உத்தியோகஸ்தர்களுக்கு: வேலையில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். தொழிலில் மேன்மை உண்டாகும். தனலாபம் உயரவும் வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணிசமான லாபம் பெற இயலும். மகசூல், கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் குறை உண்டாகாது. அதிகச் செலவுக்கு இடமுண்டு. ஆனால் அதனை சாமர்த்தியமாக சமாளிக்க வழி உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு: ஒரு முக்கியப் பிரச்னையில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டம் உருவாகலாம். அரசாங்க காரியங்களில் எந்த ஆதாயத்தையும் முயற்சி செய்து பெறலாம். கலைத்துறையினருக்கு: உங்கள் சம்பந்தப்பட்ட பணிகள் செவ்வனே நிறைவேறத்தடையில்லை. பொதுவாக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சம் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு: உங்களுடைய வாழ்வு உன்னதமாக அமைய இந்த காலகட்டம் உதவும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் நடக்க இடமுண்டு.
மாணவர்களுக்கு: புகழுடன் பொருளும் பெறுவர். வித்தைகளில் தேர்ச்சி உண்டாகும். தொலைதூரச் செய்தி நற்செய்தியாக இருக்கும்.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும்.
சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி சமர்ப்பிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருத்தணி, விராலிமலை.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் ஷட் ஷண்முகாய நமஹ:”.
பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் உங்களுக்குப் பிடிக்கும். உங்கள் ராசிநாதனான செவ்வாயை வழிநடத்தக் கூடிய தெய்வத்தை நீங்கள் அந்தச் சூழலில் தரிசிக்கும்போது உங்கள் வாழ்வு மலையளவு உயரும் என்பது உறுதி. அப்படிப்பட்ட ஒரு தலம், பழநி. தனித் தன்மை பெற வேண்டும் என்று தாகத்தோடு முருகப் பெருமான் வந்தமர்ந்த தலம் இது. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இத்தலத்திற்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும், ஏற்றமும் நிச்சயம் உண்டு. தோல்விகள் புறமுதுகிட்டு ஓடுவது உறுதி.
ரிஷபம்: கொடுத்த வாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவுதான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம். திடீர்ப் பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு. பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு: பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்துவரும். திடீர்ப் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர் செலவுக்கும் இடமுண்டு.
வியாபாரிகளுக்கு: அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். நல்ல லாபம் பெறுவதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும். இதனால் அதிருப்தி ஏற்படலாம். கவலை வேண்டாம். உங்களின் விடா முயற்சியால் நீங்கள் உங்கள் வெற்றியை அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். இதனால் உங்கள் தொழில் விரிவடையும்.
அரசியல்வாதிகளுக்கு: முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
கலைத்துறையினருக்கு: உங்கள் துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்னை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்ற படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது.
பெண்களுக்கு: ‘தானுண்டு, தன் வேலை உண்டு’ என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறை செலுத்தவேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல் பழிச் சொல்லுக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகலாம்.
மாணவர்களுக்கு: கல்விப்பயனைச் சீராகப்பெறத் தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும்.
பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
சிறப்பு பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருப்பதி.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் நமோ
பகவதே வாசுதேவாய”.
ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரையும் குறிப்பதால் பொதுவாகவே உங்களுக்கு பிரதோஷ காலத்தில் இரு கொம்புகளுக்கிடையே ஈசனை தரிசிப்பது நல்லது. அதுபோல நந்திகேஸ்வரனுக்கு ஏற்றம் கொடுத்த தலமும், நந்தியம் பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு ஐயாறப்பரையும், அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்யுங்கள். எப்போது உங்களுக்கு என்ன மனவருத்தம் ஏற்பட்டாலும் பசுவிற்கு ஒரு கொத்து அகத்திக்கீரை போன்று ஏதேனும் கொடுங்கள். நீங்கள் குடியிருக்கும் ஊருக்கு அருகே பசுபதீஸ்வரர் எனும் பெயரில் கோயில் இருந்தால் அடிக்கடி சென்று தரிசியுங்கள்.
மிதுனம்: சாமர்த்தியமாகவும் புத்திகூர்மையுடனும் தெளிவான முடிவெடுக்கும் மிதுன ராசி அன்பர்களே! நீங்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த ஆண்டு நன்மையும் தீமையும் கலந்தவாறு நடக்கவே வாய்ப்புண்டு. குறிப்பாக நன்மைகளில் திடீர்ப் பொருள் வரவுக்கு இடமுண்டு. தீமைகளில் நண்பர் ஒருவர் விரோதி ஆகலாம். பொதுவாக சுபிட்சம் உண்டு. தொழில் சிறப்படையும், நிலபுலன்கள் விஷயத்தில் ஆதாயம் காணலாம். தெய்வ பலம் நல்லவிதமாக அமைந்துள்ள இந்த நேரத்தில் தெய்வப்பணி, தருமப்பணி போன்ற சத்காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ வாய்ப்புண்டு. குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். உறவினர்கள் வருகையும் இருக்கும். சுப காரியங்கள் நன்றாக நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: பதவி உயர்வு உண்டாகலாம். மேலதிகாரிகளின் உள்ளம் குளிர நடந்து கொண்டால் தீமை குறையும். உழைப்பாளிகளுக்கு உரிய கௌரவம் கிட்டும்.
