன்னனுக்கு மகன் என்ற நிலையில் சத்துருக்கனன் இயற்ற தான் வேண்டிய கடன்களையெல்லாம் வசிட்ட மாமுனிவர் துணைகொண்டு செய்து முடித்தான்.
மீண்டும் இராமபிரானை அழைத்து வருவதாகச் சொல்லி, பரதன் சத்துருக்கன னோடும், வசிட்ட மாமுனிவரோடும், தாயாரோடும், அயோத்தி மாநகர மக்க ளோடும் காட்டை நோக்கிச் சென்றான். கங்கைக்கரையை அடைந்தான். சடை முடி தாங்கி, அழுத கண்ணீரோடும், தொழுத கைகளோடும் சோகமாக இருக்கும் பரதனைக் குகன் கண்டான். முதலில் தவறாக நினைத்த அவன், “எம்பிரான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” என்று முடிவு செய்து அருகில் சென்றான். இராம பிரானை அழைத்துப் போவதற்காக பரதன் வந்துள்ளான் என்பதை அறிந்த குகன் அவனைப் பலவாறு கொண்டாடினான். ”ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா” என்று பாராட்டினான். அதன் பின் சித்திர கூடத் திருந்த இராம பிரான் பால் அனைவரும் சென்றனர். முதலில் தந்தை தசரதன் இறந்த செய்தியை இராமபிரானிடம் சொன்னார்கள். இராம பிரானும், இலக்குவனும், சீதாப்பிராட்டி யும் பெரிதும் வருந்தினர். பின்னர் பரதன் இராமபிரானை நாடு திரும்பி ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டான். இராமபிரான் திட்ட வட்டமாக மறுத்து விட்டார். பின்னர் பரதன் வேண்டுகோளுக்கு இணங்க தன் திருவடி நிலைகளைக் கொடுத்து, “தம்பி! தந்தையின் கட்டளைப்படி பதிநான்கு ஆண்டு இக்காட்டில் வசித்து பின்னர் அயோத்தி திரும்புவேன்” என்று உறுதி மொழி கொடுத்தார்.
அதன்பின் அப்பரதன் இராமபிரானின் திருவடி நிலைகளைத் தன் தலைமேல் தாங்கி, அழுத கண்ணீரும் தொழுத கையுமாய் அயோத்தி செல்லாமல் நந்தியம் கிராமத்தில் தங்கி, தவவேடம் பூண்டு இராமபிரானின் பிரதிநிதியாய் இருந்து ஆட்சி செய்து வரலானான். பரதன் முதலானோர் சென்ற பின் சித்திர கூடத் திலிருந்து புறப்பட்டு இராமபிரான் முன்னே செல்ல, பின் சீதாப்பிராட்டி வர அவளைத் தொடர்ந்து இலக்குவன் வர மூவரும் தண்ட காருணியம் அடைந்தனர்.
3) ஆரணிய காண்டம்
விராதன் என்னும் அரக்கன் முன்னே தும்புரு என்னும் பெயருள்ள கந்தர்வனாக இருந்து, பின்னர் குபேரனது சாபத்தால், அரக்கனாகி தண்டகாரணியப் பகுதியில் திரிந்து வந்தான். அவன் அழகு ததும்பும் சீதாப்பிராட்டியைக் கண்டு, அவளைத் தூக்கிக்கொண்டு விண்ணில் செல்ல முனைந்தான். இராம லக்குவனர் அதனை கண்டு சீறி எழுந்தனர். அவனை வாளால் வெட்டிக் கொன்று படுகுழியில் தள்ளி சீதாப்பிராட்டியை மீட்டார்கள். அவனும் சாப விமோசனம் பெற்று கந்தருவனாக மாறி, தன்னிருப்பிடம் சேர்ந்தான். அதன் பின் அங்கிருந்து கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடி தீரத்தில் இலக்குவன் அமைத்த பர்ண சாலையில் மூவரும் தங்கினர்.
பத்து தலைகளையுடைய இராவணன்
முக்கோடி வாழ் நாளை முயன்று தவம் செய்து பெற்றவனும், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கயிலை மலையை பெயர்த்தெடுத்தவனும் பத்து தலைகளை யும் இருபது தோள்களையுமுடையவனும், வீரத்தில் வல்லவனும், இந்திரன் முதலா கிய தேவர்களுக்கு சிம்மம் போன்று விளங்குபவனும் ஆகிய இராவணன் தென்னிலங்கையை ஆண்டு வந்தான். அவனுக்கு, கும்பகர்ணன், விபீஷணன் என்ற இரு தம்பியர் இலங்கையில் அவனுக்கு துணையாக இருந்தனர். தங்கை சூர்ப்பனகை என்பவள் கணவனை இழந்து இந்தப் பஞ்சவடி தீரத்தில் முனிவர்களுக் குத் தொல்லை கொடுத்து வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் இராமபிரானைக் கண்டு அவன் அழகில் மயங்கினாள். பலவாறு மாயை செய்து அவனை வசியப்படுத்த முயல அது பலிக்காமல் போய், தம்பி இலக்குவனை வசியம் செய்ய முயன்றாள். அதுவும் பலிக்கவில்லை. இவ்விருவரும் தன்னிடம் மயங்காததற்குக் காரணம் சீதாப்பிராட்டியே என்று நினைத்து அவனைத் தூக்கிச் செல்ல முயன்றாள். அதைக் கண்டு இலக்குவன் அவளை அங்க பங்கம் செய்து துரத்தியடித்தான். அவள் அலறியடித்து கொண்டோடி, தன் தமையன் முறையினரான கரன், தூடணன், திரிசிரன் என்பவர்களிடம், தான் அங்கப்பங்கப்பட்ட செய்தியைக் கூறி முறையிட்டாள். அவர்கள் பதினாயிரம் வீரர்களுடன் இராமபிரா னுடன் போரிட்டனர். இராமபிரான் தான் தனியொருவனாகவே நின்று த தன் கோதண்ட வில்லை வளைத்து த்து மூன்று நாழிகையில் அனைவரையும் விண்ணுல குக்கு அனுப்பினார்.
