திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. 2,668 அடி உயர மலை மீது நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனால் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகா தீப கொப்பரையை தோளில் சுமந்து இன்று காலை எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா நாளை நடைபெற உள்ளது.
அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் நாளை அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படும். அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபம் ஏற்றுவதற்கான மகா தீப கொப்பரை இன்று அதிகாலை மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதனை கோவில் ஊழியர்கள் எடுத்து சென்றனர். இதற்காக 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு இந்த வருடம் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே 28, 29-ம் தேதிகளில் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் அணுகுசாலைகளில் 15 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு பக்தர்கள் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம், நகர எல்லையில் கூட்டம் சேராமல் தவிர்க்க கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.