வியாபாரிகளுக்கு: நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. உபத்திரவம் ஏதும் உண்டாகாது. தொழிலில் மேன்மை உண்டாகும். தொழிலாளர்களுக்கும் ஆதாயமான சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் மகிழ்ச்சி தரும்.
அரசியல்வாதிகளுக்கு’: அவசரப்படாமல் நடந்து கொள்வது நல்லது. வேண்டிய நண்பர் ஒருவர் மனஸ்தாபத்துக்கு உள்ளாக நேரலாம். பெருந்தன்மையோடு நடந்து கொண்டு அந்தப் பிரச்னையைச் சமாளிக்க வேண்டியது அவசியம்.
கலைத்துறையினருக்கு: சீரான போக்குக்குத் தடை உண்டாகாது. எந்தப் புது முயற்சியும் வெற்றியை நோக்கியே செல்லும். அன்றாடப் பணிகளை மட்டும் சிரத்தையோடு செய்து வாருங்கள். அன்றாட வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகத் தடையிராது.
பெண்களுக்கு: எதிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம். வரவு அறிந்து செலவு செய்தால் பணக்கஷ்டம் உண்டாக வாய்ப்பில்லை. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது ஓர் அமைப்பு காக்கும்.
மாணவர்களுக்கு: பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்குப் புதிய சாதனைக்கான முயற்சிகள் கைகூடிவரும். கல்விப்பயனை மிகுந்த பிரயாசைப்பட்டேனும் பெற்று விடுவர். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் ஏதேனும் திவ்யதேசங்கள்
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நமஹ”.
மிதுனம் என்பதே இரட்டை என்று பார்த்தோம். ராசியாதிபதி புதனாக வருவதால் பெரும்பாலும் பெருமாள் கோயில்கள் உங்களுக்கு ஏற்றவையாக அமையும். அதிலும் ஒரே தலத்தில் இரட்டை பெருமாள் அருளும் தலமாக இருப்பின், உங்கள் ராசியின் அடிப்படையிலான அலைவரிசைக்கு உரியதாக அது அமையும். அப்படிப்பட்ட உங்களுக்கான தலமே இரட்டைத் திருப்பதிகளாக விளங்கும் திருத்தொலைவில்லி மங்கலம் ஆகும். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான். இரு கோயில்களையும் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். முதலாவதான திருப்பதியில் எழுந்தருளும் பெருமாளின் திருப்பெயர் தேவப்பிரான் ஆகும். இரண்டாவதான திருப்பதியில் அருளும் பெருமாளின் நாமம் அரவிந்தலோசனன் என்பதாகும். சேர்ந்தே அருளும் இருவரையும் சேவித்து வாருங்கள்.
கடகம்: உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்வில் வெற்றி பெறும் கடக ராசி அன்பர்களே! நீங்கள் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள், நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது. உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள். குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாடப் பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வரதடையிருக்காது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் ஏற்படலாம். அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
வியாபாரிகளுக்கு: சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு வீண் பிரச்னை ஒன்று உருவாகலாம். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு: அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள். நிதானம் தேவை. எந்த பிரச்னையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு. செலவில் சில விரயமானதாகவும் இருக்கக் கூடும்.
கலைத்துறையினருக்கு: நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு. பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது. ஆனால், அதிகப்படியான செலவு உண்டாகலாம். டெக்னீஷியன்களுக்கு கௌரவம் கிடைப்பதுடன் பணவரவு உண்டாகவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கு: குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள்.
மாணவர்களுக்கு: பொறியியல்துறை, மருத்துவத் துறையிலுள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பமுண்டு. உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு நெய் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்து தீபம் ஏற்றவும். மல்லிகை மலரை ஒவ்வொரு பஞ்சமியன்றும் அம்மனுக்கு வழங்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: சமயபுரம், திருவேற்காடு, குலசேகரன்பட்டினம், திருக்குற்றாலம்.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ”.
