ஈசனின் கோபத்திலிருந்து தப்பிக்க பிரம்மன் வழிப்பட்ட சாந்தி துர்க்கை! சாந்தம் மிகவும் உயர்ந்த குணம். எல்லோரும் விரும்புவதும் சாந்தியைத் தான்.சாந்தி நிலை ஏற்பட்டால் தான் எக்காரித்திலும் வெற்றியடையலாம். கோபத்தினால் இழப்புகளே மிஞ்சும். அமைதி, அன்பு மட்டுமே வெற்றி பாதையை நிர்ணயிக்கும். சாந்த நிலைக்காக, அழகின் பிறப்பிடமான சாந்தி துர்க்கையே, சகல மங்களங்களையும் அருள்பவள். மாறாத கருணையுள்ளம் கொண்டவள். வேண்டியதை வேண்டுமுன்பே அளிப்பவள்.எல்லா செயல்களிலும் வெற்றி தருபவள். பகைவர்க்கு எமனாகவும், வீட்டில் அமைதி நிலவவும், தம்பதியரிடையே அன்யோன்யம் பெருகவும் அருள்பவள்.
இத்தேவியை நினைத்த மாத்திரத்திலேயே துர்சக்திகள் விலகிப் போகும் என்று கூறப்பட்டுள்ளது. வாசனை தூபங்களில் பிரியம் கொண்டவள். இத்தேவியை உபாசனை செய்பவர்களிடம் கோபம்,பொறாமை,ஆத்திரம் போன்ற துர்குணங்கள் அணுகாது காப்பவள். முப்பெரும் கடவுளில் படைக்கும் தொழிலை செய்யும் நான்முகான பிரம்ம தேவன் தன் நான்கு முகங்களால் தேவியின் நான்கு கைகளையும் வர்ணித்துக் கொண்டே இருக்கிறாராம். ஏன் தெரியுமா? நான்முகன் ஈசனின் முடியைக் காண அன்னப்பறவையாக உருவெடுத்துச் சென்றார். திருமாலோ பன்றி உரு எடுத்து பாதாளம் நோக்கி ஈசனின் அடியைக் காணச் சென்றார். திருமால் அடியைக் காண முடியாமல் ஈசனிடம் உண்மையைக் கூறினார். நான்முகனோ எதிர்ப்பட்ட தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்து ஈசனின் முடியைக் கண்டதாகக் கூறினார்.அதனால் பொய் சொன்ன நான்முகனின் பொய்த் தலையை ஈசன் கிள்ளிவிட்டார். அதற்கு முன் நான்முகன் ஐந்து தலைகளோடு இருந்தார். இந்நிகழ்விற்குப் பின்னரே அவர் சதுர்முக பிரம்மனாக மாறினார்.
இதனால், கோபமடைந்த பரமேஸ்வரனின் சாபத்தால் நான்முகனுக்கு கோயில் இல்லாமலும், சிவபூஜையில் தாழம்பூ சேர்க்கப்படாமலும் இன்று வரை இருந்து வருகிறது. பரமேஸ்வரனுக்கு மறுபடியும் கோபம் வந்து விடக் கூடாது எனும் பயத்திலேயே நான்முகன் இடைவிடாமல் தேவியைத் துதித்து வர்ணித்துக் கொண்டிருக்கிறாராம். தேவியின் நான்கு கைகளாலும் தன் நான்கு தலைகளும் காக்கப்பட வேண்டும் என்பதே அவரின் பிரார்த்தனையாம். இதன் மூலம், சிவாபராதத்திலிருந்து தேவியின் கருணை நம்மை மீட்கும் என்பதை அறியலாம்.
மூன்று சக்திகளான இச்சா,கிரியா,ஞான சக்திகளின் சங்கமமே ஸ்ரீ துர்க்கை. எனவே, ஸ்ரீதுர்க்கையை வணங்குவதால் காளி,லட்சுமி,சரஸ்வதி ஆகிய மூவரையும் தரிசிப்பதின் பலன் நமக்குக் கிடைக்கிறது. மும்மூர்த்திகள்,மகிஷாசுரனை அழிக்க மூன்று சக்திகளையும் ஒன்று சேர்த்து துர்க்கா தேவியை உருவாக்கினார்கள்.அந்த மகாதுர்க்கையே, ராகு காலத்தில் மகிஷாசுரனையும் அவனது சகாக்களையும் அழித்து தேவர்களைக் காப்பாற்றினாள்.
ராகு காலத்தில் துர்க்கையின் சக்தி அளப்பரியது.ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தையும் களைந்து நன்மை அளிக்கிறாள்.நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கிறாள். எல்லா உயிர்களிலும், எல்லா பொருட்களிலும் நிறைந்திருப்பவள்.
சக்திகளுக்கெல்லாம் சித்தியை தருபவள்.
துர்க்கா தேவியை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்து பூஜித்து வந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கும். மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட துர்க்கா தேவி சடுதியில் அருள்வாள். கலி யுகத்தில் சண்டி தேவியும் கணேச பெருமானும் விரைவில் நன்மையை தருவார்கள் என்பது பழமொழி. துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள்.