தருமபுத்திரர், அறநெறி சிறிதும் தவறாதபடி, பல்லுயிர்களும் மகிழ்ச்சி யுடன் வாழும்படி, தன் அரசாட்சியைத் தன்னிகரற்ற தன் வெண்கொற்றக் குடை யின் கீழ் இருந்து, உலகினைப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் அரண்மனை வாயிலின் புறத்தே, அந்தணர் ஒருவர் மிகுந்த சோகத் துடன் இரு கைகளையும் உயர எழுப்பி, ”அரசே! இது முறையோ முறையோ” என்று முறையிட்டுக் கொண்டு வந்தார். அரண்மனை வாயிற் காவலர்கள், அந்தணரது முறையீட்டை அப்பொழுது அங்கிருந்த அர்ச்சுனனிடம் கூறினார்கள். அவனும் விரைவாக வெளியே வந்து, அந்தணரை நோக்கி, “ஐயனே! உன் குறை என்ன – சொல்க” என்று கேட்க அந்தணர், “வில்லாற்றல் மிக்க விஜயனே! பெரு மானே! வேடர்கள் என் பசுக் கூட்டங்களை, அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இடையர்களிட மிருந்து கவர்ந்து சென்று விட்டார்கள்! அவற்றைத் தாங்கள் எப்படியாவது மீட்டுத் தரவேண்டும். அருள் புரிக” என்று வேண்டிக் கொண்டார்.
அதனைக் கேட்ட அர்ச்சுனன், “அந்த ணர் பெருமானே! நீங்கள் அஞ்ச வேண் டாம். உன் பசுக்கூட்டத்தைச் சிறிதளவும் குறையாதபடி மீட்டுக் கொடுப்பேன்” என்று உறுதிமொழி கூறி, தன் வில்லை எடுப்பதற்கு அரண்மனையுள் சென்றான். உள்ளே செ சென்ற அர்ச்சுனன், தருமபுத்திரரு டன் திரெளபதி பொருந்தியிருக்கின்ற தன்மையைப், பார்த்து விட்டான். அவ்வாறு கண்டதனால் அவன், உடம்பு நடுங்கியது ; முகத்தில் ஒளி மங்கியது. மனத்தை வெ வெட்கம் பிடுங்கியது. அங்கிருந்த அம்புகளையும், வில்லையும், விரைவாக எடுத்துக் கொண்டு, நெடுந்தூரம் சென்று, வேடர்களை வேட்டையாடி, அவர்களிடமிருந்து பசுக்கூட்டங்களை மீட்டு, அந்தணரது மனம் மகிழும்படி இடையர்களிடம் ஒப்படைத்தான் தரும் புத்திரனுடன் திரெளபதி பொருந்தியிருந்த தன்மையைப், பார்த்ததிலிருந்து நாரதர் கூறிய நியதியை மீறிவிட்டோமே. நிய என்ற வருத்தம் மிக அதிகமாகிவிட்டது. அதற்கு அவர் சொன்ன பரிகாரத்தை உடனே செய்ய வேண்டுமென்று முடிவு செய்து, அர்ச்சுனன் புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பொருட்டு, அதற்கு வேண்டியவற்றை யெல்லாம் எடுத்துக்கொண்டு, பயணக் கோலத்தோடு தருமபுத்திரரை வணங்கி விடைபெற்றான்.
அரச வேடத்தை துறந்த அர்ச்சுனன்
அர்ச்சுனன் அரச வேடத்தை நீக்கிவிட்டு, வைதிக அந்தண வேடந்தாங்கி, தவசிரேட் டர்களாக விளங்கும் அந்தணர்களுடன் புனிதமான கங்கை நதியில் நீராடினான். அப்பொழுது, அந்த நதியில் நீராடும் பொருட்டு நாகலோகத்துக் கன்னியர் அங்கு வந்திருந்தனர். அவ்வாறு நீராட வந்த கன்னியர்களுள், உலூபி என்பவள் ஒருத்தி. அவள் ஐராவத நாக குலத்தில் தோன்றி யவள். அவள் தந்தையின் பெயர் கெள ரவ்யன். அவரோ நாகலோகத்து அரசர். அப்படிப்பட்ட உலூபி, அர்ச்சுனன் மேல் காதல் கொண்டாள். அவள், பிலத்துவார வழியாக அருச்சுனனை நாகலோகத்துக்கு அழைத்துச் சென்றாள். அங்கு அவளை அவன் மணந்தான். சில காலம் இன்பத் துடன் வாழ்ந்தான். அதன் பயனாக ‘இரவான்’ என்ற புதல்வனைப் பெற்றான். இரவான் பிறந்த பொழுதே அழகுடையவனாகவும், வலிமை மிக்கவனாகவும், விளங்கினான். பின்னர் உலூபியுடன் கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தான். கங்கைக் கரை யில் வந்தவுடன், “தண்ணீரில் உன்னை யாராலும் வெற்றிகொள்ள முடியாது, தண்ணீர் உன் வசப்படும்” என்பதை வரமாகத் தந்தாள். அவள், அவனை அங்கேயே விட்டு விட்டு, நாகலோகம் சென்றாள். அதன்பின் அர்ச்சுனன் திரிதண் டத்தை ஏந்திய முனிவர்களுடன் யமுனை, போன்ற புண்ணிய நதிகளில் நீராடினான். பின்னர் இமயமலைச் சாரலுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடினான். அதன்பின் அங்க, வங்க, கலிங்க நாடுகளில் உள்ள தீர்த்தங்களில் முழுகி எழுந்தான்.
