2019-ம் ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விகாரி வருடம் அக்டோபர் 29-ம் தேதி, விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை 9.30-க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் மாறுகிறார்.
தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்க உள்ளார். குரு பகவான் அடுத்த சார்வரி வருடம் அக்டோபர் மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார்.
இந்தாண்டு குருப்பெயர்ச்சியால் நூற்றுக்கு நூறு சதவீதம் நன்மையடையும் ராசிகள் என்றால் அது மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் தான்.
மேஷம்
மேஷ ராசிக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி தரக்கூடிய குருப்பெயர்ச்சியாக இது அமையும். மதிப்பெண்கள் அடிப்படையில் 85 சதவீதம் நல்ல பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியடைகிறார். ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் உங்களுக்கு பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும்.
இதுவரை உங்களுக்கு கிடைக்க இருந்த பாக்கியங்கள் அனைத்தும் தாமதப்பட்டோ அல்லது கிடைக்காமலேயே இருந்திருக்கும். ஆனால், குருபெயர்ச்சிக்கு பின், இன்பங்கள் அனைத்தும் கைகூடும். இதற்குமேல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டப்போகிறது. பெண்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களிலிருந்த சங்கடங்கள் விலகி நன்மைகள் பெருகும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தந்தையின் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும்.
நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும். வாரிசுகள் வகையில் பெருமைப்படக்கூடிய விஷயங்கள் நடக்கப்போகிறது. குலதெய்வக் கோவில் திருப்பணிகளில் முன்னின்று நடத்தும் பொறுப்புகள் வந்து சேரும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையும், மனோதிடமும் அதிக அளவில் காணப்பெற்று மகிழ்வீர்கள். வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு வாய்ப்புகளால் பெருமை அடைவீர்கள். ஆன்மிகத்தில் உள்ளவர்கள் பெயரும், புகழும் அடைவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்கு இந்தாண்டு அதீத லாபத்தை தரக்கூடிய குருப் பெயர்ச்சியாக இருக்கும். மதிப்பெண்கள் அடிப்படையில் 70 சதவீதம் நல்ல பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதுவரை மனதாலும், உடலாலும் பல இன்னல்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்த நீங்கள் இதற்குமேல் குருபகவானின் அருட்கடாட்சம் பார்வையை முழுமையாக பெறப் போகிறீர்கள்.
திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றிகள் கிடைக்கும். புதிய குடும்ப உறுப்பினர்களின் வருகையால் குதூகலமான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தங்களின் தன்னம்பிக்கை மேலோங்கும். உடல் தோற்ற பொலிவுகள் மேம்படும். சுயதொழில் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். செயலில் வேகம் மட்டுமின்றி நிதானமும் வேண்டும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் யோகம் தரக்கூடிய குருப்பெயர்ச்சியாகும். மதிப்பெண்கள் அடிப்படையில் 85 சதவீதம் நல்ல பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.
இதுவரை சுகஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இனி ஐந்தாம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து தங்களுக்கு அனைத்துவிதமான மகிழ்ச்சிகளை தரவிருக்கிறார்.
அதிஷ்டம் தரக்கூடிய காலகட்டமிது. இயற்கை சுபரான குரு தான் நின்ற இடத்தில் இருந்து பாக்கிய, லாப மற்றும் ஜென்ம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். மனதில் நினைத்த மற்றும் செய்ய துவங்கிய அனைத்து காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு தகுந்த காலமாக இருக்கும். அரசு சார்ந்த நிர்வாகப் பொறுப்புகள் உங்களை வந்துச் சேரும். பெரியோர்கள் மற்றும் மகான்களின் தரிசனம் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் அருட்பார்வை கிடைப்பதால் புண்ணிய காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள்.
தொழிலில் ஈட்டப்படும் தொகையை சேமிப்பதன் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் மேன்மையடையும். மூத்த சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கைகூடும். வாரிசுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த வெளிநாடு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட கால எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும் காலகட்டமாக இது அமையும்.