COVID-19 காரணமாக ஊரடங்கு காலத்திலும் திருமலை (Tirupati) திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வர பகவானின் (Lord Venkateswara) பக்தர்களுக்கு விரைவில் புனித “லட்டு பிரசாதம்” சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் மானிய விலையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக புதன்கிழமை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) வாரியத் தலைவர் ஒய் வி சுப்பா ரெட்டி கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 20 முதல் வெங்கடேஸ்வர பகவானை தரிசனம் செய்ய முடியாத நிலையில், பக்தர்களிடமிருந்து பலமுறை இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, திருப்பதி “லட்டு பிரசாதத்தை” பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது கோவிட் -19 (COVID-19) ஊரடங்கு காலத்தில் ரூ.50 லட்டு 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது என்றார்.
விற்பனை இடங்களுக்கு திருப்பதி (Tirupati) லட்டு வருகை குறித்து மூன்று நாட்களில் தெரிவிக்கப்படும். மேலும், அதிகமாக லட்டு வாங்க விரும்பும் பக்தர்கள் 9849575952 என்ற எண் மூலம் துணை நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என்றும், அதேபோல 9701092777 என்ற எண்ணில் தயாரிப்பு அதிகாரியை தொடர்புக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
அந்தந்த பகுதிகளில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மற்றும் டி.டி.டி (Tirumala Tirupati Devasthanams) திருமண அரங்குகளில் லட்டுக்கள் கிடைக்கப் பெறும் என்றார்.
ஈ-உண்டி மூலம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகையாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ .1.97 கோடி சமர்ப்பித்தனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ .1.79 கோடியாக இது இருந்தது. கடந்த ஆண்டை விட கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ. 18 லட்சம் அதிகமாக காணிக்கை வந்துள்ளது என்றார்.
டி.டி.டி (Tirumala Tirupati Devasthanams) நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், டி.டி.டி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக செய்திகளை ரெட்டி திட்டவட்டமாக மறுத்தார். கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கும் வழங்கப்படும் என்றார்.