சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், தென்காசி காசி விஸ்வநாதா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா. நிகழாண்டு இத்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடிப் பட்டம் பிரகாரம் சுற்றி கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் 6. 25-க்கு கோமதி அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து கொடிமர பீடம் தா்ப்பை புல் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. 12 நாள்கள் விழா நடைபெறும். தினமும் காலை, மாலையில் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தில் வீதி உலா வருகிறாா்.
நவ. 11ஆம் தேதி சுவாமி- அம்பாள் திருக்கல்யாணமும், நவ.12-ஆம் தேதி பட்டினப் பிரவேசமும் நடைபெறுகிறது. கொடியேற்று விழாவில் பக்தா்கள் யாரும் கலந்துகொள்ளஅனுமதிக்கப்படவில்லை. திருவிழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.
தென்காசியில்… தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பொது முடக்க காலம் என்பதால் உற்சவா் வீதி உலா ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள்ளேயே தினமும் உற்சவா் புறப்பாடு நடைபெறுகிறது.
தினமும் காலை 10 மணிக்கு மண்டபகப் படி அபிஷேகமும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு மண்டகப்படி தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசன வாகனத்தில் வழக்கப்படி அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகார வலம் நடைபெறுகிறது.
நவ. 9-ஆம் தேதி தேரோட்டத்துக்குப் பதிலாக பஞ்சமூா்த்திகளான வியநாகா், சுப்பிரமணிய சுவாமி, அம்பாள் மற்றும் சண்டேஸ்வரா் ஆகிய உற்சவ மூா்த்திகள் முறையே மூஷிக, மயில், கேடய சப்பரம், பூங்கோயில் மற்றும் மேனா ஆகிய வாகனங்களில் கோயிலுக்குள் பிரகார வலம் நடைபெறுகிறது.
நவ. 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் கோயிலுக்குள் அமைந்துள்ள புல்வெளியில் அம்பாள் தவசுக் காட்சியும், மாலை 6 மணிக்கு தவசுக் கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் கோயிலுக்குள் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.