உத்தரகாண்டில் உள்ள, பத்ரிநாத் உள்ளிட்ட கோவில்களுக்கு, புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில், பத்ரிநாத் மற்றும், 51 கோவில்களுக்கு, பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, தலைமை செயலர் தலைமையில், உயர்மட்ட குழுவினை, அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம், முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அதில், கோவில்களின் சொத்துகளை வாரியம் கையகப்படுத்துவதுடன், அதற்கென தனிக் கணக்கு உருவாக்கப்பட்டு, அரசு தரப்பில், 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என, தீர்மானிக்கப்பட்டது.
கூட்டம் குறித்து, முதல்வர் கூறியதாவது: வாரியத்திற்கு, விரைவில், கூடுதல் தலைமை நிர்வாகி நியமிக்கப்படுவதுடன், இதில் உருவாகும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண, தீர்ப்பாயம் அமைக்கப்படும். பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களின் வலைதளத்தை, வாரியம் கையகப் படுத்தி மேம்படுத்தும். உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு, ‘ஆன்லைன் டிஜிட்டல்’ வழிபாட்டுக்கான வசதி உருவாக்கப் படும்.
இதன் மூலம், உலகின் எந்த பகுதியில் இருந்தும், கருவறை தவிர, கோவில்கள், அவற்றின் வளாகத்தை, பக்தர்கள் தரிசனம் செய்வதுடன், ‘ஆடியோ’ மூலம் பிரார்த்தனைகளை கேட்கலாம். இந்த ஆலயங்கள் தொடர்பான, பண்டைய கையெழுத்து பிரதிகள், கலைப் பொருட்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கொண்ட, அருங்காட்சி யகம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.