ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தியிலும், அமாவாசையிலும் கொண்டாடப்படுவது தீபாவளிப் பண்டிகை. தீபாவளியை இந்தியா முழுக்க, ஏன் உலகத்தில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் திருநாள்.
நரகாசுரன் என்ற தீய சக்தியை மாய்த்து ஸ்ரீ கிருஷ்ணன் வெற்றி பெற்ற நாள் திருநாள் தீபாவளி. தமிழகத்திலும், வேறு சில இடங்களிலும் கிருஷ்ணனை முதன்மைத் தெய்வமாகப் போற்றித் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் தீபாவளியன்று ராமனைப் போற்றி வழிபடுகின்றனர்.
ராமன், ராவணனை வதைத்தான். ராமனது 14 ஆண்டுகள் வனவாசமும் முடிந்தது. அயோத்தி மக்கள் ராமனை வரவேற்க, ஊர்களையும், நகரங்களையும் அலங்கரித்தனர். தீபங்களை வரிசை வரிசைகளாக ஏற்றினர். இதுபோல், மக்கள் ராமனை அயோத்திக்கு வரவேற்ற திருநாளே தீபாவளித் திருநாளாக மலர்ந்தது.
வரலாற்று அடிப்படையில் தீபாவளியை முதன் முதலில் கொண்டாடியவர்கள் சமணர்களே என்று சொல்லலாம். சமணர்கள் ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மஹாவீரர் முக்தி அடைந்த தினத்தைப் பேரொளியால் நிரப்பும் நாள். சமண சமயத்தின் கொள்கைகள் சில இந்து சமயத்தில் நுழைந்தது. இவற்றில் தீபாவளி வழிபாடும் ஒன்று. அதாவது, தீபாவளி வழிபாடு பல சமயங்களுக்கும் பொதுவானது. வழிபாட்டுக்குக் கற்பிக்கப்படும் காரணங்கள்தான் வெவ்வேறானவை.
ஸ்ரீ ஆதி சங்கரர் ஒரு தீபாவளியன்று பல பீடங்களை நிறுவியுள்ளார். ஆகவே, நல்ல செயல்களைத் தொடங்க தீபாவளித் திருநாள் பொருத்தமான நாள் எனத் தெரிகிறது. வட இந்தியர்கள் தீபாவளித் திருநாளை வருடப் பிறப்பு நாளாகப் போற்றுகின்றனர். காசியில் ஒரு கையில் தங்கக் கரண்டியுடனும், மற்றொரு கையில் தங்கக் கிண்ணத்துடனும் அன்னபூரணி காட்சி தருகிறாள். அன்னபூரணியின் சன்னிதி எப்போதும் திரையால் மறைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் பிட்சத் துவாரம், தருமத் துவாரம் என்ற இரண்டு துவாரங்களின் வழியாகத்தான் அன்னபூரணியைத் தரிசிக்க முடியும். தீபாவளியின் போதுதான் திரை விலக்கப்படுகிறது. பல வகைப்பட்ட அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னபூரணியை அப்போதுதான் நேரடியாகப் பக்தர்கள் தரிசிக்க முடியும்.
ஒரு தீபாவளித் திருநாளின் போது தான், சீக்கியர்களின் குரு, குருநானக் பிறந்தார். இவரது பிறந்த நாள் விழா தீபாவளி. தீபாவளியன்று சீக்கியர்கள், அமிர்தசரஸ் பொற்கோயிலை விளக்குகளால் அலங்கரித்து வழிபடுகின்றனர்.
தீபாவளித் திருநாளுக்காக நிரப்பப்படும் தூய நீரில் அன்றைய தினம் கங்கா தேவி எழுந்தருளுகிறாள் என்று நம்புகின்றனர். ஆகவே, தீபாவளிக் குளியலைக் கங்கா ஸ்நானம் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார்கள். குளிச்சாச்சா என்று கேட்பதற்குப் பதில், கங்கா ஸ்நானம் ஆச்சா என்று ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது. தீபாவளிக் குளியல் என்பது, கங்கையில் குளித்த பயன்களைத் தரக்கூடியது. பல பாவங்களை அகற்றுவது, நோய்களைப் போக்குவது, புனிதமாக ஆக்குவது, தீபாவளித் தினத்தன்று எண்ணெயில் லெஷ்மியும், தண்ணீரில் கங்கையும் நிலைத்திருக்கின்றனர். இதனை,
“தைலே லஷ்மி ஜலே கங்கா தீபாவளி வஸேத்” என்ற துலா புராணத்தின் புகழ் பெற்ற வாசகம் தெரிவிக்கிறது. கங்கா ஸ்நானம் ஒரு கடமையாக விதிக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்.
தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை என்று கூறுவதும் பொருத்தமாக இருக்கும். வட மாநிலங்களில் தீபாவளியின் போது, வீடுகளில் தீப அலங்காரம் செய்வது விசேஷமான அம்சமாகும். அப்போது விளக்குகள் ஒளி சிந்திச் சிரித்துக் கொண்டிருக்கும். இதுபோலவே, தீபாவளிப் பண்டிகையை வட மாநிலங்களில் லெஷ்மி பூஜையாகக் கருதுகிறார்கள். அன்று விளக்கேற்றி திருமகளை வழிபட்டால் ஆயுள் முழுவதும் செல்வம் செழித்து, சித்திக்கும் என்பது வட மாநில மக்களின் எண்ணங்களாக உள்ளன.