அங்கிருந்து தென்னாட்டிற்குப் புறப்பட் டான். தன்னை அடைந்தவர்கள் பாபங் களையெல்லாம் நாசம் செய்கின்றவனும், அஞ்சனாத்ரி, வருஷாப்திரி போன்ற ஏழுமலைகள் சூழ்ந்துள்ள, திருவேங்கட மலையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய ஸ்ரீநிவாசப் பெருமானைத் தரிசித்துப் பெரு மகிழ்ச்சியடைந்தான்.
அங்கிருந்து திண்ணனார் என்ற இயற் பெயரையுடைய, கண்ணப்பன் பக்தியைப் பரிசோதித்தவனாகிய திருக்காளத்தீசு வரரை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுச் சூரபதுமன், முதலிய அசுரர்களைப் போரிட்டுக் கொன்று, போர் செய்த வேகம் தணியுமாறு வந்து தங்கிய திருத்தணிகை சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும் தணிகைப் பெருமானைத் தரிசித்தான்.
புண்ணிய நதி நீராடல்
அடுத்து ஒரு நாழி நெல்லைக் கொண்டு, முப்பத்திரண்டு அறங்களைச் செய்து அறப்பெருஞ் செல்வியாய்த் திகழ்கின்ற காமாட்சியம்மை, எழுந்தருளியிருக்கின்ற கல்வியைக் கரையிலாக் கச்சியம்பதியை அடைந்து, அங்கு வேண்டியார்க்கு வேண்டி யாங்கு, வரங்களைத் தருகின்ற ஸ்ரீ வரத ராஜப் பெருமான் என்கிற அத்திகிரி அருளாளன், ஒரு மாவடியின் கீழ் விளங்கும் ஏகம்பன், இவர்களுக்கு நடுவில் கோயில் கொண்டிருக்கும் காமாட்சியம்மை மற்றும் பல தலங்களைத் தரிசித்து மகிழ்ந்தான். அங்கு பாய்ந்த கம்பை, பம்பை, மஞ்சனி, பிச்சி,கலிச்சி, மண்ணி, வெஃகா என்ற ஏழு புண்ணிய நதிகளில் நீராடினான். இந்த ஏழு நதிகளில் வேகவதி என்று அழைக்கப் படுகின்ற வெஃகா என்ற நதிதான் இப்பொழுது உள்ளது.
அங்கிருந்து திருக்கழுக்குன்றத் தலத் துக்குச் சென்று எழுந்தருளியிருக்கும் வேதகிரீசுவரரை வணங்கி, அங்கிருந்து மாலும் அயனும் முறையே அடி, முடி காணாத சோதியாய் நின்று விளங்கும் திருவண்ணாமலையில் உண்ணாமுலை யொருபாகனாய் விளங்கும் அருணாசலேசு வரரைப் பயபக்தியுடன் தரிசித்தான்.
தென் பெண்ணையாற்றில் புனித நீராடி, அந்நதிக் கரையில் ஓங்கி உலகளந்த உத்தமனாய் விளங்கும் திரு விக்கிரம பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக் கோயிலூரை அடைந்து அப்பெருமானை உளமார வணங்கினான். அங்கிருந்து புறப்பட்டு சைவ சமய குரவர் நால்வருள் ஒருவரும், தெய்வப்புலவர் சேக்கிழார் பன்னிரண்டாவது திருமுறையாக விளங்கும், பெரிய புராணத்திற்குரிய முதல் நூலான திருத்தொண்டத்தொகை பாடியரு ளியவரும், ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த தலமாகிய திருநாவலூர்; அப்பர் என்று போற்றப்படுகின்ற திருநாவுக்கர சரின் சூலை நோய் தவிர்த்து ஆட்கொண்ட தலமாகிய திருவதிகை, வீரட்டானம், ஆதிசேடனால் உருவாக்கப்பட்டதும், கருட நதியின் கரையில் உள்ளதும்,வேதாந்த தேசிகருக்கு அருள்பாலித்த தேவநாதன் எழுந்தருளியிருக்கக்கூடியதும் ஆகிய திருவ ஹிந்தபுரம்; சைவர்களால் ‘கோயில்’ என்று போற்றப்படுவதும். பொன்னம் பலப் பெருமான் நடனமிடுவதும் ஆக விளங்கும் தில்லை நகராகிய சிதம்பரம்; நூற்றெட்டுத் திருப்பதிகளில் தலையாயதும்; பெரிய கோயில் என்று போற்றப்படுவதும், மதுர கவி ஆழ்வார் தவிர மற்றைய ஆழ்வார் களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தும், கங்கையிற்புனிதமாய காவிரி நடுவு மாட்டுப் பொங்கு நீர் அரங்கந் தன்னுள் எழுந்தருளியிருக்கும், அழகிய மணவாளன் என்று போற்றப்படும் திருவரங்கநாதன் எழுந்தருளியிருக்கும் திருவரங்கம் முதலான பல புண்ணிய தலங்களைத் தரிசித்தான். அந்தக் காவிரிக் கரையில் உள்ள உறையூர், திருவெள்ளறை போன்ற மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலங் களையும் தரிசித்தான்.