இராவணன் உள்ளத்தில் மோக வெறி
இராம லக்குவர்பால் மோகம் கொண்ட அந்தச் சூர்ப்பனகை, தன் ஆசை நிறை வேறாததனால் தன் தமையனாகிய அரக்கர் கோன் இராவணனிடம் சென்று முறையிட லானாள். அவள், தான் இராம லக்குவர் பால் கொண்ட மோகத்தை மறைத்து. அச்சூர்ப்பனகை, சீதாப் பிராட்டியின் அழகையெல்லாம் கூறி, இராவணன் உள்ளத்தில் மோக வெறியை ஏற்படுத்தி னாள். அதன்பின் அவனுக்காகவே சீதாப் பிராட்டியைக் கவர்ந்து வரும்போதில் இலக்குவன் தன்னை அங்கப்பங்கப்படுத் தியதாகவும், தனக்காக போரிட்ட கரதூடணர்களை இராமபிரான் ஒருவனே கொன்று விட்டதாகவும் கூறி, இராவண னுக்கு உள்ளத்தில் சீதையின் மீது காம விதையை ஆழமாகப் பதித்து வைத்தாள்.
சீதாப்பிராட்டியின் அழகையெல்லாம் சூர்ப்பனகை வருணித்துக் கூறிய காலத்து இராவணன் முன்பின் ஆராயாது தன் மனமாகிய சிறையில் அவளை வைத்தான். சீதாப்பிராட்டியை இராம லக்குவர்களிட மிருந்து பிரிக்கும் பொருட்டு, தன் மாமன் மாரீசனைச் சீதையிடத்து அனுப்பினான். அவனும் அழகான பொன்மான் வடி வெடுத்து, அச்சீதாப் பிராட்டி முன் துள்ளித் திரிந்து ஓடி அவள் மனத்தைக் கவர்ந்தான். சீதையும் அது உண்மையான மான் என்று எண்ணி, தன் நாயகனிடம் அதனைப் பிடித்துத் தருமாறு வேண்டினாள். இராம பிரானும் சீதையின் வேண்டுகோளை ஏற்று, தம்பி இலக்குவனைச் சீதைக்கு காவலாக வைத்து அந்த மாயமானின் பின்னால் வில்லோடு சென்றார். அந்த மாயமான் அவனிடம் அகப்படுவது போலப் போக்குக் காட்டி அப்பெருமானை ஒரு யோசனை தூரம் இழுத்துச் சென்று விட்டது. பொறுமை இழந்த இராமபிரான் அப்பொய்மானின் மீது ஓர் அம்பினை எய்தார். அந்த அம்பு உடலை கிழித்துக் கொண்டு செல்ல அம்மான் கீழே விழும் நிலையில், பழைய மாரீச வடிவம் பெற்று ‘செத்தும் கெடுத்தான்’ என்றாற்போல ‘இலக்ஷ்மணா, சீதா’ என்று கூவியபடியே இறந்தது.
‘இலக்ஷ்மணா, சீதா’ என்ற குரலைக் கேட்ட சீதாப்பிராட்டி வினை விளைகாலம் ஆகலின், அது இராமபிரானுடைய குரல் என்று முடிவு செய்து, இலக்குவனை அழைத்து, “ஆபத்தில் உள்ள இராம பிரானுக்கு உடனே போய் உதவி செய்க” எனக் கட்டளையிட்டாள். “இஃது அரக்கர் களின் சூழ்ச்சி; எம்பெருமானுக்கு எந்த தீங்கும் இல்லை” என்று இலக்குவன் சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவள் பேச்சைக் கேட்காததன் காரணமாக, சீதை கோபமுற்றுப் பலவாறு நிந்தித்தாள். அவள் கூறிய பழிமொழிகளைத் தாங்க முடியாது இலக்குவன், “தாயே! நீங்கள் சொன்ன படியே போகின்றேன். நான் வரும் வரை இங்கேயே இருங்கள்; இதை தாண்டி போகாதீர்கள்” என்று கோடிட்டுக் கூறி இராமபிரானைத் தேடிப் போனான்.
சீதை அச்சுறுத்தல்
இலக்குவன் தன் பின்னாலேயே வந்ததைப் பார்த்த இராமபிரான், “ஏன் சீதையை விட்டு வந்தாய்?” என்று கேட்டான். அதற்கு இலக்குவன் “இலட் சுமணா, சீதா என்ற குரலை கேட்டு சீதாப்பிராட்டியார் தங்களுக்குத்தான் ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கின்றது” என்று தவறாக எண்ணி என்னைப் போகச் சொன்னார்கள். நான் மறுத்ததைக் கேட்டு, “தீயில் விழுந்து விடப் போவதாக என்னை அச்சுறுத்தவே நான் வந்து விட்டேன்” என்றான். அதனைக் கேட்டு இராமபிரான், “தம்பி நான் துரத்திப்போனது உண்மையான மானன்று, என்னை அந்தமான் நீண்ட தூரம் அலைக் கழிக்கவே நான் அம்பினை விட்டேன். அந்த அம்பு பட்டவுடன் போய்ப் பார்த்தால் என்னை ஆட்டங்காட்டி யது மானன்று; ஓர் அரக்கன்தான். மேலும் இலட்சுமணா, சீதா’ என்று என் குரலே போல கூவியதால் தான் சீதையும் ஏமாந்தாள். இதில் ஏதோ சதி இருக்கின்து. விரைவாகப் போகலாம். வா” என்று கூறினான். பின்னர் பர்ணசாலையை நோக்கி இருவரும் வேகமாக நடந்தனர்.
இலக்குவன் வெளியே போனதைப் பார்த்த இராவணவ சந்நியாசி வேடந் பார்த்த தாங்கி, பர்ண சாலை வாயிலில் நின்று பிச்சை போடுமாறு சீதாப்பிராட்டியைக் கேட்டான். சீதாப்பிராட்டி, யாசித்தவன் ஒரு சந்நியாசி என்று நம்பி, இலக்குவன் போட்ட கோட்டைத் தாண்டி பிச்சை போடச் சென்றாள். உடனே அந்தச் சந்நியாசி, பத்து தலைகளும் இருபது தோள்களுமாகக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனாக நின்றான். சீதாப்பிராட்டி தன்னெதிரே நின்ற அவனைக் கண்டு அஞ்சி நடுங்கினாள். பர்ண சாலையுள் புகமுயன்றாள். அதற்குள் அந்த இராவணன், பர்ண சாலையுடன் கூடிய தரையைப் பெயர்த்தெடுத்துத் தன் தேரில் வைத்து கொண்டு ஆகாயமாக தெற்கு நோக்கிச் செல்லலானான். (வால்மீகி இராமாயணத்தில், சீதாப் பிராட்டியை வலுவினில் பிடித்துத் தேரில் ஏற்றிக் கொண்டு ஆகாய மார்க்கமாக இராவணன் சென்றதாகக் கூறுகின்றது).
