சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு தெய்வானையுடன் திருமணம் நடைபெற்றது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாகத் துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் நடைபெற்ற திருமணங்களை பக்தர்கள் யுடியூப் மூலம் நேரலையில் தரிசனம் செய்தனர். தெய்வீக திருமணங்களை தரிசனம் செய்தால் திருமணம் ஆகாத இளம் பெண்கள், இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.
தங்களை இம்சித்த சூரபத்மனை முருகப்பெருமான் திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்தார். தேவசேனாதிபதியின் வெற்றியை கொண்டாடிய தேவர்கள் துயரம் நீங்கினர். வெற்றி வேல் வீர வேல் என்று முழக்கமிட்டனர். துன்பத்தில் இருந்து காத்த முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் தெய்வானை திருமணம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் ஏழாம் திருநாளன்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடாகி 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்து சேர்ந்தார். மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி தெய்வானை அம்மனுக்கு காட்சி அருளினார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி அம்மன் தோள்மாலை மாற்றும் வைபவமும், இரவில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வந்தது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான அசுரர்களை அழித்து போரில் வெற்றிபெற்ற சண்முகருக்கு தெய்வானையை மணமுடித்து வைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனையொட்டி, சண்முகர் வள்ளி மற்றும் தெய்வானைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மலைக்கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார் பதி, பழனி டிஎஸ்பி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் நிர்வாகம் சார்பில் சமூக ஊடகங்களில் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி.
தணிகை என்பதன் பொருளே சினம் தணிதல் தான். திருத்தணி தணிகை முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.இதன் காரணமாக இந்த கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது இல்லை.
இருப்பினும் முருகனின் அருளைப் பெறக்கூடிய கந்த சஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோயிலில் வள்ளித் திருக்கல்யாண நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை கண்குளிரக் காண்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும் என நம்பப்படுகிறது.
அழகர்கோவில் சோலை மலை முருகன் கோவில் முருகப்பெருமானின் ஆறாம் படை வீடாக போற்றப்படுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிங்கார வேலருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிஅளிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி யுடியூபில் ஒளிபரப்பப்பட்டது. இதேபோல், பாரிமுனை அருகில்உள்ள கந்த கோட்டம் கோயிலிலும் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை ஒட்டி, காவடிமண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு தினமும் சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதேபோல், மூலவர் முருகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கந்த சஷ்டி 6வது நாளான நேற்று முன்தினம் மாலை முருகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இணையதளம் மற்றும் யுடியூப் மூலம் பக்தர்களுக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
சென்னை பூந்தமல்லி முருகன் கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பூந்தமல்லியில் பிரசித்தி பெற்ற வள்ளி, தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்தசஷ்டி திருவிழாவை ஒட்டி நேற்றிரவு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதற்காக கோயிலில் பிரத்யேக மேடை அமைத்து, யாகம் வளர்க்கப்பட்டது. அப்போது, சுப்பிரமணி சுவாமி மற்றும் வள்ளி, தேவசேனா ஆகியோருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையும் நடைபெற்றது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி பட்டாடை உடுத்தி வெள்ளி கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கெட்டிமேளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.