திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்குமார்ச்சனை சேவையை இணையவழியில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய் துள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 11-ம் தேதி முதல் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் இன்றி லட்ச குங்குமார்ச்சனை நடத்தப்பட உள்ளது.
இதில் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பங்கேற்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய் துள்ளது. இதற்கான டிக்கெட்களை நேற்று காலை 10 மணி முதல் இணையவழியில் பக்தர்கள் பெற்றனர்.
இந்த டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயிலில் நடைபெறும் லட்ச குங்குமார்ச்சனையில் பங்கேற்கலாம்.
மேலும் தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசி சேனல் மூலமாகவும் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த சேவையில் டிக்கெட் பெற்று பங்கேற்கும் பக்தர்களின் வீடுகளுக்கு ரவிக்கை, குங்குமம், அட்சதை, 2 மஞ்சள் கயிறு, கல்கண்டு பிரசாதம் ஆகிய பிரசாதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
எனவே பக்தர்கள்
www.tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளத்தில் பங்கேற்பவர்களின் பெயர், வயது, பாலினம், அஞ்சல் எண், செல்போன் எண், பிரசாதங்களை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
டிக்கெட்டுக்கான தொகையை எந்த வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.