அசோகவனத்தில் சீதை
சீதாப்பிராட்டியின் அலறல் ஒலி கேட்டு தசரதனின் நண்பனான சடாயு என்னும் கழுகரசன் அவனுடன் எதிரிட்டு போர் செய்து, தன் இரு சிறகுகளால் இராவண னது தேரைச் சிதைத்துத் தள்ளினான். தலை யிலுள்ள பத்து முடிகளையும் கீழே தள்ளினான். அவன் கையிலேந்திய வில்லையும் ஒடித்தான். அதனால் மிகுந்த கோபங்கொண்ட இராவணன் சிவபெரு மான் தந்த ‘சந்திரஹாசம்’ என்னும் தெய்விக வாளினால் அச்சடாயுவின் இரு இறக்கைகளையும் வெட்டி வீழ்த்தினான். அதனால் கீழே விழுந்து அவன் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்தான். பின்னர் இராவணன் சீதாப்பிராட்டியை இலங்கைக்குக் கொண்டு சென்று இலங்கை மாநகருக்கு வெளியே உள்ள அசோக வனத்தில் சிறை வைத்து அரக்கியர்களைக் காவல் வைத்துத் தன் அரண்மனைக்குச் சென்றான். அவர்களில் ஒருத்தி வீடணன் பெண்ணாகிய திரிசடை என்பவள். அவள் மட்டும் சீதாப்பிராட்டிக்குத் தேறுதல் வார்த்தைகளைக் கூறி அவளுடைய துயரத்தைக் குறைத்து வந்தாள்.
மாரீச மாயமானால் ஏமாந்த இராம லக்குவர்கள் ‘சீதை தனியாயிருக்கின்றாளே’ என்று வேகமாகப் பர்ண சாலைக்கு வந்தார் கள். அங்கு சீதாப்பிராட்டியைக் காணாமல் சோர்வுற்றுப் பெருந்துயரம் அடைந்தனர். மயங்கி விழுந்த இராமபிரானை இலக் குவன் தேற்றி எழுப்பினான். பின்னர் பெருந்துயரத்துடன் சீதாப்பிராட்டியைத் தேடி செல்லலாயினர். வழியில் சடாயு உயிர் போகும் நிலையில் இறக்கைகள் அறுபட்டு வீழ்ந்திருத்தலைக் கண்டார்கள். அவர்களிடம் சடாயு,”இராமா!சீதாப் பிராட்டியைத் தென்னிலங்கை இராவணன் தான் சிறையெடுத்துத் தேரில் வைத்துத் தெற்கு நோக்கிச் சென்றான். தடுத்த என்னை அவன் தன் வாளினால் என் இறக்கைகளை வெட்டி வீழ்த்தி விட்டுச் சென்றான்” என்று கூறி உயிர் நீத்தது. அதனால் இருவரும் வருந்தி, தந்தைக்கு மகன் செய்வது போலச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை முறைப்படி செய்தனர். அதன்பின் சடாயு கூறியபடி தென்திசை நோக்கிச் செல்லலாயினர். வழியில் பிரம்ம தேவன் கொடுத்த கொடிய சாபத்தால் கவந்தன் என்ற பெயரோடு திரிந்த கந்தருவனின் கொடிய சாபத்தை நீக்கி, அதன் மூலம் சீதாப் பிராட்டியை சிறைப் பிடித்து சென்றவன் தென்னிலங்கை இராவணனே என்பதை உறுதியாக அறிந்தனர். அதன் பின் மதங்கமா முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே தன் வருகையை நெடுங்காலமாக நெடுங்காலமாக எதிர் நோக்கியிருக்கும் சபரி என்னும் மூதாட்டியைக் கண்டு அவளால் அன்போடு உபசரிக்கப் பெற்றார்கள். அவர்களைக் கண்டதனால் அப்பெருமாட்டி மோட்ச மடைந்தாள். அதன் பின் சபரி என்ற அந்த மூதாட்டியின் வழி காட்டுதல் பேரில் வானர அரசன் சுக்கிரீவன் தன் தமையன் வாலிக்கு அஞ்சி வந்து தங்கியிருக்கும் ருசியமுகமலையை அடைந்தனர்.
4) கிஷ்கிந்தா காண்டம்
சீதாப்பிராட்டியைத் தேடிக்கொண்டு இராம லக்குவர்கள், தன் தமையன் வாலிக்கு அஞ்சி சுக்கிரீவன் என்பவன் வந்து வாழ்கின்ற ருசிய முகப்பர்வதம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அங்கு ஆற்றல் மிக்கவனும் சுக்கிரீவனின் அமைச் சனுமான அநுமனைச் சந்தித்தனர். அவன் மூலம் சுக்கிரீவன் நட்பைப் பெற்றனர். சுக்கிரீவனுக்கு, அவன் அண்ணன் வாலி அபகரித்த நாட்டையும், அவன் மனைவியையும் மீட்டுத் தருவதாக வாக்குறுதி தந்தனர். வலிமை வா வாய்ந்த வாலியைக் கொல்ல முடியுமா என்று ஐயங்கொண்ட சுக்கிரீவனுக்காக, தந்துபி என்னும் அசுரனது மலை போன்று கிடந்த உடலெலும்பை இராமபிரான் தன் பெருவிரல்களால் தூக்கி அடித்தார். அதனோடு ஒரே அம்பினால் கோதண்ட ராமர் ஏழு மரா மரங்களைத் துளைத்தார். அதன்பின் சுக்கிரீவன் இராமபிரானின் துணை கொண்டு வாலியுடன் போர் தொடுத்தான். வாலியின் மீது அம்பு எய்தான். கீழே விழுந்த வாலி தன் மார்பில் பாய்ந்த அம்பினில், மூல மந்திரமாகவும் பிறவி நோய்க்கு மருந்தாகவும் விளங்கும் இராமனின் திருப்பெயர் இருக்கக் கண்களால் கண்டான். அதனால் அவன், வாய்மை மரபும் காத்து மன்னுயிர் துறந்த தசரதனின் மைந்தனே, சான்றோனாகிய பரதனுக்கு முன் தோன்றியவனே நீ மறைந்து நின்று அம்பினை எய்யலாமா? சீதாப்பிராட்டியைப் பிரிந்ததனால் அறிவு திரிந்தாயோ? என்னைத் துணை கொண்டி ருந்தால் சீதையை மீட்டுத் தந்திருப்பேனே! நீ செய்த செயல் வீரமும் அன்று; முறையும் அன்று. சத்தியத்திற்கு உரியதும் அன்று” என்று பலவாறு பழித்துப் பேசினான். அதனைக் கேட்ட இராமபிரான், ”தம்பியின் மனைவியையும் நாட்டையும் அபகரித்தாய். அதனால் கொல்ல நேர்ந்தது” என்று கூறினார். ‘மறைந்து நின்று கொன்றது நியாயம்தானா? என்று கேட்டதற்கு, உன் தம்பி போல நீயும் அடைக்கலம் புகுந்தால் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதி தவறி விடுமே என்ற காரணத்தால் மறைந்து நின்று கொல்ல வேண்டி ஏற்பட்டது” என்றான். பின்னர் வாலி அவர்கள் கூறியதை ஏற்று இராமனை வணங்கி, உயிர் நீத்தான். மோட்ச மடைந்தான்.
