இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் பிரகதீஸ்வரர், பெருவுடையார் எனவும், அம்பாள் பெரிய நாயகி வராகி அம்மன் எனவும் அழைக்கப்படுகின்றனர். புராண காலத்தில் “தஞ்சன், தாரகன் தண்டகன்” என்ற மூன்று மன்னர்கள் தங்களை யாரும் வெல்ல முடியாத வரத்தை சிவபெருமானிடம் பெற்றனர். இதனால் கர்வம் கொண்டு தேவலோகத்தை வென்று, அக்கிரமத்தின் உச்சத்திற்கே சென்றனர். இதன் காரணமாக கோபமுற்ற சிவபெருமான் திருமாலையும், காளி தேவியையும் அனுப்பி அம்மூவரையும் வதம் புரிந்தார்.
கெட்டவர்களாக இருந்தாலும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கியதால் தஞ்சன் பெயரில் “தஞ்சாவூர்”, தாரகன் பெயரில் “தாராசுரம்”, தண்டகன் பெயரில் “தண்டகம்பட்டு” என மூன்று ஊர்களுக்கும் பெயர் உண்டாயிற்று.சோழர்களின் ராஜ்யத்தை தென்கிழக்காசிய நாடுகளில் உண்டாக்கிய சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவ பெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். அதன் படி இக்கோவில் கட்டுவதாற்கான கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வந்தார். அக்கற்களை எல்லாம் சரியான அளவில் செதுக்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகள் கழிந்திருக்கிறது. செதுக்கிய அக்கற்களை சரியான முறையில் அடுக்குவதற்கு 9 ஆண்டுகள் ஆகியுள்ளன.
ஆகா மொத்தம் 34 ஆண்டுகள் செலவழித்து இந்த அற்புதமான கோவிலை காட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானின் லிங்கம் செய்வதற்கான கல் தற்போதைய “மத்திய பிரதேச” மாநிலத்திலிருந்து கொண்டு வந்து வடிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் மட்டும் பன்னிரண்டு அடி. மூலவர் லிங்கம் மிக பெரிதாக இருக்கும் இந்திய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் முதலாவதாகும். தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தியின் சிலை இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும்.
பிரதோஷம், சிவராத்திரி போன்ற சைவ சமய விழாக்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ராஜ ராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதயம் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் “வராகி அம்மன்” சந்நிதி இருக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அடுத்தபடியாக, வராகி அம்மன் தனிசந்நிதி இந்த கோவிலில் மட்டுமே இருக்கிறது. ராஜா ராஜ சோழன் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் இந்த வராகி அம்மனை வணங்கி விட்டு துவக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்க விரும்புபவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த இந்த வராகி அம்மனை வழிபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என அனுபவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கோவிலில் கருவூர் சித்தருக்கு தனி சந்நிதி இருக்கிறது. ராஜ ராஜ சோழன் இந்த பிரகதீஸ்வர கோவிலை கட்டி அஷ்டபந்தனம் சாற்றும் சடங்கை மேற்கொண்ட போது, அது சரியாக பொருந்தாமல் விலகி விழுந்துகொண்டேயிருந்தது. அப்போது சோழனின் அழைப்பை ஏற்று இங்கு வந்த கருவூரார், சிவன் மீது பதிகங்களை பாடி, இங்கிருந்த ஒரு துஷ்ட சக்தியை தன் எச்சிலை உமிழ்ந்து அதை அளித்த பின்பு, அஷ்டபந்தனம் சாற்றும் சடங்கை மேற்கொண்ட போது, அது சரியாக பொருந்தியதாக வரலாறு கூறுகிறது. தல சிறப்பு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறப்பே அதன் கலைநயம் மிக்க கட்டமைப்பும், விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில் கோவிலின் கோபுரம் வடிவமைக்கப்பட்டிருப்பது தான்.
தஞ்சை கோவிலின் கோபுர நிழல் கோவிலின் மீது விழாமல் இருப்பது பழந்தமிழர்களின் விஞ்ஞானபூர்வமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டாகும். கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பிரம்மமந்திரகல் மட்டும் 80 டன் எடை கொண்டது. சோழர்கள், நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்களும் இந்த கோவிலை சீரமைத்து காட்டியிருக்கின்றனர். இந்த கோவிலின் கட்டுமானம் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்கூறும் விதத்தில் அமைந்துள்ளது.
அதாவது கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி.
தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 சிவலிங்கத்தின் உயரம் 12 அடி.
தமிழ் உயிரெழுத்துக்கள் 12 சிவலிங்க பீடம் 18 அடி.
தமிழ் மெய் எழுத்துக்கள் 18 சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி.
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள்.
தங்களின் வேண்டுதல் நிறைவேறிய சில பக்தர்கள் இந்த கோவிலின் இறைவனான பிரகதீஸ்வரருக்கு 35 அடி நீள வேட்டியையும், அம்பாளுக்கு 9 கஜ புடவையையும் சாற்றுகின்றனர். இங்குள்ள வராகி அம்மனை வேண்டி கொண்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம். குழந்தை வரம், திருமண வரம், மனத்துயரங்கள் நீங்க நோய்களில் இருந்து விடுபட, தொழில் வியாபாரங்களில் மேன்மை பெற, அரசு பணி கிடைக்க ஆகிய பக்தர்களின் எந்த ஒரு வேண்டுதலையும் பிரகதீஸ்வரரும், பெரிய நாயகி தேவி ஆகிய இருவரும் நிறைவேற்றுகின்றனர் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்கு.
மிகச்சிறந்த கட்டிடக்கலையையும், சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் 1987 ஆம் ஆண்டு “ஐ. நா.” சபையின் உலக பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பால் “பாரம்பரிய முக்கியத்தும் கொண்ட இடம் மற்றும் நினைவு சின்னம்” என அறிவிக்கப்பட்டது. கோவில் அமைவிடம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் (பெரிய கோவில்) தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சை நகரில் அமைந்துள்ளது.
தஞ்சாவூருக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை.
கோவில் முகவரி
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் (பெரிய கோவில்)
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் – 613001
தொலைபேசி எண் 4362 274476 4362 223384