அடுத்து, ஆளுடைய பிள்ளை, என்று போற்றப்படும் திருஞான சம்பந்தர் பெருமான் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவ சமயத்தின் பெருமையை நிலை நாட்டியதும், கூடலழகர் எழுந்தருளி யிருப்பதும், மீனாட்சி அம்மை கோயில் கொண்டிருப்பதும், பாண்டியரின் தலை நகராய் விளங்கியதும் ஆகிய சங்கத் தமிழினை வளர்த்த பெருமையுடைய மதுரை மாநகரை அடைந்தான். அங்குள்ள சோலை ஒன்றில் தன்னுடன் வந்த துறவியருடன் தங்கினான். அப்பொழுது அங்கு சித்ர வாகனன் என்ற பாண்டியனது ஒரே மகள் சித்ராங்கதை என்பவள் தன் தோழியருடன் வந்தாள். அவளைக் கண்டு அர்ச்சுனன் துறவு வேடத்தை நீக்கிக் கொண்டு சாதாரண வேடத்தில் அவளை அணுகினான். அவளும் மன்மதனோ, சுந்தனோ, என்று சொல்லக்கூடிய அழகு வாய்ந்த அந்த அர்ச்சுனனைக் கண்டாள். அவன் அவள் உள்ளத்தை கவரவே அவன்மீது காதல் கொண்டாள். பின்னர் இருவர் கண்களும் பேசின; இருவரின் உள்ளங்களும் இடமாறின. சித்ராங்கதை தன் தோழியர்கள் அறியாமலும், அர்ச்சுனன் தன்னுடன் வந்த துறவோர்கள் அறியாம லும், அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். கந்தர்வ முறைப்படி மணம் புரிந்து கொண்டு இன்பம் அனுபவித்தனர். இச் செய்தியைத் தோழியர் அறிந்து மன்னனி டம் தெரிவித்தனர்.
சித்ராங்கதையுடன் திருமணம்
மன்னன் தங்கள் களவொழுக்கத்தை அறிந்து கொண்டான் என்று தெரிந்தவுடன், அர்ச்சுனன் தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பாண்டியன் அவைக்கு வந்தான். மன்னன் ‘இவன் அர்ச்சுனனே’ என்று அறிந்து கொண்டு, பெருமகிழ்வு கொண்டு அவனைத் தழுவிக் கொண்டான். அர்ச்சுனனைப் பார்த்து, “அர்ச்சுனனே! உன் விருப்பப்படி, சித்திராங்கதையை மணந்து கொள்ளலாம். ஆனால் என் ஒரே மகளாகிய இவளுக்குப் பிறக்கும் குழந்தையை, என் குலவாரிசாக என்னிடம் தத்து கொடுத்து விட வேண்டும். இந்த நிபந்தையை ஏற்றுக் கொண்டால் நீ சித்ராங்கதையை மணப்ப தற்கு, எந்தவிதத் தடையும் இல்லை” என்றான்.
அர்ச்சுனன் அதற்கு ஒப்புக்கொண்டான். ஒரு நல்ல நாளில் பாண்டியன், தன் மகளை அர்ச்சுனனுக்குத் தாரைவார்த்துக் கொடுத் துத் திருமணம் செய்வித்தான். அதன் பின் மூன்று மாதக்காலம், அங்கேயே தங்கி யிருந்து இன்பம் அனுபவித்தான். அதன் பயனாகப் ‘பப்புரு வாகனன்’ என்ற அழகான மைந்தன் பிறந்தான். அர்ச்சுனன் தான் முன்னர் வாக்களித்தபடி, பப்ருவாகன னைச் சித்ரவாகனனுக்குத் தத்துப்பிள்ளை யாகக் கொடுத்தான். அதனால் சித்ரவாகன பாண்டியன், பெரிதும் மகிழ்வு கொண் டான். சில நாட்கள் கழித்துச் சித்ராங் கதையிடம் விடை பெற்று, குழந்தை பப்ருவாகனனைப் பாட்டனாரை வளர்க்கச் செய்துவிட்டு, அங்கிருந்து தீர்த்த யாத்தி ரையை மேற்கொண்டு தெற்கு நோக்கி னான்.