இராவணனை வெற்றி பெற்று, சீதையை மீட்டுக் கொண்டு ஸ்ரீராமர் திரும்பிய வெற்றி தினத்தைக் கொண்டாடும் பண்டிகையாகவும் வட மாநிலத்தவர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். தென்னாட்டினர் இந்த விஷயத்திலும் மாறுபடுகிறார்கள்.
நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை ஸ்ரீ கிருஷ்ணன் கொன்று மக்களுக்கு மகிழ்ச்சியளித்தார். நரகாசுரனைத் தான் கொல்லாமல், தன் மனைவியின் மாமாவால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் போர்க் களத்தில் மயங்கித் தேரில் சாய்ந்தார். ஏனென்றால், தன் தாயைத் தவிர, தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று நரகாசுரன் வரம் பெற்றிருந்தான்.
எந்தத் தாயாவது மகனைக் கொல்வாளா? ( இந்தக் காலத்தில் இல்லை, அந்தக் காலத்தில்…) ஆனால், பாமாவுக்கு, நரகாசுரன் தன் மகன் என்பது தெரியாது. தெரியாதபடி செய்தவர் கண்ணன். ஆகவே, கணவனைக் காக்கத் தேரோட்டியாகப் போர்க் களத்துக்குச் சென்றிருந்த பாமா, தன் வில்லை வளைத்தார். வில் அம்பு எய்தி, தன் மகன் நரகாசுரனை வீழ்த்தினாள். இப்போது, பாமா எப்படி நரகாசுரனின் அன்னை யாவாள், என்று சந்தேகம் வரலாம்.
பகவான் விஷ்ணுவின் வராக அவதாரத்தின் போது, ஹிரண்யாகரனை அழித்து, பூமியை மீட்டுக் கொண்டு வந்தார் என்று ஒரு புராணக் கதை உண்டு. இப்படி, வராக அவதாரத்தில் பகவான் விஷ்ணுவின் ஸ்பரிசத்தால், பூமாதேவியின் மூலம் பிறந்தவனே நரகாசுரன். பூமாதேவியே, விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பாமாவாக அவதரித்தாள். எனவே, நரகாசுரன் தான் பெற்ற வரத்தின் படியே, தன் தாய் பூமாதேவியின் அம்சமான பாமாவின் மூலம் அழிவைச் சந்தித்தான்.
உயிர் பிரியும் தருணம் ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான். என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்கள் விளக்கேற்றி ஒளி பெற வேண்டும். மக்கள் மங்கள நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்துண்டு களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவனது விருப்பம் நிறைவேறும் என வரமளித்தார் ஸ்ரீ கிருஷ்ணன். நரகாசுரன் இறந்த தினமே அதர்மம் அழிந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
தீபத் திருநாளாம் தீபாவளி, அநீதி அழிந்த நாளாகக் கொண்டாடப் பட வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம், சத்யபாமாவே வரம் பெற்றதாகவும் சில புராணக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தீபாவளித் திருநாள் தீபத் திருநாளாக மட்டுமின்றி நரக சதுர்த்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
உணவுப் பண்டம் ஒன்றையும் சாப்பிடாமல் முழு விரதம் இருக்கும் திருநாளும் உண்டு. உதாரணம் வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி ஆகிய விரதங்கள் ஆகும். இதற்கு நேர் மாறாக உணவுப் பண்டங்கள் பலவற்றைச் சாப்பிட வேண்டிய திருநாள்களும் உண்டு. அதில் முக்கியமான ஒன்றுதான் தீபாவளி திருநாளாகும்.
தீபாவளித் திருநாளில் உண்பதற்காக புதுப்புது வகையான பண்டங்களையும், பலபல வண்ணங்கள் கொண்ட பண்டங்களையும், வகை வகையான சுவைகள் கொண்ட இனிப்புகளையும் இல்லத்தரசிகள் இரவு, பகல் எனக் கண் விழித்துச் செய்கின்றார்கள்.
தீபாவளி லேகியம்
உணவுப் பண்டங்கள் செரிக்கச் சுக்கு, மிளகு, திப்பிலி, மோடி குச்சி, பரங்கிச் சக்கை, அதிமதுரம், இஞ்சி, உலர்ந்த திராட்சை, பனை வெல்லம், நெய், தேன் முதலியப் பொருட்களைப் பக்குவப்படுத்தி மருந்து உருண்டைகளையும் செய்கின்றார்கள். இதற்கு தீபாவளி லேகியம் என்று பெயர். தீபாவளிக் குளியலுக்குப் பின், இறைவனை வழிபட்டு உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவதற்கு முன்பே, இந்தத் தீபாவளி லேகியத்தைச் சாப்பிட வேண்டும்.
செரிப்பதற்கு லேகியத்தைச் சாப்பிடுகின்ற அளவுக்கு உணவுப் பண்டங்களைச் சாப்பிட்டு மகிழ்ச்சியடைகின்ற நாளாகத் தீபாவளித் திருநாள் திகழ்கின்றது. இத்தகைய லேகியம் வேறு எந்த திருநாளிலும் செய்யப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகஞானி சார்பில், அனைவருக்கும் ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.