இலக்குவன் சுக்கிரீவனுக்கு முடி சூட்ட, வாலியின் மைந்தன் அங்கதன் இளவரசன் ஆனான். அநுமன் அமைச்சனாகவே தொடர்ந்து பணிபுரிந்தான்.
கார் காலம் வந்தது. சுக்கிரீவன் சொன்ன படி சீதாப்பிராட்டியைத் தேடுவதற்கு வானரப் படைகளை அனுப்பவில்லை. அதனால் கோபம் கொண்ட இராமபிரான் இலக்குவனை, சுக்கிரீவன் தங்கியிருக்கும் கிஷ்கிந்தைக்கு அனுப்பினார். சீறி வந்த இலக்குவனைக் கண்டு அஞ்சி சுக்கிரீவன் தன் படைகளை இராமபிரானிடம் அனுப்பி, தாமதத்திற்கு மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டான். அவனுடைய ஆணைப்படி இடபனை மேற்குத் திசைக் கும், சதவலியை வடக்குத் திசைக்கும், வினதனைக் கிழக்குத் திசைக்கும் தென் திசைக்கு அங்கதன், அநுமன், ஜாம்ப வானையும் அனுப்பினான். தென் திசைக்குச் செல்லும் அனுமனிடம் இராம பிரான் சீதாப்பிராட்டியைப் பற்றிச் சொல்லித் தன் கணையாழியையும் கொடுத்தனுப்பினான். தென்திசை தவிர மற்ற திசை சென்றவர்கள் சீதாப்பிராட்டி யைக் காணாது திரும்பி வந்து விட்டார்கள்.
தென்திசை சென்ற அங்கதன், அநுமன், ஜாம்பவான் முதலானோர் கழுகரசனாகிய சடாயுவின் தமையன் சம்பாதியின் உதவி யால் இலங்கை இருக்குமிடத்தையும், அங்கு செல்லும் வழியையும் அறிந்து கொண்டார்கள். தென்திசை கடற்கரை ஓரத் திற்கு வந்த அவர்கள் அநுமனை மட்டும் இலங்கைக்கு அனுப்புவது என்றும், அவன் தான் அதற்கு ஏற்றவன் என்றும் முடிவு செய்தார்கள். எடுத்த முடிவின்படி அநுமன் பேருருவம் எடுத்துக் கொண்டு மகேந்திர மலையை அழுத்தி, மேலே தாவி, ஆகாய மார்க்கமாகக் கடல் மேலே இலங்கையை நோக்கிச் செல்லலானான்.
5) சுந்தர காண்டம்
அநுமன் தென்திசை நோக்கி கடல்மேல் வான் வழியாக பறந்து சென்று கொண்டி ருந்தான். வழியில் சுரசை என்ற கோர அரக்கி போகின்ற அநுமனைத் தடுத்து அவனை விழுங்க வாயைத் திறந்தாள். உடனே அநுமன் மிகச் சிறிய உருவம் எடுத்து அவள் வாயினுள் புகுந்து வெளியே வந்து மீ மீண்டும் பழைய வடிவோடு செல்லலானான். சாபவிமோசனம் பெற்ற அவள் பழைய வடிவெடுத்து வாழ்த்திச் சென்றாள் .
உண்ணவும் உறங்கவும் மாட்டேன்
காற்றைவிட வேகமாக சென்று கொண்டிருந்த அநுமனைக் கடலிலிருந்து மைந்நாக மலை வானைத் தொடுமாறு எழுந்து நின்று அவன் போவதைத் தடுத்தது. அதைத் தடையாக கருதிய அநுமன் அதனைப் புரட்டி அப்பால் தள்ளி மேலே மேலே செல்லலானான். ஆனால் அம்மலை ஒரு ஒரு சிறு மானிட வடிவம் கொண்டு வந்து, “நான் உனக்கு பகைவன் அல்லேன். நீ சீதையை தேடிப் போகின்றாய் என்பது எனக்குத் தெரியும். ஆதலின் என் மீது அமர்ந்து இளைப்பாறி நான் கொடுக்கும் விருந்தையுண்டு பின் செல்வாயாக” என்று வேண்டியது. அதற்கு அநுமன், “மைந்நாகனே! நீ காட்டிய அன்பிற்கு என் நன்றி. இராம காரியம் முடியும் வரை ரை நான் உண்ணவும் மாட்டேன்; உறங்கவும் மாட்டேன்; என்னைத் தடுக்காதே. இராமபிரான் இட்ட பணியை முடித்துத் திரும்பி வரும்பொழுது வேண்டுமென்றால் தங்கிச் செல்கின்றேன்” என்று கூறி பறந்து சென்றான். மைந்நாக மலையும் அவனை வாழ்த்தி அனுப்பியது. அதன் பின் ஊக்கம் குன்றாமல் அநுமன் வான் மார்க்கமாக இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது ஆலகால விஷத்தைப் போன்ற அங்கார தாரை என்ற அரக்கி கடலிலிருந்து எழுந்து, ”என்னைத் தாண்டிச் செல்கின்ற நீ யார்?” என்று கேட்டுத் தடுத்தாள். அவளைப் பார்த்த உடனே அறமும், அருளும் அற்ற வள் என்பதைத் தெரிந்து கொண்டான். மேலும் நிழலை பற்றியே அவள் மனிதர் களை பிடித்து உண்பவள் என்பதையும் அறிந்து கொண்டான். அத்தகைய அந்த அங்கார தாரை அநுமனை அதட்டி அவனை விழுங்க தன் குகை போன்ற பெரிய வாயைத் திறந்தாள். உடனே அநுமன் அவள் வாயினுள் நுழைந்தான். அவள் கட்டிய தூணினை அவன் தட்ட ஆங்கே அவனைக (இரணியனை) கொல்ல எழுந்ததோர் நரசிம்மம் போன்று பேருருவம் எடுத்து, அவள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான். அவளும் அதே இடத்தில் மாண்டாள். தேவர்களும், மற்றவர்களும் மகிழ்ச்சி யடைந்து அநுமனைப் போற்றினர்.