சுபத்திரையின் நினைவு
அங்கிருந்து மதுரைக்கு அருகிலுள்ள திருமாலிருஞ்சோலைக்குச் சென்று (அழகர் மலை ) அங்கு எழுந்தருளியிருக்கும் கள்ளழ கரைக் கண்குளிரத் தரிசனம் செய்தான். பின்னர் மலைமேல் நடந்து சென்று, அறுபடை வீடுகளில் ஒன்றாகிய பழமுதிர் சோலைக்குச் சென்று, அங்கு எழுந்தருளி யிருக்கும் முருகப்பெருமானைக் கண்டு வணங்கினான். அதன் ன் பின்னர் இறகு குலதிலகன் இராமபிரான் திருவடிப்பட்ட சேதுவில் நீராடி, இராமேசுவரம் சென்று. அங்கு எழுந்தருளியிருக்கும் இராமநாத றல் மணம் பிரானை வணங்கினான். தென்றல் கமழும், குறுமுனிவர் அகத்தியர் வாழ்ந்த பொதியமலையைக் கண்டான். அங்கிருந்து முக்கடலும் சந்திக்கும் நீலத்திரை கடலோரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி நீர்த்துறையில் நீராடி, கன்யாகுமரி வாலை அன்னையின் பாதம் பணிந்தான். பொருநையில் நீராடிய அவன் அந்நதியின் கரை வழியாக, பரசுராமன் தன்னுடைய ‘பரசு’ என்னும் ஆயுதத்தால் கொண்ட சிறந்த பூமியையும், அங்குள்ள சேர மன்னனின் பெரிய ஊர்களையும் பார்த்து, நடந்து அலை கொழிக்கும் மேலைக் கடலைக் கண்டான். அங்கு பல தீர்த்தங் களில் நீராடிவிட்டுப் பிரபாஸ தீர்த்தத்தை அடைந்தான். அங்கு அர்ச்சுன னுக்குக் கண்ணபிரானின் தங்கையான சுபத்திரை யின் நினைவு வந்தது, அவளுடைய அழகு, இனிமையான பண்பு, போன்றவற்றைச் ‘சுதன்’ என்னும் யாதவன் ஏற்கெனவே அவனுக்குச் சொல்லியிருந்தான்.
அதனால் அர்ச்சுனன் சுபத்திரையை மணந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி, அதற்கேற்றபடி முதலில் திரி தண்டம் ஏந்தி, சந்நியாசக் கோலம் கொண்டு, ரைவதம் மலையை அடைந்து பெய்கின்ற மழையில் நனையாதிருக்கும் பொருட்டு, அங்கு உயர்ந்ததோர் ஆல மரத்தின் செறிந்த நிழலில் தங்கினான். பின்னர் கார்முகில் வண்ணனாகிய கமலக் கண்ணனை நினைத்தான்; மனமுருகத் தியானித்தான்.எம்பெருமான் அர்ச்சுனன் மாட்டு வந்தவுடன், அர்ச்சுனன் தான் திரிதண்டம் ஏந்திச் சந்நியாசி கோலத் தோடு அங்கு வந்ததற்குரிய காரணத்தைக் கூறினான். அர்ச்சுனன் எண்ணத்தை உணர்ந்த எம்பெருமானும், “காலையில் வருவோம்” என்று கூறிச் சென்றார்.
இந்திரனுக்கு விழா
சூரியன் கிழக்குத் திசையில் உதயமா னான். இந்திரனுக்கு விழா எடுக்க, தமைய னாகிய சங்கவண்ணன் பலராமன் துவாரகாபுரியிலுள்ள யது குலத்தவர்க ளோடும், தங்கை சுபத்திரையோடும், ரைவதகிரிக்கு வந்து, அங்கு வீற்றிருக்கும் அர்ச்சுனன் சந்நியாசியைக் கண்டு வணங்கி, அதன் பின்னர் இந்திர விழா தொடங்கி னார். கண்ணபிரானும் அங்கு வந்தார். அன்ன நடையும் அன்னமிலா ஐயர் நடையும் தளர்ந்து போக, நடந்து வரும் சுபத்திரையை, ஆற்றல்மிக்க அர்ச்சுனன் கண்டான். அவள்பால் காதல் கொண்டான். சுபத்திரை, என்பதற்கு மங்களகரமான நல்லிலக்கணங்கள் அமைந்தவள், என்பது பொருளாகும்.
அர்ச்சுனன் சுபத்திரை மேல் கொண் டிருந்த காதலை அறிந்த கண்ணபிரான், “எம்மவர்கள் (யாதவர்கள்) அறியாதபடி திருமகள் போன்ற சுபத்திரையைத் திரு மணம் செய்து கொண்டு உமது நகரத்திற்கு அழைத்துச் செல்வீராக” என்று கூறி அச்சுபத்திரையை அருகில் வரச்செய்து, ”இம் முனிவனுக்கு நான்கு மாத காலம் பணிவிடை செய்வாயாக” என்று கூறினார். ஒரே இடத்தில் தங்காமல் திரியும் முறை யினரான சந்நியாசிகள் மழைக்காலத்தில் “சாதுர்மாஸ விரதம்” மேற்கொண்டு ஒரே இடத்தில் தங்கி யிருப்பர்.இதனை மனத் தில் கொண்டுதான் கண்ணபிரான் சுபத் திரையை, நான்கு மாதம் பணிவிடை செய்யுமாறு கூறினார். அதன்பின், அந்த அர்ச்சுன சந்நியாசியைத் தன்னுடன் வரச் செய்து, துவாரகையில் ஓரிடத்தில் தங்க செய்து, சுபத்திரையை அங்கு அவருக்குப் பணிவிடை செய்ய வைத்தார். சுபத்திரை யும் தன்னை மணக்கப் போகின்றவன் அருச்சுனன்தான் என்பதை அறியாமல் அம்முனிவனுக்குப் பணிவிடை செய்து வந்தாள்.