சந்திரனின் முழு ஆதிக்கத்தில் கடக ராசி வருவதால் குங்குமம் மணக்கும் கோயில்கள் என்றாலே நீங்கள் குதூகலமாவீர்கள். அப்படிப்பட்ட ஆலயத்தில் ஒன்றுதான் ஆலயம். பொதுவாகவே சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு எப்போதுமே நல்லது. சக்தி வழிபாட்டினுடைய இதயத் துடிப்பு போன்றது லலிதா ஸஹஸ்ரநாமம். இங்கு அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பதே லலிதா ஸஹஸ்ரநாமத்தால்தான். இங்கு லலிதாம்பிகை ராஜதர்பார் போன்று அரியணையில் வீற்றிருக்கிறாள். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். கால்களில் கொலுசுகளோடு கொஞ்சும் லலிதாம்பிகையை தரிசியுங்கள் போதும். சந்திரனின் அமிர்த தாரைபோல அவளின் அருட்தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும். இத்தலம் கும்பகோணம் – காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையிலுள்ளபேரளம் எனும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
சிம்மம்: தன்னம்பிக்கையின் சிகரமாக வாழ்வில் ஜொலிக்கும் சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த ஆண்டு புதுமுயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி முகம் காண்பதற்குரிய சூழ்நிலையும் கனிந்து வரும். பொருளாதார சுபிட்சம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தாம்பத்திய சுகம் நல்ல விதமாக அமையும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடமுண்டு. உங்களுடைய அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகளை தேவையறிந்து செய்யவும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியும் வரலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு: பிரச்னை உருவாக வாய்ப்பில்லை. ஆனால், எதிர்பார்த்த முன்னேற்றம் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் – தொழிலாளர்களுக்கும் நல்லிணக்கம் உண்டாகி ஸ்தாபன வளர்ச்சி இருக்கும்.
வியாபாரிகளுக்கு: நல்ல லாபம் பெறுவர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். மருத்துவர்களுக்கு நல்ல செல்வாக்கு உருவாகும். இயந்திரப்பணி தான் சற்று சிக்கல் தரும். மிகுந்த அலைச்சல் உண்டாகும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலைகளை முடிப்பதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு: ஏற்றம் பெறுவர். அரசாங்க காரியங்களும், துரிதமுடன் நடைபெற வாய்ப்புண்டு. உடல்நலம், குடும்பநலம். பொருளாதார நலம் எல்லாமே சிறப்பாக அமையும். சில தொல்லைகள் ஏற்படலாம். ஆனால், அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படவும் வாய்ப்புண்டு.
கலைத்துறையினருக்கு: எல்லாம் நல்ல விதமாக அமையும். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப் படுவர். கணிசமான பொருள் பாக்கியமும் பெற இடமுண்டு. பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சமும் சீராகவே இருக்கும்.
பெண்களுக்கு: உற்றார் உறவினர் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டு. குறிப்பாகத் திருமண ஏற்பாடு கைகூடி வர வாய்ப்புண்டு. பெற்றோரால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் நலம் காண்பர்.
மாணவர்களுக்கு: ஆசிரியர் உறவு மகோன்னதமாக விளங்கும். கல்விப் பயனைப் பெறுவதில் இடையூறு இருக்கலாம். எனினும் அதனை சிறப்பாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
சிறப்பு பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு நெய் மற்றும் தேன் கொடுக்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: சூரியனார் கோவில், பாபநாசம், திருவண்ணாமலை.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் நமோ பகவதே ஸ்ரீ
ருத்ராய நமஹ”சூரியன் சிவ கோத்திரத்தை சேர்ந்தவர். சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார். சூரியன் ஒரு நெருப்புக் குழம்பாக கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரினுக்கு நிகர்த்ததாக ஒரு தலத்தை சொல்ல வேண்டுமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். கொழுந்து விட்ட அக்னியானது கருணையின் பொருட்டு இங்கு மலையாக குளிர்ந்துள்ளது. சிவனே மலையாகவும், மலையே சிவமாகவும் பிரிக்க முடியாதபடிக்கு விளங்குகிறது. சூரியன் எப்படி எல்லாவற்றிற்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணாமலை தலம் விளங்குகிறது என்பதை ஸ்காந்த புராணமும், பகவான் ரமணரும் உறுதிப்படுத்துகின்றனர். வானத்து நெருப்புப் பந்து சூரியன் எனில், பூமியில் அதற்கு இணையான நெருப்புப் பந்தாகவும், நெருப்பு தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலையே ஆகும். அருணன் என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு. அருணாசலம் என்பதற்கு அசையாத ஞான சூரியன் என்றும் பொருள் கொள்ளலாம். இதையெல்லாம் தாண்டி பூமியின் சூரிய ஸ்தானமே திருவண்ணாமலை என்றும் கொள்ளலாம். சூரியனுக்காவது உதித்தல், மறைதல் என்பது உண்டு. ஆனால், அருணாசலம் எனும் இந்த ஞான சூரியன் விழுதல், எழுதல் எதுவும் இல்லாமல் உயர்ந்த நிலையில் எல்லோரையும் ஆளுதல் என்ற மகாசக்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது. ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை நீங்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்குங்கள். காட்டுக்கு ராஜா சிம்மம். கிரகத்து ராஜா சூரியன். அதுபோல தலத்திற்கெல்லாம் தலையாய தலமாக விளங்குவது திருவண்ணாமலை ஆகும். ஏனெனில், அண்ணா என்றால் தலைவன் என்று பொருள்.
