இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. கோவில் மட்டும் இல்லாமல் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமிய மக்கள் வீட்டில் இருந்தபடியே இஃப்தார் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மசூதிகள் மற்ற்ம் கோயில்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மசூதிகளை ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களாவது திறக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் முதல்வருக்கு கடிதம் அனுப்பின. அதுபோல இந்து சமய அறநிலையத்துறையும், ஒரு நாளைக்கு ஒரு கோயிலுக்கு 500 பாஸ்கள் வீதம் அளித்து கோயில்களை திறக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 1 முதல் தமிழகத்தில் முக்கியமான பெரிய கோவில்களை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசங்கள் அணிவதும் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.