உள்ளம் கவர்ந்த கள்வன்
ஒரு நாள் சுபத்திரை, ”முக்குற்றங் களையும், முழுமையாகப் போக்கும் முனிவர் பெருமானே! தாங்கள் எந்த ஊர்” என்று கேட்டாள். அதற்கு அந்த அர்ச்சுன சந்நியாசி, ”யான் வசிக்கும் ஊர் இந்திரப்பிரத்தம்” என்று பதில் கூறினான். அப்பொழுது சுபத்திரையானவள், தன் மனத்தில் ஆழமாகப் பதித்து வைத்தி ருக்கும் அர்ச்சுனனைத் தவிர, மற்றைய பாண்டவரின் நலனையும், குந்திதேவியின் நலனையும், திரெளபதியின் நலனையும், விசாரிக்கலானாள். அதைக் கேட்ட அர்ச்சுன சந்நியாசி, “நங்கையே! அர்ச்சுனனைத் தவிர, மற்றவரை நன்கு விசாரித்தாய் ஆனால் அர்ச்சுனனை மட்டும் ஏன் விசாரிக்கவில்லை” என்றான். அதனைக கேட்டுச் சுபத்திரை ஒன்றும் பதில் லாமல், புன்முறுவல் பூத்து நின்றாள். சொல்லாமல், ஆனால் அருகிலிருந்த ஒரு தோழி. “அர்ச்சுனன் தான் அவள் உள்ளத்தினுள் உள்ளானே, அதனால் தான் அவள் விசாரிக்கவில்லை போலும்!” என்றாள். மற்றொரு தோழி, அந்த அர்ச்சுன முனிவனைப் பார்த்து, “முனிவரே, இவள் ளம் கவர்ந்த க உள்ளம் கள்வனாகிய, அந்த அர்ச்சுனன் இப்பொழுது எங்குளான் ? கூறுங்களேன்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அந்த அர்ச்சுனமுனிவன் நாள் தோறும் புண்ணிய நதிகளில் நீராடி, இமயம் முதல் குமரிவரை சென்று, உங்களுடைய மனைக்கு இச்சுபத்திரைக்கு மணாளானாக, விளங்கும்படி வருவான்” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரை, வெட்கம் கொண்டு நாண் மயிர்க் கூச்செறிந்து “இந்த முனிவன் நம்முடைய உள்ளத்தில் நிறைந்துள்ள அர்ச்சுனனாக இருப்பானோ’ என்று எண்ணினாள். ஐயமும் கொண்டாள். பின்னர் மயங்கி நின்றாள். மயங்கி நின்ற சுபத்திரையின் கையை அருச்சுனன் காதலோடு பற்றினான்.
காம வெப்பம் தணிந்த சுபத்திரை
இதனைக் கண்ட தோழிமார் கோபத் துடன், சுபத்திரையைப் பிடித்திருந்த சந்நியாசியின் கையை விலக்கி, அச்சுபத் திரையை ஒரு மாதலிபந்தற் கொடிக்கீழ் படுக்க வைத்தார்கள். காமக்கனல் அவளைக் கொழுந்துவிட்டு எரிக்க, அவள் திக்பிரமை கொண்டவள்போல் ஆனாள் கொழுந்து விட்டு எரிகின்ற காமக்கனலைத் தணிக்கத், தோழியர் முத்துமாலையையும் பன்னீரையும், சந்தனத்தையும், அவள் மார்பில் அணிவித்தும், பூசியும் ஆசுவாசப் படுத்தி, அதன்பின் பெரிய விசிறிகளைக் கொண்டு விசிறினர். முத்துமாலை, பன்னீர், சந்தனம் என்பன வெப்பம் தணிக்கும். உபகரணங்கள் ஆகும். எனவே அவற்றை தோழியர் பயன்படுத்தினர். அப்போதும் காம வெப்பம் தணியாது, சுபத்திரை தன் தோழியரை நோக்கி, ”மிகுந்த கோபத்துடன், அரக்கிகளைப் போல வந்து என் ஆவியைக் கொள்ள வந்தீர்களா?” என்று சீறினாள்.