இலங்கை மாநகரை அடைந்தான் அநுமன். சிறிய வடிவம் எடுத்து அதன் மதிலைத் தாண்ட முயன்றான். அப்போது பிரம்மனுடைய சாபத்தினால் இலங்கையைக் காக்கின்ற இலங்காதேவி, அவனைத் தடுத்து நிறுத்தினாள். அநுமனும் அவளுடன் போரிட்டான். அவளும் முத்தலை சூலம் போன்ற ஆயுதங்களை அவன் மேல் ஏவினாள். எல்லாவற்றையும் ஒடித்து போட்ட அவன் தன் கையினால் பலம் கொண்டு அவள் மார்பை நோக்கிக் குத்தினான். அவள் அதனால் இரத்தம் கக்கி அந்த இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தாள். பிரம்மன் இட்ட சாபம் அன்றோடு நீங்கியது என்று கூறியதோடு அவன் செல்லும் பணி சிறந்து முடியட்டும் என வாழ்த்தி பிரம்மலோகத்துக்குச் சென்றாள்.
இலங்கை மாநகரின் செல்வச் செழிப்பைக் கண்டு வியந்தான்
சிறிய வடிவெடுத்து இலங்கை மாந் கரத்தைச் சுற்றிப் பார்த்தான். இலங்கை மாநகரின் செல்வச் செழிப்பைக் கண்டு வியந்தான். மகிழ்ச்சியோடு இருக்கின்றவர் களைத் தவிர அவனால் கவலை கொண்டி ருப்பவர்களைக் காண முடியவில்லை. அந்நகருக்குள் காற்றும், கதிரவனும்,கூற்று வனும் கூட இராவணன் அனுமதியோடு தான் உள்ளே நுழைய முடியும் என்றால் வேறு யாரால் அந்த நகரினுள் உள்ளே நுழைய முடியும்? அந்த அளவு கட்டுக் கோப்பான நகரம் இலங்கை என்பதை அறிந்து கொண்டான். பசுக்களின் கொட்டில்கள், யானைக் கூடங்கள்,தேர் மாடங்கள், குதிரை லாயங்கள், சோலைகள் ஆடல் பாடல் அரங்குகள், பல்வேறு மாளிகைகள் முதலிய எல்லா இடங்களி லும் அநுமன் சீதாப்பிராட்டியைத் தேடி னான். உறங்கிக் கொண்டிருக்கின்ற கும்ப கர்ணன் மாளிகை, எட்டுதிக்குகளிலும் வெற்றி கொடி நாட்டிய இராவணன் மாளிகை, இந்திரனையே வென்ற மேக நாதன் என்று சொல்லப்படும் இந்திரஜித் மாளிகை, அறமே வடிவமாகக் கொண்ட வீடணன் மாளிகை மற்றும் பலருடைய மாளிகைகளில் தேடிப் பார்த்தான். பயனில்லை. இறுதியில் பக்கத்தில் இருந்த ஓர் அழகிய அசோக வனத்தில் அரக்கி யர்கள் நடுவில் புலிக் குழாத்தின் நடுவில் மான் அகப்பட்டது போலச் சோகத்தோடு சீதை இருந்தாள். துயிலென கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்த அவள் வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளியில் லாத உடம்பினையுடையவளாயிருந்தாள். இராமனையே நினைத்து விம்முதல், வெதும்பல், வெருவல் (அஞ்சுதல்) எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித் தொழுதல், சோர்வடைதல் போன்றன அல்லாமல் வேறு எதையும் செய்யாது சீதாப் பிராட்டி இருந்தாள்.
இராம தூதன் அநுமன்
விரி மழைக்குலம் கிழித்து ஒளிருகின்ற மின்னலைப்போல கரிய கரிய அரக்கியர்களின் கூட்டத்தின் நடுவே உள்ள சீதாப் பிராட்டியை அநுமன் ‘இராம இராம’ என்ற திருப்பெயர்களைச் சொல்லி, அவளை வணங்கி, தான் இராமதூதன் என்று கூறி னான். தான் இராம தூதன்தான் என்பதற்கு இராமபிரான் சொல்லிய அடையாளங் களையெல்லாம் கூறினான். இராமபிரான் கொடுத்த கணையாழியையும் கொடுத் தான். கணையாழியைப் பெற்றபின் சீதை அவன், ‘இராம தூதன் அநுமன்’ என நம்பினாள். அப்பொழுது சீதை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்னும் இரண்டு மாதத்தில் இராமபிரான் மீட்டுச் செல்வான் என்று சீதாப்பிராட்டிக்கு ஆறுதல் கூறினான். மகிழ்ச்சி அடைந்த சீதை.
“ஊழியோர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும், ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி” என வாழ்த்தினாள் (சுந். 559). சீதாப்பிராட்டி கொடுத்த கணையாழியைப் பெற்றுக் கொண்ட அனுமன் அசோகவனத்தை அழித்தான். அதனால் இராவணன் கோபித்து அனுப்பிய அவன் மகன் அட்சய குமாரன் போன்றவர்களை யெல்லாம் கொன்றான். மற்றொரு மகனாகிய இந்திரஜித்து விட்ட பிரம்மாத்திரத்தினால் கட்டுண்ட அநுமன் இராவணன் முன் சென்று.”சீதாப் பிராட்டியை சிறையி னின்று விடுவிப்பாய்; இல்லையெனில் இராமபிரான் அம்பினால் மாள்வாய் ” என எச்சரிக்கை விடுத்து, தன் வலிமையைக் காட்ட இலங்கை மாநகரைத் தன் வாலினால் எரித்தான். எதிர்த்துப் போரிட வந்த அரக்கர்களைக் கொன்றொழித்தான். பின்னர் மீண்டும் கடலைத் தாண்டி. இராமபிரான் திருவடிகளை வணங்கி கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்” என்றான் பின்னர் தான் இலங்கை போய் வந்த செய்தியை எல்லாம் எடுத்துக் கூறினான். சீதாப்பிராட்டி கொடுத்த சூடாமணியையும் கொடுத்தான். அதனைக் கண்டு இராமபிரான் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி அநுமனை வாழ்த்தினார்.
அதன்பின் சுக்ரீவன் தலைமையில் பதினெட்டு சேனைத் தலைவர்கள் கீழே எழுபது வெள்ளம் வானர சேனைகள் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு இராம பிரானோடும், இலக்குவனோடும், அநும் னோடும். அங்கதனோடும் தென்திசை கடற்கரை அருகே வந்து சேர்ந்தன. இராமபிரான் இந்த கடலை எவ்வாறு கடப்பது என்று யோசிக்கலானான்.
