ஒன்பது கிரகங்களில் நம் மனதை ஆட்டுவிக்கும் அதிபதி சந்திரன் ஆவார். மனதிலிருந்து புத்தி பிறப்பதால், மனதுக்கும், புத்திக்கும், சிந்தனைக்கும் ஆதாரமாக இருப்பவர். சுகம், துக்கம், கோபம், தாபம், ஏக்கம், உணர்ச்சி, நெகிழ்ச்சி, காதல், காமம், களிப்பு, கனிவு, கற்பனை, கவிதை, கனவு, கலை, காவியம், கசப்பு, சோகம், மறதி, எரிச்சல், வாதம், பிடிவாதம், உடன்பாடு, முரண்பாடு, ஒட்டுதல், உறவாடுதல் என எண்ணிலடங்கா தன்மைகளை, தன்னகத்தே கொண்டு வாரி வழங்குகிற கிரகம்தான், சந்திரன்.
மேலும், தாய், செல்வம் மற்றும் புகழ் ஆகியவற்றையும் குறிக்கிறது. சந்திரன் முக்கியமாக தாய் மற்றும் பெண்மையைக் குறிக்கிறது. சந்திரன் நமக்குள் இருக்கும் குழந்தை மனதை வெளிக் காட்டுகிறது.
குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான். தெய்வத்தை எந்தளவுக்கு கொண்டாடுகிறோமோ, அந்தளவுக்கு நம்மிடம் பிரியமாக இருக்கும். தெய்வத்தை நாம் கண்டுக்கொள்ளவில்லை என்றால் அது சென்றுவிடும். ஒரு குழந்தையை நீங்கள் கொஞ்சினால் தான் அந்த குழந்தை உங்களை பார்த்து சிரிக்கும் உங்களோடு அன்போடு இருக்கும்.
கடவுளின் படைப்பின் மாசுமறுவற்ற மற்றொரு வடிவம்தான் குழந்தை. குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும், லூட்டியும் தூய்மையானது. கள்ளம், கபடம் கலக்காதவை. அவர்களுக்கு முன்தீர்மானங்கள் இருப்பதில்லை. இடம், பொருள் பார்த்துப் பேசவேண்டும், கூடாது என்பதெல்லாம் எதுவும் அவர்களுக்கு தெரியாது. அதனாலேயே அவர்களின் பேச்சும், சிரிப்பும் நமக்குள் இருக்கும் கவலைகளை பறந்தோட செய்கிறது. அவர்களின் உலகம் வேறு. அவர்களின் குறிக்கோள் மிகவும் எளிதானது. மகிழ்ச்சியாய், சந்தோஷமாய் இருக்க வேண்டும். பசித்தால், விழுந்தால், வலித்தால் ஓர் அழுகை அவ்வளவுதான். இதேப்போன்று, வாழ வேண்டும் என்று நினைப்போம். அதற்கு மனதுக்காரனை வழிப்பட்டாலே போதும். வெண்மை நிறம் பொருந்திய சந்திரன் குழந்தைகளை போல மாசுமறுவற்ற உள்ளத்தை தருவார்.
சந்திரன் நம்மை மிகவும் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள, கனவான, கற்பனை, உணர்ச்சி, நெகிழ்வான மற்றும் பாதுகாப்புள்ள மனிதனாக ஆக்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவரின் மனநிலை அல்லது அமைதியற்ற மற்றும் எரிச்சலை உணர்வைத் தரக்கூடியதாக இருக்கும். ஆகவே, நம்முள் மறைந்திருக்கும் குழந்தை மனதை வெளிப்படுத்தும் சந்திரனாளுக்குரிய இன்று சந்திர பகவானை நினைத்து விளக்கேற்றி வழிபடுவோம்.
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
பொருள் – “தாமரைப்பூ சின்னம் பொறித்த கொடியை உடையவராகவும், பொன்னிற ஒளியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் சந்திர பகவானை வணங்குகிறேன். அத்தகைய சந்திர பகவான் எனது அறிவாற்றலை சிறக்கச் செய்து, என் வாழ்வில் ஒளிவீச அருள்புரியுமாறு வேண்டுகிறேன்” என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் சரியான பொருளாகும்
சந்திர பகவானின் இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை துதிப்பது சிறந்தது. திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். கண்பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும். அழகு மற்றும் இளமைத் தோற்றம் உண்டாகும். செல்வமும் பெருகும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடப்பவர்கள் இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை தினமும் ஒரு துதித்து சந்திரனால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கும்.