கதிரவன் மேற்குக் கடலில் மறைந்தான். அதன்பின், பிரிந்த காதலரின் உயிரைத் துன்புறுத்தும் காலனாகிய இரவு தோன்றியது. அவனுக்கு உதவி செய்வதற்காக, மன்மதன் செய்யும் போருக்குத் துணையாக முழுநிலவு தோன்றியது. அர்ச்சுனனின் தோற்றப் பொலிவையும், அவன் திருமேனி பாங்கினையும், எப்போதும் நினைத்து நினைத்து நைந்து கொண்டிருக்கும் சுபத்திரையின் மீது மன்மதன் மலரம்புகளைச் சரமாரியாக எய்யலானான். அதனைத் தாங்க முடியாமல், அச்சுபத்திரை, “கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனே! சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் சாம்பலாக ஒழியச் செய்தும், அருவமாக இருந்து கொண்டே என் உயிரைக் கவர் கின்றாயே, நியாயமா? உலகத்தார் எல்லாரும் பழிக்கும்படி, நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானுக் குத் துன்பம் விளைவித்தவனே! இன்று அபலைப் பெண்ணாகிய, என்னுடைய உயிரைக் கவர்ந்து என்ன பயனைப் பெறப் போகின்றாய் ? தண்ணொளி வீசும் சந்திரனே! நீ எனக்கு தண்ணொளி வீசவில்லை; என்னைக் காய்கின்றாய். நீ தேய்ந்து போதலைத் தவிர்த்து, வளரச் செய்த முக்கண்ணனையே நின் நிலவொளி யாகிய நெருப்பினால் காய்கின்றாய் என்றால், சாதாரணப் பெண்ணாகிய நான் உனக்கு எம்மாத்திரம்? இத்தகைய கொடுமையான செயலைச் செய்தலினால் தான் உன்னைப் பிடித்து அப்பெருமான் ன் தன் தலையில் வைத்துக்கொண்டு உனக்குக் காவலாகப் பாம்பினை வைத்துள்ளார் போலும்! எனவே காதலரைப் பிரிந்த மங்கையர்க்குக் கொடுமை செய்தலில், உனக்கு நிகர் நீயேதான். சந்திரனே! உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? அப்படி யிருக்க, என்னை ஏன் துன்புறுத்துகின்றாய்? முதலில் சடைமுடியில் தங்கியிருக்கும் பாம்பு, உன்னைப் பற்றி விழுங்காதிருக்கும்படி பார்த்துக்கொள். அதனை முதலில் செய். அதனை விட்டு என்னை வருத்தாதே!
“பொதிய மலையிலிருந்து புறப்பட்டு வரும் தென்றலே! நீ எல்லார்க்கும் இனிமை தருகின்றாய், என்கிறார்கள். ஆனால் என்னை மட்டும் ஏன் துன்புறுத்து கிறாய்? நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என்னிடம் பாரபட்சம் காட்டுகிறாய். உன்னுடைய தன்மைக்கு இது பொருந்தாது. கிளியே! கடலே! நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் வருத்து கின்றீர்கள். என்னை விட்டுவிடுங்கள். பிழைத்துப் போகிறேன்” என்று பலவாறு கூறிப் புலம்பி வருந்தினாள்.
தேவகியிடம் முறையிடல்
இவ்வாறு அர்ச்சுனனையே நினைத்து நினைத்து, இரவெல்லாம் புலம்புகின்ற சுபத்திரையைத் தோழியர் தேற்றி, அவள் துயரத்தைப் போக்கினார்கள். கதிரவன் கணை கடலினின்று கதிரொளி எங்கணும் வீச எழுந்தான். தோழியர் இரவெல்லாம் சுபத்திரை பட்ட காம வேதனையைத் தேவகியிடம் கூறினர். தேவகி கண்ணபிரானிடம் கூறினாள்.
சுபத்திரையைத் துரியோதனனுக்கு மணம் செய்விக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தான் பலராமன். இதை அறிந்த கண்ணபிரான், அவன் அறியாமல் சுபத்திரையை தன் ஆசைக்குரிய அர்ச்சுனனுக்கு, மணம் முடித்து வைக்க வேண்டு மென்று எண்ணி அதனை உடனே செயற் படுத்தவும் செய்தார். அதனால் அப்பெரு மான், துவாரகையை அடுத்துள்ள பாதல நகரத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் சிவபெருமானுக்குரிய திருவிழாவினைக் காண்பதற்காக, பலராமனையும் யாதவர் கூட்டத்தையும் அங்கு அனுப்பினார்.
அதே சமயத்தில், அர்ச்சுனன்-சுபத்திரை திருமணத்தை நிறைவேற்ற, இந்திரன் இந்திராணியோடும் வசிட்டமாமுனிவ ரோடும். வேதங்களில் வல்ல பிற முனிவர் களோடும், துவாரகைக்குச் சென்றார். சுபத்திரை, கண்ணனைத் தன் மனத்தால் நினைக்க கண்ணன் உடனே வந்து, திரு மணத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்கலானார். நன்கு உபசரிக்கவும் செய்தார். அதன்பின் நல்ல நேரத்தில், அர்ச்சுனனையும், சுபத்திரையையும் மணமேடையில் அமரச்செய்து,காப்பு நாண் அணிதல், பாணிக்கிரகணம் செய்தல், மங்கல நாண் அணிதல், தீ வலம் செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், பொரி முகந்தட்டல், மஞ்சனமாட்டல் போன்ற சடங்குகளை முறைப்படி செய்து, பரந்தாமன் கண்ணபிரான் சுபத்திரையைத் தாரை வார்த்துக் கொடுக்க, அர்ச்சுனன் அதனை ஏற்கத் திருமணத்தைச் சிறப்புடன் நடத்தி முடித்தார்.