6) யுத்த காண்டம்
இராவணன் தன் அரசவையைக் கூட்டி, ஒரு சாதாரண குரங்கு, சீதையைக் கண்டதோடு, என்னுடைய மகன் அட்சய குமாரன் போன்றவர்களையும் கொன்று விட்டது. என் எதிரே அஞ்சாமல் வந்து ஏதேதோ உளறி விட்டு இலங்கை மாநகருக்குத் தீ வைத்து விட்டுச் சென்றுள்ளது. அதை நாம் சாதாரணம் என எண்ணிக் கொண்டிருக்கும்போது இப்போது சாதாரண மனிதர்களாகிய அந்த இராம லக்குவர் நம்முடன் போரிட வானர சேனைகளை அழைத்துக் கொண்டு வந்து விட்டனர். இப்பொழுது என்ன செய்யலாம் கூறுங்கள்” என்று கூறினான். அப்பொழுது இந்திரஜித், அமைச்சர் மகோதரன், மாலியவான், “நாம் போருக்குத் தயாராக வேண்டியதுதான்” என்று ஆலோசனை கூறினார்கள். ஆனால் அறநெறியாளனாகிய இராவணன் தம்பி வீடணன், “சீதாப் பிராட்டியை சிறை வீடு செய்து, இராம பிரானைச் சரணடைதலே உத்தமம். சரணம் அடைந்தார்க்கு அடைக்கலம் தருபவன் அந்த இராமபிரான், அதனையே செய்யுங் கள்” என்று அறிவுரை கூறினான். இரா வணன் அவன் இழிவாகப் கூறியதை தை ஏற்காது பேசினான். அதனால் வெறுப்படைந்த வீடணன் தன் தோழர்கள் நால்வருடன் இராமபிரானிடம் தென் திசை கடற்கரையின்கண் சரணம் புகுந்தான். அபயம் என வந்தோர்க்கு அடைக்கலம் அளித்து காக்கும் வள்ளல் அல்லவா அவன்/ அதனால் அவனை தன் ஏழாம் தம்பியாக ஏற்றதோடு மட்டுமல்லாது, “பதிநான்கு உலகங்களும், என் பெயரும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் தாழ்கடல் இலங்கை இலங் அரசு செல்வத்தைப் பெற்று வாழ்வாயாக. அந்த அரச செல்வத்தை இப்பொழுதே தந்தேன் என்று கூறி அவனை இலங்கை வேந்தனாக ஆக்கினான். அவனும் அதனை ஏற்றுக் கொண்டான்.
இலங்கை மாநகரை அடைந்தனர்
அதன் பின் “இலங்கைக்கு போகும் கடல் மார்க்கத்தை நன்கு வழி செய்து கொடுப்பாய்” என கடலரசனை வேண்ட, அவனும் இராமபிரானுக்கு அஞ்சி, கடலின் கண்வழி செய்து கொடுத்தான். அதன் பின் சுக்ரீவனும் வானரர்களைக் கொண்டு சேதுபந்தனம் கட்டி முடித்தான். வானரர்கள் கட்டிய பாலம் வழியாக ராமலக்குவரும், சுக்ரீவன் முதலான வானர சேனைகளும் இலங்கை மாநகரை அடைந்தனர். அந்நகரின் நான்கு வாயில் களையும் வானர சேனைகள் முற்றுகை யிட்டன. வீடணனின் ஆலோசனையால் இராமபிரான் அங்கதனைத் தூது அனுப்பினார். ஆனால் அந்த இராவணன் அங்கதனுடைய அறிவுரையை ஏற்காது போரிடவே முன் வந்தான்.
‘இன்று போய், போருக்கு நாளை வா!”
பின்னர் இராமபிரான் தன் தம்பி யோடும், சுக்கிரீவனோடும், அநுமனோ டும், வானர சைனியங்களோடும் போரில் இறங்கி, அரக்கர்களின் படைகளுடன் கடுமையாகப் போரிட்டுச் சொல்லொணா அரக்கர்களை அழித்தார். அரக்கர்கள், வேல், வாள், மழு, சூலம், கதை, வில், குந்தம், உலக்கை போன்ற பல்வகை ஆயுதங்களோடு போரிட்டனர். ஆனால் வானர சேனைகளோ மலைகளையும் மரங் களையும் மட்டுமே கொண்டு போரிட்டன.
இருபக்கங்களிலும் சொல்லொணாச் சேதம் ஏற்பட்டது. முதல் நாள் போரில் இராவணன், இராமபிரானோடு போரிட்டுத் தோற்றான். தோற்றதோடு போர்க்களத்தில் தேரையும், வில்லையும், முடிகளையும், வீணைக் கொடியையும், அளவற்ற வலிமையையும், புகழையும் போட்டு விட்டு வெறுங்கையனாய், தலைகள் குனிந்தவனாய் வெட்சி, நிலமகளை நோக்கி நி நின்றான். கோசலை நாடுடை வள்ளலாகிய இராமபிரானோ கருணை கூர்ந்து, ‘இன்று போய், போருக்கு நாளை வா’ எனக் கூறி அனுப்பினார். அவனும் திசை எவற்றையும் நோக்காது வளநகர் நோக்காது நிலத்தை நோக் நோக்கியே தன் அரண்மனை அடைந்தான்.
பின்னர் உறங்குகின்ற தம்பி கும்ப கர்ணனை, கால தூதர் கையிலே கொடுக்க எழுப்பச் செய்தான். அவனும் எழுந்து வந்து தன் தமையனார்க்கு வேண்டிய அறிவுரைகளைக் கூறினான். அவை எல்லாம் பயனற்றுப் போயின. அதனால் செஞ் சோற்றுக் கடன் கழிப்பான் வேண்டி, வீடணன் அழைத்த போதும், இராமபிரான் பக்கம் செல்லாது, கடும் போரிட்டான். மிகுந்த சேதத்தை உண்டாக்கினான். ஆனால் இறுதியில் இராமபிரானுடைய அம்பினால் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தான். கும்பகர்ணன் இறந்ததை கேட்டு இலங்கை வேந்தன் இராவணன் மிகுதியாகப் புலம்பினான்.
தன் சிறிய தந்தை கும்பகர்ணன் மாண்டான் என்பதை அறிந்தவுடன் இராவணன் மகன் அதிகாயன் மானமும் சீற்றமும் பொங்க போர்க்களம் சென்று கடும் போரிட்டு, வானர சைனியத்தில் பெருஞ்சேதம் உண்டாக்கி, இறுதியில் இலக்குவன் எய்த பிரம்மாஸ்திரத்தால் மாண்டான். அக்களத்தில் சுக்ரீவனோடு கும்பனும், அநுமனோடு நிகும்பனும் போரிட்டு மாண்டனர்.’
