‘மதுராவில், ஈத்கா மசூதியை அகற்றி, கிருஷ்ண ஜன்ம பூமியை மீட்க வேண்டும்’ எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
உ.பி., மாநிலம், மதுராவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் ஹரிசங்கர், விஷ்ணு ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டதாவது: மதுராவில், கிருஷ்ண ஜன்ம பூமியான, 13.37 ஏக்கர் நிலத்தில், கேசவ் தேவ் கோவில் அமைந்து உள்ளது.
முகலாயர் ஆட்சியில், கோவிலின் ஒரு பகுதியை இடித்து, அங்கு ஒரு கட்டடத்தை கட்டி, அதற்கு ஈத்கா மசூதி என பெயரும் வைத்தனர். இந்த மசூதியை அகற்றி, கிருஷ்ண ஜன்ம பூமியை முழுமையாக மீட்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, மதுரா கேசவ் தேவ கோவிலில் உள்ள, ‘பகவான் ஸ்ரீகிருஷ்ணா விராஜ்மான்’ எனப்படும் அமைப்பு சார்பில், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில், சிலர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சாதனா ராணி தாக்குர், விசாரணையை, நவ., 18க்கு ஒத்திவைத்தார்.
இந்த மனு தாக்கலுக்கு மதுராவைச் சேர்ந்த, ‘அகில பாரதிய தீர்த்த புரோஹித் சபா’ என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் மகேஷ் பதக் கூறுகையில், ”மதுராவில் நிலவி வரும் அமைதியை சீர்குலைக்க, தேவையற்ற பிரச்னையை சிலர் கிளப்பி வருகின்றனர்,” என்றார்.