இந்திரபிரத்தத்தில் சுபத்திரை
அதன்பின் கண்ணபிரான், இந்திரனுக்கும், வசிட்டமாமுனிவர்க்கும், பிற முனிவர்களுக்கும், விடை கொடுத்தனுப் பினார். சுபத்திரையை அர்ச்சுனனோடு தேரில் ஏற்றி இந்திரபிரத்தத்திற்கு அனுப் பினார். பின்னர் சிவபெருமான் திருவிழா வைக் கண்டுகளித்துக் கொண்டிருக்கும் பலராமன் இருக்குமிடமாகிய பாதல நகர் சென்றார் .
கண்ணபிரான் அருளோடு கொடுத்த தேரினைச் சுபத்திரை செலுத்த, மலை போன்ற தோள்களையுடைய அர்ச்சுனன் வழிகாட்ட, தேர் இந்திரபிரத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அங்கிருந்த யாதவர்கள் ‘விப்ருதுச்ரவஸ்’ என்பவன் தலைமையில் ‘இது என்ன அக்கிரமம்’ என்று சீறிச் சினந்து அருச்சு னனை எதிர்க்கலாயினர். அர்ச்சுனன் அவர்களைத் தன் வில்லாற்றலால் எளிதில் விரட்டியடித்து, இந்திரபிரத்தம் போய்ச் சேர்ந்தான். அங்கு அவன் முதலில் தன் முதல் மனைவியாகிய, திரௌபதியின் இல்லத்திற்குச் சுபத்திரையை அனுப்பி னான். அங்கு வலக்காலை முதலில் வைத்து உள்ளே சென்ற சுபத்திரை, தீயில் தோன்றிய திரெளபதியையும், மாமியார் குந்தி தேவியையும் வணங்கி எழுந்தாள். அவர்களும் மனமகிழ்ந்து, “உன் கணவன் எதிரி என்பதே இல்லாமல், எப்பொழுதும் இருக்கக் கடவன்; அழகும் வீரமும் உடைய ஒரு புதல்வனைப் பெறுவாய்; கணவன் அன்புக்குரியவளாக என்றும் இருப்பாய்” என்று ஆசீர்வதித்தனர். அதே போல அர்ச்சுனனும் தருமன், பீமன், அன்னை குந்தி தேவி ஆகியவர்களை வணங்கி, தம்பியர் களைத் தழுவிக் கொண்டான்.
சிவோத்ஸ்வத்தைக் களிப்புறக்கண்டு யாதவர்கள், பலராமன், கண்ணபிரான் ஆகிய அனைவரும் துவாரகை திரும்பினர். அப்பொழுது அங்கு சிலர், “நமது அரண்மனையில் தங்கியிருந்த சந்நியாசி உண்மை யில் அர்ச்சுனனாம்; அவன் நம் சுபத்திரை யைக் கவர்ந்து தேரிலேற்றிக் கொண்டு போய்விட்டானாம்’என்று பலராமனிடம் கூறினர். பலராமன் அதனைக்கேட்டு சீறி சினந்தான். தன் கலப்பை ஆயுதத்தைக் கையில் எடுத்தான். “இப்பொழுது என். தங்கை சுபத்திரையைக் கவர்ந்து சென்ற அந்த அர்ச்சுனனைக் கொல்வேன்” என்று தன் நால்வகைப் படைகளோடு புறப்பட் டான். முன்னின்று, முதற்பொருளாய் இருந்து சுபத்திரை திருக்கல்யாணத்தை முடித்த பரந்தாமன் கண்ணபிரான், தன் தமையனாரைத் தடுத்து, “அண்ணா! அர்ச்சுனன் சூழ்ச்சியினால் நம் தங்கை சுபத்திரையைக் கவர்ந்து செல்லவில்லை. அப்படி செய்வது யாராலும் இயலாத காரியம். அம்மான் மகள் என்ற முறையில், உரிமை கொண்டாடி சுபத்திரை தேர் செலுத்த அர்ச்சுனன் அழைத்துச் சென்றான். மேலும் இருவரும், ஒருவரையொருவர் விரும்புகின்றனர். ஆதலின் அர்ச்சுனன் மீது போர் தொடுப்பது வீண்” என்று பவ்யமாக எடுத்துக் கூற, பலராமன் அதனைக் கேட்டு, ”மாயம் புரியும் கண்ணா! எல்லாம் உன்னால்தான் நடந்துள்ளது போலும் என்று கூற, கண்ணன் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டார். கார் மேக வண்ணன் கூறியதைக் கேட்ட சங்க வண்ணன், தன் சினத்தைவிடுத்து, “இந்திர பிரத்தத்தில் வேதவிதிப்படி சான்றோர் சூழ, உரிய சடங்குகள் செய்து சுபத்தி ரையை அர்ச்சுனனுக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்” என்றான். கண்ண பிரான், தமையனாரின் கருத்தை யேற்று. பலராமனும், அரசர் கூட்டாளிகளும் சூழ்ந்து வர இந்திரபிரத்தம் அடைந்தார்.
