சீரடி சாய்பாபா கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சீரடி சாய்பாபா திருக்கோவிலில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. காரணம் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. இந்த சூழ்நிலையில் கோவிலில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்ததின் எதிரொலியாக கடந்த ஆறு மாத காலமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தன . இதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் பல மாநிலங்களில் கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் இன்று முதல் பாபாவை தரிசனம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
இருப்பினும் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே போல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.