தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, 22 ஆயிரம் சதுர அடியில் மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட, தஞ்சை பெரிய கோவிலுக்கு, 1997ல், கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 23 ஆண்டுகளுக்கு பின், பிப்., 5ல், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.இதற்காக, ராஜராஜன், கேரளாந்தகன் நுழைவு வாயில், 216 அடி உயரமுள்ள விமான கோபுரம் உள்ளிட்ட சன்னிதிகள் அனைத்தும் துாய்மைப்படுத்தப்பட்டன.மேலும், விமான கோபுரத்தில் உள்ள கலசங் கள் புதுப்பிக்கப்பட்டு, பொருத்தப்படுகின்றன; கொடிமரமும் புதிதாக பிரதிஷ்டை செய்யப் படுகிறது.திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், இன்று காலை, 9:30 மணிக்கு பூர்வாங்க பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்குகிறது. பிப்., 1 முதல், 5 வரை, எட்டு கால யாசாலை பூஜை நடக்கிறது.
பாரம்பரிய ஓவியங்கள்
யாகசாலை அமைப்பதற்கான பணிகளை துவங்க, டிச., 5ல் பந்தக்கால் நடப்பட்டது. அன்று முதல், 100 பேர் இரவு, பகலாக பணிகளில் ஈடுபட்டனர். ஒரே இடத்தில் சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.மொத்தம், 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 332 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் அமர்ந்து, யாகசாலை பூஜையை நடத்தஉள்ளனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில், பெரிய கோவில் எதிரே, அரசு மருத்துவமனைக்கு சொந்தமான, 200 மீட்டர் நீள சுற்றுச்சுவரில், பல வண்ண ஓவியங்களை வரைந்து, அழகுபடுத்தப்படுகிறது.
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லுாரி மாணவர்கள், பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். கண்காணிக்க 192 கேமராக்கள்கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள்
பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு பணியில், 5,000 போலீசார் ஈடுபட உள்ளனர். இதுதவிர, கோவிலின் உள்புறத்தில் திருச்சுற்று மாளிகை, சன்னிதிகள், நுழைவு வாயில் என, 32 இடங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள், நகரை சுற்றி அனைத்து இடங்களிலும், 160 கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த கேமராக்கள், நிரந்தரமாக பயன்பாட்டில் இருக்கும்.