சுபத்திரை திருமணம்
மீண்டும் இந்திரபிரத்தத்தில் சுபயோக சுபதினத்தில், அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக் கும் வேதவிதிப்படி திருமணம் சிறப்பாக நடந்தேறியது. தாய் வீட்டு வரிசைப் பொருள்களாக, பசுக்கள், நிலங்கள், தாவிப்பாய்கின்ற குதிரைகள், பிளிறுகின்ற யானைகள், கணத்திற்குக் காததூரம் ஓடும் தேர்கள், அணிகலன்கள், பட்டு போன்ற ஆடைகள், தாதியர்கள் மற்றும் பலவற்றை பலராமன் அளித்தான். பின்னர் பலராமன் தன் தம்பி கண்ணபிரானோடு துவாரகை மீண்டான்.
இந்திரபிரத்தத்தில் அர்ச்சுனனும் சுபத்திரையும் இரதியும் மன்மதனும், போல இரவும் பகலும் இடையறாது இன்பம் அனுபவிப்பவராய், மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர் . அதன் பயனாகச் சுபத்திரை கருவுற்றாள் பத்துமாதம் கழித்து, பகைவர் அஞ்சும்படியான, ஆற்றல்மிக்க அழகு பொருந்திய ஓர் ஆண்மகனைப் பாண்டவர் ஐவரும், திரௌபதியும், குந்திதேவியும் மகிழ்ச்சியுறப் பெற்றெடுத்தாள். அக்குழந் தைக்கு ‘அபிமன்யு’ என்று பெயரிட்டனர். நாளொருமேனியும், பொழுதொரு வண்ண மாக, வளர்பிறைச் சந்திரன் போல அக்குழந்தை ‘இளஞ்சிங்கம்’ என்று சொல்லும் படி வளர்ந்தது.
உபபஞ்ச பாண்டவர்கள்
அதே நேரத்தில் துருபதராசன் தெய்விக மகளாகிய திரெளபதி, தருமனால் பிரதி விந்தியனையும், பீமனால் சுதசோம னையும், அர்ச்சுனனால் சுத கீர்த்தியையும், நகுலனால் அழகுடைய சதாநீகனையும் சகாதேவனால் சுதசேனனையும், பெற் றெடுத்தாள். இந்த ஐவரைத்தான் இளம் பஞ்சபாண்டவர்கள் அல்லது உபபாண்ட வர்கள் என அழைப்பர். அடுத்து, பாண்டவர்கள் அபிமன்யுவிற்கும், உபபாண்டவர் களுக்கும், வேதத்தில் கூறியுள்ளபடி நாமகரணம், அந்தப் பிராசனம், செளளம் (திருமுடி கழித்தல்) காதணி அணிதல், முதலிய வற்றைச் செய்தனர். அதோடு அவர்களை வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், தேரோட்டுதல், வாள், வேல் பயிற்சி, கல்வி, கலைகள் போன்ற வற்றைக் கற்கச் செய்தனர். இவர்களில் அபிமன்யு சிறந்திருக்கக்கண்டு, அனைவரும் மகிழ்ந்தனர்.
இவர்களைத் தவிர, வேதிகை என் பாளை மணந்து, எழில் கொள் சாதே யனைத் தருமபுத்திரர் மகனாகப் பெற்றார். பீமன், சலதரை என்பாளை மணந்து சுகுணன் என்பவனை மகனாகப் பெற்றான். நகுலன் இரேணுமதி என்பாளை மணந்து மித்திரன் என்பானை மகனாகப் பெற்றான். சகாதேவன் அழகுடைய விசயையை மணந்து, ஜயேந்திரன் என்பவனை மகனாகப் பெற்றான்.
ஆக உபபாண்டவர்கள் ஐவர், பாண்டவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஐந்து பிள்ளைகள், அர்ச்சுனனுக்காக அபிமன்யுவை சேர்த்து அதோடு பீமனுக்கு இடும்பியிடம் பிறந்த கடோத்கஜன், அருச்சுனனுக்கு உலூபியிடம் பிறந்த இரவான், சித்ராங்கதையிடம் பிறந்த பப்புருவாகனன், பாண்டவர்கள் வாரிசுகளாக பதின்மூன்று பேரைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
பதின்மூன்று பேர் வாரிசுகள் இருந்தாலும், கண்ணன் அருளால் அபிமன்யுவிற்கும், உத்தரைக்கும் பிறந்த பரிக்ஷித்து ஒருவன் மட்டுமே பாண்டவர், கௌரவர் வாரிசாக விளங்கினான். மற்ற அனைவரும், கௌரவர்கள் வாரிசுகளும் சேர்ந்து குருக்ஷேத்திரப் போரில் மாண்டு போயினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மகாபாரதம் – 13 அர்ச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கம், சித்ராங்கதையுடன் திருமணம் | Asha Aanmigam