பழிக்குப்பழி வாங்குவேன்
மகன் அதிகாயன் இறந்ததைக் கேட்டு இராவணன் பெரிதும் துயர் உற்றான். “தன் தம்பி அதிகாயனைக் கொன்ற அந்த இலக்குவனைப் பழிக்குப்பழி வாங்கு வேன்” எனச் சபதம் பூண்டு, இந்திரஜித், பெருஞ் சேனையோடு போர்க்களத்திற்குச் சென்று கடும் போரிட்டு வானர சேனையில் பெஞ்சேதத்தை உண்டாக்கி இறுதியில் மாயப் போர் செய்து நாகாஸ்திரத்தை ஏவி இராமலக்குவரையும் வானர வீரர்களையும் கட்டி வீழ்த்தி, தன் தந்தை இராவணனிடம் தான் பெற்ற வெற்றியை கூறினான். அவனும் மகிழ்ச்சி அடைந்தான். அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் கருடாழ்வார் அங்கு வந்து அந்நாக பாசத்தை நீக்க, இலக்குவன் முதலான அனைவரும் உறக்கத்தினின்று எழுபவரைப் போல எழுந்தனர். இதுகாறும் துயரத்தோடு இருந்த இராமபிரானும் மகிழ்ந்தார். வானர சேனைகள் ஆரவாரித்தன. இராவணன், இந்திரஜித் முதலானோர் சோகக்கடலில் மூழ்கினர்.
அதன்பின் துமிராட்சன், மகரக் கண்ணன் போன்ற வலிமை மிக்க அரக்கர்கள் போர்க்களத்தில் போரிட்டு மாண்டனர். மீண்டும் போர்க்களத்திற்கு இந்திரஜித் சென்று கடுமையாகப் போரிட்டு பிரம் மாஸ்திரத்தை ஏவி இராமபிரானையும் இலக் குவனையும் வானரர்களையும் உயிரொடுங்கச் செய்தான். கரடிகளின் தலை வனாகிய ஜாம்பவானின் ஆலோசனைப் படி அநுமன் கொணர்ந்த சஞ்சீவி மலை யால் அனைவரும் உயிர் பெற்று எழுந்த னர். மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
இதனைக் கண்ட இந்திரஜித்து, நிகும் பலையில் வேள்வி செய்ய முடிவு கட்டி, அதற்கு இடையூறு வராமல் தடுக்க, பகைவரின் கருத்தை வேறிடத்தில் திருப்பக்கருதி, மாயையால் உண்டாக்கிய சீதையை அநுமன் முன்பு வாளால் வெட்டி, அயோத்திக்குச் சென்று அங்குள்ள பரதன் முதலானோரை கொல்லப் போவதாக போக்குக்காட்டி நிகும்பலைக்குச் சென்று யாகத்தை தொடங்கினான். வீடணன் அவன் சூழ்ச்சி அறிந்து இலக்குவனிடம் சென்று “போரிட்டு நிகும்பலை வேள்வியை முற்றுப்பெற வொட்டாது தடுக்க” என்று கூற அவனும் அவ்வாறே சென்று அந்நிகும்பலை யாகத்தை இந்திர ஜித் முற்றாகச் செய்ய வொட்டாது தடுத்து விட்டான். அதனால் கோபமடைந்த இந்திர ஜித் இலக்குவனோடு கடும் போரிட்டான். நீண்ட நேரம் போர் நடந்தது. இறுதியில் இலக்குவன் அர்த்தசந்திர பாணத்தை ஏவ, அது இந்திரஜித்தின் தலையைக் கொய்து வீழ்த்தியது. அத்தலையைக் காணிக்கையாக இராமபிரான் திருமுன் வைத்து வணங்கி னான்
அரை நாழிகையில் அழித்தான்
பெறற்கரிய புதல்வர்கள், வலிமை வாய்ந்த தம்பி கும்பகர்ணன், மற்றும் சுற்றத்தினரையும், ஏராளமான படைத் தலைவர்களையும், அரக்கர் சேனைகளை யும் இழந்து பெருஞ்சோகமுற்று, இராவணன் தன் மூல பல சேனையைப் போர்க்களத்திற்கு அனுப்பினான். இராம பிரான் ஒருவனே நின்று தன் கோதண்டத்தை வளைத்து அரை நாழிகையில் மூலபல சேனை முழுவதுமாக அழித்தார். அதன்பின் வேறு வழியில்லாது இரா வணனே தேரேறிப் போர்க்களம் புகுந்தான். இலக்குவனுடனும், இராமபிரானுடனும் கடுமையாகவும், உக்கிரமாகவும் போரிட் டான். இறுதியில் இராம பிரான் பிரம்மாஸ் திரத்தை எடுத்து முறைப்படி பூசனை செய்து குறி பார்த்து விட்டார். அது நான்கு முகம் கொண்டு சக்கரப்படையோடு இராவணன் பரந்த மார்பில் புகுந்தது. இராமனது அந்தப் புனிதமான வாளி, “முக்கோடி வாழ் நாளும், முயன்று பெற்ற பெருந்தவமும் நான்முகன் முன் நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் ” என்று கொடுத்தவரமும் ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புய வலிமையையும் தின்று அவன் மார்பில் புகுந்து உடலின் உள்ளே சென்று, சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி குடைந்து பார்த்து, இல்லை என்று அறிந்த பின் புறத்தே வந்தது. போரெல்லாம் முடிந்தது. வீடணன் தன் தமையனார்க்கும் மற்றைச் சுற்றத்தினர்க்கும் வேண்டிய இறுதிக் கடன்களை செய்தான். இலக்குவனால் இலங்கை வேந்தனாக முடிசூட்டப் பெற்றான்.