கன்னி: உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் – மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது.
வியாபாரிகளுக்கு: நல்ல லாபம் வருவதற்கான அமைப்பு உண்டு. நல்லோர் நேசமும், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி உண்டு. நில புலன்களில் எந்த விதமான வில்லங்கமும் உருவாக இடமில்லை. மெத்தப் படித்த மேலோர் சமூகத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்
படுவதோடு, கணிசமான பொருளும் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு: மகிழ்ச்சி உண்டு. அன்றாடப் பணி தொய்வின்றி நடக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களுக்கு உரிய வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் – வாங்கலில் நிதானம் இருக்கட்டும். அரசியல்வாதிகளுக்கு: ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் சமத்காரமாக நடந்து கொண்டு நற்பெயர் பெற வாய்ப்புண்டு. பொதுவாக கெடுதல்கள் ஏற்படுமானாலும், அந்தக் கெடுதல்கள் அவ்வளவாக பாதிக்காது. உழைப்பு வீண் போனது போலத் தோன்றலாம். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கு: மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்ப சுபிட்சம், தாம்பத்திய உறவு சீராக இருக்கும். சுப காரியங்கள் நடக்க இடமுண்டு. குறிப்பாக திருமணம் நடக்கவும். மக்கட்பேறு உண்டாகவும் இடமுண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வியில் ஏற்றம் பெறுவர். உடல் நலம் நல்லவிதமாக இருக்கும். மனதில் சலனம் ஏற்படலாம். தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.
சிறப்பு பரிகாரம்: புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோயிலில் 11 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். மரிக்கொழுந்தை சமர்ப்பிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்தையனார்.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் சம் ஸ்ரீ சாஸ்தாயை நமஹ”.
கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார்கள். தனக்கென்று இமேஜ் வைத்திருப்பார்கள். கோபம் வந்தால் கூட சில நொடிகளுக்குள் அடங்கி விடும். ஆனால், முக்கிய நட்புகள் அதில் காணாமல் போகும். அதுபோல இவர்கள் வெறி கொண்டு எழுகிறார்கள் என்றால் யாரோ அவமானப் படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சீண்டினால் சிறுத்தையாகப் பாய்வார்கள். யாரையுமே தனக்குத் தலைவனாக எப்போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எதையுமே இவர்களிடம் திணிக்கவும் முடியாது. அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா என்றால், அவரின் கடந்த கால தவறுகளை சொல்லி திருப்பி அனுப்புவார்கள். உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும் நீங்கள் செல்ல வேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனி சந்நதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் சடாரென்ற கோபத்திற்கு இந்த தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும், ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள். அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் சித்தத்தில் நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம், மயிலாடுதுறை, பூம்புகார் போன்ற ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்கு செல்லலாம்.
துலாம்: அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் துலா ராசி அன்பர்களே! நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு குடும்ப நலம் சீராக இருக்கும். சங்கடங்களைச் சமாளிக்கக்கூடிய துணிவு பிறக்கும். பொருளாதார நிலையில் கெடுதல் ஏற்படாமலும் காப்பாற்றப்படுவீர்கள். இந்த நற்பலன்கள் ஏற்படுவது உறுதி. இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலைச்சலும் தவிர்க்க முடியாமற் போகும். உடல் நலம் பாதிக்கப்பட இடமுண்டு. கவனம் தேவை. உறவினர்கள் மூலம் ஏதேனும் தொல்லை உண்டாகலாம். அதையும் சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். பணச்சங்கடம் வராமல் இருக்க வாய்ப்புண்டு. பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டுவந்தால் கவலை குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: தெம்பும், தைரியமும் அதிகம் ஏற்படும். இயந்திரப் பணியில் ஈடுபட்டுள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோருக்குக் குறை உண்டாகாது. நன்மையும், தீமையும் கலந்தவாறு நடக்கும்.
வியாபாரிகளுக்கு: அளவான லாபம் உண்டு. அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த வில்லங்கமும் வராமல் காத்துக் கொள்ளலாம். மருத்துவர்கள், பொறியியல் துறை வல்லுநர்கள் புதிய முயற்சியில் ஈடுபடலாம்.
அரசியல்வாதிகளுக்கு: சோதனை ஏற்படலாம். மனத்துக்கு மிகுந்த சங்கடம் உண்டாகக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம். ஆனால் எதையும் துணிவோடு சந்திக்கும் ஆற்றல் ஏற்படவும் இடமுண்டு. தெய்வ காரியங்களில் ஈடுபட்டு வந்தால் தொல்லை குறையும்.
