சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்த நன்னாள் இது. தீய சக்திகளை அழித்தொழித்த நாள் இது. இன்று 20ம் தேதி கந்தசஷ்டி. முருகப்பெருமானை மனமுருக வேண்டுவோம். தடைப்பட்ட மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பான். செவ்வாய் தோஷம் போக்கி அருளுவான்!
முற்பிறவியில் தட்சனாகவும் மறுபிறவியில் சூரபத்மனாகவும் இருந்து அட்டூழியங்கள் செய்து வந்தான் அசுரன். முற்பிறவியில் சிவனார் வீரபத்திரரைக் கொண்டு அழித்தார். மறுபிறவியில்… சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானை அவதரிக்கச் செய்தார் முருகப்பெருமான்.
முனிவர்களையும் தேவர் பெருமக்களையும் மக்களையும் காப்பதற்காக பார்வதியின் தொடர்பின்றி, தனது நெற்றிக் கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளைத் தோன்றச் செய்தார் சிவனார்.
அந்த தீப்பொறிகளை வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்ப்பித்தார். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் கொண்டது என்கின்றன புராணங்கள்.
பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் என மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவர் என்பதால் ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம் என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதையடுத்து, அசுரர்களை அழிக்க நினைத்த முருகக் கடவுள், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என அனைத்து சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள்… சூரபத்மன்! அதுதான் க்ளைமாக்ஸ். அரக்கத்தனத்தின் முடிவு. அசுரத்தனத்தின் இறுதி நாள். கர்வத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.
ஆனால், கருணாமூர்த்தி அல்லவா கந்தபெருமான். அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தைக் காட்டி அருளினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்தது. ‘உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற அருளுங்கள்!’ என வேண்டினான்.
இன்றைக்கும் திருச்செந்தூர் கடலில் நீராடி, செந்தூர் ஆண்டவரைத் தரிசித்தால் நம் ஆணவமெல்லாம் பறந்தோடும். எதிரிகள் தொல்லையே களைந்தோடும். கர்வமெல்லாம் காணாமல் போகும் என்பது ஐதீகம்!
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று சொல்வார்கள். அப்படி வேல் வாங்கி, சூரசம்ஹாரம் செய்து, இந்திராதி தேவர்களையும் மக்களையும் காத்தருளினார் வெற்றிவேலன். இதனால் மகிழ்ந்த தேவர்கள், தங்கள் இனத்தைச் சேர்ந்த தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்து வைத்தார்கள். அதாவது, முதல் நாள் சூரசம்ஹாரம். அடுத்த நாள்… திருக்கல்யாண வைபவம்!
இந்த நாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி மனதார வழிபடுங்கள். எதிரிகளையெல்லாம் பந்தாடித்தள்ளுவான் பாலகுமாரன். திருக்கல்யாண வைபவமான நன்னாளில், தெய்வானைக் கணவனை வணங்குங்கள். திருமண பாக்கியம் கைகூடும்! கல்யாண வரத்தை தந்தருள்வான் கந்தகுமாரன்.
20ம் தேதி சூரசம்ஹாரம். நாளை 21ம் தேதி திருக்கல்யாணம். கண்ணார கந்தனின் திருமணத்தை தரிசியுங்கள். மனதார பிரார்த்தனை செய்யுங்கள். வேண்டியதை வேண்டியபடி, வெற்றியைத் தந்தருள்வான் செல்வமுத்துக்குமரன்!