சீதாப்பிராட்டி தன் கற்பை நிரூபித்தல்
வெற்றிச் செய்தியை அநுமன் சீதை யிடம் சொல்ல, அவள் பெரிதும் மகிழ் வுற்றாள். அதன் பின்னர் சீதாப்பிராட்டியை அசோக வனத்திலிருந்து இராமபிரான் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தனர். சீதை இராமபிரானை வணங்கினாள். இராவணனால் சிறைப்பட்டதற்காக இராம பிரான் சீதாப்பிராட்டியைப் பழிக்கலா னார். “இராவணனுடைய இலங்கையில் நெடுங்காலம் இருந்த உன்னை நான் எப்படி ஏற்பேன் என்று எதிர்பார்த்தாய்? உனக்காக இராவணாதியர்களை நான் கொல்லவில்லை. தன் மனைவியைக் கவர்ந்தவர்களைக் கொல்லவில்லை என்ற பழி வராதிருக்கவே நான் கொன்றேன். இனியும் என்னுடன் இருக்க உனக்குத் தகுதியில்லை. பெருமையும், உயர் குடிப் பிறப்பும் கற்பும் என்னும் திண்மையும், ஒழுக்கமும், கணவனையே கண்கண்ட தெய்வமாக போற்றும் தெளிவும், நீ ஒருத்தி பிறந்ததனால் அழிந்து போயின. இனி செத்தொழி அல்லது எங்கேயாவது போய் விடு” என்று பழித்தார். அதனால் சீதாப் பிராட்டி ஆறாத்துயரமடைந்து இலக்குவன் வளர்த்த தீயில் வலம் வந்து, ”நான் முக்கரணங்களாலும் தூய்மை உடையவள் என்றால் இந்நெருப்பு என்னைச் சுடாதொழியட்டும்” என்று கூறி குதித்தாள். சீதாதேவியின் கற்புத்தீ தீக்கடவுளையே சுட்டெரித்தது. அதனால் அந்தத் தீக்கடவுள் (அக்னி தேவன்) சீதாப்பிராட்டியைத் தன் இரு கைகளால் சுமந்து வந்து இராம பிரானை வணங்கிச் சரணமடைந்தான். தன்னுடைய கற்பு நெறியைச் சீதாப்பிராட்டி நிரூபித்துக் காட்டிய பின்னும் நான்முகன் “நீயே முதற்கடவுள். இவள் நின் வலமார்பில் இருக்கும் திருமகள்” என்று அவதார ரகசியத்தை எடுத்துக் காட்டிய பிறகு சீதாப்பிராட்டியை ஏற்றுக் கொண் டார்.
அதன்பின் வைகுந்தத்தில் இருந்து வந்த தசரதனை வணங்கி, இராமபிரான். “தந்தையே! தீயவள் என்று நீ துறந்த என் தெய்வமாகிய கைகேயியும், அவள் மகன் பரதனும் முறையே எனக்குத் தாயும் தம்பியும் ஆக வரத்தைத் தருக” வேண்டி வரம் பெற்றான். ST GST
பின்னர் இராமன், இலக்குவன், சுக்ரீ வன், வீடணன், அநுமன் முதலானோர் புஷ்பக விமானம் ஏறி அயோத்தி திரும் பினர். வழியில் இராமபிரான் முதலானோர் பரத்துவாசர் ஆசிரமத்தில் தங்க வேண்டி யிருந்தது. அதனால் தங்கள் வருகையைத் தெரிவிக்கும்படி அநுமனை முதலில் அனுப்பினார். அவனும் காற்றினும் கடிது செல்லலானான்.
பரதன் அக்னி வலம்
அதற்குள் பதிநான்கு ஆண்டுகள் கழித்து இராமபிரான் வரவில்லை என்று பரதன் உள்ளம் குமுறி, பெருந்துயரமுற்று “இராம னின் அன்பை இழந்த நான் இனி வாழ்வதில் பயனில்லை ” என்று கூறி, சத்துருக்கனை நெருப்பு மூட்டச் சொல்லி அதிலே விழ வலம் வந்தான். பரதன் தீப்புக முயற்சி செய்கிறான் என்பதைக் கோசலை கேட்டு மனம் பதறி ஓடி வந்து, தீயில் புகவொட்டாது தடுக்கலானாள். “மகனே நீ தீயில் விழுந்தால் அறமே இறக்கும்; இராமபிரான் நிச்சயம் வருவான் அண்ணலே!”’எண்ணில் கோடி இரா மர்கள் என்னினும் நின் அருளுக்கு அருகாவாரோ? புண்ணியமாகிய நின் உயிர் போனால் மண்ணுலகும் விண்ணுலகும் வாழா” என்று கூறித் தடுத்தாள். பரதன் அதனைக் கேட்காது தீயில் புக முன் வந்தான். அப்பொழுது அநுமன் முன் வந்து “ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் உண்மை இறக்காது” என்று கூறி அவன் தீப்புகு வதைத் தடுத்தான். பின்னர் இராம பிரானைக் கண்டு பரதனும் சத்துருக்கனும் பெருமகிழ்வு கொண்டு வணங்கி ஆசி பெற்றனர். ஏற்றம் பெற்ற பரதனோடு அனைவரும் அயோத்தி புகுந்தனர். அங்கு அரியணை அநுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண்குடை கவிக்க, இலக்குவ சத்ருக்கனர் வெண்கவரி இரு பக்கமும் வீச, வசிட்ட மாமுனிவர் கோதண்ட ராமனாக இருந்த எம்பெருமா னுக்கு திருமுடி சூட்டப் பட்டாபிஷேக ராமனாக ஆனார். பின்னர் அப்பெருமான் கோசல நாட்டிற்கு ராஜாராமன் ஆனார்.
இராம ராஜ்ஜியம்
அதன் பின்னர் சுக்ரீவன், வீடணன், குகன் முதலானோரோடு வானர சேனை களுக்கும் இராமபிரான் அவரவர்க்கு ஏற்ற பரிசில்களை அளித்து, விடை கொடுத்தார். அவர்களும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர். அதன் பின் ‘இராம ராஜ்ஜியம்’ என்று சொல்லும் வகையில் கோசல நாட்டை பதினாலாயிரம் ஆண்டுகள் இனிது அரசு புரிந்தார்.
இவ்வாறு இராம காதையை இனிதாகக் கூறிய மார்கண்டேயர், சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றதால், அப்பெருமாட்டியின் கற்பினுக்கு சிறிதளவும் இழுக்கு நேராது இருந்தது போலவே தீயவன் சயத்திரதனால் கவர்ந்து சென்ற திரெளபதியின் கற்பிலும் எந்தவித குற்றமும் இல்லையென்று தர்மபுத்திரருக் குத் தெளிவுபடுத்தினார். அதோடு இந்த “இராமபிரானின் சரித்திரத்தை இயம் பினோர், கேட்டோர் யாவரும் இகத்தினில் இன்பமாய் வாழ்வர். பரத்திலும் நற்பயன் பெற்று பரந்தாமனாகிய வாசனின் திருப்பாதம் வைகுந்த அடைந்து அவனுக்கு என்றும் கைங்கர்யம் செய்வர்” என்று கூறியருளினார்.
அதன்பின் தர்மபுத்திரர் கற்பினில் சிறந்த பாவையர் ஒருவரை பற்றிக் கூறுவீராக என வேண்ட, மார்கண்டேயர், தன் கணவனை இயமனிடமிருந்து பாதுகாத்த சாவித்திரி தேவியின் கதையைக் கூறலானார்.
மகாபாரதம் – 31 இராமாயண கதையுரைத்த சருக்கம்…. பத்து தலைகளையுடைய இராவணன் | Asha Aanmigam