கலைத்துறையினருக்கு: அனைத்தும் நல்லவிதமாக நடக்கும். எதிர்த்துப் போராடி சிற் சில பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். பொதுவாக அலைச்சலும், கடும் உழைப்பும் தவிர்க்க முடியாத நேரம்தான் இது. துணிவுடன் எதையும் எதிர் நோக்கும் ஆற்றல் இருக்கும்.
பெண்களுக்கு: கணவன் – மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏதேனும் பிரச்னை உண்டாகலாம். கவனமாக இருங்கள். உங்களுடைய கௌரவம், ஓங்கும். பொருளாதார வளர்ச்சி குடும்ப நலம், தொழில் வளம், பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
மாணவர்களுக்கு: அளந்து பேசினால் நன்மை பெருகும். நற்காரியங்களை உத்தேசித்து நல்ல மனதோடு அணுகும் விஷயங்களில் வெற்றி உண்டாகும். புதிய சிநேகிதம், புதியவர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்வது போன்றவற்றை அறவே நீக்கவேண்டும். மீறினால் ஏமாற்றப் படுவீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
சிறப்பு பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீ வில்லிபுத்தூர்
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் லம் ஸ்ரீ கமலதாரிண்யை நமஹ”.
சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ்செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள். குபேரனாக வாழ விரும்புவீர்கள். சிலர் காலத்தால் அவ்வாறு வாழ முடியாதவர்களும், செல்வம் பெற்றிருப்போர் அதனுடன் தெய்வீக அருளையும் தேக்கி வாழ்க்கை நடத்த இன்னும் அவர்கள் வாழ்வு செம்மையுறும். எனவே அதற்காக நீங்கள் செல்ல வேண்டிய திருத்தலமே திருக்கோளூர் ஆகும். குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அளகாபுரியை ஆண்டான். குபேரன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தாலும் தான் செல்வப் பெருவேந்தன் என்று கர்வத்தோடு அலைந்தான். குபேரன் தன் தவறுணர்ந்து பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்தான். பார்வதியிடம் மன்னிப்பு கோரினான். திருமால் மனம் இரங்கி குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பந்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம்தான். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். மதுரகவியாழ்வார் அவதாரத்தலம் இது.
விருச்சிகம். எடுத்த வேலையை கனகச்சிதமாக முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும். புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் திருமணம், மகப் பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனைக் கவனிக்கவும். குடும்பநலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும். வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்குமாதலால் சமாதானமுறையில் பேசிச் சமாளிக்க வேண்டியது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு: முன்விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி – தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும்.
வியாபாரிகளுக்கு: இரட்டிப்பு லாபம் காணவும் வாய்ப்புண்டு. வில்லங்கம் ஏதும் உருவாகாது. தொழில் சிறப்படையும். தொழிலில், வியாபாரத்தில், விவசாயத்தில் எதிராளியின் தொல்லை காணாமல் போகும். வியாபாரிகளுக்கு நஷ்டம் தவிர்க்க முடியாமற் போகலாம். எனினும் அதை சமாளிக்கும் சூழ்நிலையும் உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு: பாராட்டு பெறுவார்கள். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். மிகவும் நெருக்கடியா சூழ்நிலை உருவானாலும் அதை எச்சரிக்கையுடன் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பலவிதமான சங்கடங்கள் தோன்றினாலும் உண்மைத் தொண்டர்களின் உதவியுடன் அதை
சமாளிப்பீர்கள்.கலைத்துறையினருக்கு: பணிகள் சுறுசுறுப்படையும். தொழிலில் ஏற்றமும், தொழிலாளர்களுக்கு சந்தோஷமும் உண்டாகும். கற்றறிந்த வல்லுநர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடை இருக்காது. விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் உழைப்பு அறியப்படும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்படலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட இட முண்டு. குறுக்குவழியில் ஈடுபடாதீர்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுவதில் குறியாயிருங்கள். தெய்வ சிந்தனையோடு இருங்கள். மாணவர்களுக்கு சோதனை மிகுந்து காணப்படும் நேரமாதலால் பொறுமையுடன் இருங்கள். பெரியோர் ஆலோசனையின்படி நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் தொல்லை குறையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும்
அம்பாள் கோயிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.
சிறப்பு பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர்.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் ஸ்ரீஅம்பிகாயை நமஹ”.
விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் இருப்பதால் ஞானியர்களையும், புனித மகான்களையும் வணங்குவது நலம். அதுதவிர செவ்வாய்க்கு எதிர்குண கிரகங்களாக அனுஷத்திற்கு அதிபதியான சனியும், கேட்டைக்கு அதிபதியாக புதனும் வரும்போது சுகபோகத்தில் இருக்கும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் யோசிப்பீர்கள். ‘‘இதெல்லாம் இன்னும் எத்தனை வருஷம்னு தெரியாதா’’ என்று அடிக்கடி சொல்வீர்கள். எப்போதுமே காடு, மேடெல்லாம் திரியும் சித்தர்கள் எனில் உங்களுக்கு கொள்ளைப் பிரியம் இருக்கும். மிகப் பழமையான தலங்களையும், அங்கேயே ஏதேனும் ஜீவ சமாதிகள் இருந்தால் நீங்கள் தரிசிக்கும்போது உங்களுக்குள் மாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட தலமே நெரூர் ஆகும். இத்தலத்திலுள்ள சிவாலயத்திற்கு பின்புறத்தில்தான் சதாசிவபிரம்மேந்திரர் எனும் மகாஞானி ஜீவ சமாதியடைந்தார். தன் உடல், மனம் எதுவும் தெரியாது மகாசமாதியில் வெகு காலம் சஞ்சரித்தவர். அவதூதராக இருந்தார். இவருக்கு திசைகளே உடையாக திகம்பரராக திரிந்தார். இப்படிப்பட்ட ஜீவசமாதிகளுக்கு செல்லும்போது மனதிலும், புத்தியிலும் தெளிவு கூடும் என்பது உறுதி. தேவையற்ற மன சஞ்சலத்தை அகற்றும். ஏனெனில் உங்கள் ராசியில் சந்திரன் நீசமாவதால் சட்டென்று புத்தி வேலை செய்யாது. திடீரென்று பிரச்னை வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பீர்கள். உடைந்து போவீர்கள். அம்மாதிரி பிரச்னைகளெல்லாம் இத்தலத்தை தரிசித்த மாத்திரத்தில் நீங்கும். இத்தலம் கரூர் எனும் ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
தனுசு: நேர்மையுடனும் தீரத்துடனும் நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த ஆண்டு பொருளாதார நிலையில் எந்தச் சிக்கலும் வராது. அன்றாடப் பணிகள் நிறைவேறும். ஆனால், அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியோர் நல்லாசியைப் பெற்று வாருங்கள். தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்வில் உன்னத நிலை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். பணம் சேரும். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் பயனுண்டாகவும் வாய்ப்புண்டு. செல்வ நிலை, குடும்ப சுபிட்சம், தாம்பத்திய மகிழ்ச்சி எல்லாம் சீராக இருக்கும். கணவன் – மனைவியரிடையே கருத்து வேற்றுமை எழ இடம் தராதீர்கள். பிள்ளைகளை சற்று கவனமுடன் கண்காணிப்பது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு: மேலதிகாரிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்துக் கண்டிக்க நேரலாம். நண்பர்களில் நல்லவர்களை இனம் கண்டு பழகினால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்ற வேண்டியிருக்கும்.
வியாபாரிகளுக்கு: அளவான லாபம் தடைபடாது. விவசாயிகளுக்குப் பிரச்னை ஏதும் உருவாகாது. உபத்திரவம் அவ்வளவாக இருக்காது. இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் தொல்லை இல்லை. ஆதாயம் ஏற்பட இடமுண்டு. தொழில்கள் மேன்மையடையும். முதலாளி – தொழிலாளி உறவு பலப்படும்.
அரசியல்வாதிகளுக்கு: அவசரப்படாமல் காரியமாற்றி நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பல விதமான
நற்பலன்கள் ஏற்படக் கூடிய நிலை உண்டென்றாலும், அந்த நன்மைகளைப் பெறுவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கும்.
கலைத்துறையினருக்கு: பணிகள் சுறுசுறுப்படையும். உழைப்பாளிகளுக்குச் சோதனை இருக்காது. என்றாலும் கடுமையாக உழைத்து உரிய வருவாயைப் பெற வேண்டியிருக்கும். ஓரிரு சங்கடங்கள் ஏற்படுமானாலும், சாமர்த்தியமாக அதனைச் சமாளிக்கக் கூடிய வழியும் புலப்படும்.
பெண்களுக்கு: கௌரவம் ஓங்கும். புகழ் கிடைக்கும். பணக் கஷ்டம் உண்டாகாது. முயற்சிகள் தீவிரம் அடையும். சுறுசுறுப்போடு இயங்கக் கூடிய உங்களை, சில தீய நண்பர்கள் திசை திருப்பி விட நேரலாம். நல்லவர்களை இனம் கண்டு இயங்குங்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுங்கள்,
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.
சிறப்பு பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். ஊற வைத்த நாட்டு கொண்டைக்கடலையை (மூக்கடலை) உங்கள் கையால் கோர்த்து குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருவானைக்காவல்
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் சம் குருவே நமஹ”.
