திருப்பதியில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்க முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகிறது.
வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்து உள்ளது . இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களையும் திறப்பதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதனையடுத்து கொரோனா காலம் முடியும் வரையில் தினமும் 14 மணி நேரம் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிப்பது ,சமூக இடைவெளியுடன் ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்களை அனுமதிப்பது, ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகளில் தரிசன நேரத்தை குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கவும், தினமும் 7 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக கோவிலுக்கு சொந்தமான தங்கும் அறைகளில் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 17 ம் தேதிக்கு பின்னர் கோவில் ஊழியர்களை பரிசோதனை அடிப்படையில் அனுமதிப்பது, தொடர்ந்து 15 நாட்களுக்கு திருப்பதி, திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களை அனுமதிப்பது, பின்னர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களை அனுமதிப்பது தொடர்ந்து வெளியூர் பக்தர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் திருப்பதி வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.திருமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, கோவிலுக்குள் காத்திருக்கும் பகுதி, லட்டு கவுண்டர், வராக சாமி கோவில் , கோவிலின் உட்பகுதிகளில் சாமிகும்பிடுவதற்காக வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் செல்லும் வகையில் ஆறு அடி இடைவெளிவிட்டு ரேடியம் ஸ்டிக்கர்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.