தனுசு ராசிக்கு அதிபதியாக குரு வருகிறார். அதேசமயம் இவரை கோதண்ட குரு என்று அழைப்பர். போராட்டம் என்பது பழகிவிடுவதால் வாழ்வில் பல சமயங்களில் சந்தோஷத்தை தொலைத்து விட்டு நிற்பீர்கள். என்ன சம்பாதிச்சி என்ன… எதுக்காக வாழறோம்… என்றெல்லாம் புலம்பும்படியாக இருக்கும். எல்லாம் இருந்தும் ஒரு வெற்றிடம் இருக்கும். ஜெயித்ததற்கான அர்த்தத்தை உணராது இருப்பீர்கள். எப்போதும் மனம் ரணமாக இருப்பதைப்போன்று இருப்பீர்கள். அதனால் இறைவனே மனிதனாக வாழ்ந்து போராடி அதில் வெற்றி பெற்று அந்த வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். இத்தலம் ஜடாயு எனும் கழுகுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தோடு விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருட்பாலிக்கும் தலமாகும். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீ தேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார். நிம்மதியை தருவார்.
மகரம்: வழக்காடுவதில் வல்லவரான மகர ராசி அன்பர்களே! நீங்கள் சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு உங்களுடைய கௌரவத்திற்கு ஊறு நேராது. அன்றாடப் பணிகளில் தொய்வு உண்டாகாது. கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ. தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. கணவன்- மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம். எச்சரிக்கை.உத்தியோகத்தில் மேன்மையுண்டாகும். பணக் கஷ்டம் இருக்காது. முதலாளி – தொழிலாளி உறவு பாதிக்கப்படாமல் காப்பதில் இரு சாராருக்குமே பொறுப்புள்ள – நேரம் இது. உத்தியோக மேன்மையுண்டு. பதவி உயர்வு கிடைக்கும். தேவையான இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.தொழிலில் அபிவிருத்திகள் படிப்படியாக ஏற்படும். வியாபாரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. மகசூல் அதிகரிக்கும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும் அரசியல்வாதிகளுக்கு: ஒரு சிறப்பு உண்டாகலாம். பொருளாதார சிக்கல் வராது. தொழில் அபிவிருத்திகள் பாதிக்கப்படாது. மக்கள் சுபிட்சம் சீராக இருக்கும். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பு ஏற்படும். பேசும் வார்த்தையில் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு: பணிகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். தொழில் சிறப்படையும். பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படாது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இசை, எழுத்து ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர்.
பெண்களுக்கு: பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப அமைதி கெடாது. வேலை செய்யும் பெண்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு பணிகள் சுமாரான நிலையில் நடைபெறும். சில நன்மைகள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதை. உள்ளக் கோளாறு போன்ற குறைகள் நிவர்த்தியாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியம் ஏதேனும் நடக்கலாம்.
மாணவர்களுக்கு: இது வரை இருந்து வந்த தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். நலம் விளையும். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெறுவர். மருத்துவம், மேனேஜ்மென்ட் துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோயிலை வலம் வரவும்.
சிறப்பு பரிகாரம்: வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சாத்தவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்யவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் ஸம் ஸ்ரீ சனீச்வராய நமஹ”.
பூரண சனிபகவானின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் உங்களுக்கு திருமால் மீது மாறாத பக்தியிருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனிபகவான் விளங்கினாலும் பெருமாளை வழிபடுவதை மிகவும் விரும்புவீர்கள். அதுமட்டுமல்லாது கடல் என்பது சனிபகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டது. மகரத்தையே மகர ஆழி அதாவது மகரக் கடல் என அழைப்பார்கள். சனியின் ஆதிக்கத்திற்குகுட்பட்ட கடலைக் கண்டால் உங்கள் உள்ளம் தனியாக குதூகளிக்கும். உங்களில் சிலர் கடலைப்பார்த்து பேசுவீர்கள். அது ஒரு உயிருள்ள ஜீவன் என்பது போன்று கவித்துவமாக சொல்வீர்கள். பாற்கடல் பரந்தாமனான மகாவிஷ்ணு சயனக்கோலத்தில் கிடந்து சகல பிரபஞ்சத்தையும் ஆள்கிறான். அவன் கிடப்பதே கடல்தான். எனவே சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அரங்கனாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவையாகும். அதிலும் திருக்கடல் மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் கோயில் இன்னும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கடலும், பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் இந்த தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் உங்களுக்குள் நல்ல மாற்றம் உண்டாகும். உங்களின் அலைவரிசைக்கு சரியானதாக அந்த ஆலயம் அமைந்திருக்கும். ஸ்தலசயனப் பெருமாளை தரிசியுங்கள். கடலளவு அவனின் கருணையை பெற்றிடுங்கள்.
கும்பம்: எந்த கடினமான வேலைகளையும் உழைப்பின் மூலமாக செய்து முடிக்கும் திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு பொதுவாகத் தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கௌரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள். அன்றாடப் பணிகளுக்கு இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சௌகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: கெடுபிடி இருக்கலாம். மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அவசியமிருந்தாலன்றிப் பயணத்தை மேற் கொள்ள வேண்டாம். நன்மைகள் மிகுதியாக நடக்க வாய்ப்புண்டு. அவ்வப்போது சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும்.
வியாபாரிகளுக்கு: அளவான லாபம் வரும். தொழிலில் சிறு சிக்கல் ஏற்படலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வீண் செலவுகள் உண்டாகலாம். பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகளுக்கு: அடக்கமாக நடந்து கொண்டு அவப்பெயர் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பெரியோர் நல்லாசியைப் பெற்று வந்தால் நலம் விளையும். உடல் நலனில் அக்கறை இருக்கட்டும். முன்கோபம் காரணமாக சில நல்ல சந்தர்ப்பங்கள் பாழாகி விடுமாதலால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய கௌரவம் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு: குடும்ப நலம், தாம்பத்யம் எல்லாம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் சிறிதளவு பயனும் ஏற்படலாம். பொருளாதார நிலையில்தான் அவ்வப்போது இக்கட்டு உண்டாகும். காரியங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் ஏற்படும்.
மாணவர்களுக்கு: மதிப்பு கிட்டும். பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற இனங்களில் புதிய முயற்சி வேண்டாம். எனினும் உங்களுக்கான பாராட்டுகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சித்த சுத்தியோடு செய்யப்படும் நற்காரியங்களினால் பலன் ஏற்படும். புகழும் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.
சிறப்பு பரிகாரம்: நவகிரகங்களுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் ஸம் ஸ்ரீ சனீச்வராய நமஹ”.
கும்பம் என்பது அடக்கி வைத்திருக்கும் சக்தியை குறிப்பது. அதனால் மந்திர, தந்திரங்கள் அனைத்தையும் கும்பத்தில் வைத்து சக்தியேற்றுகிறார்கள். கோயிலின் கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் வைத்துத்தான் தீர்த்தத்தை அபிஷேகம் செய்கின்றனர். எல்லாவற்றையும் ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் சக்தியை சிதறாது செய்யும் ஒரே சக்தி கும்பத்திற்கு மட்டும்தான் உண்டு. இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்தியும் ஒடுங்கிய ஆலயத்திற்கு செல்லும்போது இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம் ஆகும். இத்தல அம்பாளின் திருநாமம் மங்களாம்பிகா ஆகும். ஈசன் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தள் எனவும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் உடற்பாகம் திருவடி முதல் திருப்பாத நகக்கணு வரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன. கும்ப ராசியை சேர்ந்தவர்கள் இந்த புராணத்தை புரிந்து கொண்டு ஈசனை தரிசித்து வாருங்கள்.
மீனம்: அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என எண்ணும் மீன ராசி அன்பர்களே! நீங்கள் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு: இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிலாளர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள். தொழிலில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள். விவசாயிகளுக்குத் திருப்தியான சூழ்நிலை அமையும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார நிலையில் கணிசமான வளர்ச்சியை நிச்சயம் காணலாம். தொழில் சிறப்படையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரக்கூடிய நல்ல நேரம் இது.
அரசியல்வாதிகளுக்கு: தங்களுடைய வாழ்வு மேலும் மேலும் சிறப்படைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். கட்சித் தலைமை உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கும். அதை சிரத்தையுடன் செய்தால் உங்களுக்கான அங்கீகாரம்
கட்சியில் கிடைக்க வாய்ப்புண்டு.
கலைத்துறையினருக்கு: பணிகள் சரிவர நடக்கும். பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம் இது. நலம் பெருக வாய்ப்புண்டு. தொழில் சிறக்கும். உங்களை மிகவும் உயர்வான நிலைக்குக் கொண்டு செல்ல இந்த காலகட்டம் உதவும். கௌரவம் சிறப்பாக அமையும். புகழ், பொருள், எல்லாம் பெருகக் கூடிய வாய்ப்பைப்பெறுவார்கள்.
பெண்களுக்கு: குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். தர்ம காரியங்களில் ஈடுபட்டு வந்தால் நலம் பெருகும். மனநலம், குடும்பநலம் அதிகமாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். தேவையான பணம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சிலருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாணவர்களுக்கு: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொறியியல் துறையில் சாதனை புரியலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் புகழ் பெறுவார்கள். கணிதத்துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக சந்நதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
சிறப்பு பரிகாரம்: முன்னோர்களையும், குல தெய்வத்தையும் தினமும் வணங்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்க.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம்.
சொல்ல வேண்டிய மந்திரம் – “ஓம் கம் ஸ்ரீ குருவே நமஹ”.
கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றிற்கும் அடிப்படை நீர்தான். நீர் பரவியிருக்கும் பரப்புற்கேற்ப வெவ்வேறு பெயர்கள். பஞ்ச பூதங்களில் நீரினுடைய தத்துவத்தை சொல்லும் கோயிலுக்கு செல்லும்போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர் தத்துவத்தை, பஞ்ச பூதங்களில் நீருக்குரிய தலமே திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆகும். கருவறையிலேயே நீர் ஏறும். இறங்கும். இத்தல அம்பாளும் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருட்பாலிக்கிறாள். மீனம் ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைகாவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.